கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பெரிதும் பயன்படும், உயிர் காக்கும் புதிய சுவாச கருவியான சிபிஏபி சாதனத்தை, யு.சி.எல்., மற்றும் பார்முலா ஒன் இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடசுக்காக, யு.சி.எல்.எச்., டாக்டர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இதனை தயாரிப்பதற்கான டிசைன்களையும், அவர்கள் இலவசமாக வழங்கி உள்ளனர். இதனை covid19research.uclb.com/product/ucl-cpap என்ற லிங்கில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
நுரையீரல் தொற்றுடன் சுவாசிக்க சிரமப்படும் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு, ஆக்ஸிஜன் மாஸ்க் மட்டும் போதுமானதாக இல்லாதபோது, இந்த புதிய தயாரிப்பான சிபிஏபி(Continuous Positive Airway Pressure) சுவாச கருவி, எளிதில் சுவாசிக்க உதவுகிறது. சிபிஏபி சாதனங்கள் பிரிட்டன் மருத்துவமனைகளில் குறைவாக இருந்ததால், யுசிஎல் மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஹெச்பிபி-ன் இன்ஜினியர்கள் ஆயிரக்கணக்கானோர் முயற்சியில், விரைவாக உற்பத்தி செய்யும் வகையில் சுவாச கருவிகள் தயார் செய்யப்பட்டன. 100 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில், ரிவர்ஸ் இன்ஜினியரிங்கை பயன்படுத்தி, புதிய சுவாச கருவி தயார் செய்யப்பட்டது. இதன் முதல் மாடலுடன் ஒப்பிடுகையில், 2வது மாடல் 70 சதவீதம் வரை ஆக்ஸிஜன் நுகர்வை குறைத்தன. இதற்கு கடந்த வாரம் எம்.எச்.ஆர்.ஏ., அங்கீகாரம் அளித்தது.
கொரோனா வைரசிஸ்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில், இந்த உயிர் காக்கும் சாதனத்தை உருவாக்குவதற்கான அனைத்து விவரங்களையும், உற்பத்தியாளர்கள் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள, யுசிஎல் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதனை covid19research.uclb.com/product/ucl-cpap என்ற லிங்கில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதில் அதனை உருவாக்குவதற்கான டிசைன்கள் மட்டுமன்றி, பயன்படுத்தப்படும் பொருட்கள், கருவிகள் மற்றும் விரைவாக செய்வதற்கான வழிமுறைகளும், ஒவ்வொரு பகுதிகளை செய்ய தேவைப்படும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை அதிகம் ஷேர் செய்வதன் மூலம், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் உலகில் உள்ள சுகாதார அமைப்புகள் அனைத்து,ம் இதனை பயன்படுத்தி கொரோனாவை வெல்லும் என இதன் தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.
அந்தந்த நாட்டு அரசு, தயாரிப்பு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் இந்த டிசைன்களை பயன்படுத்தி உயிர்காக்கும் சுவாச கருவிகளை உருவாக்கலாம். அந்தந்த நாடுகள் இதனை சோதனை செய்து, அதற்கு அப்ரூவல் வழங்கி கொள்ளலாம்.
இந்த கருவிகள் லண்டன் மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதிக்கப்பட்டது. இதனால் பலன் கிடைத்ததையடுத்து, 10 ஆயிரத்துக்கும் அதிகமான சாதனங்களை பிரிட்டன் அரசு ஆர்டர் செய்தது. நார்தாம்ப்டன்ஷையரின் பிரிக்ஸ்வொர்த்தில் உள்ள எச்பி தொழில்நுட்ப மையத்தில், ஒரு நாளைக்கு 1,000 வரை சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து யு.சி.எல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்கேர் இன்ஜினியரிங் இயக்குனர், பேராசிரியர் ரெபேக்கா ஷிப்லி கூறுகையில், ‘இந்த உயிர் காக்கும் சாதனங்கள், உற்பத்தி செய்வதற்கு மிகவும் எளிமையானவை. இதனை விரைவாக தயாரிக்க முடியும். இதற்கான புளூபிரிண்ட்களை இலவசமாக கிடைக்கச் செய்வதால், உலகளவில் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் சுகாதார அமைப்புகள் இதனை பயன்படுத்தி கொரோனாவை வீழ்த்தலாம் என நாங்கள் நம்புகிறோம். இதனை உருவாக்க பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். அனைவரும் ஒன்றிணைந்து, கற்பனை செய்ய முடியாத குறைவான நேரத்தில், இதனை உருவாக்கி சாதித்துள்ளனர்’ என்றார்.