“எனக்கு நோய் தொற்றின் அறிகுறி தென்படுகிறது. எனவே வைத்தியசாலைக்கு வரவேண்டும்” என்று கேட்கும் ஒரு பிரஜையை “இங்கு வராதே. உனக்கு நிவாரமளிக்கும் நிலையில் நாம் இல்லை” என்று சொல்லும் ஒரு அமெரிக்கச் சுகாதாரக் கட்டமைப்பா?, அல்லது “எனக்கு தொண்டை அரிக்கிறது. காய்ச்சல் விடவில்லை” என்று சொல்லும் ஒரு பிரஜையை “ சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். உடனே அம்புலன்ஸ் கொண்டு வந்துவிடுகிறோம்” என்று சொல்லப்படும் இலங்கை அரசின் சுகதாராக் கட்டமைப்பா? இந்த இரண்டிலும் எது சிறந்தது? எது வலுமிக்கது? இது போன்ற பல விடயங்களைத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது கொரோனா.
அனைத்துலக நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனாவைக் கையாளுகின்ற நடவடிக்கைகளில் இலங்கை சற்று முன் நிற்பதாகச் சொல்லப்படுகிறது. கொரோனா அச்சத்தினால் பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்த காலகட்டத்திலேயே இலங்கை அரசு பயணக் கட்டுப்பாடுகளையும், தனிமைப்படுத்தல் முறைமையையும் நடைமுறைப்படுத்தியிருந்தால் வட மாகாணத்தைக் குறிப்பாக யாழ்.மாவட்டம் போன்ற இடங்களைத் தொற்று அற்ற பிரதேசமாகக் கண்டிருக்கலாம். தேர்தல் வேட்பு மனுத்தாக்குதல்களுக்காக அரசு காலத்தைத் தாழ்த்தியதனாலேயே இவ்வாறான அனர்த்தங்கள் நடைபெற்றதாக மக்கள் அரசின்மீது குற்றஞ்சுமத்தியிருக்கிறார்கள். இருந்தும் அரசின் கட்டுப்பாடுகளும், அதைத்டதொடர்ந்து அமைக்கப்பட்ட சுகாதாரக் கட்டமைப்பு நடவடிக்கைகளும் இவ்வளவாவது தொற்றைக் கட்டுப்படுத்தியிரு க்கிறது என ஆறுதல் படுபவர்களும் உண்டு. அது மட்டுமல்ல நாட்டின் சூழமைவும், சிங்கள, தமிழ் மக்களினது கலாசார பண்பாட்டு விழுமியங்களிலே இயல்பாகக் காணப்படும் சுகாதாரம் தொடர்பான மரபுரீதியான பழக்க வழக்கங்களும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த உதவியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பார்க்கும்போது அதுதான் உண்மை என்றும் தோன்றுகிறது.
தொற்றைத் தவிர்ப்பதற்கு மக்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தப்படுவதையே மிகவும் முக்கியமான நடைமுறை என மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியாவில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 80 சதவீத கட்சிகள் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியி ருக்கின்றன. அதேபோல் இலங்கையிலும் மருத்துவத்துறை சார்ந்தவர்களது வேண்டுகோளுக்கிணங்க, கொரோனா தொற்றலாம் என்று இனங்காணப்பட்ட முக்கிய மாவட்டங்களில் தொடர் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை மருத்துவர் சங்கமும் தொடர்ந்து அதனை வலியுறுத்தி வருகிறது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் அரச அறிவிப்புப்படி, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ள சமயங்களில் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப் பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், கொண்டு செல்லவும் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தேவையின்றி வீதிகளிலே மக்கள் எந்தவித அச்சமுமின்றி நடமாடுவதையும் அவதானிக்க முடிகிறது. அப்படி வீதிகளில் காணும் மக்களைப் பாதுகாப்புப் படையினர் விரட்டுவதும், கைது செய்வதுமான காட்சிகளையும் காண முடிந்தது. பாதுகாப்புப் படையினர் ஏதோ தமது நன்மைக்காகவும், அரசு இயந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவுமே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மக்கள் எண்ணுகிறார்கள் போலும். யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரைப் பார்த்த கண்ணோட்டத்தில் தற்போது அவர்களைப் பார்க்க முற்படுவோமானால், நாம் தான் தோற்றுப்போய்விடுவோம். பாதுகாப்புப் படையினரும் மருத்துவத்துறை போன்று நோய் பயம் நிறைந்த சூழலிலேயே கடமையில் ஈடுபட்டிருப்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக. பாதுகாப்புப் படையினரின் சேவையும் இல்லாது போனால் எமது மக்கள் தொகையில் ஐம்பது வீதமானவர்கள் தெருக்களிலேயே நடமாடித் தொற்றை அதிகரித்திருப்பர். சுய ஒழுக்கமும், சமூகப் பொறுப்பும் எம்மிடம் பற்றாக் குறையாகவே இருக்கிறது. படையினரால் கட்டுப்படுத்தப்பட வேண்டிய சமூக ஒழுக்க மற்றவர்களாக நாம் இருக்கிறோம் என்றது தான் வேதனைமிக்கதொன்று. கொரோனாத் தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கிராமங்களிலே பாதுகாப்புப் படையினர் ஆற்றிவரும் சேவைகள் குறிப்பிடப்பட வேண்டியதொன்று. யாழ்.தாவடிக் கிராமத்தை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகக் கண்டிருக்கிறேன். எனவே அரசியலைத் தவிர்த்து அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த சேவையை மதிப்போமாக.
