எக்காலும் ஓருயிரை ஏற்றமாய் ஏந்தியதாய்
இப்புவியில் வரலாற்றுச் சேதிகள் ஏதுமில்லை
முக்காலும் தெரிந்து முகிழ்த்த முனிவர்களும்
கதையாக மட்டுமே வாழ்கின்றார் இங்கே
ஊருக்கே உழைத்திட்ட பெரியவர்கள் மற்றும்
பாருக்கே சுமையான தரமற்றோர் கூட
ஞாலத்தில் உடல்விட்டு போயேதான் ஆனார்
இழிசெயலாம் உயிரழிப்பை இச்சையுடன் ஏற்று
கச்சிதமாய் முடிக்கின்ற கயவர்களும் இங்குண்டு
வழிகாட்டி மனிதனை வாழ்விக்கப் பிறப்பெடுத்த
பரிசுத்த புவித்தோன்றல் பரலோக பெருமானை
பாவியிவன் என்றிகழ்ந்து பாதகனாய் கதைகூட்டி
குற்றங்கள் பலசுமத்தி பழிகாரன் எனக்கூறி
சவுக்காலே அடிபோட்டு முள்கிரீடம் தனைமாட்டி
பாரமான சிலுவையினை தோளினால் இழுக்கும்படி
வீதிவழி அலையவிட்டு மூன்றுமுறை வீழவிட்டு
சிலுவையிலே அறைந்துபின் உயிரை பறித்ததுவாய்
விவிலியம் சொல்கிறது பெரும்செய்தி எங்களுக்கு
மக்களுக்கு நன்மைசெய்த இன்னும்பல நல்லவர்கள்
துக்கம்தனை போக்கவென்று துணைநின்ற பெரியவர்கள்
விடுதலைக்கு வித்திட்ட வீரம்மிக்க பொதுநலத்தோர்
இரத்தவெறி பிடித்திட்ட அதிகார பித்தர்களால்
உடல்சிதைய உயிர்பறித்து ஊறுசெய்த வரலாறு
நீண்டபெரும் பட்டியலாய் நம்மிடையே உண்டுதானே
நாட்டினைப் போற்றுவதாய் புதுக்கதைகள் புனைந்து
போட்டியினை முன்னிறுத்தி போரதனை மூட்டி
மானிடரைக் கொன்று மனிதவதை செய்தவர்கள்
இராணுவத்தில் மட்டுமல்ல உயிரழிக்கும் படைகளிலும்
உயர்பதவி பெறுவதனை உலகமக்கள் அறிந்தாலும்
உயிர்ப்பயமே எங்களையும் இறுக்கமாகப் பற்றுவதால்
வல்லவன் சொல்லும்விதி சரியென்றே வாழ்கின்றோம்
கற்கால மனிதர்கள் கற்களையே கூராக்கி
ஆயுதமாய் உருவாக்கி தாக்குதலை தொடக்கிவிட
அங்கிருந்து முன்னேறி இரும்பினை கண்டறிந்து
இதமாக கருவிகளை வளமாக தயாரித்து
மனிதரைக் கொல்லும் மார்க்கத்தை பெரிதாக்கி
விரைவாக கொல்பவர்கள் வீரர்கள் ஆனார்கள்
பெருமளவில் கொன்றவர்கள் சிறப்புநிலை பெற்றார்கள்
அப்பாவி மக்களோ உயிரிழந்து போனார்கள்
அப்படியே நீண்டது உயிர்கொல்லும் தொழில்நுட்பம்
தொழிலாளர் துயர்தீர்க்க புதிதாக வெடிமருந்து
கண்டறிந்த நன்மையினை தவறாக வழிமாற்றி
உற்பத்தி செய்தார்கள் உயிர்குடிக்கும் ஆயுதங்கள்
துப்பாக்கி பீரங்கி வெடிகுண்டு என்றுகண்டு
தப்பான பாதைகளில் பயணிக்க ஆரம்பித்து
கொத்தாக மனிதர்களை கொன்றே குவித்தார்கள்
அன்றே தோற்றான் அறிவுள்ள பெருமனிதன்
என்றே தெளியாத உலகியல் வாழ்க்கையிது
அத்துடனே நிற்காது அணுகுண்டும் உருவாக்கி
ஒருபாவம் அறியாத பலபேரை கொன்றுவிட்டு
இன்னும் உண்டுஎன இறுமாப்புக் காட்டுவோரும்
நச்சுப்புகை பரப்பி நாசூக்காய் கொல்வோரும்
போதைப்பொருள் விற்று உலகைக் கெடுப்பவனும்
மதுசாரம் நன்றென்று கடைவைத்து விற்பவனும்
புகைவிட்டு மகிழ்என்று சிகரெட்டு செய்வோனும்
உணவுக்குள் தவறான பொருள்களை கலப்பவனும்
புலம்புகிறான் கொரோனாவை குறையாகச் சொல்லி
நோய்வந்து தாக்கி படுக்கையிலே வீழந்தால்
துன்பங்கள் புரியும் சிந்தனைகள் தோன்றும்
மற்றவனை நினைக்கும் மனநிலை பிறக்கும்
காலங்கள் தோறும் பாவங்கள் செய்து
கடைக்காலம் தன்னில் தத்துவம் சொல்வோர்
இத்தகை இயல்பில் உதித்தவர் ஆவர்
உயிர்போகும் தருணம் உயர்பெயர் கொள்ள
புதிய புனைவுடன் நடிக்கும் சாகசர்
இவரென அறியா இயல்பினர் வாழும்
இகம்தான் இதுவென இப்போது அறிவாய்
இருப்பினும் இவர்கள் சிறப்புடன் வாழ
விளம்பரம் செய்து வியாபாரம் பெருக்க
சமூகத்தில் என்றும் உயர்வாய் திகழ
இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்