நெஞ்சம்முழுதும்நீயம்மா தேசப்புதல்வர்களோடு ஒற்றைக்கனவை சுமந்தபடி முல்லைத்தீவின் கடற்கரை பெருநகரங்கள் நோக்கி நடந்த பல லட்சக்கணக்கான மக்கள் திரள்களோடு எமது குடும்பமும் ஒன்றாக இணைந்திருந்தது
வலைஞர்மடம் எனது அழகிய குடும்பம் இறுதியாக ஒன்றாக இருந்த இடம் உருமறைப்பு செய்தபடி கம்பீரமாய் புளியமரத்தடிக்கு கீழ் நின்றிருந்த டோறா படகடிக்கு அருகில் இருந்த பனங்கூடலடி எங்கள் வசந்த காலத்தின் இறுதிக்கணங்களை தன்வசப்படுத்தும் இருப்பிடமாய் மாறியது
ஆயிரம் ஆயிரம் மிக நெருக்கமான தறப்பாள் வீடுகள் கீழே அவரவர் வசதிக்கு ஏற்றால் போல் பங்கர்கள் குடிப்பதற்கு குளிப்பதற்கு ஒரு பொதுக்கிணறு நூற்றுக்கணக்கான வாளிகள் நீர் தேடி அலைமோதும் தருணங்கள் காலைக்கடன் கழிப்பதற்கு கடற்கரை தான் இடம் தரும் இரணைப்பாலையில் வெட்டிய தென்னைகளின் தேங்காய்களும் ஊர்வயல் அரிசியும் நிவாரண பருப்பும் கப்பல் பூசணிக்காயும் வளர்த்த ஏழெட்டு சாவலும் தான் இறுதிவரை கைகொடுத்தது மாட்டிறைச்சி சாப்பிடப்பழகியதும் அங்கே தான் உணவு சமைக்க முடியாமல் தவித்த இறுதி மூன்று நாள்களை தவிர மூன்று நேரமும் நிறைவாய் சாப்பாடு தரும் என் அம்மா
அன்றும் இதே போன்றதோர் நாட்களில் வழமையாக பட்டாசு வெடிகளுடன் பிறக்கின்ற புது வருடம் இம்முறை அதிகரித்த வெடியோசைகளுடன் புலர்ந்தது நேரத்திற்கே நித்திரை முழித்த நான் அம்மாவை எழுப்பி (அம்மா இந்த விளக்கை கொளுத்தி விடுங்கோ நான் படிக்கப்போறன்) என்று சொல்ல என்ன நினைத்தாவோ தெரியாது என் தலையை தடவிவிட்டு விளக்கை கொழுத்தி தலைமாட்டில் வைத்து விட்டு (என்ர தங்கம் இப்படி மெலிஞ்சு போட்டுது இருப்பா முட்டைக்கோப்பி போட்டுத்தாறன்) என்று சொல்லியபடி என் பதிலுக்காய் காத்திராமலே பங்கரில் இருந்து வெளியே வந்து அடுப்பை மூட்ட தொடங்குகிறாள் நான் வழமை போல போராளிகள் மட்டும் வாசிப்பதற்கு உரிய புத்தகமான
போர்வாளை புரட்டத்தொடங்குகிறேன் நான் போராளியாக இல்லாத போதும் என்னை நம்பி என் தேடல் பசியை போக்க கணிணிப்பிரிவைச்சேர்ந்த பெண் போராளிகளான மலரிசை அக்காவும் வீரத்தமிழ்
அக்காவும் பரிசாய் ஒரு தொகை புத்தகங்களை சுகந்திரபுரத்தில் வைத்து தந்திருந்தார்கள் அவற்றை பத்திரப்படுத்தி கொண்டு வந்தது இந்த நிலமையில் எனக்கு பெரிதும் கைகொடுத்தது
பத்து நிமிடங்களில் ஒரு கையில் கோப்பியுடனும் மறு கையில் மாத்திரைகளுடனும் வந்த அம்மா எனக்கு மாத்திரைகளை பருக்கி விட்டு (இழை இன்னும் வெட்டேல்ல பிள்ளைக்கு ,மாத்தளன் ஹாஸ்பிற்றல்க்கு இந்த றோட்டால போக ஏலாது நேற்று மீன் வாங்க போகேக்க சோபிதா டொக்ரர கண்டனான் சேர்ச்க்கு கிட்ட தான் இருக்கிறா வீட்ட வரச்சொல்லி சொன்னவா சித்தப்பா வோட இண்டைக்கு பிள்ளை போய் இழை வெட்டிட்டு வா இண்டைக்கு புட்டும் அவிச்சு சேவல் ஒன்றையும் அப்பாவ கொண்டு உரித்து கறி வைச்சு தாறன் ) என்று கூறி விட்டு தண்ணி எடுக்க போய்விட்டா
நான் பச்சைபுல்மோட்டை அடியில் முழங்காலில் காயப்பட்டு இன்றுடன் சரியாக ஒரு மாதங்கள் இந்த ஒரு மாதமும் என் அம்மாவின் கண்களில் கண்ணீரையும் மனதில் ஏக்கத்தையும் என்னை தேற்றிஎடுக்க அவர் பட்ட பாட்டையும் தவிர வேறெதையும் நான் பார்க்கவில்லை பொழுது நன்றாக விடிந்து விட்டது பொக்கணைப்பக்கம் துப்பாக்கிச்சத்தங்கள் கேட்டது நான் மெல்ல எழுந்து பங்கர் வாசலில் கொஞ்சம் காற்று வாங்குவோம் என அரக்கி அரக்கி வந்து இருந்தேன் அப்பா பெரியப்பா வீட்ட போயிருந்தார் தங்கச்சி தம்பி எழும்பி பங்கருக்குள் இருந்தார்கள் அம்மா புட்டை குழைத்து அடுப்பில் வைத்துவிட்டு அடுப்பை ஊதுகுழலால் ஊதிவிட்டு எழும்புகிறார் அந்த நேரம் துப்பாக்கி ரவை ஒன்று அவரது நெஞ்சை பதம் பார்க்கிறது என்னை ஓடித்தப்பும் படி கையால் சைகை காட்டியபடியே நிலத்தில் சரிகிறா 14:04:2009 புதுவருடம் வெடியோசையுடன் மலர்கிறது அதன் பிறகு அம்மாவின் உயிரற்ற உடலைத்தான் காணக்கிடைத்தது
#நான் எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களிப்பதும் இல்லை
எத்தகைய சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை கொண்டாடுவதும் இல்லை
#காலங்கள் #ஒருபோதும் #வலிகளை #மாற்றாது