“விலங்கு நலன் என்பது, விலங்குகளைப் பற்றியது மட்டுமல்ல. அது நம்மைப் பற்றியது. நமது வாழ்க்கை நிலை, எங்களது குழந்தைகள், உங்களது பூமி ஆகியவைப் பற்றியது. விலங்குகள் மீதான கொடுமை, மனித ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மற்றும் மாற்ற முடியாத தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எமது வாழ்வின் தரமும், அவற்றைப் பற்றியதே. நாம் அவற்றை உண்ணும் போதும், அவற்றின் வாழ்க்கையை சுரண்டும் போதும் அவற்றின் இனப் பெருக்கத்தை இல்லாமல் செய்வதன் மூலம், இயற்கை வடிவங்களில் தலையிடுகின்றோம். அவற்றின் சொந்த வாழ்க்கையை அழிக்கின்றோம். அவ்வாறு ஒவ்வொரு இனமும் மறைந்துபோகும் போது, நம் குழந்தைகளின் எதிர்காலமும் அவ்வாறே அமைந்துவிடும்”
இவ்வாறு, பீபிள்ஸ் ஃபேர் அனிமல்ஸ் (People for Animals) என்று கூறப்படும் இந்தியாவின் மிகப்பெரிய விலங்குகள் நல அமைப்பின் தலைவர் மேனகா சஞ்செய் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேனகா காந்தி, இந்த அமைப்பை 1992ஆம் ஆண்டு ஆரம்பித்து, தற்போது அதன் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்த அமைப்பின் கீழ், நாடளாவிய ரீதியில் 26 வைத்தியசாவைகளும் 165 பிரிவுகளும் இரண்டரை இலட்சம் அங்கத்தர்களும் பணியாற்றி வருகின்றனர்.
“சுகயீனமடைந்திருக்கும் விலங்குகளை மீட்டு, அவற்றுக்கு நாம் மறுவாழ்வு வழங்குகின்றோம். இந்த விலங்குகளுக்கான தங்குமிடம், அம்பியூலன்ஸ் சேவைகள், கருத்தடை திட்டங்கள், சிகிச்சை முகாம்கள், விலங்குகளுக்கான பேரிடர் மீட்புப் பணிகள் ஆகியவை எம்மால் அமைக்கப்பட்டுள்ளன. விலங்குகள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து, பாடசாலைகளில் கல்வித் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன் விலங்கு பாதுகாப்புக்காக நீதிமன்ற வழங்குகளிலும் வாதாடி வருகின்றோம். எமக்கென்று, 60 நடமாடும் சேவைகளும் உள்ளன” என்று அவர் கூறினார்.
கே: விலங்குகளுக்கு வைரஸ் பரவுமா? அது, மனிதருக்கு பரிமாற்றப்படுமா?
இந்தக் கேள்வியை நீங்கள் வினவியதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், இது முற்று முழுதான முட்டாள்தனம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. மில்லியன் கணக்கான மக்கள், மில்லியன் கணக்கான நாய்களையும் பூனைகளையும் வளர்க்கின்றனர். ஆனால், மில்லியன் கணக்கான மக்களுக்கே, கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது. அப்படியாயின், இலங்கையில் ஒரு நாய்க்கு மாத்திரம் எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது?
நியூயோர்க்கில், ஒரு பூனையாவது பாதித்திருக்கவேண்டும் அல்லது Bronx மிருககாட்சி சாலையில், ஒரு புலிக்காவது இது பாதித்திருக்கவேண்டும் அல்லவா? அதுபோக, இந்தியாவில், மில்லியன் கணக்கான மக்கள், சேரிகளிலேயே வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் செல்லப்பிராணிகள் உள்ளன. அவை அனைத்துமே, சுதந்திரமாக சுற்றித் திரிந்துகொண்டிருக்கும்போது, அங்கு ஒரு விலங்குக்குக் கூட வைரஸ் தொற்று ஏற்படவில்லை.
இந்த விலங்குகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்களால் உணவளிக்கப்படுகின்றது. அவர்களில் ஒரு நபர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை அல்லது எந்தவொரு மனிதனிடம் இருந்தும் வைரஸ் தொற்று விலங்குக்குப் பரவவில்லை. இந்தக் கதைகள் முற்றிலும் போலியானவை. அப்படியாயின், இந்த வைரஸ் தொற்று, நாய்க்கு அல்லது பூனைக்கு ஏற்பட்டுள்ளது என்று ஏன் கூறவேண்டும்?