“யுத்த காலத்தில் நடந்ததைப்போல மக்கள் நடந்து கொள்ளுகிறார்கள் சட்டத்தை மீறுவதைத் தமக்குரிய உரிமை என்று நினைக்கிறார்கள் யுத்தகால நடவடிக்கைகள் வேறு. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொரோனா நடவடிக்கைகள் வேறு. யுத்தத்திலே எமக்கு எதிரி மனிதன். அந்த எதிரி சட்ட மீறல்களைச் செய்ததோடு, தான் சார்ந்த அரசின் நன்மைக்காக ஒரு இனத்தை அழிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவன். எனவே அப்போது அதனை அப்படித்தான் பார்க்க வேண்டும் . எமக்கு வேறு வழி இல்லை. ஆனால் தற்போது நடைபெறுவது ஒரு கொடிய நோய்க் கிருமிக்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தம்.எமக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்கே ஒரு பொது எதிரியான கொரோனா வைரஸ் மிக இலகுவாகக் கண்ணுக்குத் தெரியாத இடங்களில் எல்லாம் புகுந்து, மனிதர்களை பீடித்துக் கொன்று வருகிறது. நோய்க்கெதிராக மனிதனால் வீரம் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.” என்கிறார் ஒரு சமூக சிந்தனையாளன்.
கற்றவன் அறிவாளி இல்லை என்பதை கொரோனா வைரஸ் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. உலகில் வல்லரசு என்று ஒன்று இல்லை என்றும், அவ்வாறான வல்லரசுகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இது போன்ற இடர்களில் இருந்து தமது மக்களைப் பாதுகாக்கவென முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றும் ,இவ்வாறான உயிரியல் போரை எதிர்கொள்ளக் கூடியதொரு சுகாதாரக் கட்டமைப்பை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும், நோய்த் தொற்றால் நிர்க்கதியாகிவிட்ட தமது தேசத்து மக்களுக்கு ஆகக் குறைந்தது ஆறுதல் சொல்லக் கூடிய வக்கில்லாதவர்களாக அவர்கள் காணப்படுவதும் வருத்தத்துக்குரியதே . இற்றைப் படுத்தலில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் இக் கிருமி பற்றி அறிந்திருக்கவில்லை. இப்படியாக நிலைமை நீடிக்குமானால் முதலாந்தர நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் விரைவில் நலிவடைந்து போகக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுவதாகவும் மக்கள் கருதுகின்றனர். ஒரு நாடு சுபீட்சம் நிறைந்த நாடு என்று போற்றுவதற்கு அவர்களிடம் பண பலமும், ஆயுத பலமும் மாத்திரம் இருந்தால் போதாது. அங்குள்ள மக்கள் பிணியற்றவர்களாக இருப்பதுவும் மிக முக்கியம்.
கொரோனாத் தொற்று அதிகம் உள்ளதாகவும், அதிக மரணத்தை எதிர்கொண்டதாகவும் அமெரிக்கா காணப்படுகிறது. அமெரிக்கா ஏன் இத்தகைய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது ? அமெரிக்காவை ஒரு வளர்முக நாடு என்று தானே நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். தன்னிறைவுள்ளவர்கள், தற்பாதுகாப்பு உள்ளவர்கள், அதிக படை பலம் உள்ளவர்கள் என்று பலவிதத்தில் அமெரிக்கா பற்றிப் பெரியதொரு விம்பம் எமது எல்லோர் மனங்களிலும் உண்டு.ஆனால் தற்போது அங்கு காணப்படும் உண்மை நிலை தெரிந்தால் அமெரிக்கா பற்றிய அவ்வாறான எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும். அமெரிக்காவிலே தற்போது இருக்கின்ற ஒரு குடிமகனுக்குக் கொரோனா நோய் அறிகுறி தென்படும் பட்சத்தில் அவர்கள் அங்குள்ள வைத்திய சாலையைத் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அமெரிக்க அரசினால் சொல்லப் படுகின்ற விடயம் வேதனையளிப்பதாக இருக்கிறதெனவும், சுகாதார ரீதியாக அவர்களால் பொறுப்புக் கூற முடியாதிருக்கிறதெனவும் இணையப் பதிவுகளைக் கண்டேன்.
