சிங்கள ஆட்சியாளர்களை பொறுப்புக்கூறச் சொல்லும் தமிழ்த் தலைமைகள் தாங்கள் தமிழ் மக்களிடத்தில் பொறுப்புக்கூற வேண்டும்.
ஆதரவு, எதிர்ப்பு, நிராகரிப்பு என ஜனாதிபதி தேர்தல் திருவிழா கடந்து போகிறது. நவம்பர் 27 வரை மாவீரர் நாள். அதற்குப்பின்னர் வேறொரு பேசு பொருள். இப்படியே இன்னும் சில மாதங்கள் கடந்தால் அடுத்தது பொதுத்தேர்தல். பழைய படி வசைபாடல்கள்,காரி உமிழ்தல்,பட்டம் சூட்டுதல் என போராட்டம் ஆரம்பிக்கும். இப்படியே கடக்கப்போகிறோமா?
புதிய ஜனாதிபதி பதவி ஏற்று நாடு ஒரு திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. சிறுபான்மை இனங்களை தவிர்த்து ஆட்சியை அமைக்க முடியும் என்பதை செயற்பாட்டுரீதியாக உணர்த்தியிருக்கிறார்கள் பெரும்பான்மை இனத்தவர். இப்போது தமிழர்களின் அடுத்த கட்டம் என்ன? இப்படியே நகர்ந்து பொதுத்தேர்தலை எதிர்கொள்ளப்போகிறோமா? அல்லது சிறுபான்மை இனங்களின் வாக்குகள் இல்லாமலே ஆட்சி அமைப்போம் என்ற மமதையோடு ஆட்சி புரியும் ஆட்சியாளர்களை எங்கள் வாக்குகளால் எமது கால்களில் விழ வைக்கப்போகிறோமா?
சிறுபான்மை மக்களின் வாக்குகளை எப்படி பயன்படுத்தப்போகிறோம்? முதலில் தமிழர்கள் தங்களை ஒரு இனமாக சிந்திக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் வசைபாடுதல்களையும்,பழிசுமத்தல்களையும் தவிர்க்கவேண்டும். அதே போன்று இது வரை நாளும் தமது மக்களுக்கு கூறிவந்த சாக்குப்போக்குகளுக்கு பொறுப்பு கூறவேண்டும். பொறுப்புக்கூறலில் மட்டும் நின்று விடாது நடந்த தவறுகளுக்காக மக்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்புக்கோருவதுடன் அதற்குப் பிராயச்சித்தமாக தமது பதவிகளை ராஜினாமா செய்ய முன்வரவேண்டும்.
குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன்,சுமந்திரன் ஆகிய இருவரும் இதுவரை தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமை குறித்து தமதுகருத்துக்களை பொது வெளியில் பகிரங்கப்படுத்துவதுடன் தமது பதவிகளையும் ராஜினாமா செய்யவேண்டும்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவையும்,பல்கலைக்கழக சமூகமும்,அரசியல் ஆர்வமுடைய இளைய சமூகமும் கட்சிகளின் கட்டுப்பாடுகளில் இருந்து வெளியில் வந்து கட்சிகளை இன விடுதலை நோக்கிய பாதையில் நகர்த்த வேண்டும். இவை அனைத்தையுமே இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித்தேர்தலின் போது பொது வேட்பாளர் தெரிவு இடம்பெறுவதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றபோது காலம் போதாது என கட்சிகளால் காரணம் கூறப்பட்டது. அதே போன்று எதிர்வரும் பொதுத்தேர்தல் வரையும் அமைதியாக இருந்துவிட்டு ஆளாளுக்கு அடிபடும் நிலையை தவிர்க்கவேண்டும்.
கடந்த ஆட்சியில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதற்கு பொறுப்புக் கூறி அதனடிப்படையில் சம்பந்தன்,சுமந்திரன் தமது பதவிகளை இதயசுத்தியுடன் துறப்பார்களேயானால் தமிழ்த்தேசியத்தின் பாதையில் பயணிக்கும் அனைத்துக்கட்சிகளையும் ஒன்றுபடுத்தி வரப்போகும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எதனையும் தேசியக்கட்சிகள் சார்ந்த போட்டியாளர்களுக்கு வழங்காமல் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் தமிழ்தேசியப் பாதையில் பயணிக்கும் கட்சிகளுக்கு வழங்க மக்களை வழிகாட்ட வேண்டும்.
ஜனாதிபதித்தேர்தலில் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை நிராகரித்தவர்களுக்கு சிறுபான்மை இனங்களின் வாக்குப்பலத்தை நிரூபிக்க வேண்டும். வெறுமனே தேர்தல் காலத்தில் கூட்டுச்சேர்வதை தவிர்த்து இனத்தின் விடிவுக்காக அனைவரும் விட்டுக்கொடுப்புடன் பயணிக்கத்தயாராக வேண்டும்.