அமரதாஸ் தான் எடுத்ததாக கூறும் ஒளிப்படங்கள் மீதான சர்ச்சை குறித்து. . .
வரலாற்று ஆவணங்களின் உண்மைத் தன்மைகள் ஏன் சிதைக்கப்படுகின்றன?
“தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
விடுதலைப்புலிகளின் ஊடக (ஒளிக்கலை) பிரிவுப் போராளிகளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் ஒரு தொகுதியை அமரதாஸ் என்பவர், தான் எடுத்த படங்கள் என்று கூறிப் பல இடங்களிலும் கண்காட்சிகளில் வைத்தும் உரிமை கோரியும் வருகிறார். இது மிகத் தவறான ஒரு செயற்பாடு. பிறருடைய உழைப்பில் விளைந்ததை உரிமை கோருவது என்பது எந்த வகையிலும் அறமல்ல, தார்மீகமானதுமல்ல. இதை எவரும் நேர்மையான செயல் என்று வாதிட முடியாது. இது மனச்சாட்சிக்கும் பொது நீதிக்கும் எதிரான ஒன்றாகும்.
இறுதிக்கால யுத்தத்தின் போது படங்களை மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் படமாக்கிய பலர் இப்போது உயிரோடில்லை. அவர்கள் மாவீரர்களாகி மண்ணுக்குள்ளும் தமிழினத்தின் மனதிற்குள்ளும் வித்தாகி விட்டார்கள். சிலர் உடல் உறுப்புகளை இழந்தவர்களாகவும் நடமாட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் வெவ்வேறு நாடுகளில் அகதி நிலையில் வாழ்கிறார்கள். சிலர் தாயகத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான சூழலில் போராளிகளால் எடுக்கப்பட்ட படங்களைத் அமரதாஸ் தன்னுடைய படங்கள் என்று எடுத்து வைத்திருப்பது மாத்திரமின்றி உலகநாடுகளில் பாவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முள்ளிவாய்க்காலின் அவலங்கள் தொடர்பான படங்களில் பெரும்பாலானவை தன்னால் எடுக்கப்பட்டவை என்றும் அப்படங்களை பெயர் போடாமல் யுத்த காலத்தில் தான் அனுப்பியதாகவும் பொய்மேல் பொய்யுரைத்துக் கொண்டிருக்கின்றார்.
அவர் எந்த ஒரு படங்களையும் இறுதி யுத்தகாலத்தில் வெளியில் அனுப்பவில்லை. செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை வெளி உலகிற்கு அனுப்பும் பணியைச் செய்த போராளிகள் இன்றும் இருக்கின்றார்கள். அமரதாஸிடம் இருந்து அவர்கள் யாரும் படங்களை வேண்டி அனுப்பவுமில்லை. அந்த இடங்களுக்கு அமரதாஸ் வரவுமில்லை என்பது தான் உண்மை.
1995 இல் காலில் காயமடைந்த அமரதாஸ் இயக்கத்தில் இருந்து விலகி வீடு சென்றார். பிற்காலத்தில் ஊன்று கோலின் உதவியின்றி நடமாட முடியாத நிலையில் இறுதி யுத்த காலம் வரை இருந்தார். நெருக்கடியான சூழலில் தனது குடும்பத்துடன் நகர்ந்து கொண்டிருந்த அமரதாஸ் எவ்வாறு ஒவ்வொரு இடங்களுக்கும் ஓடித்திரிந்து படங்களை எடுத்திருக்க முடியும் என்ற யதார்த்தமான கேள்வியுண்டு. அன்றைய யுத்த நிலையில் அங்கு வாழ்ந்த மக்கள் அதை நன்கறிவார்கள்.
ஒரு தேசியத் சொத்தை தனிமனித உடமையாக்கும் அமரதாஸ் என்ற தனிநபரின் நடவடிக்கைகள் மிக மோசமானது. கடுமையான கண்டனத்துக்குரியது. எமது மக்களின் விடுதலை அமைப்பு இல்லாத சூழலில் இவ்வாறு அவர் செய்ய முன்வந்திருப்பது வரலாற்றைத் திரிவு படுத்தி இருட்டடிப்புச் செய்யும் உள்நோக்கமுடையதாகும்.
