தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2019
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.
எமது மண்ணின் மீதான ஆக்கிரமிப்புக்கும், எமது மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கும் எதிராகக் களமாடி விதையான வீரமறவர்கள் அனைவரையும் ஒருங்கே நினைவேந்தி நெஞ்சுருகி வணங்கும் நாள்.
சிங்கள தேசத்துடன் மட்டுமன்றி, பிராந்திய – உலக வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்த வரலாற்றுத்தடத்தில், எமது புவியியற் சூழல், ஆட்பலம், ஆயுதபலம், உலகநாடுகளின் ஆதரவு என்று எதுவுமே சாதகமில்லாச் சூழலில் எம்மாவீரர்கள் வியத்தகு சாதனைகளைப் படைத்தார்கள். பெரும்பலத்துடனிருந்த எதிரிகளோடு பொருதி புதுவரலாறு படைத்த, எமது விடுதலைப் போராட்டத்தின் அச்சாணிகளே எமது மாவீரர்கள். உலக வரலாறு கண்டிராத பல தியாகங்களையும், சாதனைகளையும் எமது தமிழீழ விடுதலைப் போராட்டம் படைத்திருக்கிறது.
உரிமைக்காகப் போராடும் மக்களுக்கான நம்பிக்கையொளியாகவும், உந்துதலாகவும், எழுச்சி வடிவமாகவும் விளங்கும் வீரமறவர்களை நினைவுகொள்ளும் இந்நாள் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் எழுச்சி நாளாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்கு எடுத்துச்சென்ற எமது வீரர்களைப் பெற்றெடுத்தோரும் அவர்தம் குடும்பத்தினரும் என்றும் போற்றுதற்குரியவர்கள்.
தனித்துவமான தேசிய இனமாக இறைமையோடும், சுதந்திரத்தோடும் வாழ்ந்துவந்த தமிழினம் ஐரோப்பிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அன்னியரின் ஆளுகைக்குள் போகத்தொடங்கியது. இலங்கைத்தீவு முழுவதையும் ஆட்சிசெய்த பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் இயல்பாகவே ஆட்சியதிகாரம் சிங்கள-பௌத்த பேரினவாதிகள் கையில் போய்ச்சேர்ந்தது. “இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள-பௌத்தர்களுக்கே” என்ற மகாவம்ச மனோநிலையில் ஊறித்திளைத்த பேரினவாதம், தமிழர்களை அடிமைப்படுத்துவதையும், மொழியழிப்பு, நிலப்பறிப்பு, கல்வியுரிமை மறுப்பு, பண்பாட்டுச்சிதைப்பு, பொருளாதாரச் சுரண்டல் என பலவழிகளில் தமிழினத்தின் மேம்பட்ட வாழ்வியலைச் சிதைக்கத் தொடங்கியது.
இவற்றுக்கெதிராக தமிழ்மக்கள் நடாத்திய தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்கள் பலனற்றுப்போயின. தமிழர் தலைமைகளோடு அவ்வப்போது சிங்களத் தலைமைகள் மேற்கொண்ட பேச்சுக்களும், உடன்படிக்கைகளும் சிங்கள ஆட்சியாளர்களால் கிழித்தும், எரித்தும் போடப்பட்டன. இதற்கு எதிரான அமைதிவழிப்போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டு, அடக்குமுறைகள் அதியுச்ச நிலையை அடைந்ததால் எமது மக்கள் வேறு தெரிவின்றி ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தெரிவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
உலகின் பல பாகங்களில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. பல்வேறு வகைகளில் போராடி விடுதலை பெற்ற அனைத்து இனங்களுக்கும், நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமைகள் எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்கும் உண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர். வேறெந்தத் தெரிவுகளுமற்ற நிலையில் எமது மக்கள் தேர்ந்தெடுத்த ஆயுதப் போராட்ட வழிமுறையே தமிழினத்தை பாதுகாத்து நின்றது என்ற உண்மையை தமிழர் தரப்பின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் இலங்கைத்தீவில் நிகழ்ந்தவை, நிகழ்ந்துகொண்டிருப்பவை வலியுறுத்தி நிற்கின்றன.
உலக நாடுகளின் துணையுடனும், தமிழ்மக்களின் துணையுடனும் கொண்டுவரப்பட்ட கடந்த நல்லாட்சி நாடகத்தில் தமிழ்மக்களிற்கே இழப்பு என்பதில் ஐயப்பட ஏதுமில்லை. பௌத்த – சிங்கள பேரினவாதம் தமிழ்மக்களின் நிலங்கள், உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஆட்சிமாற்ற மாயையில் உலகையும், தமிழ்மக்களையும் ஆழ்த்தி தன்மீதான அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொண்டது சிங்களப் பேரினவாத பூதம்.
