இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கக்கும் கொரோனா வைரஸினால் எல்லோரும் போலவே நாங்களும் அச்சத்திலும் பயத்திலும் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் இந்த கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினை, அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான பிரச்சினை. அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை புத்தஜீவிகள், மருத்துவர்கள், துறைசார்ந்தவர்கள் மிக அருமையான வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் மற்றொரு மறைவான பிரச்சினை. இது வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு பிரச்சினை. அதுதான இன்றைய இக்கட்டான சூழலில் குடும்பங்களில் புதிதாகத் தோன்றியுள்ள பிரச்சினை அல்லது முரண்பாடு.
முன்பு கணவன்மார்கள் அல்லது தந்தைமார்கள் வேலைக்காக காலையிலேயே வீட்டை விட்டுச் சென்று விடுவார்கள். பின்னர் மாலையில் அல்லது இரவுவேளையிலேயே வீடு திரும்புவர். இது போன்றுதான் பிள்ளைகள் காலையில் பாடசாலைக்குச் சென்று பகல் பொழுதில் வீடுகளுக்கு வருவார்கள். பின்னர் பிரத்தியேக வகுப்புகள், விளையாட்டு… என வெளி உலகத்தோடு தொடர்பில் இருப்பார்கள். இதனால் தாய்மார் காலையிலிருந்து மாலை வரை வீட்டு வேலைகளை ஒழுங்குபடுத்தி தமது கணவர் மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை செய்து முடித்து விடுவர்.
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 24 மணித்தியாலமும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. இதன் காரணமாக வீடுகளில் பல்வேறுபட்ட முரண்பாடுகளும் பிரச்சினைகளும் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறான பல முரண்பாடுகள், பிரச்சினைகள் இருந்தாலும்கூட அதில் ஒரு சில விடயங்கள் குறித்து நாம் இங்கு நோக்குவோம்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதனால் நேரத்தை எவ்வாறு ஒழுங்குப்படுத்திக் கொள்வது, கணவன்- மனைவிக்கிடையேயான, பெற்றோர்- பிள்ளைகளுக்குடையிலான உறவை எவ்வாறு வளர்ப்பது? முதலான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் தமது பெற்றோருடன் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதியின்மை, விளையாடுவதற்கான அனுமதியின்மை… என்பனவே இதற்கான பிரதான காரணம். வீட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் தமக்கு விரும்பிய விதத்தில் செயல்படுகின்றனர். இதனால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் முரண்பாடு அதிகரிக்கிறது. குறிப்பாக தாய் இந்த முரண்பாட்டுக்கு அதிகமாக முகங்கொடுக்கிறார்.
விளைவாக கணவன்- மனைவிக்கிடையிலான உறவும் பாதிப்படைவதை அவதானிக்க முடிகிறது.
கணவன்- மனைவிக்கிடையிலான முரண்பாட்டை எவ்வாறு தீர்ப்பது? ஏற்கனவே சாதாரண காலத்தில் காணப்பட்ட பிரச்சினைகள் அசாதாரண காலத்தில் மேலும் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே, குடும்ப முரண்பாட்டை உளவியல் நோக்கில் முகாமை செய்து தீர்வு காண்பது முக்கியமானது.
உளவியலில் தரமான நேரம் (Quality time) என்று ஒரு விடயம் உள்ளது. கணவன்- மனைவி அல்லது பெற்றோர்- பிள்ளைகளுக்காக குறிப்பிட்ட நேரத்தை வேறு எந்த வேலையும் இன்றி ஒதுக்கிக் கொள்வதை தரமான நேரம் எனலாம். அதாவது குறிப்பிட்ட நேரத்தை நாங்கள் மற்றவர்களுக்காக ஒதுக்குவது. உதாரணமாக கணவன் தனது மனைவிக்காக அல்லது மனைவி தனது கணவனுக்காக அரை மணித்தியாலத்தை ஒதுக்குவது, பிள்ளைகள் பெற்றோருக்காக அல்லது பெற்றோர் பிள்ளைகளுக்காக ஒரு மணித்தியாலம் அல்லது இரு மணித்தியாலத்தை ஒதுக்குவதையே நாங்கள் தரமான நேரம் என்கிறோம். அந்த தரமான நேரத்தை எவ்வாறு ஒதுக்குதென பார்ப்போம்.
