தொடரும் வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதி வேண்டும் போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இலங்கை வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரான லீலாவதி ஆனந்தராஜா அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்
கேள்வி – வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதி வேண்டி மூன்று வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடாத்தி வரும் உறவுகளின் சார்பில், இப்போராட்டத்தின் தற்போதைய நிலை பற்றியும் எதிர்வரும் 30 திகதி நடக்கவிருக்கும் பேரணி தொடர்பாகவும் கூற முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில் புதிய ஜனாதிபதி அவர்கள் பதவியேற்றுள்ளார். அவர் எமது பிள்ளைகள் கையளிக்கப்பட்ட போதும், கடத்தப்பட்ட போதும் பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். அவர் அண்மையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த நான்கு கிறிஸ்தவ மதகுருமாரைச் சந்தித்த போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவருமில்லை. எல்லோரும் யுத்தத்தின் போதே இறந்து விட்டனர் என்று கூறியிருந்தார்.
அந்தக் கூற்று பொய்யானது என்பதை எல்லோராலும் உணர முடியும். ஏனெனில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் வைத்து வைத்து எமது பிள்ளைகளை கையளித்திருந்தோம். மேலும் பலரை வெவ்வேறு காலப்பகுதிகளில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் வைத்து கைது செய்திருந்தனர். இவர்கள் எல்லோரும் போரின் போது இறந்து விட்டார்கள் என்று நம்ப முடியாத ஒரு கூற்றை ஜனாதிபதி அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
இதற்குக் கண்டனத்தை தெரிவிக்கும் முகமாகவும், தற்போதைய ஜனாதிபதிக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இவ்வளவு அழுத்தமுள்ள அரசாங்கம் வந்த பின்னரும் எமது மக்கள் எம்முடன் நிற்கிறார்கள் எமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என்பதற்கும், இத்தனையும் உண்மை என்பதை உலகிற்கு காட்ட அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும். ஒன்று திரண்டு எங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருக்கின்றோம்.
கேள்வி– இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் உங்கள் போராட்டத்திற்கு, எந்த வகையில் ஆதரவு அல்லது வழிகாட்டல் வழங்கி வருகின்றனர்?
நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதபடியால், ஒட்டுமொத்தமாக எந்தவொரு அரசியல் கட்சிகளோ அரசிய வாதிகளோ எங்களுடன் பேசுவதில்லை, இணைந்து எம் நீதிக்கான போராட்டத்திற்கு ஒரே குரலில் வலுச்சேர்ப்பதில்லை. ஆனால் போராட்டங்கள் நடக்கும் போது வருவார்கள். ஆதரவு தெரிவிப்பார்கள், போவார்கள். அதைத் தவிர எமக்கு வழிகாட்டல் வழங்குவதாக இல்லை. அந்த விடயத்தைக் கூறித்தான் ஆகவேண்டும்.
கேள்வி– போராட்டம் தொடர்பாக சட்டவல்லுநர்கள் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள்? இது தொடர்பாக உங்களுடன் பேசியிருக்கின்றார்களா?
அவர்களாக முன்வந்து எந்தவித ஆலோசனைகளையும் வழங்கியது கிடையாது. ஆனால் ஒருசில ஆலோசனைகளை நாங்கள் கேட்கும் போது சொல்கின்றார்களே தவிர அவர்களாக முன்வந்து சொல்வதில்லை. எங்கள் பிள்ளைகள் நாட்டிற்காகவே காணாமல் போனவர்கள். எனவே அவர்களின் விடுதலையில் அனைவருக்கும் அக்கறையிருக்க வேண்டும்.
எனவே இவர்கள் தாமாக முன்வந்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வளவு சட்டத்தரணிகள் இருந்தும், நாங்கள் எங்கள் கோரிக்கைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நான் வேறு நேர்காணல்களின் போதும் கூறியுள்ளேன். வெளிநாட்டிலிருந்தோ, உள்நாட்டிலிருந்தோ எமது போராட்டத்திற்கு ஆலோசனைகளை வழங்க சட்டவல்லுநர்கள் எவரும் முன்வரவில்லை.
கேள்வி- இந்த உணர்வு மிக்க போராட்டம் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்திற்கு இளைஞர்கள் , மாணவர்களின் பங்கு எப்படியிருக்கின்றது?
நாங்களாக போராட்டத்திற்கு அழைக்கும் போது தான் அவர்கள் அதில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அதுகூட ஒரு குறிப்பிட்ட தொகையினரே வருகின்றனர். இளைஞர்களை அவர்களின் பெற்றோர்கள் அனுமதிக்காமையாலேயே அவர்கள் பங்களிப்பதில்லை.
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் தெரியும் தானே. பாதிக்கப்பட்டவர்களின் இளைஞர்கள்கூட போராட்டத்தில் பங்களிக்க வருவதில்லை. பெற்றோருக்குத் தெரியாமலேயே சிலர் வருவார்கள். அண்மையில் முஸ்லிம் மனித உரிமைகள் தொடர்பான ஒருவர் , இளைஞர்கள் போரட்டத்திற்கு வரவேண்டும் பங்களிக்க வேண்டும் என்பதை கோரிக்கையாகவே விடுத்திருந்தார். எனவே இளைஞர்கள் இந்த போராட்டங்களில் பங்களிக்க பயப்படுகின்றார்கள் என்பது அவர்களுக்கும் புரிந்திருக்கின்றது.