சிறிலங்கா அரச அதிபர் தேர்தல்களில் பிராந்திய நலன்களுக்கான துருப்புச்சீட்டுகளாக, தமிழ்மக்கள் பயன்படுத்தப்பட்டாலும்கூட இலங்கைத்தீவில் இரு தேசங்கள் இருப்பதையே பெறுபேறுகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றன. இருந்தும் தமிழர்களுக்கு எதிராக வன்மம் பாராட்டுவதே சிங்களமக்களின் வாக்குகளைப் பெற எளிதான வழியென்பதைச் சிங்கள தேசம் கடந்த எழுபது ஆண்டுகளாகக் கைக்கொண்டு வருகின்றது. இன்றும் அதிலிருந்து சிங்கள தேசத்தின் அரசியல் விடுபடவில்லை. இப்படிப்பினையைக் கருத்திற்கொண்டு விடுதலைக்காகவும், சமவுரிமைக்காகவும் போராடுகின்றவர்கள் இந்தப் பெருந்தேசிய அரசியலுக்குள் கரைந்துவிடாமலிருப்பதே விடுதலை அரசியலை உயிர்ப்புடன் பேணுவதற்கு உதவும்.
அன்பான மக்களே!
வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத எந்த ஒரு இனமும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில்லை. எதிரிகளின் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டு அழியுண்டு பரிதாபத்துக்குரிய இனமாய் அலைந்த துன்பியல் வரலாறுகள் ஒருபுறமும், அடங்கமறுத்த ஓர்மமும், விலைபோகாத வீரமும், எதிரியின் வஞ்சகங்களுக்கு வளைந்துகொடாத நிதானமும், பெற்றுத்தந்த வெற்றிகள் அடங்கிய மாண்புமிகு வரலாறு மறுபுறமும் எம்முன் இருக்கின்றன. எத்தனையோ இடர்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து மீண்டெழுந்த எமது போராட்டமே இலங்கைத்தீவின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றம்பெற்றது.
எமக்கான விடுதலைப் பயணத்தில் நாமே எம்மைத் தீர்மானிக்கும் வலிமைகொண்டவர்களாகத் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். எமது எதிரிகள் எழுதிவைத்திருக்கும் வழிவரைபடத்தின் வழியே தமிழ்மக்களை அழைத்துச்சென்று அவர்களின் விடுதலை வேட்கையை முடக்கி, சிங்கள அரசுடன் இணைந்து பயணிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களைப் புறந்தள்ளி, தெளிவான தமிழ் தேசியக்கொள்கைப்பற்றுறுதியுடன் பயணிக்கின்றவர்களை ஒன்றிணைத்து, மக்கள் பேரியக்கமாக பரிணாமம் பெற்று, எமது விடுதலை அரசியலைத் தமிழ்மக்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
எமது விடுதலைப்பாதையில் எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்த்துநின்று சாதிக்க முடியுமென்ற எமது கடந்தகால போராட்ட வரலாறே எம்மை வழிநடத்தும் உந்துசக்தியாக அமையும். எமது இனத்தின் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இனவழிப்பை உலகின் முன் உறுதியாக முன்னெடுத்துச்செல்லும் முனைப்போடு தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து செயற்பட வேண்டும். நிகழ்காலத்திலுங்கூட இனங்களின் விடுதலைப் போராட்டங்களும், இனவழிப்புக்கு எதிரான நீதி வேண்டிய போராட்டங்களும், செயற்பாடுகளும் பூமிப்பந்தில் நிகழ்ந்த வண்ணமேதான் உள்ளன. மியன்மார் அரசாங்கம் மீதான இனவழிப்பு விசாரணைகள் தொடங்கியுள்ளமை மிக அண்மைய எடுத்துக்காட்டு.
