வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நேற்று மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் இன்று அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.
தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர்.
அதுதொடர்பில் வல்வெட்டித்துறை காவல் துறைக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.
நேற்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற காவல் துறை , அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலகுநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.
சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் அவரைத் தேடினர்.
இந்த நிலையில் அவரது உடமைகள் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து அண்மையாக உள்ள கடலில் செந்தூரன் சடலமாக மீட்கப்பட்டார்.
பருத்தித்துறை நீதிவானின் உத்தரவில் அவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இன்று முற்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
“சடலத்தின் கழுத்து உள்பட உடலில் எந்தவொரு அடிகாயமும் இல்லை. கடல் விலங்குகளால் சடலத்தில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகத்தில் உரசல் காயம் காணப்படுகிறது.
நுரையீரல் பெரியளவில் வீக்கமடைந்துள்ளது. அதனால் அவரது இறப்பு நீரில் மூழ்கி இடம்பெற்றுள்ளது” என்று சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.