உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை.
வியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 268 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை (ஏப்ரல் 23 வரை) ஒரு மரணம் கூட பதிவாகவில்லை.மக்களை ஒன்றுதிரட்டி “கொரோனாவுக்கு எதிரான போரை” அந்நாடு அறிவித்தது.
தற்போது அங்கு கட்டுப்பாடுகள் தளர்தத ஆரம்பித்துள்ளதோடு, பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது எப்படி சாத்தியமானது? இதனை மற்ற நாடுகள் பின்பற்ற முடியுமா?
மூடப்பட்ட எல்லைகள்
ஜனவரி மாத இறுதியில் கொரோனா தொற்று குறித்த செய்தி வந்தவுடனேயே வியட்நாம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டது. சீனாவுடனான தனது எல்லையை உடனடியாக மூடிய வியட்நாம், தனது நாட்டில் இருக்கும் பெரிய விமான நிலையங்களில் வந்திறங்கிய பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையை செய்தது.
வியட்நாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலனவர்கள் வெளிநாட்டினர் என்பதை தெரிந்து கொண்ட அந்நாடு, பிற நாடுகளில் இருந்து வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டது.
சில ஹோட்டல்களையும் தனிமைப்படுத்தும் இடமாக ஆக்கப்பட்டது. அதற்கான தொகையும் அந்த ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் மார்ச் மாத இறுதியில், வியட்நாமை பிறப்பிடமாக கொண்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரும் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
தொற்றார்களை விரைவாக கண்டுபிடித்தல்
கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்ட அதே நேரத்தில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
குறைந்த விலையில் கொரோனா பரிசோதனை கருவிகளை வடிவமைத்த வியட்நாம், உள்ளூரிலேயே அதை தயாரிக்கவும் செய்தது.
வியட்நாம் வளர்ந்த நாடாக இருந்தாலும், குறைந்த வளங்களையே கொண்டிருக்கிறது. தென் கொரியா, ஜெர்மனி நாடுகளை போல அதிகம் செலவழித்து விலை உயர்ந்த பரிசோதனை கருவிகளை வாங்க இயலாது.
அதனால், குறைந்த செலவில் இதை கையாள முடிவெடுத்து, கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிப்பதிலும், தனிமைப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தியது.
சமூக கட்டமைப்பு
கொரோனா தொற்று குறித்து நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், வியட்நாம் போர் சமயத்தை நினைவுப்படுத்துவது போல பல காணொளிகள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டது.
1975ல் அமெரிக்க துருப்புகளுக்கு எதிராக வியட்நாம் ராணுவம் தாக்குதல் நடத்தியதை குறிக்கும் வகையில், கொரோனா தொற்றுக்கு எதிரான “நீண்ட போரில்” மக்கள் துணை நிற்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் சுயான் ஃபுக் அழைப்பு விடுத்தார்.
“வியட்நாம் மக்கள் ஒன்றுகூடக்கூடிய சமூக கட்டமைப்பைக் கொண்டவர்கள்” என்கிறார் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய நியூ சவுத் வேல்ஸ் கன்பெரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் தாயர்.
“ஒரே கட்சி கொண்ட நாடு. மிகப்பெரிய பாதுகாப்புப்படைகள். அனைத்து முடிவுகளையும் அரசே எடுக்கக்கூடிய கட்டைமப்பை கொண்டுள்ளதால், இயற்கை பேரிடரின்போது வியட்நாமால் சிறப்பாக செயல்பட முடிகிறது” என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆனால், இது போன்ற நடவடிக்கைகளை மற்ற நாடுகள் பின்பற்றுவது சாத்தியமா?
வியட்நாம் கையாளும் முறை வெற்றிகரமாக இருந்தாலும், இதனால் மறுபக்கத்தில் பல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் பிபிசி வியட்நாம் சேவையின் ஆசிரியர் கியாங் க்யுன். மக்கள் தங்கள் அருகில் வசிப்பவர்களை கண்காணிக்க, பார்த்துக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோாமோ என்ற அச்சத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் ஓடி ஒளிந்திருக்கலாம்.இந்த நடவடிக்கைகள் வியட்நாமின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல தொழில்கள் மூடப்பட்டுள்ளன. அரசு விமான சேவையான வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனிமைப்படுத்துதல்
வெற்றிகரமாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதற்கு அந்நாடு கொடுத்துள்ள விலை பொதுமக்களின் சுதந்திரம்.
சிறப்பான உள்ளூர் நிர்வாக செயல்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒருசில மாவட்டங்கள் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டன.
ஹனாய் மற்றும் பிற பெரிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் நீக்கப்பட்டாலும், 3 மாவட்டங்கள்/நகரங்கள் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் இருந்து யாரும் வெளிவராத வகையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“அரசின் செயல்பாடு, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அதை பின்பற்றிய பொதுமக்களால், கொரோனா தொற்றின் மோசமான பாதிப்பில் இருந்து வியட்நாம் தப்பியுள்ளது” என்கிறார் க்யூன்.