தொலைக்காட்சி செனல்களுக்கு, தற்போது கொவிட்-19 பற்றிய விடயங்களை மாத்திரமே மக்களுக்குக் கூறவேண்டியுள்ளது. வேறு நிகழ்வுகள் பற்றிய எந்தவொரு விடயத்தையும் வெளியிட முடியாமல் உள்ள நிலையில், அனைத்து தொலைக்காட்சி செனல்களும், தத்தமது PRPஐ அதிகரிக்கவே எண்ணுவர். ஏதாவது ஒரு கதையையே அவர்கள் தேடுவர். இதனாலேயே இதுபோன்ற கதைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
மில்லியன் கணக்கான மக்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் போது, அதே நோய் மில்லியன் கணக்கான விலங்குகளுக்கும் ஏற்பட்டிருந்தால், இப்போது உலகின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை, மக்களும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும்.
கொரோனா வைரஸ் என்பது, ஒரு வகை காய்ச்சல். இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் உருமாறும். குறிப்பிட்ட ஒரு வைரஸுக்கு ஆன்டிபயோடிக்சை மனித உடலால் உருவாக்கப்பட்ட பின்னர், அதே வைரஸால், மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இதையடுத்து, அந்த வைரஸ் மற்றொரு வடிவத்தில் மீண்டும் வரும். இதுபோன்ற பல வைரஸை நாம் கண்டுள்ளோம்.
மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, மனிதர்களும் விலங்குகளும் அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில், தனிமைப்படுத்தல் மய்யத்தில் இருந்த, கொரோனால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் இருந்த 9 நாய்கள், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது தனிமையில் உள்ளன. இந்த நாய்கள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவை என்ற நிலையில், அவை கொரோனா நோயாளர்களுடன் இருந்த போதிலும் அவற்றுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கவில்லை. தயவு செய்து, வதந்திகளுக்கு அடிபணியாமல், விவேகமாக இருங்கள்.
கே: செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?
அவற்றைக் காதலியுங்கள். தொடர்ந்தும் அவைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த முடக்கங்கள் தளர்த்தப்பட்ட பின்னரும் கூட, ஒருவருடன் இன்னொருவர் பழகுவதற்கு தயக்கம் காண்பிப்பர். அதனால், சிலவேளை நாம் வாழும் அமைப்பை சிலவேளைகளில் மாற்றிக்கொள்ள வேண்டி இருந்தாலும், உங்களுக்கென்று ஒரு செல்லப் பிராணி இருந்தால் நீங்கள் தனிமையில் இருக்கப் போவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவைகளைக் காதலித்து, அவைகளும் உங்களைக் காதலிப்பதற்கு வழிவிடுங்கள். அத்துடன், இப்போது உங்களுக்கு செல்லப் பிராணியொன்று இல்லை என்றால், விரைவில் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மக்களுக்கு வௌவால்கள் தான் கொரோவைத் தந்தது என்று ஒரு கதை நிலவுகிறது. விரைவாக பலரும் மரங்களை வெட்டுவதற்கு ஆரம்பித்தனர். வௌவால்கள், மனிதர்களுக்கு கொரோனாவைத் தராது என்பதை நான் விளக்குகின்றேன்.
புராணக் கதைகளின் படி, வௌவால்கள் மனிதருக்குப் பின்னால் வருவதில்லை. வௌவால்களை நீங்கள் உட்கொண்டாலே தவிர, வௌவால்களாக முன்வந்து, உங்களுக்கு கொரோனாவைத் தருவதில்லை. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளில் உள்ள வௌவால்களை ஒழிக்கவேண்டும் என, இந்திய அரசாங்கம் முடிவெடுத்து, 2 -3 மில்லியன் வௌவால்களைக் கொன்றது. 2 -3 நாள்கள் மாத்திரமே, இவற்றைக் கொல்வதற்கான காலம் தேவைப்பட்டது.