இதற்கான பின்னணி என்னவாக இருக்கக் கூடும் என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் வரலாற்றுக்கான ஆவணத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன் என்று கூறிப் பிறரை நம்ப வைத்துக் கொண்டு வரலாற்றைப் பதிவு செய்தவர்களையும் அவர்களுடைய பங்களிப்பையும் மாற்றித் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு உருமாற்றம் செய்வது, எளிதாக விட்டுச் சென்றுவிடக்கூடிய விடயமல்ல. இது எவ்வளவு ஆபத்தானது? இதுவும் ஒரு வகையான அடையாள அழிப்பே! என்பதை எமது மக்கள் அறிய வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த அறமற்ற செயலை மேலும் தொடர வேண்டாம். உங்களுடைய படங்களை மட்டும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற ஊடகப் போராளிகளால் எடுக்கப்பட்ட படங்களைத் தவிர்த்து விடுங்கள். நாளைக்கு இது வரலாற்றுத் திரிபுகளுக்கு இடமாகும் என்று நாம் அமரதாசுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டியிருந்தோம்.
சில போராளிகள் தனிப்பட்ட ரீதியில் இந்த விடயத்தைப் பற்றி அமரதாஸிடம் தெளிவாகவே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இப்படித் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது போராளிகளுக்கும் வரலாற்றுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமாகும். இப்படியெல்லாம் நாம் சொன்னபோதும் அமரதாஸ் இதையெல்லாம் கேட்டுக்கொள்ளவில்லை.
அதற்கு அவர் “நீங்கள் துணிவிருந்தால் பொதுவெளியில் வந்து பேசுங்கள். அப்படி வந்தால் நீங்கள் பொதுவெளியில் அவமானப்பட நேரும்” என்று “கறுப்பு எச்சரிக்கையையும் விட்டிருந்தார்.” பொது வெளிக்கு கொண்டு செல்வதற்கு இது வியாபாரமோ அல்லது ஏலமோ அல்ல. நாலுபேரிடம் கூவி கூவிச் சொல்லுவதற்கு, சம்பந்தப்பட்டவர்களுடன், தன்னிடம் இருக்கும் படங்களைக் காட்டி, உரையாடி அப்பிரச்சனையில் இருந்து விடுபட நினைக்காமல், ஏன் மேலும் மேலும் பொய்களையும் தவறான போக்கையும் கையாண்டு வருகின்றார் என்பது யோசிக்க வேண்டிய விடயமும் கூட, எதை பேசித் தீர்ப்பது, எதை பொதுவெளிக்குக் கொண்டு செல்வது என்ற அடிப்படை அறத்தைக் கூட மறந்துவிடுகின்றார்கள்.
மிகத் தந்திரமாக ஜெனீவா மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடரில் அமரதாஸ் இந்தப் படங்களை காட்டி உரை நிகழ்த்திய போதும் மற்ற சில இடங்களில் கண்காட்சியில் வைத்தபோதும் அந்த படங்கள் தொடர்பான உண்மைக்கு புறம்பான சம்பவங்களை தனது கற்பனையுடன் படம் பார்த்து கதைசொல்லிக் கொண்டிருக்கின்றார் எனத் தெரிந்தும் நாம் மௌனமே காத்தோம்.
எமது இனத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டு எமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாட்சியமாக இருக்கும் அந்தப் படங்களைக் குறித்து சர்ச்சைப் படுத்துவது தவறாக அமைந்து விடும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அதைப்பற்றிப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்தோம். இதைத் தனக்கு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட அமரதாஸ் தற்போது இந்தப் படங்களை வைத்து நோர்வே தமிழ்ச்சங்கத்தின் மூலமாக Through the grey zones என்ற ஒளிப்ப்படத் தொகுதி நூலினை வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
இதனை தமிழ்ச்சங்கத்தின் மேற்படி நூலின் வெளியீட்டுக்கான அழைப்பிதழைப் பார்த்தபோதே அறிந்தோம். இதனையடுத்து இந்தப் படங்களின் உரிமம் தொடர்பாக தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு அறிவிப்பை மின்னஞ்சல் மூலமாக விடுத்திருந்தோம். அதில் இந்தப் படங்களின் உரிமம் தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படாமல் நீண்ட காலமாக இருக்கிறது என்றும் அதேவேளை இந்தப் படங்களின் ஆவணப்பெறுமதி நீர்த்துப் போகக் கூடாது என்றும் தெரிவித்திருந்தோம். அப்போது கூட இந்த விவகாரத்தைப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது எமது இனத்தின் வரலாற்று ஆவணங்களின் பெறுமதியைக் குலைத்து விடும் என்பதில் கவனம் செலுத்தியிருந்தோம்.
