2019- O/L முடிவுகளில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலைகள் சிலவற்றின் பொதுவாக சமூக வெளியில் வெளிப்படுத்தப்படாத மொத்த முடிவுகளை பாடரீதியாக அலசி பெறப்பட்ட பல அதிர்ச்சியூட்டும் அவதானிப்புகளை கோடிகாட்டி, கல்வித்துறை மற்றும் பாடசாலை முகாமைத்துவம் சார்ந்து எவ்வாறு புள்ளிவிபரங்களை அலச வேண்டும் என்பதை விபரிப்பதோடு எந்த எந்தப் பாடங்களில் உடனடி நடவடிக்கைகள் தேவை, அவை எதிர்காலத்தில் எங்கள் பிள்ளைகளின் பெறுதிகளை மேன்மைப்படுத்த உதவும் என்பவை பற்றி சற்று ஆழமாக அலசுகிறது இந்த கட்டுரை.
இந்தக் கட்டுரை எங்கள் கல்வித்துறை வளர்ச்சி சார்ந்த அக்கறையுடன் எழுதப்படுவதால், இதுவரை வெளிக்காட்டப்படாத புள்ளிவிபரங்களை கொண்டு உடைக்கப்பட்ட உண்மைகள் சற்று கசப்பானவையாக இருக்கக் கூடும் என்றாலும், வாசகர்கள் தங்கள் தனிப்பட்ட
பாடசாலைகளின் சுய விருப்பு வெறுப்புகளை கடந்து, ஒரு வளமான கல்விச்சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சி அல்லது சம்பத்தப்பட்டவர்கள் மீது ஒரு நேர்மறையான சமூக அழுத்தத்தை பிரயோகித்து மேம்பட்ட இயங்கு நிலைக்கு அவர்களை கொண்டுவரவேண்டும் என்ற அக்கறையுடனும் வாசிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாண கல்வித்துறையில் கணிசமான சரிவு அவதானிக்கப்படுவதை நான் உட்பட வேறு பல சமூக ஆர்வலர்களும் சமூகவெளியில் கருத்தாடி வந்தாலும், இன்னுமொரு சாரார், இல்லை நாங்கள் வளர்த்து கொண்டுதான் இருக்கிறோம். போரின் வடுக்கள் உள்ளிட்ட சமூக பொருளாதாரக் காரணிகளே எங்கள் மெதுவான வளர்ச்சிக்கு காரணம் என்று வாதிட்டு வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் சமூக பொருளாதாரக் காரணிகள் பொதுவாக உள்ள பாடசாலைகளின் முடிவுகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு, சமூக பொருளாதார காரணிகள் தாண்டி, ஒவ்வொரு பாடசாலையின் கல்வி முகாமைத்துவம், ஆசிரியத்துவம் என்ற இரண்டு விடையங்கள் எவ்வாறு எங்கள் மாணவர்களின் பெறுதிகளில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன என நிறுவியுள்ளேன்.
இந்த இடத்தில் இன்னுமொரு முக்கிய உண்மையையும் பேசவேண்டும்.
இலங்கையில் அனைத்து அரச துறையினரும் மதியபோசன இடைவேளை உள்ளிட்டு 9 மணித்தியாலங்கள் பணியாற்றவேண்டி இருக்க, ஆசிரியத்துறை சார்ந்தவர்கள் மட்டும் ஏன் 6 மணித்தியாலங்கள் மட்டும் பணியாற்றுவதன் அடிப்படை என்ன என பல ஆசிரியர்களிடம்/ அதிபர்களிடம் நான் கேட்டிருக்கிறேன். இதுவரை பலருக்கு அந்ந சூட்சுமம் தெரியாது.
6 மணி நேரத்துடன் பாடசாலை முடிவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
1) நீண்ட நேரத்திற்கு மாணவர்களின் கிரகித்தல் தன்மை உச்சநிலையில் இருக்காது.
2) ஆசிரியர்கள் தங்கள் 5 மணி நேர கற்பித்தலுக்காக தினமும் மூன்று மணி நேரம் தயார்ப்படுத்தல்களில் ஈடுபட வேண்டிய தேவை இருக்கும் என்பது.