எமது தாயகம் எப்போதும்போல அடக்குமுறைகளையும், இன்னல்களையும் சுமந்தவண்ணமேயுள்ளது. நீதிவேண்டியும் உரிமைகளுக்காகவும் செயற்பட்டுவரும் மக்கள் குறிவைக்கப்பட்டு கைதுசெய்யப்படுவதன்மூலமும், காணாமல் ஆக்கப்படுவதன்மூலமும், உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதன் மூலமும் அவர்களின் குரல்கள் அடக்கப்படுகின்றன. எமது கலை பண்பாடுகளும் சமூக விழுமியங்களும் அழிக்கப்படுவதோடு, சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் போதைப்பொருள் பயன்பாடுகளும், வன்முறைக் கலாச்சாரமும் திட்டமிட்டுப் பெருகவிடப்படுகின்றன. உரிமைகள் மட்டுமல்லாது அபிவிருத்தி ரீதியிலும் தொடர்ந்தும் எமது தாயகம் பழிவாங்கப்படுகின்றது.
இந்நிலையில், அரச அடக்குமுறைகளுக்கெதிரான எமது மக்களின் போராட்டங்களும் எதிர்ப்பலைகளும் முனைப்புப் பெற்றுவருகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தொடர்போராட்டங்கள், மண்மீட்புப்போராட்டங்கள், அரசியற்கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், மகாவலி என்ற பெயரில் நிலப்பறிப்புத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் என எமது மக்களின் செயற்பாட்டுத்தளம் விரிந்துள்ளது. அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்ப்புக்களையும் தமது அரசியல் அபிலாசைகளையும் பல்வேறு வழிகளிலும் எமது மக்கள் தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருகிறார்கள்.
இருந்தபோதும், பன்னாட்டுச் சமூகம் பாராமுகமாகவே இருந்து வருகின்றது. எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக்கு நீதிவழங்கவோ, அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ இன்றுவரை ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாமல் அடக்குமுறையாளர் கைகளிலேயே ஒடுக்கப்படும் மக்களின் நீதியும் கையளித்து விடப்பட்டிருக்கின்றது.
உலக வரலாறு கண்டிராத தமிழினத்தின் மீதான பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும், அதன்பின்னரும் சரி, சர்வதேசம் தீர்க்கமான நடவடிக்கையேதும் எடுக்காமல் இருப்பது தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. காலநீடிப்பு, ஆட்சி மாற்றம், பொய்யான வாக்குறுதிகள் என அனைத்து வழிகளிலும் ஏமாற்றி எக்காளமிடும் சிங்கள-பௌத்த பேரினவாத பூதத்தின் முன் தொடர்ந்தும் பன்னாட்டுச் சமூகம் மௌனிகளாக இருக்கக் கூடாதென்பதும் தமிழினத்தின் நீதிக்கான குரலினை செவிமடுக்க வேண்டும் என்பதே எமது அவா.
சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளிகளாகவும், கொடூரமான மனிதவுரிமை மீறுனர்களாகவும் பார்க்கப்படும் தலைவர்களைத் தெரிவு செய்துவரும் நிலையில் சிங்கள தேசம் இருக்கையில், தமிழர்களின் உரிமைகளும், பாதுகாப்பும் பேணப்படும் என்ற உத்தரவாதம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இத்தகைய சூழலில், இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசே தமிழ்மக்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தும். ஆதலால், இனியாவது தமிழீழத் தேசத்தின் நியாயமான கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு தமிழ்மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் அவர்களுக்குரிய இறைமையோடு வாழக்கூடிய நிரந்தரமான தீர்வாகிய தமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
அன்பான தமிழக உறவுகளே!
எமது போராட்டம் குழந்தையாகத் தவழத் தொடங்கியபோதே அதை உச்சிமோந்து பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள் நீங்கள். எமது வெற்றிகளில் திளைத்தும் இழப்புகளில் துவண்டும் உணர்வோட்டமாக எமது விடுதலைப் பயணத்தில் உடன் வந்தவர்கள். இனவழிப்பின் உச்சக்கட்டத்தில் உணர்வு கொந்தளித்து போராட்டக்களத்தை நெருப்பாக்கியவர்கள். எமக்குரிய நீதிக்கான பயணத்தில் தோளோடு தோள்நின்று இன்றும் உழைத்து வருகின்ற தமிழக தொப்பிள்கொடி உறவுகளிற்கு நாம் என்றும் எமது அன்பைத் தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள். உங்களின் தொடர்ச்சியான ஆதரவும், எமது விடுதலை அவாவை இந்தியத் துணைக்கண்டமெங்கும் கொண்டு சேர்க்க வேண்டிய உங்கள் பணியும் என்றும் எமக்குத் துணைநிற்கும்.
அன்பான புலம் பெயர் உறவுகளே!