இதேவேளை குறித்த நூலின் வெளியீட்டில் நாம் எந்த வகையிலும் இடையீட்டையோ தலையீட்டையோ செய்ய விரும்பவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இந்த நூலில் இருக்கும் இறுதியுத்த காலத்தில் மக்களின் வாழ்க்கை அவலங்களை பதிவு செய்த பல படங்கள் உண்டு. அந்தப்படங்கள் எல்லாவற்றையும் அமரதாஸ் எடுக்கவில்லை என்று சில ஆதாரங்கள் மூலம் தமிழ்ச்சங்கத்திற்கு காட்டியிருந்தோம். ஆனால் இதைப் பொருட்படுத்தாமல் இந்தப் பிரச்சினையைப் பொதுவெளிக்கு இழுத்து வீணான சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறார் அமரதாஸ்.
அத்துடன் இந்த வரலாற்று ஆவணங்களைச் சேகரம் செய்த எம்மை, தமிழ்ச்சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்சினைக்காகத் தேவையற்ற முறையில் பொதுவெளிக்கு இழுத்துத் தரக்குறைவான மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறார். “எனக்குத் தெரியும் இறுதி யுத்த காலத்தில் மக்களின் அவலங்கள் தான் பதிவு செய்யப்படாமல் இருந்தது. இதை சுயாதீனமாக நான் மட்டும் செய்யவேண்டியிருந்தது. ஆனால் இராணுவம் இவற்றை சரியான முறையில் ஆவணப்படுத்தியிருக்கு. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிக்கலைப்பிரிவினர் சரியான முறையில் போராட்டத்திலும் போர்க்களத்திலும் செயற்படவில்லை என்ற விதமாகவும் ஒரு மோசமான கருத்தையும் தனது interview க்களில் வெளியிட்டிருக்கிறார் அமரதாஸ்.
அத்தோடு விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவிற்கும் அதனால் மேற்கொள்ளப்பட்ட திரைப்பட உருவாக்க முயற்சிகளுக்கும் தான்தான் தொழில் நுட்ப அறிவை வழங்கினேன். ஒளிக்கலைப் பிரிவு பெண்போராளிகளுக்கு பயிற்சிப்பட்டறைகள் நடாத்தினேன். ஊடகக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தேன். தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு நெருக்கமாக நின்று இந்தத் துறையில் பல ஆலோசனைகளை வழங்கினேன். என்றெல்லாம் இல்லாத பொல்லாத விடயங்களையெல்லாம் பொதுவெளிகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்.
2009க்கு முன் அங்கே உள்ள துறைசார் ஈடுபாடுள்ளவர்களை வளவாளர்களாக அழைத்து பயில்கை நடத்தப்படுவது ஒரு நடைமுறையாக இருந்தது. இப்படி ஒரு சில மணிநேரக் கலந்துரையாடலுக்கு அழைத்ததை எல்லாம் பெருப்பித்து விரிவுரையாளராக இருந்தேன் பட்டறை நடத்தினேன் என்ற அளவில் மிகைப்படுத்தப்படுவது அழகான செயற்பாடு அல்ல. இதைக் கூடப் பின்னாளில் செய்ய முடியாதவாறு அமரதாஸ் எமது அமைப்பின் “அறிவு அமுது “ புத்தகக் கடையில் செய்த திருட்டுச் சம்பவம் அமைந்தது.
ஆனாலும் அவரின் உடல் நலத்தைக் கருத்திற் கொண்டு பின்னர் அமரதாஸின் கலை வளச்சிக்கு வழிவகுத்துக் கொடுக்கும் ஒரு நல்ல நோக்கத்திற்காக நிதர்சன நிறுவனத்தில் ஒரு பகுதி நேரப் பணியாளராக சில பணிகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இதைக்கூட இன்று அமரதாஸ் தவறான முறையில் தனிப்பட்ட மதிப்புருவாக்கத்துக்காக மிகைப்படுத்தி வருகிறார்.
