சத்திய வேள்வி கொள் சரித்திர நாயகரே
சமத்துவ வாழ்வுக்காய் தீர்த்தமாடிய தீரர்களே
சிந்தனை கதைகள் சொல் சிறப்பியல் நாயகரே
சுதந்திர வேட்கை கொண்டு புறப்பட்ட புனிதர்களே
சுற்றுமும் முற்றமும் சொந்தமெனச் சொன்னவரே
சுதந்திர ஈழத்தின் விடுதலைக் காற்றுக்களே
மனித மாண்புகழுடை மனிதநேய மாந்தர்களே
மண்மீட்பு வேட்கையுடன் வீறுநடை போட்டவரே
மக்கள் துயர் துடைத்த மாசற்ற மறவர்களே
மரணத்தை வென்று நெருப்பாற்றில் குளித்தவரே
மகத்தான வாழ்விற்காய் மண் காத்த வீரர்களே
மண்வாழ தமிழ்வாழ தன்னுயிர் ஈந்தவரே
மனக் கோவில்களில் குடியிருக்கும் மாவீரச் சொந்தங்களே
களத் திறவுகோல் காவியத்திறனுடை வேந்தரே
கனவினைச் சுமந்த கரிகாலன் விழுதுகளே
கரும்புலியாய் களத்திற்கு சென்றவரே
கல்லுருவாகிநின்ற எம் காவல் தெய்வங்களே
கடலோடு அலைபாடி நீராகிப் போனவரே
கருவி ஏந்திக்களமாடி எமைக்காத்த வீரர்களே
கல்லறையில் உறங்கும் கார்த்திகைப் புனிதரே
கண்விழித்துக் காத்திருக்கும் எம் காவல் தெய்வங்களே
கார்த்திகை மாதத்தின் கலங்கரை விளக்குளே
கார்த்திகை நாளிலே கண்ணெதிர்ச் செல்வங்களே
காலனிடம் கலந்துவிட்ட கந்தகப் பூக்களே
கருமேகம் கிழித்தெழுந்த அக்கினிக் குழந்தைகளே
வீரம் விளை பூமிதன் கோற்றவைப் பிள்ளைகளே
வில்லோடு அம்பாய் வீறுநடை போட்டவரே
வரிப்புலி உடையின் அழகுத் தேய்வங்களே
வான்புலியாய் வான்தேடி வட்டமிட்டவரே
வானோடி வாகைசூடிய வரிப்புலி மறவர்களே
வானம் பாடிகளாய் வலம்வந்து வான்புகழைத் தொட்டவரே
விதைக்கப்பட்ட கருவறைச் சூரியத் தேவர்களே
விடியலைத் தேடி வெடிகுண்டு சுமந்தவரே
விடுதலைக்காக வித்தாகி வீழ்ந்திட்ட வீரர்களே
வீரகாவியமாய் காற்றோடு கலந்தவரே
விழிமூடிப்போன எங்கள் விடுதலைத் தீபங்களே
உறங்கத் தாயகாச் சரித்திர மனிதர்களே
உமக்கென்று எதுவுமில்லாது உம்முயிர் தந்தவரே
உயிர்கொண்ட இலட்சியத்திற்காய் வீழ்ந்த வித்துக்களே
உறுதியாய் வஞ்சனையைச் சிறகொடித்த சந்தனப் பேழையரே
சிந்தனைப் பொறி உயரிய சிறுத்தைச் சிகரங்களே
தென்றல் காற்று வீசும் வேங்கை வீரம் இசைத்தவரே
மணி முடிதரித்து அணிவகுத்த தேசக் குழந்தைகளே
துடிபின் செயல்திறன் புகலிடமாய்த் திகழ்ந்தவரே
தியாகத்தின் இருப்பிட புனித ஜீவன்களே
புயலாய் எழுந்து புதியதோர் வரலாற்றைப் படைத்தவரே
கையசைத்து சென்று விட்ட வீரத்தின் மணிகளே
வீரத்தின் விதைநிலத்தில் துயில்கொள் சிற்பகரே
புனிதத்தின் விதையாய் மண்ணில் புதைந்தீர்களே
தேகத்தைத் திரியாக்கிய வீரத்தின் விழிச்சுடரே
இனத்திற்காக இன்னுயிரை ஈந்த இளவல்களே
எம் நெஞ்சில் உங்கள் தாகம்
உங்கள் சுவட்டில் எங்கள் பாதம்.
- நிலவன்