தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்கள் எவை எவை? என்று இந்திய மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் பிரீத்தி சுதன், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இப்போதைய சூழ்நிலையில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மாவட்டங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (‘ஹாட்ஸ்பாட்’), மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (‘நான் ஹாட்ஸ்பாட்’) மற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இரட்டிப்பாகும் இடங்கள், அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் தேவை. இந்த வகைப்படுத்துதல் வாரம் ஒரு முறை அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் மேற்கொள்ளப்படவேண்டும். மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவில் நாட்டில் 170 மாவட்டங்கள் உள்ளன. மிதமான பாதிப்புக்கு உள்ளான ‘நான்ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் 207 ஆக உள்ளன. இந்த மாவட்டங்கள் வெள்ளை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 14 நாட்கள் எந்த புதிய கொரோனா தொற்று ஏற்படாவிட்டால் ஆரஞ்சு நிற மண்டலமாகவும், அடுத்த 14 நாட்களில் புதிதாக தொற்று ஏற்படாவிட்டால் பச்சை மண்டலமாகவும் மாற்றப்படும். ஆக அதிக பாதிப்புக்குள்ளான ‘ஹாட்ஸ்பாட்’ மண்டலத்தில் 28 நாட்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது பச்சை மண்டலத்துக்கு மாற்றப்பட்டுவிடும்.
தமிழகத்தில் அதிக பாதிப்புக்குள்ளான ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களின் பட்டியல் வருமாறு:
1.சென்னை 2.திருச்சி 3.கோவை 4.நெல்லை 5.ஈரோடு 6.வேலூர் 7.திண்டுக்கல் 8.விழுப்புரம் 9.திருப்பூர் 10.தேனி 11.நாமக்கல் 12.செங்கல்பட்டு 13.மதுரை 14.தூத்துக்குடி 15.கரூர் 16.விருதுநகர் 17.கன்னியாகுமரி 18.கடலூர் 19.திருவள்ளூர் 20.திருவாரூர் 21.சேலம் 22.நாகை
இதுபோல ஒரே இடத்தில் கொத்து, கொத்தாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தமிழகத்தில் எதுவும் இல்லை.
தமிழகத்தில் மிதமான பாதிப்புக்கு உள்ளான ‘நான் ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் பட்டியல் வருமாறு:-
1.தஞ்சை 2.திருவண்ணாமலை 3.காஞ்சீபுரம் 4.சிவகங்கை 5.நீலகிரி 6.கள்ளக்குறிச்சி 7.ராமநாதபுரம் 8.பெரம்பலூர் 9.அரியலூர்
புதுச்சேரி மற்றும் மாஹி அதிகம் பாதிக்காத ‘நான்ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இதுவரையில் இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ‘ஹாட்ஸ்பாட்’ என்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நிலையில் வகைப்படுத்தப்படுகிறது. இது வாராந்திர அடிப்படையில் ஒவ்வொரு திங்கட்கிழமையோ அல்லது அதற்கு முன்பாகவோ கண்டறியப்படுகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மத்திய அரசு வகைப்படுத்திய பட்டியலில் இடம் பெறவில்லை.