இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டு கால உள்நாட்டு போர் காரணமாக பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாகபாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து பத்து வருடம் ஆகிவிட்ட நிலையில் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசினால் அரசியல்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமானபொருளில் ஓர் அரசியல் விவகாரமாகச் சுருக்கிவிட அரசு தொடர்ந்தும் முற்பட்வருகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை தேசத்ரோகம் அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்துக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவியவர்கள் எனக் குற்றச்சாட்டிலும் சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டவர்களே இந்த அரசியல் கைதிகள் .
ஈழவிடுதலையில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் போராட்டமாக காட்டிட முற்பட்ட பேரினவாதம் தமிழ்த் தேசியப் பிரச்சினையை எப்படி அதிகாரப் பரவலாக்கலுக்குரிய பிரச்சினையாகக் காட்டினார்களோ அதனைப்போலவே அரசியல் கைதிகள் விவகாரத்தையும் ஒரு சட்ட விவகாரமாகக் காட்ட முற்பட்டு வெற்றியும் கண்டுவருகின்றார்கள்.
போர்க் காலத்தில் பெருந்திரளானோர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும், சரணடைந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ் சுமத்தப்பட்டு பலர் சிறைகளில் விடுதலைக்காக சிங்கள மேலாதிக்க வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் இருந்து விடுதலை பெறுவதற்கு துடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
உள்நாட்டுப் போர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளில் பலர் உறுப்புக்களை இழந்து, தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய இன்னொருவரை எதிர்பார்க்கும் நிலைக்கு, தள்ளப்பட்டுள்ள நிலையிலும் இன்றும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றார்கள். மாறாத்துயரமாகக் காணப்படும் அரசியல் கைதிகளின் பிரச்சினையானது இந்நாட்டின் இன அடக்கு முறைவரலாற்றுடன் தொடர்புபட்டதாகும்.
வடகிழக்கு மாகாணத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் பல அரசியல் கைதிகளின் உறவுகள் துயர நிலையைத் தொடர்ந்து எதிர்கொண்டு அச்சுறுத்தல்களுக்கும் அடிப்படைக்காரணமான இனத்துவ அரசியலின் அடக்குமுறை வரலாற்றை இங்கு சுருக்கமாகவேனும் விபரிப்பது அவசியமாகும்.
தமிழ் மக்கள் தமக்கென்று தனியான மொழி, தனியான தேசம், தனியான பண்பாடு, கலாசாரம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய இனம். அனைத்தும் ஒருங்குசேரப் பெற்றதாலும், உலகில் வாழும் இனங்களைப் போன்று சுதந்திரமாகவும் உரிமைகளுடன் வாழ முற்பட்ட தமிழினத்தை இனவாத அடக்குமுறை சிங்கள அரசு காலத்துக்கு காலம் சட்டங்களைக் கொண்டு அடக்கியாள முற்பட்டதால் தமிழ் இளைஞர்கள் முகிழ்த்தெழுந்து தமிழீழ விடுதலைப் புலிகளாக தோற்றம் பெற்று சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதே உண்மை. அடக்க முற்பட்டதால் எழுந்த விடுதலைப் போராட்டம் இன்று பயங்கரவாதப் போராட்டம் என்று அதன் உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
இனவாத, மொழிவாத, மதவாத நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்தும் பேரினவாத சிங்கள அரசு தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக இன்று வரை உலகிலுள்ள பல்லினமக்களையும் தன்பால் இழுத்து புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் நடத்திய யுத்தம் பயங்கரவாத யுத்தம் என்றும் சிறீலங்கா அரசும் அதன் துணை நாடுகளும் சர்வதேசத்தில் பெரும் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் சிங்களப் பேரினவாதத்திற்கு பதிலடி கொடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் முப்பது வருட காலம் நடத்திய அரசியல், அகிம்சை, ஆயுதப் போராட்டம், என்பன சுதந்திரப் போராட்டம் என்பதை சர்வ தேசத்திற்கு சுட்டிக் காட்ட வேண்டிய தேவை உள்ளது.
இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் கைது செய்தல் விசாரணைகளை மேற்கொள்ளல் தடுத்து வைத்தல் தொடர்பிலான விடயங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்த அதிகாரங்களை வழங்கும் வகையில் பயங்கரவாதச் தடைச் சட்டமானது நடைமுறையில் அமுலில் உள்ளது.