“எனக்குக் கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதைப்போல் தெரிகிறது. நான் வைத்திய சாலைக்கு வரவேண்டும்.” என அமெரிக்கப் பொது மகன் ஒருவன் வைத்தியசாலையை உதவிக்கு அழைத்தால், அங்கிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் முதற் பதில் “இங்கு வராதீர்கள். இங்கு வந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உபாதைக்கு எங்களிடம் மருந்தும் இல்லை. அதற்கு ஒப்பாக த் தருவதற்கு எம்மிடம் மருத்துவ வசதியும் இல்லை. வீட்டில் இருந்து கைகளைக் கழுவுங்கள். கிருமி நாசினியைக் கொண்டு தொற்று நீக்கிக் கொள்ளுங்கள்.முச்சுவிடக் கஷ்டமாக உணர்ந்தால் மட்டுமே இங்கு வரலாம்” என்ற வாறுதான் இருப்பதாக மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கப் பிரஜை ஒருவர் சொல்லி இருக்கிறார்.
இது போன்ற நாடுகளைத்தான் நாம் வலுவுள்ள நாடு என்கிறோம். உண்மையிலே வல்லரசு என்றால், இப்படியானதொரு இக்கட்டான நிலை வரும்போது தனது நாட்டு மக்களை பல நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைத்துப் பராமரிக்கக் கூடிய வல்லமை கொண்டதாக அந்த நாட்டின் இறைமையும், பொருள் சேமிப்பும் இருக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு சராசரிக் குடிமகனின் சுகாதரம் மற்றும் வளமுள்ள வாழ்க்கை என்பன அந்த நாட்டிலுள்ள காப்பீட்டு நிறுவனத்தின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் இப்படியான தருணங்களில் பெரும்பாலும் காப்பீட்டு நிறுவனங்கள் கைவிரிக்க இடமுண்டு. ஏனெனில் காப்பீட்டு நிறுவனத்தில் இது போன்று எதிர்நோக்கும் பொது இடர் நிறைந்த காலத்துக்கு அவர்கள் செய்து கொண்ட காப்புறுதி வலுவுடையதாக இருக்குமா? என்றது சந்தேகமே.
அமெரிக்காவிலும், அது போன்ற பிற நாடுகளிலும் அங்கு உள்ள உயர் மட்டச் சமூகத்தால் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகளைச் சாதாரண மக்கள் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. குறிப்பாகத் தனியார் வைத்தியசாலைகளில் சேர்ந்து மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அவர்களுக்குப் பணபலம் வேண்டும். பல கோடிகளை வருமானமாகப் பெற்றுக் கொள்பவர்களே தமக்குக் கொரோனா போன்ற தொற்று வியாதிகள் இருக்கா, இல்லையா என்ற பரிசோதனையைத் தனியார் வைத்தியசாலைகளில் செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். தனியார் வைத்தியசாலைகளில் அப்படிப்பட்டதொரு பரிசோதனையைச் செய்ய வேண்டுமாயின் இலங்கை ரூபாவில் 10 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டும். அமெரிக்காவிலுள்ள ஒரு சாதாரண மனிதனால் முடியாத காரியமது என்று அமெரிக்க மருத்துவத்துறை பற்றி ஒருவர் சொல்லி இருக்கிறார்.
மேற் குறிப்பிட்ட விடயங்களும் அமெரிக்காவில் கொரோனாத் தொற்றை அதிகரிப்பதற்கான காரணிகளில் சிலவாகக் காணப்படுகின்றது. நோய் தனக்கு வந்து விட்டதென்று ஒரு அமெரிக்காப் பிரஜை அறிந்து கொண்டாலும், அவர் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வரை, அதாவது கடைசித் தருணம்வரை பொது வைத்தியசாலை அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியாது.தனியார் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமாயின் பெரும்தொகை பணம் கைகளில் இருக்க வேண்டும். இதனாலேயே பலர் நோய் வாய்பட்டும் வைத்தியசாலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகிறார்கள். அவர்களைப் போன்றவர்களிட மிருந்தே நோய் பரவுகிறது. அதனாலே அமெரிக்காவில் நோய்த் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு கட்டுக்கடங்க மறுப்பதாகவும் காணப்படுகிறது. எனவே, இந்த இடரிலிருந்து எப்படி அமெரிக்கா மட்டுமல்ல நாமும் மேல் எழப் போகிறோம்? என்ற முயற்சியே மட்டுமே தற்போது எமக்குத் தேவைப்படுகிறது.
கொரோன பல வழிகளில் பல விடயங்களை உணர்வதற்கும், சரி, பிழை அறிந்து அதனை மாற்றி அமைக்கவும் வழி சமைத்திருக்கிறது. எதிர்காலத்துக்கு ஏற்றவாறு பல யோசனைகளை முன்வைத்திருக்கும் அதே வேளை பல போலிகளை இனங்காட்டியும் வந்துள்ளது.கோரோனாவின் தாக்கத்துள் நீர்த்துப் போயிருக்கின்ற வன்முறை அரசியலை, மீண்டும் உயிர்ப்பிக்காது பார்த்துக் கொள்ளவல்ல வல்லமை மக்களாகிய எம்மிடத்திலும் உண்டு.கொரோனா அனுபவங்களையும், அது கற்றுத் தரும் பாடங்களையும் “ஏணி” யாக எப்படி மாற்றப் போகிறோம். மாற்றியாக வேண்டுமே!