இதில் இரண்டாவது காரணி மிக முக்கியமானது. சிலர் இந்த கருத்துடன் முடண்படவும் கூடும். ஆனால் அது தான் அடிப்படையான உண்மை. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் நடைமுறைகளை ஆராய்ந்து பாருங்கள். பல நாடுகளில் பாடசாலை இரண்டு மணிக்கு முடிந்து மாணவர்கள் வீடு சென்றுவிட்டாலும் எல்லா ஆசிரியர்களும் பாடசாலையில் மாலை 5 மணிவரை தங்கி, அடுத்தநாள் பாடத்துக்கான தயாப்படுத்தல்கள், மாணவர்களின் கல்வி முன்னேற்ற ஆய்வறிக்கைகள், பரீட்சை முடிவுகளின் ஆய்வறிக்கைகள் உள்ளிட்ட பல வேலைகளின் தினமும் தம்மை உட்படுத்தி இருப்பர். ஆக தாங்கள் எப்படியான முறையில் கற்பித்தலை முன்னெடுக்க வேண்டும், தங்கள் வகுப்பின் ஒவ்வொரு மாணவரையும் எப்படி அணுகவேண்டும் என்ற தெளிவு அப்படியான ஆசிரியர்களுக்கு நிட்சயம் இருக்கும். ஆனால் இலங்கையில் சில ஆசிரியர்கள், பாடசாலை நேரம் கடந்து பல்வேறுபட்ட தயார்ப்படைத்தல்களில் ஈடுபட்டிருக்க பெரும்பாலானவர்கள் அப்படி நடப்பதாக தெரியவில்லை. சற்று அதிக நேரம் செலவிடுமாறு கேட்கப்பட்ட ஆசிரியர்கள் அதிபர்களுடன் முரண்படும் சம்பவங்களும் அதிகம்.
சரி இந்த நிலைக்கும், 2019 பாடசாலை முடிவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்க கூடும். அந்த விடையத்துக்கு வருகிறேன்.
2019 O/L முடிவுகளில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் சரிவுகள், பேசுபொருளாகி இருந்த நிலையில் எனது முதலாவது கட்டுரையில் பொதுக்காரணிகளை ஆராய்ந்து இருந்தேன்.
இணைப்பு: https://m.facebook.com/story.php?story_fbid=10218078104516543&id=1005071650
ஆராட்சிகளை பொதுவாக இரண்டு விதமாக செய்யவார்கள்
1) Qualitative Analysis
2) Quantitative Analysis.
இதில் Qualitative Analysis என்பது , சம்பந்தப்பட்ட துறையினரின் கருத்துகளை திரட்டி அதன் மூலம் ஒரு முடிவுக்கு வருவது.
Quanititative Analysis என்பது புள்ளிவிபரவியலை அடிப்படையாக கொண்டு ஆராய்வது.
எங்கள் பிரதேசங்களின் பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கு, இவ்வளவு காலமும் நாங்கள் எங்கள் பெறுபேறுகளை எழுந்தமானமாக பொதுவான Qualitative முறையில் அணுகியதும் ஒரு தவறு என்பது என் வாதம். ஏனெனில் இவ்வளவு காலமும், எங்கள் பாடசாலைகளின் முடிவுகள் எத்தனை பேர் 9A, 8A அதாவது எத்தனை பேர் 5A யை விட அதிகம் என்பதோடு முடிந்து போயிருந்தது. அதற்கு மேல் ஆராட்சிகள் நடப்பதில்லை. அப்படியே சில விடையங்கள் தெரிந்திருந்தாலும் அவை சமூக வெளிக்கு கொண்டு வரப்படுவதில்லை.
இந்த முறையில் இருந்து அவற்றை உடைக்க முயல்கிறேன்.
யாழ்பாணத்தின் சில முக்கிய பாடசாலைகளின் மொத்தப் பெறுபேறுகளை கிட்டத்தட்ட Quantitative முறை சார்ந்து ஆராட்சிக்கு பாட ரீதியாக உட்படுத்தினேன். பல அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளிவந்தன.
சமூக பொருளாதாரக் காரணிகள் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமாறு ஒப்பீட்டை செய்தேன்.
ஒவ்வொரு பாடசாலையின் பாடரீதியான அடைவு மட்டங்கள், A, B, C, S, W உள்ளிட்ட அடைவு மட்டங்களளோடு தனித்தனியே இணைத்துள்ளேன்.
அதாவது,
1) புலமைப்பரிசில் பரீட்சையில் அதிஉச்ச புள்ளிகளை பெற்ற பந்தயக் குதிரைகளை மட்டும் உள்வாங்கும் யாழ் இந்துக் கல்லூரியினையும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையும் ஒப்பிடப்படலாம்.
அதேபோல் யாழ் வலயத்தின் யாழ் இந்து மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகியன ஒப்பிடப்படலாம்.