Prevention of Terrorism Act 1978ஆம்ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்தனவினால் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்டது. எனினும் நான்கு வருடங்களின் பின்னர் அதாவது 1982ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நிரந்தரமாக்கப்பட்டது. சிறுபான்மை மக்களை கீழ்த்தரமானசித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும், வலுக்கட்டாயமாக ஆட்களைக்காணாமல் ஆக்குவதற்கும், கால வரையறையற்று தடுத்து காவலில் வைப்பதற்கும் பரந்தளவிலான அதிகாரத்தை வழங்கும் ஓர் அனுமதிப்பத்திரமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பயன்படுத்தப் படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டமானது ஒருவரை எதேச்சதிகாரமான முறையில் கைதுசெய்யவும் விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கவும், சித்திரவதையின் மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்கு மூலங்களை கைதிகளுக்கு எதிராகவே பயன்படுத்தவும் அனுமதிக்கின்றது.
சந்தேகத்தின் பெயரில் கைதாகும் நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும். எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரைகால வரையரையின்றி பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தடுத்து வைக்கும் நிலையே குற்றப் புலனாய்வுத்திணைக்களம் (C.I.D.)பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (T.I.D.) போன்ற விசேட பிரிவுகள் உள்ளிட்ட இராணுவத்தினர், இராணுவத் துப்பறியும் பிரிவினர் மற்றும் போலீஸ் முதலிய தரப்புகள் நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
49வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் பெரும் இன ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர். தென்னிலங்கைச் சிங்களப் பேரினவாத அரசைப் பொறுத்தவரையில் எவரும் எந்த நேரத்திலும், எங்கும், எந்தக் காரணத்தைக்கூறியேனும் அரசின் முப்படைகளினாலும் சிங்கள புலனாய்வு சக்திகளினாலும் கைது செய்யப்படலாம் என்ற அதிகாரத்தைக் கொண்டுள்ளார்கள். தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு பேரினவாத அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழ, தடுத்து ஒடுக்க பயங்கரவாதச் தடைச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தி வருகின்றார்கள் .
தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக, அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களையும் அவர்களுக்கு உதவினார்கள் ஒத்துழைத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களையும், அரசியல்கைதிகளாக ஏற்க மறுத்து, அவர்களைப் பயங்கரவாதிகளாக நோக்கி, நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பது எந்தவகையில் மனிதாபிமானம் ?
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக 2015ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
2009 மே மாதம் தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். அகதி முகாம்களில் இருந்து புலிச் சந்தேக நபர்களாக 12,000 அதிகமான தமிழ் இளைஞர்களைக் கைது செய்த இராணுவம், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை தடுத்து வைத்து பல சொல்ல முடியாதகொடூரச் சித்திரவதைகளையும் மேற்கொண்டிருந்தார்கள். வடகிழக்கில் பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பிள்ளைகளை, தாய், தந்தை, கணவன் என எத்தனை உறவுகள் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி அரசியல் கைதிகளாக உள்ளனர்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அதற்காக உண்ணாவிரதமிருந்து நடத்தப்படுகின்ற போராட்டம் 29 வருடங்களுக்கு முன்னரே மிகவும் வலுவான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்த் துறை பொறுப்பாளராக இருந்து, இந்திய அரசாங்கத்திடம்
- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, தியாக தீபம் திலீபன் (இராசையா பார்த்திபன்) நடத்திய கடும் உண்ணாவிரதப் போராட்டமே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முன்னோடிபோராட்டம் என்று குறிப்பிட முடியும்.
“செய் அல்லது விடுதலை செய்” என்ற கோரிக்கையை முன் வைத்து 2010ஆம் ஆண்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 380 பேரும் புதிய மகசீன் சிறைச்சாலையில் 98 பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் 28 பேரும், யாழ்ப்பாணத்தில் 24 பேரும், மட்டக்களப்பில் 17 பேரும், வெலிக்கடையில் கண்டியில் 24 பேரும் 6 பேருமென 577 பேர் இந்த சாகும் வரை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தபோது கைதிகள் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்கள்.