ஆனால், 6 மாதங்களுக்கு பின்னர், அவுரங்காபாத் விவசாயிகள், பாரிய சரிவுக்குச் சென்றனர். அவர்களது உற்பத்தி, 25 சதவீதத்தால் சரிந்துவிட்டது. அவர்கள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் அளவை இரட்டிப்பாக வேண்டியிருந்தது. இதன் விளைவாக, அவர்களின் வருமானம் குறைந்தது. அரசாங்கம் பின்னர் அதன் கொள்கையை மாற்றியமைத்து, குகைகளை வௌவால்களுடன் மீண்டும் விரிவு படுத்தியது. எனவே, அந்த வழியில் செல்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவேண்டாம். விவசாயத்தில், வௌவால்கள் முக்கியமான பூச்சிக்கொல்லிகளாகும்.
கே: விலங்கு நல பணியாளர்களுக்கு உங்களது அறிவுரை?
அவைகளுக்கு உணவளிப்பதை தொடருங்கள். நான் இதை ஏன் கூறுகிறேன் ஏனென்றால், பசியில் இருக்கும் நாய்களும் பூனைகளும் வீதியில் இருந்தால், அது ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிடும். பசியுடன் இருக்கும் விலங்குகள், மனிதர்களிடம் வருவதற்கு வெட்கப்படுவதோடு அச்சம் கொள்ளும். அவை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதை உணர்வதால், மனிதர்களைக் கடிப்பதற்கும் தயங்காது. இந்நிலையில், உங்களது அடுத்த கட்டம், அவற்றைக் கொல்வதாகவே ஆகிவிடும். சாதாரணமாக அவைக்கு உணவளித்தாலே போதும்.
எனவே, ஒவ்வொரு விலங்கு நல நபரும், வெளியில் சென்று உணவளிக்கவேண்டும். அவ்வாறு உணவளிக்காதவர்கள் இன்றே ஆரம்பியுங்கள். மேலும், நீங்கள் பூனைக்கு உணவளிக்கவில்லை என்றால், உங்கள் தீவில் பறவைகளை இழந்துவிடுவீர்கள். பூனைகளுக்கு உணவு கிடைக்கவில்லையென்றால், அது பறவைகளை வேட்டையாடும். அதனால், நாய்கள், பூனைகள் ஆகிய இரண்டுக்கும் உணவு வழங்குங்கள். இந்தியா, கடந்த ஒன்றரை மாதங்களாக முடக்கத்தில் இருந்தாலும், எமது சமுகம் வெளியில் சென்று விலங்குகளுக்கு உணவுகளை வழங்கி வருகின்றது. அனைத்து விலங்கு நல ஊழியர்களுக்கும் வெளியில் சென்று விலங்குகளுக்கு உணவளிப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு, எமது அரசாங்கம் மிகுந்த விவேகத்துடன் செயற்பட்டு வருகின்றது.
கே: கொரோனா வைரஸ் தொடர்பான விலங்குகள் ஆரோக்கியத்துக்கான உலக அமைப்பின் நிலைப்பாடு என்ன?
கொவிட்-19 பரவுவதற்கான முக்கிய காரணம், மனிதனில் இருந்து மனிதனுக்கு பரிமாற்றப்படுவதே. இதற்கு எந்த விலங்கும் துணைபோகவில்லை. எந்தவொரு மாட்டுக்கும் ஆட்டுக்கும், செம்மறியாட்டுக்கும், பன்றிக்கும் இது தொற்றவில்லை. சிறப்பான விலங்கியல் மருத்துவர்கள் 30 பேரைக் கொண்ட குழுவொன்றை அமைத்த இந்திய அரசாங்கம், அந்த குழு மூலம் 30,000 விலங்குகளை பரிசோதனை செய்த போதிலும், அவற்றில் எந்தவொரு விலங்குக்கும் இந்தத் தொற்று இருக்கவில்லை.
கே: இலங்கை, தனது விலங்கு நல சட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை. இவ்வாறான ஒரு நிலையில், விலங்குகளை பாதுகாப்பதற்கு, விலங்கு நல பணியாளர்களுக்கான உங்களது அறிவுரை என்ன?
உங்களிடம் விலங்குநல சட்டம் இல்லை என்றால், இது மிகவம் பிற்போக்கான இடமாகும். உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளது. இலங்கையில் இது இல்லை என்பதையிட்டு நான் வெட்கப்படுகின்றேன். இது ஒரு பௌத்த நாடு. மக்கள் நீதிமன்றத்துக்குச் சென்று இதை பெற்றுக்கொள்ளவேண்டும்.
