உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சிகிச்சைதான் பிளாஸ்மா தெரபி. நமது உடலுக்குள் நாவல் கொரோனா வைரஸ் செல்லும்போது, நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மீண்டு வரலாம் என்று கூறப்படுகிறது
- பிளாஸ்மா தெரபி என்றால் என்ன?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சிகிச்சைதான் பிளாஸ்மா தெரபி. நமது உடலுக்குள் நாவல் கொரோனா வைரஸ் செல்லும்போது, நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மீண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.நமது உடலில் வைரஸ் அல்லது பாக்டீரியா புகுந்து விட்டால், ரத்தத்தில் பிறபொருள் எதிரி உருவாகி எதிர்ப்பு மண்டலத்தை எச்சரிக்கும். உடனே உடலில் இருக்கும் வெள்ளை ரத்த அணுக்கள் அந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவை அழிக்கும். இதேபோன்றுதான் நமது உடலில் தட்டம்மை, மலேரியா, காமாலை, டைபாய்டு போன்றவற்றுக்கும் தனித்தனியான பிறபொருள் எதிரி உருவாகி விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைத்து விடுகிறது. ஒரு முறை இந்த நோய்கள் நமது உடலில் வந்த பின்னர் மீண்டும் இந்த நோய்கள் நமது உடலை தாக்காதவாறு, ரத்தத்தில் கலந்து விடும் பிறபொருள் எதிரி பார்த்துக் கொள்ளும். பிறபொருள் எதிரி என்பது நோயெதிர்ப்பு உயிரணுக்களால் சுரக்கப்படும் புரதங்கள். இதை ஆங்கிலத்தில் B lymphocytes என்று அழைக்கின்றனர். - எவ்வாறு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது?
கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரத்தம் எடுக்கப்படுகிறது. ரத்தத்தில் இருந்து நீர் பிரிக்கப்படுகிறது. வைரஸை எதிர்க்குமா என்று சோதிக்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடலில் யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என்று பரிசோதித்து எடுக்கப்படும்.கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு சுத்தமாக இந்த தொற்று இல்லை என்று உறுதியான பின்னரும், 28 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார். இதன் பின்னரே, அவரது உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படும். - யாருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும்?
துவக்கத்தில் சிறிய அளவிலான கொரோனா நோயாளிகளுக்கு முதலில் பரிசோதிக்கப்படும். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிக்கு அளிக்கலாம். பரிசோதனை அடிப்படையில் தற்போது இது முயற்சித்து பார்க்கப்படுகிறது. - தடுப்பு ஊசியில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
தடுப்பு ஊசி வாழ்நாள் முழுவதும் நோய் தொற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த சிகிச்சை புதிது அல்ல. 1890 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி எமில் வோன் பெஹ்ரிங் இந்த பிளாஸ்மா சிகிச்சையை கண்டறிந்தார். முதலில் முயலில் இந்த சோதனையை மேற்கொண்டார். தொண்டை அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்த முயலுக்கு இந்த சிகிச்சையை அளித்தார். இதற்காக அவருக்கு 1901ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு புளூ நோய் பரவியபோதும், இந்த சிகிச்சை முறை பின்பற்றப்பட்டது. இதேபோல், எபோலா, சார்ஸ் போன்ற வைரஸ்களுக்கும் இந்த சிகிச்சை முறை அளிக்கப்பட்டது. - இந்த சிகிச்சை முறை வீரியம் மிக்கதா?
நம்மிடம் பாக்டீரியாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. ஆனால், வைரஸுக்கு இல்லை. 2010ஆம் ஆண்டு ஹெச்1என்1 பரவியபோதும் இந்த சிகிச்சை முறை பின்பற்றப்பட்டது. 2018ல் எபோலாவுக்கும் பயன்படுத்தப்பட்டது. நல்ல முன்னேற்றம் கிடைத்தது. எந்த ரத்த மாதிரி இருப்பவர்களுக்கும், வேறு ரத்த மாதிரி இருப்பவர்களின் பிளாஸ்மாவை கொடுக்கலாம். - எவ்வளவு நாட்கள் எதிர்ப்பு உடலில் இருக்கும்?
பிளாஸ்மா முறையில் செலுத்தப்படும் நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா நோயாளியின் உடலில் 4 நாட்களுக்கு மேலிருக்கும். அதற்குள் நோயாளி குணமடைய வாய்ப்பு இருக்கிறது. இதை சீனா செய்து பார்த்துள்ளது. பலனும் கிடைத்துள்ளது. - வயதானவர்களிடம் எடுக்கலாமா?
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த வயதான நோயாளிகளிடம் இருந்து பிளாஸ்மா எடுப்பதில் சிக்கல் இருக்கிறது. அவர்களுக்கு சர்க்கரை நோய், இருதய கோளாறு, கிட்னி கோளாறு போன்று எந்த நோய்களும் இருக்கக் கூடாது. மேலும், குணமடைந்த அனைத்து நோயாளிகளும் பிளாஸ்மா கொடுக்க முன் வர மாட்டார்கள். - எந்த நாடுகள் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கின்றன?
சீனாவைத் தொடர்ந்து தென்கொரியா, துருக்கி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்த சிகிச்சை முறையை பின்பற்றுகின்றன. இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே, கேரளா இந்த சிகிச்சை முறையில் இறங்கியுள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. அனுமதி கிடைத்தவுடன், தமிழகமும் இந்த சிகிச்சை முறையை துவங்கும்.