முள்ளிவாய்க்கால் இனவழிப்போடு எமது தேசத்தின் மூச்சடங்கிப் போய்விடும் என எதிர்பார்த்த எதிரியின் கணிப்பை எமது மக்களும், செயற்பாட்டாளர்களும் பொய்ப்பித்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக .தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவ கட்டளைத் தளபதிகளின் இலங்கைத் தீவுக்கு வெளியேயான பயணங்களை எமது செயற்பாட்டாளர்கள் வெற்றிகரமாக முடக்கியுள்ளார்கள். விடுதலைப் போராளிகளின் சாவு சுதந்திரப் போராட்டமொன்றின் முடிவல்ல என்பதை அவர்களின் தியாகத்தின் ஊடாக தமிழ் தேசிய உணர்வாளர்களும், செயற்பாட்டாளர்களும் நிரூபித்து வருகிறார்கள்.
எமது விடுதலைப் போராட்ட நியாயத்தையும் எமது மக்கள் படும் அவலத்தையும் சர்வதேச சமூகத்திடம் வெளிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு. தாயகத்து மக்களின் பாதுகாப்பும் பலமும் பெருமளவு உங்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. பல்தேசிய இனங்களின் ஆதரவை எமது விடுதலைக்கான பயணத்தை நோக்கித் திருப்ப வேண்டிய பாரிய பொறுப்பையும், சமரசமற்ற வகையில் எமது இனத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையையும் புலம்பெயர் தமிழ்மக்களின் கைகளில் – குறிப்பாக இளைய சமுதாயத்தின் கைகளில் வரலாறு ஒப்படைத்திருக்கிறது.
மேலும் எமது போராட்டச்சக்கரத்தின் அச்சாணிகளாய்த் திகழ்ந்த எமது தாயக மக்கள் போருக்குப் பின்னர் சுமந்துவரும் சுமைகளைப் பகிர்ந்து, தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி எமது மக்களின் வலிகளில் பங்கெடுத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவது மக்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதுடன், தமிழத் தேசியத் தலைவரின் சிந்தனையை வலுப்படுத்தியும் நிற்கின்றது. தொடர்ந்தும் தாயக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அரசியற்கைதிகளின் விடுதலைக்காகவும் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டியது அனைவரதும் கடமையாகும்.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையின் வழி; நின்று செயற்படுபவர்கள் அனைவரும் புலம்பெயர்தேசத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய கட்டமைப்புக்களைப் பலப்படுத்தி, விடுதலைப் போராட்டத்தினை வலுப்படுத்த இணையவேண்டும் என அழைப்புவிடுகின்றோம். சிங்கள அரசின் புலனாய்வுப்பிரிவினரால் தமிழ் மக்களின் ஒற்றுமையினை உடைப்பதற்காகவும், விடுதலை மீது கொண்டுள்ள பற்றுறுதியினை தகர்ப்பதற்காகவும் பலவழிகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இனம் கண்டு விழிப்புடன் செயற்படுமாறு வேண்டிநிற்கின்றோம்.
அன்பான தமிழீழ மக்களே!
சிறிலங்கா அரசானது தமிழரின் அரசியல் வேட்கையை முழுமையாக அழித்து, தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டு பத்தாண்டுகள் கடந்த இந்நிலையிலும்கூட தமிழர்களுக்கான எந்தவொரு நியாயமான தீர்வுத்திட்டத்தையும் வழங்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. அடக்குமுறையென்ற ஒரேயொரு தீர்வை மட்டுமே சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருக்கின்றது.
இந்நிலையில், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. தற்போது நிகழ்ந்துள்ள அதிகார மாற்றமும் அதற்கு சிங்களப் பெரும்பான்மைச் சமூகம் அளித்த ஆணையும் இச்செய்தியை மேலும் வலுப்படுத்தியே நிற்கின்றது.
எவ்வகை இடர் வரினும் தமிழீழத் தனியரசு என்ற இலக்கு நோக்கிய எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. சத்திய வேள்விக்காய் தம்மை ஆகுதியாக்கி, இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய சிற்பிகளான மாவீரர்களின் இலட்சிய உறுதியின் வழிநடத்தலில் நாம் எமது இலக்கை அடைவோமென்று உறுதியெடுத்துக் கொள்வோம்.
இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, ஈழத்தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில் எமது இனவிடுதலைக்காக அயராது உழைக்க நாம் அனைவரும் உறுதியெடுத்துக் கொள்வோம்.
‘‘நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்” என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றின் வழிநின்று தமிழீழ விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.