இலங்கையில் தற்போது தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொரு வருடமும் தமது விடுதலையை வலியுறுத்தியும், வழக்குகளை துரிதப்படுத்தக் கோரியும் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் அத்தனைபோராட்டங்களும் தீர்வின்றி முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் சட்டமும் அதனைக் கொண்டு கைதுசெய்யப்பட்டவர்களையும் கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் சிறைப்படுத்தி அவர்களின் வாழ்வை சிதைத்து மகிழ்கிறது சிறிலங்கா அரசு.
சிறைகளில் தமிழ்க் கைதிகள் மீதான சிங்கள காவலர்களின் இனவெறி தாக்குதல்களில் அனுராதபுரத்தில் 2011ம்ஆண்டு நவம்பரில், 65 தமிழ்க் கைதிகள் கொடூரமான சரீரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்கள். சிறிலங்க அரசிற்கு இது ஒரு பாரிய விடயம் இல்லை ஏனெனில் 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தை தொடர்ந்து வெலிக்கடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஜூலை 25 இல் 35 பேரும், ஜூலை 27 இல் 17 பேரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இது போன்ற சம்பவங்கள் காலத்திற்கு காலம் நடைமுறைப்படுத்திவருகிறது.
2012ஆம் ஆண்டு பொலிஸ் மற்றும் சிறைக் காவலர்களின் மிருகத்தனமான தாக்குதலில் ஜூலை 4 அன்று, கணேசன் நிமலரூபன் என்ற கைதி வயது 28, தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார். ஆகஸ்ட் 8 அன்று, ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்த மரியதாஸ் டில்ருக்ஷனின் வயது 36, என்பவர்களின் படுகொலையும் தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது பேரினவாத அரசின் காட்டு மிராண்டித்தனத்தையே காட்டுகிறது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர ‘அவர்கள் 2012ஆம் ஆண்டில்அரசியல் கைதிகள் பயங்கரவாதிகளே தவிர வேறு யாரும் அல்ல, அவர்கள் இன்னும் பயங்கரவாதத்தை கைவிடவில்லை,’ என கைதிகள் மீது எந்தக் குற்றத்தீர்ப்பும் இல்லாத நிலையிலும் அவர்களில் பலருக்குகுற்றப்பத்திரிகையே இல்லாத நிலையிலும் கஜதீர இந்தக் குற்றச்சாட்டை சுமத்துதியிந்தார்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் கோபிதாஸ், வயது 43, கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் பிரித்தானியவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தபொழுது, விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவர் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கொழும்பு பயங்கரவாத தடுப்பு புலனாய்வுத்பிரிவில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டார்.
2010ம் ஆண்டு சிறைச்சாலையில் உள்ள இந்துக் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டபொழுது மாவீரர் நாள்கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் எனக் கூறி, சிறை அதிகாரிகள் அவரை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாகக்தாக் தலுக்கும் உள்ளாகியிருந்தார். மூன்று வருடங்கள் நடந்த நீதிமன்ற விசாரணையின் பின்னர், 2012ம் ஆண்டில் ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்களே இவரை ஒரு நோயாளியாக்கியது. நோய்க்கு தகுந்த சிகிச்சைபெறுவதற்காக சிறைச்சாலை நிர்வாகத்திடம் அனுமதி கோரியபொழுதும் அதற்கான அனுமதியை வழங்காதகாரணத்தால் நோயின் தாக்கம் அதிகரித்திட தண்டனை முடிவடைய ஒரு ஆண்டு இருக்கும் போது 2014 பெப்ரவரி 24ம் திகதி, மகசீன் சிறைச்சாலையில் அவர் இவ்வாறு துன்பகரமாக மரணித்தார்.
தமிழர் விடுதலைக்கு தங்களது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள் மற்றும் அப்பாவிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள். இன்று அரசியல் கைதிகளின் குடும்பங்கள், பொருளாதார நெருக்கடி, சமூகத்தில் இருந்து புறக்கணிப்பு என பல்வேறு இன்னகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் உள்ள சிறைக்கூடங்களில் ஒரு தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள். ஜனாதிபதி இந்த விடயத்தில்தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத் தரப்பு அமைச்சர்களின் ஊடாக தமது கோரிக்கைகளையும் மு முன்வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதன்போது கைதிகள் (12.10.2015) உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் (07.11.2015) நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.
