கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 1,426 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது முதல் நேற்றுதான் ஒரே நாளில் மிக அதிகமான நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதையடுத்து சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8,014ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கு விடுதிகளில் வசிப்பவர்கள். அண்மைய சில தினங்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரில் இத்தொழிலாளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
சிங்கப்பூரில் ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக வங்கதேசம் மற்றும் சீனத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தாரை கவலையில் மூழ்கச் செய்துள்ளது. சிங்கப்பூரில் சுமார் 3,23,000 அந்நியத் தொழிலாளர்கள் Dormitories எனப்படும் பொது விடுதிகளில் தங்கியுள்ளனர். தற்போது இவர்களில் 1 விழுக்காட்டிற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அந்நியத் தொழிலாளர்களுக்கு என 43 பல்நோக்கு தங்கு விடுதிகள் உள்ளன. இவற்றுள் 24 தங்கு விடுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று ஊடுருவி உள்ளது. புங்கோல் பகுதியில் உள்ள ‘எஸ் 11’ என்ற விடுதியில்தான் மிக அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டும் 1,500 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இதையடுத்து தென்கிழக்கு ஆசியாவில் வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கையில் இந்தோனீசியாவையும் பிலிப்பைன்சையும் விஞ்சி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
மே 4ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு
தற்போது கட்டுமானத் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அந்நியத் தொழிலாளர்கள் எதிர்வரும் மே 4ஆம் தேதி வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பணிக்குச் செல்லாமல் தங்கியிருக்க வேண்டும் என சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
வேலை அனுமதிச்சீட்டு (Work Permit), எஸ் பாஸ் எனப்படும் திறனாளர் விசா வைத்திருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் அனைவரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். சார்ந்திருப்போர் அனுமதி அட்டை (Dependant Pass) அட்டையில் இருக்கும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய சில தினங்களாக கட்டுமானத் துறையில் பணியாற்றுவோர் மத்தியில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சிங்கப்பூர் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அங்கு அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்கள்
இந்நிலையில் அந்நியத் தொழிலாளர்களின் நலனை சிங்கப்பூர் அரசு உறுதி செய்யும் என்றும் அவர்களது குடும்பத்தார் கவலைப்பட வேண்டாம் என்றும் பிரதமர் லீ உறுதி அளித்துள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களை மூன்று விதமாக தற்போது வகைப்படுத்தி உள்ளது சிங்கப்பூர் அரசு.
1. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள்
2. வைரஸ் தொற்று இல்லையென்றாலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள்
3. எந்தப் பாதிப்பும் இல்லாதவர்கள்
இவர்களில் ‘கோவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் அவர்களது உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை கவனித்துக்கொள்கிறது.
பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தனியார் உணவகங்கள் மூலம் தினமும் உணவு வழங்கப்படுகிறது. இதற்கான செலவையும் சிங்கப்பூர் அரசாங்கமே ஏற்கிறது.
எந்தவித பாதிப்பும் இல்லாத அந்நியத் தொழிலாளர்கள் மே 4ஆம் தேதி வரை தங்குமிடங்களை விட்டு வெளியேறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு முதலாளிமார்களே உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசு தொழிலாளர்களுக்கு என்ன செய்கிறது?
இந்த ஏற்பாடுகள் குறித்து சிங்கப்பூரில் உணவக மேலாளராகப் பணியாற்றி வரும் நடராஜனிடம் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
அப்போது சிங்கப்பூர் அரசாங்கம் அந்நியத் தொழிலாளர்களை மிக நன்றாகக் கவனித்துக்கொள்கிறது என்றும் இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார். இவர் பணியாற்றும் உணவகத்தில் இருந்து சில தொழிலாளர்களுக்கு உணவு வழங்க அரசாங்கம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
“தற்போது எங்கள் உணவகம் அருகே 80 அந்நியத் தொழிலாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேருக்குத் தினமும் உணவு வழங்குகிறோம். 3 தினங்களுக்குப் பிறகு உணவின் தரம் குறித்து தொழிலாளர்கள் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை எனில் 80 பேருக்கும் உணவு வழங்கலாம் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அரசாங்கம் இந்தளவுக்கு அக்கறை காட்டும்போது இயல்பாகவே நமக்கும் அனைத்தையும் ஒழுங்காகச் செய்யவேண்டும் எனும் ஆர்வமும் பொறுப்பும் உண்டாகிறது. தரமான உணவை அளித்து 80 பேருக்கும் உணவளிப்பதற்கான ஆர்டரைப் பெறவேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்,” என்கிறார் நடராஜன்.