இதேசமயம் அமரதாஸையும் விட அளப்பரிய பணிகளைச் செய்த பெரியோர்களும் ஆளுமைகளும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை இப்படி எங்கும் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. மிக அமைதியாக இருக்கிறார்கள். அமரதாஸ் அந்தக் காலத்தில் (2009 க்கு முன்பு) வன்னியில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அங்கே இருந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவர் வழங்கிய கமெரா ஒன்றின் மூலமே சில படங்களை எடுத்தார் என்பது உண்மையே. இதை வைத்துக்கொண்டே இப்போ எம்மைப் பகிரங்கமாக வந்து தன்னோடு வாதிடுமாறும் அழைத்திருக்கிறார். இதெல்லாம் எவ்வளவு கீழ்த்தரமான செயற்பாடுகள் என்பதை எமது மக்கள் அறிய வேண்டும்.
எமது போராட்டகாலத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களை அமரதாஸ் போல வேறு பலரும் தமக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்களைச் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் அவற்றைத் தமது சொந்த ஆவணங்களாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தாயகத்திலிருந்து வெளியுலகத்துக்கெனவும் பாதுகாப்பாக ஆவணப்படுத்தவும் என்று அனுப்பி வைக்கப்பட்ட முக்கியமான ஆவணங்கள் இவையாகும். இவற்றுக்கு போராட்டப் பெறுமதியும் ஆவணப்பெறுமதியும் உண்டு. அதாவது வரலாற்று முக்கியத்துவமும் வரலாற்றுப் பெறுமதியும் உண்டு.
நாளை எம்முடைய வரலாற்றை ஆராய்ந்தறிவோருக்கும் மதிப்பிடுவோருக்கும் இந்த ஆவணங்கள் அவற்றின் மெய்த்தன்மை குலையாமல் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் வரலாறு சரியான முறையில் பதிவு செய்யப்படும். இல்லையென்றால் வரலாற்றுத் தவறுகளே ஏற்பட வாய்ப்புண்டு. அது எமது போராட்டத்தையும் வரலாற்றையும் பலவீனப்படுத்தி விடும்.
இந்த ஆவணங்கள் எந்தச் சூழலில் ஆவணப்படுத்தப்பட்டன. எந்தெந்தப் பிரிவுகளால் ஆவணப்படுத்தப்பட்டவை. யார் யார் இதில் சம்மந்தப்பட்டவர்கள் என்ற விபரங்கள் எல்லாம் இந்த ஆவணங்களில் உண்டு. ஆனால் இதையெல்லாம் சிலர் மறைத்துத் தமது தனிப்பட்ட நலன்களுக்காக மாற்றங்களைச் செய்வதும் சுவீகரிப்பதும் வரலாற்றுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
எதிர்காலத்தில் வரலாற்றைச் சரியாக அறிய முடியாத குழப்பங்களை உண்டாக்கி, எமது இனத்தின் சரித்திரத்தைப் பலவீனப்படுத்தியும் விடும். இதனை ஏன் இவர்கள் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர் என்ற கவலை எமக்குண்டு. இந்தக் கவலையை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தயவாகக் கேட்கிறோம். போராட்ட காலத்தில் பலருடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பெறுமதியான ஆவணங்கள் பலவற்றையும் இன்று காண முடியாதுள்ளது.
அவற்றைத் தேடினால் அதிர்ச்சியாக இருக்கிறது. அந்தளவுக்கு அவற்றின் பின்னணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு அவற்றைச் சேகரம் செய்து வைத்திருந்த Server பலதும் செயலிழந்துள்ளன. அல்லது அவையெல்லாம் செயலிழக்கப்பட்டுள்ளன எனக் கூறி இலகுவாகக் கடந்து செல்கின்றார்கள். இதெல்லாம் எமது விடுதலைப் போராட்டத்துக்கும், போராளிகளின் கனவுக்கும், நம்பிக்கைக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும்.