‘நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் (7.11.2015) சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்’ என தனது எழுத்து மூல உத்தரவாதத்தை ஜனாதிபதி செயலகத்தினூடாக நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஜனாதிபதியின் இந்த எழுத்து மூலஉத்தரவாதம் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஸ்ப குமாரவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவ்வாக்குறுதி மகஸின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரசியல் கைதிளுக்கு வாசித்துக் காட்டப் பட்டது. இந்த உத்தரவாதத்தை அதீத நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட தமிழ்க் கைதிகள் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஒக்டோபர் 17 ஆம் திகதி(17.10.2015) இடைநிறுத்திக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து யாரும் விடுதலை செய்யப்படாதநிலை காணப்பட்டது .
2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விப்பொதுத் தராதர உயர்தர வகுப்பில் பயின்று கொண்டிருந்த இராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் ஓடும்ரயில் முன்னால் பாய்வதற்கு முன்னர், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இருக்கக்கூடாது என தெரிவித்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வேண்டுகோள் கடிதம் ஒன்றை எழுதி கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் முன்னால் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் தற்கொடை ஆகிக் கொண்ட சம்பவத்தினையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 2012ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்த இராசையா ஆனந்தராசா, மீண்டும் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.
2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை விடுதலையை வலியுறுத்தி ஆனந்தராசா, தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்ட நிலையிலேயே அவருக்கு ஊசியொன்று ஏற்ரப்பட்டுள்ளது. பின்னர் இறுதியாக ஐப்பசி மாதம் 18ஆம் திகதி மீண்டும் ஊசி ஏற்றப்பட்டதாக குறித்த அரசியல் கைதியான ஆனந்தராசா தெரிவித்ததாக, சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றை தூண்டி சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் செயற்பாடுகளை கலகொட அத்தே ஞானசார தேரர் யுத்தம் நடைபெற்ற போதும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தான் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தவர், ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றின் பின்னர் அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழேயே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 6 வருடங்கள் வழங்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை 5 வருடங்களாக உயர்நீதிமன்றம் குறைத்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
ஞானசார தேரரைருக்கும், ஜே.வி.பியினருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உங்களால் முடியுமாயின் ,பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை நீண்டகாலமாக எந்தவிதவிசாரணைகளும் இன்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது? இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியால் எதற்காக இந்த அரசியல்கைதிகளுக்கு ஏன் பொது மன்னிப்பு வழங்க முடியாது? இன்று இவர்களின் விடுதலைக்காக சட்டத்தரணிகளை நியமித்து வாதாட முடியாத நிலையில் கூட பலர் உள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளைவிடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி மக்கள் வீதிகளில் போராட்டங்களைமேற்கொண்டு வருகின்றார்கள். இந்தச் சிறிய பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாத சிறிலங்கா அரசுபயங்கரவாதச் சூழல் நாட்டில் இப்போது இல்லை. பயங்கரவாதம் தலையெடுப்பதற்கான சூழலும் கிடையாதுஎன கூறி வருகின்றது. இந்த நிலையில் சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின்விடுதலையை இழுத்தடித்து செய்வதன் நோக்கம் என்ன?
கவலைக்குரிய விடயம் என்னவென்றால் 19 வயதில் கைதாகி 46 வயதில் 27, வருடங்களை சிறையில் கழித்த அரசியல் கைதியான மட்டக்களப்பு மொறக்கொட்டான்சோலை தேவாலய வீதியைச் சேர்ந்தவர் செல்லப்பிள்ளை மகேந்திரன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்து, பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகி பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றசந்தேகத்தின் பேரில் 1993 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனையுடன் 50 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமையால் தொடர்ந்து சிறையிலேயே காலத்தைக் கழித்துவந்தார் மகேந்திரன்.