கேள்வி-அரசியல் ராஜதந்திரிகள் அல்லது பன்னாட்டு தூதுவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உங்கள் போராட்டத்திற்கு எவ்வாறான பங்களிப்பைத் தருகின்றார்கள்? அவர்களின் பங்களிப்பு உங்களுக்கு இருக்கின்றதா?
ஆம். இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் கொழும்பிற்கு சென்று பன்னாட்டு தூதுவர்களையும் சந்தித்து எமது பிரச்சினைகளைக் கூறியிருந்தோம். அதேபோல் ஜெனீவாவிலும் சந்தித்து காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP) எனும் அதிகாரமற்ற நிறுவனம் எமக்கான நீதியை இலங்கை அரசியலமைப்பு, மனித உரிமைகள் சட்ட ஒழுங்குகளின் கீழ் பெற்றுத்தருவதில் எவ்வகையிலும் பங்களிக்காது என்பதையு விளக்கமாகக் கூறியிருந்தோம்.
சட்ட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் அவர்களுக்கு விளங்கக்கூடிய வகையில் கூறியிருந்தோம். அவர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்கள். ஏற்றுக் கொண்டாலும் நாட்டின் அரசியல் அழுத்தம் காரணமாகவோ என்னவோ தெரியாது, அவர்களும் OMP ஐ ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் அதற்கு ஒருமுறை போய் பேசிப் பார்க்குமாறும் கூறுகின்றார்கள்.
கேள்வி-பல காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். புதிய அரசு பதவிக்கு வந்ததன் பின்னர், காணாமல் போன உங்களின் பிள்ளைகள் தொடர்பான தகவல்களோ அல்லது தீர்வுகளோ கிடைக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா?
யுத்தம் முடிவடைந்த பின்னர் கையளித்த உறவுகளை யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்று கூறமுடியாது. அது ஒரு நம்பத் தகுந்த விடயம் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எனவே எமக்கு இரண்டு பதில்களை மட்டுமே அவர்கள் தரவேண்டும். ஒன்று உங்கள் குழந்தைகள் இருக்கின்றார்கள். எங்கே இருக்கின்றார்கள், விசாரணைகள் முடிந்த பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்பது ஒரு பதில்.
அடுத்தது உங்கள் பிள்ளைகளுக்கு துரதிஸ்டவசமாக ஒரு சம்பவம் நடந்து விட்டது. எப்ப நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது? யாரது ஆணையின்படி நடந்தது? என்பதை வெளிக் கொண்டுவர வேண்டும். அந்த பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
ஏனெனில், வரும் காலத்திலும் இதேபோல் தமிழர்கள் கொன்றொழிக்கப்படக் கூடாது. இந்த இரண்டுமே செய்யப்பட வேண்டியதாகும். எங்களுக்கு அவர்கள் இரகசிய முகாம்களில் இருக்கின்றார்கள். விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. விடுவிக்கப்படாதவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறப்பட வேண்டும்.
கேள்வி -உங்கள் உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்கும் உறவுகள் எவ்வாறான ஆதரவை உங்களுக்குத் தரவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
இதுவரை காலமும் அவர்கள் ஆதரவு நல்கியிருக்கின்றார்கள். அதுகூட போதாது என்றே கூறுகின்றார்கள். லண்டனுக்குச் சென்ற போதும், பின்லாந்திற்குச் சென்ற போதும் பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கின்றேன். நாங்கள் இங்கு போராட்டம் நடத்தும் போது அதை சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் தமிழர்களின் ஆதரவு எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை அந்தந்த நாடுகளுக்குக் காட்டுவதற்கும் அங்கு போராட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றார்கள்.
உதாரணமாக சிறுவர் தினத்தன்று லண்டனில் நடந்த போராட்டம் வரவேற்கத்தக்கது. அவர்கள் தங்கள் வேலை, போராட்ட இடத்தின் தூரம் போன்ற காரணங்களினால் போகாமல் விடுகின்றார்கள். அவர்களுக்கும் பங்கு உள்ளது. எனவே அவர்கள் அர்ப்பணிப்புடன் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும்.
நாங்கள் எதிர்பார்ப்பது அவர்கள் எங்களுக்காக போராட வேண்டும். தாங்களாகவே ஒழுங்குபடுத்தி இவற்றை செய்ய வேண்டும். அங்கு அறிவுபூர்வமானவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அந்ததந்த அரசாங்கங்களுடன் கதைத்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். பல நாடுகளின் அங்கீகாரம் இருந்தால் தான் எமக்கு ஒரு தீர்வு வரும். எனவே அவர்கள் அதற்குரிய பங்கை ஆற்ற வேண்டும் என்பது மிகப் பெரிய ஒரு வேண்டுகோளாக இருக்கின்றது.