2) வலிகாமம் வலயத்தில் பலவேறு பட்ட மாணவர்களை கொண்ட கலவன் பாடசாலைகளான மகாஜனக் கல்லூரியையும், அளவெட்டி அருணோதயா கல்லூரியும் ஒப்பிடப்படலாம்.
தென்மராட்சியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியுடன் றிபேட்ஜ் கல்லூரியை ஒப்பிட முனைந்தேன். ஆனால் வேறுபாடுகளை ஒப்புநோக்கும் போது றீபேட்ஜ் கல்லூரியின் மாணவர்களின் சமூக பொருளாதார காரணிகளும் தாக்கம் செலுத்துவதை உணரமுடிகிறது.
வடமராட்சி வலயத்தில், ஹாட்லி கல்லூரியையும், மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையையும் ஒப்பிடலாம், கிளிநொச்சியில் கிளி/ மத்திய மகா வித்தியாலயத்தையும், கிளிநொச்சி இந்துக் கல்லூரியையும் ஒப்பிட்டு ஆராய்ந்தேன்.
இங்கு பெறப்பட்ட முடிவுகள் கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களும் முயன்றால் மாற்றியமைக்கப்படக் கூடியது என்பது என் வாதம்.
சில அவதானிப்புகள் பின்வருமாறு:
1) வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும், யாழ் இந்துக் கல்லூரி ஆகியன பெரும்பாலான பாடங்களில் 100% சித்தியுடன் உச்ச பெறுபேறுகளை வழங்கியிருந்தாலும் அதிக சதவிகிதம் “A” மற்றும் “B” பெறுபேறுகளை பெற்றதில் வேம்படி மகளிர் உயர்தரபாடசாலை கிட்டத்தட்ட 10-20 சதவிகித இடைவெளியில் யாழ் இந்துக் கல்லூரியை விட முன்னிலை வகிப்பதை நீங்களும் பார்க்கலாம். இது கணிசமான ஒரு இடைவெளி. ஒரே விதமான பந்தயக் குதிரைகளை கொண்ட இரு கல்லூரிகளில் யாழ் இந்துக் கல்லூரியின் அடைவு மட்டங்கள் சற்று பின் தங்கி இருப்பது கசப்பான உண்மை தான்.
2) மேற்குறித்த இரண்டு பாடசாலைகளிலும் ஆங்கிலபாடத்தில் “A” பெற்றவர்களின் சதவிகிதம் தாய் மொழியான தமிழ் பாடத்தில் “A” பெற்றவர்களை விட 16-20 சதவிகிதம் அதிகம்.
அதோடு மட்டுமல்லாமல், ஹாட்லி மற்றும் மெதடிஸ்ட் கல்லூரிகளின் “A” தர அடைவு மட்டங்களை விடவும் குறைவானது.
யாழ் இந்து, வேம்படி ஆகியவற்றில், ஆங்கில மொழியில் கற்பவர்களின் ஆதிக்கம் சற்று இருந்தாலும் இன்னொரு மொழியில் புலமை பெறுவது வரவேற்கலாம் என்றாலும், தாய் மொழி மீதான புலமை இம்மியளவும் குறைந்து விடாமல் எடுத்துக்காட்டாக இருக்க இந்த மாபெரும் கல்லூரிகள் கவனம் எடுக்கவேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.
3) கொக்குவில் இந்துக் கல்லூரியை பொறுத்த அளவில் பொதுவில் நல்ல பெறுபேறுகள் இருந்தாலும், சற்று உன்னிப்பாக அவதானித்தால், தாய் மொழியான தமிழின் அடைவு மட்டம் கிட்டத்தட்ட 60 வீதமானவர்ளில் “C” மற்றும் “S” சார்ந்தே காணப்பட்டது. அதே போல விஞ்ஞான பாடத்தில் 10 வீதமானவர்கள் சித்தியடைய தவறியதோடு 37 வீதமானவர்கள் “S” சித்தி மட்டும் பெறமுடிந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கவனம் எடுப்பது நல்லது.