இந்நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு சிறைச்சாலையில் சீரான மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. பொதுவாக சிறைச்சாலைகளில் காணப்படும் நிலை இதுதான். அதிலும் தமிழ்க் கைதி என்றால், கவனிப்பு எப்படியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த சில மாதங்களாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் மகசீன் சிறையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் எனவும், பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று (01/01/2020) இரவு மரணத்தைத் தழுவினார். இறக்கும்போது அவரது வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது. இளமையை அவர் சிறைக்குள்ளேயே தொலைத்து மரணத்தைத் தனதாக்கிக் கொண்டார். இவர் போன்று தமிழ்க் கைதிகள் அநேகமானோர் பல வருடங்கள் சிறையில் மருத்துவ வசதிகள் கவனிப்பு இல்லாது கடுமையாக நோய்களுக் உள்ளாகிய நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்
சிறிலங்காவில் கைதாகி சிறையில் உள்ள தமிழர்கள் மீது பாரிய கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே உள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் போது சிறையில் பரந்தளவில் பாலியல்வல்லுறவுகள் நிகழ்ந்து வந்தன எனவும். அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினாலும் போலீஸ் படையினாலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch) வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சியைக் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்பவர் 2008 ஆண்டு அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டு தற்பொழுது ஆயுள் தண்டனை கைதியாக மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனைவியின் மரணத்தின் பின் இவரது இரு பிள்ளைகள் இருவரும் அநாதைகளாக்கப் பட்டுள்ளனர். தாயின் இறுதி நிகழ்விற்காக 3 மணித்தியாலயம் மாத்திரமே அவகாசம் வழங்கப்பட்டு வந்திருந்த தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிச் செல்ல முற்பட்ட ஆனந்தசுதாகரன் சங்கீதாவின் நிலையினை நாம் மறந்து விடமுடியாது .
2010 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 23 ஆம் திகதி அன்று காலை 10 மணியிருக்கும் யாழ்ப்பாணம் கொட்டடிபகுதியில் உள்ள எனது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இலங்கையில்உள்ள பூசா, மகசீன், கழுத்துறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாண சிறைச்சாலைகளில் 6 வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினராக இருந்த முருகையா கோமகன் கூறுகையில் தடுத்து வைத்திருந்த போது நடத்தப்பட்ட விசாரணைகள் முழுவதும் சித்திரவதைகளாகவே இருந்தது. மருத்துவ உதவிகள் கூட அங்கு வழங்கப்படுவதில்லை.சிறையில் இருக்கும் போது குளிப்பதற்கு கூட விட மாட்டார்கள். கழிப்பறைகளுக்கு கூட செல்லவிடமாட்டார்கள். நெருக்கமாகவே தூங்க வேண்டும். இடவசதிகள் கூட இல்லை.சிறையின் கொடுரத்தையும் சித்தரவதைகளையும் பட்டியலிட்டுக் கொண்டு போகலம் எனக் கூறியிருந்தார்.
யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்ட பல நூறு இளைஞர்கள் விசாரணைகளோ குற்றச்சாட்டுக்களோ இன்றி இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தால் ஏற்கனவே உள, உடல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த அரசியல் கைதிகளை பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள். அரசியல் கைதிகளுக்கு உளவியல் ஆற்றுப்படுத்துநர் இல்லாததால், கைதிகளில் மன நலம் பாதிப்பு ஏற்பட்டவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாத நிலையும் உள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது அவர்களின் குற்றத்தாக்குதல் செய்யாது தொடர்ந்தும் காலவரையறையற்றத் தடுத்து வைப்பதன் ஊடாக அவர்களின் மனநிலை நாளுக்கு நாள் மிகவும் பாதிப்படைந்து வருகிறது.
தனிமை ஒரு கொடுமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், அங்கு நிலவும் தனிமையானசூழலால், சித்திரவதைகளையும் எண்ணி வருந்துவதோடு, எதிர்காலம் பற்றிய ஏக்கமும் பயமும் அவர்களைச்சூழ்ந்திட மன அழுத்த நிலைக்கும், வாழ்க்கையின் விரத்தி நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். கைதிகளும் தங்களுடைய எதிர்கால வாழ்க்கை மற்றும் குடும்பம் பற்றி கவலையில் சிறையில் உள்ளனர். நீண்ட நாட்களாக, நான்கு சுவருக்குள் அடைப்பட்டு கிடக்கும் அரசியல்கைதிகள் பலரும் தற்போது மன அழுத்தத்திற்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்தும் உள்ளனர்.