கே: கிராமவாசிகளுக்கு துப்பாக்கிகளை கொடுத்த வனவிலங்குத்துறை அமைச்சர் இப்போது எங்களிடம் உள்ளார். இந்தச் சிக்கலை எவ்வாறு சமாமளிப்பது?
நம்மிடமும் இவ்வாறு ஒரு அமைச்சர் இருந்தார். இந்தப் பிரச்சினையில் நான் தலையிடும் வரை, 100 காளைகள் கொல்லப்பட்டன. மிருகங்கள் எங்களது வாழ்வில் எந்த அளவுக்கு முக்கியமானவை என்பதை அரசாங்கம் உணர்வதில்லை. நீங்கள் யானைகளைக் கொன்றால், 150 இன மரங்களை நீங்கள் இழப்பீர்கள். யானைகளும் குரங்குகளும் பாரிய மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இலங்கையில் உயிர் பன்முகத்தன்மையை இழந்துவிடுவீர்கள்.
யானைகள் ஒரு இடத்துக்குச் சென்ற உணவருந்திவிட்டு, இன்னொரு இடத்தில் விதைகளை விட்டுச் செல்கின்றன. அவை, மிகவும் வளமான சாணத்தை விட்டுச் செல்கின்றன. இவை, பிற மரங்களுக்கும் தாவரங்களுக்கும் உரமாகின்றன. யானைகளும் குரங்குகளும் வழக்கத்துக்கு மாறான உணவுகளை உட்கொள்கின்றமையால் அவற்றின் மூலமான விதைகள், இந்நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகின்றது. மொரீஷியஸில் இதே பிரச்சினை இருந்தது. அந்தப் பிரச்சினை இலங்கையிலும் உள்ளது. மொரீஷியசில், மரங்களே இல்லை. ஹிமால்சந்த்தில் அனைத்து குரங்குகளும் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அங்கு மரங்கள் அனைத்தும் அழிய ஆரம்பித்தன. தற்போது மரங்களை மீண்டும் நாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
கே: சமூக விலங்குகள் அழிக்கப்பட்டால் என்ன செய்வது?
நீங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டும். எவ்வாறாயினும், எந்தவொரு அரசாங்கமும். இந்த வகையான செயற்பாடுகளுக்கு துணை நிற்காது. ஏனென்றால், சமூக விலங்கு அதாவது நாய்கள், பூனைகள் இல்லாமல் போகும் போது, நாட்டை எலிகள் ஆட்சி செய்யும். நாய்களும் பூனைகளும் மனிதர்கள் தனியாகக் கொடுக்கும் உணவில் வாழவில்லை. அவை குப்பைகளையும் எலிகளையும் நம்பி வாழ்கின்றன. இந்நிலையில், நாய்கள், பூனைகள் அழிக்கப்பட்டால், குப்பைகளும் எலிகளும் அதிகரித்துவிடும். ஒரு வருடத்தில், இரண்டு எலிகள் 33,000 எலிகளை பெருக்கிவிடும். யாராலும் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியாது.
இந்தியாவிலுள்ள சூரத் நகரத்தின் ஆளுநர், நகரத்தை மூன்று வாரங்களுக்குள் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார். நாய்களையும் பூனைகளுமே, நகரத்தின் சுத்தத்தைக் இல்லாம் செய்கின்றன என்று எண்ணி, மூன்று வாரங்களில் அனைத்து நாய்களையும் கொன்றுவிட்டார். அவருக்கு அவர் அந்த நகரத்தச் சுத்தம் செய்வதாகவே தோன்றியது. சரியாக அடுத்த இரண்டு வாரங்களில், நகரம் முழுவதையும் எலிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.
எலிகள் மனிதர்களுக்கு அஞ்சுவதில்லை. அவ நாய்களுக்கும் பூனைகளுக்குமே அஞ்சுகின்றன. எனவே, இலங்கையில் நாய்களைக் கொண்டார், சூரத் போன்றே நீங்களும் அவதிப்படுவீர்கள். எனவே, இரண்டு கால்கள், நான்கு கால்கள் விலங்குகளின் நலனுக்காக, ஒன்றிணைவோம்.