இது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட நீதியின்மை என்றே எம்மால் உணர முடிகிறது. இவற்றைப்பற்றி யாரிடம் கேட்பது? யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. இந்த நிலையையே அமரதாசும் தனக்கு ஏற்றமாதிரிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மற்றவர்களால் எடுக்கப்பட்ட படங்களையும் இணைத்துத் தன்னுடைய படங்களாகக் காண்பித்து, உலக அளவில் பிரபலம் தேட முயற்சிக்கும் அமரதாஸ் இன்று பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர் காண்பிக்கும் படங்கள் அனைத்தும் அவருடையவை இல்லை என்ற உண்மை இன்று பலருக்கும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் சிலர் இதைப் புரிந்து கொள்ளாமல் அமரதாஸின் புகைப்படங்களே அனைத்தும் என்று நம்பிக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகும். அமரதாஸ் தன்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் அவர் அதைச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் உண்மைகள் தெரியவரும். பொய்கள் அனைத்தும் வெளிச்சமாகும். அதைச் செய்யாமல் அதற்குப் பதிலாக தன்னைச் சுத்தப்படுத்தும் விதமாக அறிக்கைகளை அடுக்கடுக்காக விட்டுக் கொண்டிருக்கிறார்.
போராளிகள் தன்னைத் தேடி வந்து படங்களை நிரூபிக்குமாறு கேட்கிறார். அது எமது (போராளிகளின்) வேலை அல்ல. எமக்கு சாத்தியமானதும் அல்ல. வாழ்நாளெல்லாம் போர்க்களத்திலும் போராட்டக்களத்திலும் ஈடுபட்ட நாங்கள் தடுப்பிலும், சிறையிலும் துன்பப்பட்டு மீண்டு வந்து பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் வாழும் எங்களைப் பார்த்து, பாதுகாப்பான சூழலில் இருந்து கொண்டு ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று கேட்பது கேலிப்படுத்துவதற்கு ஒப்பானதாகும். இது ஒரு வகையில் அதிகார நிலைப்பட்ட ஒன்றாகும்.
அத்தோடு பல்வேறு நெருக்கடிச் சூழலில் வாழும் எமக்கு இதற்கான சாத்தியங்களில்லை. பாதுகாப்பும் இல்லை என்பது யாவரும் அறிந்தது. எமது பணி என்பது போராட்டத்துக்கு, எமது மக்களின் விடுதலைக்கு, எமது இனத்தின் வரலாற்றுக்கு எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்வதேயாகும். இந்த மாதிரி திருட்டுகளைச் செய்வோரைத் தேடிச் சென்று சாட்சியங்களை வைப்பதும் ஆதாரங்களைக் கொண்டுபோய் நிரூபிப்பதும் எமது வேலை அல்ல. அப்படிச் செய்ய முற்பட்டால் இன்று பல இணையத்தளங்களையும் பல தனி நபர்களையும் தேடிச் செல்ல வேண்டியிருக்கும்.
எம்மால் மேற்கொள்ளப்பட்ட பணி என்பது ஒரு விடுதலை இயக்கத்துக்குரியது. அந்த இயக்கம் முன்னெடுத்த விடுதலைப் பயணத்துக்கு உரியது. 30 வருடங்களிற்கு மேலாக தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய ஒரு விடுதலை அமைப்பு. அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தமிழீழ சிவில் நிர்வாக அரசு, அதன் கீழ் செயலாற்றிக் கொண்டிருந்த அத்தனை திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தும் இந்த மக்களுக்காக எமது தேசத்தின் எதிர்காலத்தை நோக்கியதாக இயங்கிக் கொண்டிருந்தது.
தமிழீழம் என்ற தேசத்திற்காக இயங்கிய அல்லது செயல்பட்ட அனைத்தும் அந்த தேச மக்களுக்கானது. அந்த அமைப்பு இன்று இல்லாமல் ஆக்கப்பட்ட பிறகு அந்த அமைப்பின் அத்தனை உடமைகளும் ஆவணங்களும் உழைப்பும் எமது மக்களுக்கானதாகி விட்டன. அதாவது அது இன்று எமது இனத்திற்கான தேசியத் சொத்தாகி விட்டது. அதனுடைய உரிமை மக்களுக்குரியது.
ஆகவே அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இன்று மக்களுக்குரியது. ஆனாலும் மக்கள் தமது வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான உணர்வை இன்னும் சரியாகப் பெறாமலே உள்ளனர். அதனால்தான் இப்படியான தில்லுமுல்லுகள் நடக்க முடிகிறது. இது எமக்கு பெருங்கவலையை உண்டாக்குகிறது. இப்படியாக வரலாற்றைத் திரிவுபடுத்துபவர்களை இனங்கண்டு தடுக்கும் பொறுப்பும் கடமையும் மக்களாகிய உங்களுக்குத் தான் உண்டு.