பாதித்தவர்களாக முடக்கிவிடவோ அல்லது மரணதண்டனையினை பெற்றுக்கொடுக்கவோ இந்த அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இதுபோன்ற நிலையால், மனநலம் பாதிப்பு அதிகமாகி சிறையில் ஏராளமானோர்தீ விர சிகிச்சை அளிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய பாதிப்பு கைதிகளிற்கு மட்டு மல்ல அரசியல் கைதிகளின் பிள்ளைகளுக்கும் பாரிய மன அழுத்தம் உள்ளதோடு அவர்களின் குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
அதிகமான குழந்தைகள் எப்போது அப்பா வாருவர், வாருவர் என எதிர்பாத்துக் காத்திருப்பதும் அவர்களின் விடுதலைக்காக குடும்பங்களினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றது, தம்மால் அவர்களை விடுவிக்க முடியாது உள்ளது என வாழ்வைத் தொலைத்து நடைபிணங்களாக வாழும் குடும்பங்கள் அதிகம், இதில் பிள்ளையின் விடுதலைக்கு காத்திருந்து விடுதலை காணாது இறந்துபோகின்ற பெற்றோர்களின் செய்திகள் நாளாந்தம் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்புகிறது.
அரசியல் கைதிகள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுகின்றார்கள் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டசர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் சிறைகளில் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நல்லிணக்கத்துக்கான எல்லா கைங்கரியங்களும் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்வது அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து, சிறையில் உள்ள தமிழ்அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
போர் நிறைவடைந்து ஒரு தசாப்தம் பூர்த்தியாகியுள்ள நிலையில், சர்வதேச ரீதியில் யுத்தக் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை மக்கள் 2019 ம் ஆண்டு ஐனாதிபதியாக தெரிவுசெய்துள்ளமை சர்வதேசத்திற்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் விடுத்துள்ள சவாலாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிய கேள்வி ஒருபுறம் இருக்க…
வடகிழக்கு மக்களை ஆயுதமேந்த வைத்த சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். வடக்கும் தெற்கும் இணைந்து இந்த சமூக. பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுன்வர வேண்டும். இந்த விடயத்திலும் அரசியல் கைதிகள் விடுதலை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பாக குரல்கொடுத்து அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த சிங்கள மக்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.
வாழ்க்கையில் பொருளின்றி, பிடிப்பின்றி, குடும்பம், பிள்ளைகள், உறவுகள் என்ற உணர்வின்றி, நடைப்பிணங்களாக நான்கு சுவருக்குள் அடிமைகளாக எந்தவித உரிமையும் இன்றி உயிர் வாழும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு யோகா, கவுன்சிலிங், தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட வோண்டும், கொலை மிரட்டல்விடுப்பதை தவிர்க்க வேண்டும். சித்திரவதைகள் இல்லாது அமைதியான முறையில் விசரனைகள் இடம்பெற வேண்டும். சிறைகளுக்குள் போதைப் பொருள்கள் செல்லாதவாறு தடுக்க வேண்டும். நோய்வாய்பட்டவர்கள், பெண்கள் , மற்றும் முதியவர்களை கருணை அடிப்படையில், மனித நேய அடிப்படையில் நடத்துவதற்கு ஏற்ற வழிமுறை காணவேண்டும். நல்வாழ்க்கைக்காக, குடும்பங்களின் ஒருங்கிணைப்புக்காக, உரிமை வாழ்விற்காக அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் அவர்களை விடுதலை செய்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும்.
ஆட்சி மாற்றத்தில் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் காலங்களிலும் வீர வசனம் பேசி பின்னரான காலப்பகுதியில் நிகழ்ந்த பல விடயங்களில் கூட்டமைப்பபினரும் ஏனைய கட்சிகளும் அரசியல் கைதிகளை வைத்து சதுரங்க விளையாட்டு நம்பிக்கைகளின் பிரகாரம் கைதிகளின் விடயத்தில் தீர்வு கிடைத்ததா? கிடைக்காத இந்த நிலையில் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் இதுவரையில் ஆரோக்கியமாக என்ன செய்தார்கள் ? தீவிர தமிழ்த் தேசியத்தைப் பேசிக்கொண்டு செயல்திறனின்றி அரசின் கைப் பொம்மையாக இருக்கும் தமிழ் தலைவர்களுக்கு மக்கள நல்ல தீர்பைப் வழங்கவேண்டும் .
- நிஜத்தடன் நிலவன்.