ஒவ்வொருவரது கடந்த கால வாழ்க்கையிலும் இடம்பெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்கள் ஏராளமாக இருக்கும். அவ்வாறான விடயங்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுப்படுத்திக் கொள்வதனூடாக உறவை வலுப்படுத்திக் கொள்ள முடியும். சாதாரண காலங்களில் உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதை நாங்கள் அவதானித்திருக்கிறோம். இதனை நாங்கள் உளவியல் ரீதியான விவாகரத்து எனக் கூறுவோம். ஒரே வீட்டில் இருந்தாலும் மனதளவில் ஒற்றுமை இருக்காது. இதனைப் போக்குவதற்காக நாங்கள் குறித்த தரமான நேரத்தை ஒதுக்கிக் கொள்வது சிறந்தது. இதன் மூலம் கணவன்- மனைவி, பெற்றோர்- பிள்ளை உறவை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அத்துடன் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலமும் உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
தற்போது பாடசாலைகளில் நிறைய ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களினூடாக பயிற்சிகளை அனுப்புகிறார்கள். இதனை செய்விக்க முடியும். ஆனால் இதனை அவர்கள் மாத்திரம் தனியாக செய்ய மாட்டார்கள். அவர்களை படிக்குமாறு கூறிவிட்டு பெற்றோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும்போது அவர்களும் அதனையே பின்தொடர்கின்றனர். ஆகவே பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பெற்றோர் நடந்து கொள்வது சிறந்தது. இதனால் அவர்களின் கல்வித் தேவைகளை எம்மால் நிறைவு செய்துகொள்ள முடியும்.
அதே போன்று கணவன்மார் சமையலுக்குத் தேவையான உதவிகளை தாய்மார்களுக்கோ அல்லது மனைவிக்கோ செய்து கொடுக்க முடியும். மறுபுறம் வீட்டுத் தோட்டங்களில் மரக் கன்றுகளைப் பராமரித்தல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட முடியும். அத்துடன் ஒன்லைன் ஆகாசஸ் மேற்காள்வதனூடாக இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும்.
எல்லோர் வீட்டிலும் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பு. அதற்காக எப்போதும் எல்லா விடயங்களிலும் தொடர்ந்தும் முரண்பட்டுக் கொண்டிருப்பதால் உள ரீதியான பாதிப்புகள் ஏற்படும். சிலபோது அது உடல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வீட்டில் நடக்கக்கூடிய சின்னச் சின்ன தவறுகளை முறையான விதத்தில் கையாள்வதன் மூலம் முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ள முடியும். கணவன்- மனைவிக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படும்போது மூன்றாவது நபரை உள்ளீர்ப்பதன் மூலம் சில மணி நேரத்தில் முடிய வேண்டிய முரண்பாடு பல மணி நேரம் நீடிக்கும். எனவே, மூன்றாவது நபரை தவிர்த்துக் கொள்வது சிறந்தது.
சில சந்தர்ப்பங்களில் கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கும்போது அந்த முரண்பாடு வந்த வேகத்திலேயே முடிந்து விடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுகின்றது.
இன்னொரு முக்கியமான விடயம், கணவன்- மனைவி முரண்பட்டுக் கொண்டிருக்கும்போது இருவரும் தத்தமது நியாயத்தை முன்வைத்துக் கொண்டிருப்பது தவறு. அமைதியான நேரத்தில் அன்பை அடிப்படையாகக் கொண்டு நியாயங்களை முன்வைப்பதன் மூலமே முரண்பாடுகளை குறைத்துக் கொள்ள முடியும்.
ஆகவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்ற இந்த அரிய சந்தர்ப்பத்தை அழகான முறையில் பயன்டுத்தி முரண்பாடுகளை களைந்து மகிழ்ச்சிகரமான வாழ்வோம்.