இன்று அமரதாஸ் தன்னுடைய கையகப்படுத்தலை மறைக்க பல வகையில் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார். அதற்குப் பல நியாயப்படுத்தல்களையும் செய்து கொண்டிருக்கிறார். இது எல்லோரையும் முட்டாள்களாக்கும் முயற்சியாகும். ஒரு பொய்யை ஆயிரம் தடவைகள் திரும்பத்திரும்பச் சொன்னாலும், அது பொய்யே தவிர உண்மையாகி விடாது. இந்தப் பொய்களை நாம் அம்பலமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
படங்களின் உரிமத்துக்கான ஆதாரங்களை நிரூபிப்பதற்கு உரியவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூட முடியாது. அதற்கு வாய்ப்பான நிலை எமக்குத் தற்போது இல்லை. இதுதான் அமரதாசுக்கு வசதியாக உள்ளது. அதை வைத்துக்கொண்டே அவர் எம்மைப் பகிரங்கமாக சுவிஸ்க்கு தன்னிடம் வந்து படங்களை ஆதரப்படுத்துங்கள் என்று கேட்கிறார்.
இது சர்வ வல்லமையோடு இருந்து கொண்டு கையில் எதுவுமில்லாமல் இருப்பவரை போருக்கு அழைப்பதைப் போன்றதாகும். அமரதாஸைப்போல எமக்கும் பாதுகாப்பான ஒரு சூழல் கிட்டினால் நாம் இதை உடனடியாகவே செய்து எமது மாவீரர்களின் பங்களிப்புக்கும் வரலாற்றுக்கும் மரியாதை செய்திருப்போம். அமரதாஸ்க்கு அனைத்து ஊடகப் போராளிகளையும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அப்படியிருந்தும் இன்றுவரை ஒருவரையும் தொடர்பு கொண்டு இந்த குற்றச் சாட்டிலிருந்து தான் ஏன் விடுபட நினைக்கவில்லை என்பது தெரியவில்லை.
ஆனாலும் இதனை பொதுவெளிக்கு கொண்டுசென்று அந்தப் படைப்பின் முக்கியத்துவத்தையும் பெறுமதியையும் அமரதாஸ் குறைத்துக் கொண்டு இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அமரதாஸ் தன்னிடம் இருக்கும் ஒளிப்படங்களை கொண்டுபோய் காட்டுவதற்கு ஒத்துழைப்பாராக இருந்தால் ஒரு கலைஞன் என்ற அடிப்படையில் அவரின் படைப்புக்கு மதிப்பளிக்கும் நோக்கில், ஐரோப்பாவில் வாழும் ஊடகப்போராளிகள் மூலம் உண்மையை வெளிக் கொண்டுவர முடியும்.
2009 க்கு முன்னும் 2009க்கு பின்னும் அமரதாஸ் என்ன வேலைகள் செய்துகொண்டிருந்தார் என்பது ஈழத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் கலைஞர்களுக்கு தெரியும். புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் அவர்களில் சிலரை தனது பொய்க்கு துணையாக்கிவிட நினைக்கிறார் அமரதாஸ். அந்த வகையில் நாங்கள் இந்தப் படங்கள் தொடர்பான சில உண்மைகளை உங்களின் பார்வைக்காக பொதுவெளியில் விடுகின்றோம். உண்மை புரிந்தவர்களுக்கு இதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்றும் நினைக்கின்றோம்.
01)
அவுஸ்ரேலியா Journalist Trevor Grant அவர்களால் “SRI LANKA’S SECRETS” How the Rajapaksa Regime Gets Away with Murder. என்னும் நூல் “Monash University” ஆல் 2014 ஆண்டு வெளியிடப்பட்டது மட்டுமல்லாமல் அவுஸ்ரேலியாவில் பல இடங்களிலும் அதிலுள்ள படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நூல் தமிழர்களின் இனப்படுகொலையின் போர் குற்றச் சாட்சியாக உலகமெங்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எந்த சுயநல நோக்கமும் இல்லாமல் தமிழ் மக்களுக்காக இதைப் படைத்து விட்ட இந்த ஊடகவியளார் Trevor Grant 2017 இல் Theasbestos cancer ஆல் மரணித்து விட்டார் என்பது வேதனையே.