தொழிலாளர்கள் கடைக்குள் நுழைய அனுமதி இல்லை
தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதி அல்லது கட்டடத்துக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் உணவுப் பொட்டலங்களைப் பெற்று தொழிலாளர்களிடம் விநியோகிக்கிறார்கள்.
உணவைக் கொண்டு வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது என்கிறார் மளிகைக் கடை (மினிமார்ட்) நடத்தி வரும் முத்து. இவரது கடை தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதியின் கீழ் தளத்தில் இயங்கி வருகிறது.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், தற்போது விற்பனை அளவு குறைந்துள்ளதாக தெரிவித்தார். துரித நடவடிக்கைகள் காரணமாக அக்குறிப்பிட்ட தங்குவிடுதியில் எந்த தொழிலாளருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றார்.
“தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களின் பட்டியலை வாட்ஸ் அப் மூலம் எனக்கு தெரிவிப்பர். அவற்றை தயாராக வைத்திருப்பேன். குறிப்பிட்ட நேரத்தில் அவர்களில் ஒருவர் மட்டும் கீழே வர அனுமதிக்கப்படுவார். அவரிடம் பொருட்களை ஒப்படைப்பேன். கடைக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை,” என்றார்.
‘லெவி’ கட்டணத்தில் கணிசமான தள்ளுபடி
சிங்கப்பூரில் பணியாற்றும் விஜய், பிபிசி தமிழிடம் கூறுகையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒவ்வொரு நாளும் சற்றே பயத்துடன் வாழவேண்டி உள்ளது என்றார். அதேசமயம் சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்தப் பயத்தைப் போக்கி உடனுக்குடன் மனதில் நம்பிக்கையை விதைப்பதாகவும் சொல்கிறார்.
“சிங்கப்பூரில் பணியாற்றும் அந்நியத் தொழிலாளர்களுக்கான ‘லெவி’ கட்டணத்தில் கணிசமான தள்ளுபடியை அரசு அறிவித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இது உண்மை எனில் வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கை. இந்நாட்டின் வளர்ச்சிக்கு அந்நியத் தொழிலாளர்கள் பங்களிப்பு உள்ளது என்று அரசு வெளிப்படையாகச் சொல்வதும் மகிழ்ச்சி தருகிறது,” என்கிறார் விஜய்.
அறைகளுக்குள் முடங்கிக் கிடப்பது தொழிலாளர்கள் மத்தியில் எத்தகைய மனநிலையை உருவாக்கி உள்ளது என்பதை அறிய பிபிசி தமிழ் முற்பட்டது.
‘பக்கத்து அறையில் இருப்பவர்களுடன் கூட பேசுவதில்லை’
தஞ்சாவூர் ஓரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் பகவலன், தொழிலாளர்களின் அனைத்து தேவைகளையும் சிங்கப்பூர் அரசு பூர்த்தி செய்வதாகச் சொல்கிறார்.
“சிங்கப்பூரில் என்ன நிலைமை உள்ளது என்பது எங்களுக்குத்தான் தெரியும். ஊரில் உள்ள குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எதுவும் தெரியாது. அதனால் பயப்படுகிறார்கள். இங்கு எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இலவச இணைய இணைப்பு இருப்பதால் திரைப்படங்கள் பார்ப்பது, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது என பொழுது போகிறது.
“இந்த தங்குவிடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஐந்து அல்லது ஆறு பேர் தங்கியுள்ளோம். சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிரமம். இந்த விடுதியில் 158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஒரே அறையில் இருந்த சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
“வைரஸ் தொற்று இல்லாதவர்கள்தான் தற்போது விடுதியில் தங்கியுள்ளோம். நாள் முழுவதும் அறைக்குள்ளேயே முடங்கி இருக்கிறோம். பக்கத்து அறையில் இருப்பவர்களுடன் கூட பேசுவதில்லை. நாங்கள் உள்ள தளத்தில் சீனர்களும் வங்கதேசத்தவர்களும் உள்ளனர். கொரோனா பிரச்சனைக்கு முன்பு அவர்களுடன் அவ்வப்போது ஏதாவது பேசுவோம். இப்போது பக்கத்து அறைகளில் இருப்பது யார் என்பதே தெரியவில்லை,” என்றார்.
