உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். பருவகால நோய் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். நோய் பாதிப்புக்கு இடம் கொடுக்காமல் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் ஊட்டச்சத்துக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி, டி மற்றும் ஈ, மற்றும் இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. அவற்றின் செயல்பாடுகளை அறிவோம்.
வைட்டமின் ஏ: சருமம், சுவாசக்குழாய் மற்றும் குடலில் உள்ள உயிரணுக்களின் கட்டமைப்பை பராமரிக்கும் பணியை மேற்கொள்கிறது. நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்ப்பதற்கும் உதவுகிறது. மீன், முட்டையின் மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, நட்ஸ் வகைகள், விதைகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் ஏ காணப்படுகிறது. மேலும் காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. அதனை சாப்பிடும்போது வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்துவிடும். பச்சை காய்கறிகளிலும், மஞ்சள், பூசணி, கேரட் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது.
வைட்டமின் பி: பி6, பி9, பி12 போன்றவை நோய்கிருமிகளை விரட்டி அடிப்பதில் முக்கிய பங்குவகிப்பவை. பருப்புவகைகள், பச்சை இலை காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், மீன், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவற்றில் பி6 அதிகம் நிரம்பியிருக்கிறது. பி12 வைட்டமின்கள் முட்டை, பால் பொருட்கள், சோயா பால் போன்றவற்றில் நிறைந்துள்ளன.
வைட்டமின் சி மற்றும் ஈ: இவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து சரும செல்களை பாதுகாக்க உதவுகின்றன. நியூரோபில்ஸ், லிம்போசைட்டுகள் மற்றும் பாகோசைட்டுகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிறப்பு செல்கள் உருவாக்கத்திலும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி, கிவி, பிராக்கோலி, தக்காளி, குடை மிளகாய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. நட்ஸ்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் காய்கறி எண்ணெய்களில் வைட்டமின் ஈ அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் டி: நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும் உயிரணுக்களின் இயக்கத்திற்கு வைட்டமின் டி தூண்டுகோலாக விளங்குகிறது. நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் டி அளவை சூரிய ஒளி மூலம் பெறலாம். எனினும் மீன், முட்டை, வெண்ணெய், பால் வகைகளில் வைட்டமின் டி அதிகம் நிரம்பியிருக்கிறது. சுவாசம் சார்ந்த நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க வைட்டமின் டி அவசியமானது என்பதை ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.
நோய் எதிர்ப்பு தன்மைகொண்ட செல்களின் வளர்ச்சிக்கு இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவை இன்றியமையாதது. நோய்க்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு செல்களை வலுப்படுத்தும் தன்மை இரும்பு சத்துக்கு இருக்கிறது. ஆட்டிறைச்சி, கோழி, மீன்களில் இரும்பு சத்து காணப்படுகிறது. சிப்பிகள், பிற கடல் உணவுகள், இறைச்சி வகைகள், உலர்ந்த பீன்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் துத்தநாகம் காணப்படுகிறது. காளான்களில் செலினியம் மிகுந்திருக்கிறது.