2013 ஆண்டு நடுப்பகுதியளவில் Sri Lanka’s Secrets என்ற நூலுக்காக மொத்தம் 400 ஒளிப்படங்களை Trevor Grant க்கு அவுஸ்ரேலியாவில் இருக்கும் “மறவன்” என்ற போராளி கையளித்திருந்தார். யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் வைத்து ஊடகப்பிரிவுப் பொறுப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்ட சில தொகுதிப்படங்கள் Memory card and Memory stick க்களில் ஏற்றப்பட்டு வெளியில் கொண்டு சென்று ஊடகங்களுக்கு கொடுக்கச் சொல்லி பலபேரிடம் கையளித்திருந்தார்கள்.
அதில் ஒரு தொகுதி படங்கள் தான் மறவன் என்னும் போராளியிடமும் இருந்தது. அப்படங்களை Trevor Grant கொடுக்கும் போது அதன் வரலாற்று முக்கியத்தை உணர்ந்த நாங்கள் அதில் போராளிகளின் பெயர்களை போடுவதைத் தவிர்த்திருந்தோம். பெயர்கள் குறிப்பிடாமல் இதனை எடுத்தவர்கள் சிலர் தாக்குதல்களில் மரணித்துவிட்டார்கள். என்பதையும் அதில் சொல்லியிருந்தோம்.
அப்படங்களை தனக்கு தந்தது யார்…எவ்வளவு படங்கள் தரப்பட்டது உட்பட மறவன் அவர்களின்; போராட்ட வாழ்க்கை வராலாற்றுச் சுருக்கத்தையும்Trevor Grant அந்த நூலில் Page 50 இல் தெளிவாக உள்ளடக்கி இருக்கின்றார் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
02)
அமரதாஸின் பெயரில் நோர்வே தமிழ் சங்கம் வெளியீடு செய்யவுள்ள படங்கள் எல்லாம் அமரதாஸ் என்பவரால் எடுக்கப்படவில்லை என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் உங்களிற்காக…
இந்தப் படம் 16.03.2009 அன்று 10.20:27 க்கு Nikon Corporation, Nikon D70s, கமராவால் எடுக்கப்பட்டது. Tamilnet ஊடகத்தில் இருக்கும் இந்தப் படம் உட்பட வேறு எந்த படங்களும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமரதாஸ் என்பவரால் முள்ளிவாய்க்காலில் இருந்து Tamilnet News க்கு அனுப்பப்படவில்லை என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது. ஆனால் அமரதாஸ் இதற்கும் பின்பும் ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய் மேல் பொய் உரைப்பார் என்பதும் உறுதி.
அமரதாஸ் இடம் இருக்கும் ஒளிப்படங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கமராக்களால் எடுக்கப்பட்ட படங்களை அவர் கையகப்படுத்தியுள்ளார். அவர் தனது பெயர் இட்டு தனது Face book இல் பதிவேற்றமும் செய்திருந்தார்.; கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவரின் பக்கத்தை பாரவையிட்ட போது அங்கு பலவும் மறைக்கப்பட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
03)
அமரதாஸ் தன்னால் எடுக்கப்பட்ட படங்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் படங்களில் சிலவற்றை மிக விரைவில் பொதுவெளியில் வெளியிடுகின்றோம். கீழ்க்காணும் ஒளிப்படங்களை எடுத்த Nikon Corporation, Model : Nikon D70s, S/N-1001842 எமது அமைப்பினுடைய Camera. அது போராளிகளின் பயன் பாட்டில் இறுதி நாட்கள் வரை இருந்தது என்பது கூறிப்பிடத்தக்கது.
Photos -Nikon D70s, S/N-1001842
04)
Nikon Corporation, Nikon D70s முள்ளிவாக்காலில் அவலங்களைப் பதிவு செய்த இதே கமராதான் 2008க்கு முன் போராளிகளின் கள முனை வாழ்க்கையையும் பதிவாக்கியது என்பதை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
மேலே உள்ள போராளிகளின் படங்களை எடுத்த கமராவின் மூலமே அதற்கு மேலே உள்ள (பகுதி 04 இல் உள்ள ) மக்களின் அவலக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆகவே, அமரதாஸின் பொய்களுக்கு இதற்கு மேலும் சாட்சியங்கள் தேவையா?
தமிழீழ ஊடகப் போராளிகள்
22.11.2019