சுகாதார நிபுணர்கள் சொல்வது என்ன?
சிங்கப்பூரில் தொழிலாளர்களுக்கான தங்கு விடுதிகள், முதியோர் இல்லங்களில் இருப்பவர்கள் மத்தியில்தான் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் வைரஸ் தொற்று பரவலாக காணப்படும் நிலையில் ஒரே இடத்தில் பலர் தங்குவதால்தான் நோய்த்தொற்று ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தங்குமிடம், தூங்குமிடம் ஆகியவை பகிர்ந்துகொள்ளப்படும்போது நோய்த்தொற்று வேகமாகிறது. அதேபோல் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களில் 10 பேர் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள். சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஒரு முதியோர் இல்லத்தில் 16 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் இருவர் இறந்துள்ளனர்.
இருவருமே அங்கு வசித்த 86 வயது மூதாட்டிகள் என்பதை சுகாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்
சிங்கப்பூரில் வீடுகளை விட்டு வெளியே செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதவர்கள் மீதும் நடவடிக்கை பாய்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதியன்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 120 பேர் முகக்கவசம் அணியாத 80 பேர் சிக்கினர்.
இரண்டாவது முறை இக்குற்றத்தைப் புரிந்த 9 பேருக்கு 1,000 சிங்கப்பூர் டாலர் (உத்தேசமாக 51 ஆயிரம் இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டது என சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
“கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவரிடமிருந்து இரண்டு நபர்களுக்கு அது எளிதாகப் பரவும் என்றும் புதிதாகப் பாதிக்கப்பட்ட அந்த இருவர் மூலம் மேலும் நால்வருக்கு அத்தொற்று பரவும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக ஒரு நபரிடமிருந்து சுமார் ஒரு மாத காலத்தில் ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. முறையாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படாவிட்டால் இவ்வாறு நிகழக்கூடும். எனவே, சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும்,” என மசகோஸ் ஜுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
மற்றொரு தலைவலியாக உருவெடுக்கும் டெங்கி காய்ச்சல்
ஒருபக்கம் ‘கோவிட் 19’ நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சிங்கப்பூருக்கு டெங்கி காய்ச்சல் பரவலும் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
அங்கு தற்போதுவரை சுமார் 5800 பேர் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்தாண்டு ஏப்ரல் மத்தியில் இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகம் என தேசிய சுற்றுச்சூழல் முகைமை தெரிவித்துள்ளது.
எனவே, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு டெங்கி பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என அந்த முகைமை வலியுறுத்தி உள்ளது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டெங்கி காய்ச்சல் பரவல் அதிகமாக பரவக்கூடிய மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்தாண்டை விட மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் டெங்கி காய்ச்சலால் சுமார் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
96 விழுக்காடு விமானங்களை ரத்து செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பெரும்பாலான விமானச் சேவைகள் மே மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 15 நகரங்களுக்கு மட்டுமே அந்நிறுவனம் விமானங்களை இயக்க உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் சிங்கப்பூரில் பெரும்பாலான வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 96 விழுக்காடு விமானச் சேவைகள் ரத்தாகி உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ், பேங்காக், ஃபிராங்க்ஃபர்ட் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு மட்டுமே அந்நிறுவனம் விமானங்களை இயக்குகிறது.
இந்நிலையில் மே மாதம் முழுவதும் விமானங்களை இயக்கப் போவதில்லை என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானக் குழுமங்களில் 15ஆவது இடத்தில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 35 நாடுகளில் உள்ள 140 நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இதற்கிடையே சிங்கப்பூரைச் சேர்ந்த மற்றொரு விமான நிறுவனமான ஜெட் ஸ்டார் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மீண்டும் விமானங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனம் மணிலா, பேங்காக், கோலாலம்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்க உள்ளது.