4) யாழ் இந்து மகளிர் கல்லூரி முடிவுகளை பார்த்தால் தமிழ் மொழியின் அடைவு மட்டங்கள் மேல் நோக்கி நகர்த்தப்படவேண்டிய தேவை அவதானிக்கப்பட்டதோடு, பரீட்சைக்கு தோற்றிய 248 மாணவர்களில் 50 மாணவர்கள்( 20%) விஞ்ஞான பாடத்தில் சித்தியடையவில்லை. இது ஒரு கணிசமான சரிவு. அத்துடன் வர்த்தகமும் கணக்கியலும் பாடத்திலும் ஒப்பீட்டு அளவிலான சரிவு அவதானிக்கப்பட்டதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்
5) வலிகாமத்தின் எல்லா மட்ட மாணவர்களையும் உள்வாங்கும் மகாஜன கல்லூரி, மற்றும் அருணொதய கல்லூரி ஆகியன, பல யாழ் நகரப் பாடசாலைகளுக்கு இணையான பாடரீதியான அடைவுகளை தரமுடிந்தாலும், விஞ்ஞான பாடத்தில் அருணோதயக் கல்லூரியின் அடைவு 82% மாக இருக்க, மகாஜனக் கல்லூரியின் விஞ்ஞான பாட அடைவு மிக அசாதாரணமாக 62 வீதமாக பின் தங்கி இருப்பதை அவதானிக்க முடிந்தது. 56 மாணவர்கள் விஞ்ஞான பாடத்தில் சித்தியடையவில்லை.
அதேபோல, குடியியல் மற்றும் தொடர்பாடல் & ஊடகம் சார்ந்த பாடத்திலும் மகாஜன அடைவு மட்டம் பின்தங்கி இருந்தது. பாடசாலை கள நிலவரத்தை ஆராய்ந்த போது உண்மையில் அங்கே விஞ்ஞான பாட கற்பித்தல் முகாமைத்துவத்தில் சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படக் கூடியதாக இருந்தது. உடனடியாக சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்டடுள்ளன.
இரு பாடசாலைகளும் ஆங்கில பாடத்தில் மேலும் முன்னேற முயற்சிப்பது நல்லது.
6) வடமராட்சியில் ஹாட்லி கல்லூரி மற்றும், மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகிய சில பாடங்களில் யாழ் பிரபல பாடசாலைகளை விட அடைவு மட்டங்களில் கலக்கியிருந்தன. இருப்பினும் பொதுவாக விஞ்ஞான பாடத்தில் கவனம் எடுக்கவேண்டிய தேவை உள்ளது. மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை home economics பாடத்தில் சற்று கவனம் எடுக்க வேண்டியதும் தெரிந்தது.
7) தென்மராட்சி கல்வி வலயத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, விஞ்ஞானம், ஆங்கிலம், விவசாயம் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஒப்பீட்டளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேவேளை ஒருகாலத்தில் மிகப் பிரபலம் வாய்ந்த கல்லூரியான றீபேட்ஜ் கல்லூரி மிகப் பெருமளவில் அதிர்ச்சியூட்டும் சரிவில் இருப்பதை அவதானிக்க முடிந்தது. தமிழ், சமயம் ஆகிய அடிப்படைப் பாடங்கில் கூட முறையே 74, 69 வீதமானவர்களே சித்தி பெற முடிந்துள்ளது. விஞ்ஞான பாடத்தில் 76 வீதமானவர்களும் ஆங்கிலத்தில் 78 வீதமானவர்களும் சித்தியைடயவில்லை. கணிதத்தில் 44% சித்தியடையவில்லை. சாவகச்சேரி இந்துக்கல்லூரி போல் அல்லாது இந்த கல்லூரி மாணவர்கள் சமூகக் காரணிகள் சற்று பின் தங்கி இருப்பதாக கூறப்பட்டாலும், மிகப் பெரிய கல்விப்புலம் வாய்ந்த சாவகச்சேரி கல்விச் சமூகம் அக்கறை எடுத்து இந்ந மாபெரும் கல்லூரியினை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களில் இறங்க வேண்டிய அவசியத்தை இந்த முடிவுகள் உணர்த்தி நிற்கின்றன.
8) கிளிநொச்சி கல்வி வலயத்தின் போரின் வடுக்களுடன் மீள் எழுந்து வரும் இரு பிரபல பாடசாலைகளான மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கிளி/ இந்துக் கல்லூரி ஆகியவற்றில், கிளி/ மத்திய மகா வித்தியாலயம் குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை பெற்றிருந்தாலும், விஞ்ஞானம், மனைப்பொருளியல், குடியியியல் பாடங்களில் அடைவு மட்டங்கள் ஒப்பீட்டளவில் சற்று மந்தமாக இருப்பதாக தெரிகிறது. மற்ற பாடங்களில் சாதிக்க முடிந்த கல்லூரி, சற்று முயற்சித்தால் மேற்படி பாடங்களிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன்.
9) அதே பிரதேசத்தை சேர்ந்த, அதே சமூக பொருளாதார காரணிகளை கொண்ட, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றிய
கிளி/இந்துக் கல்லூரியின் முடிவுகள், கணிதம், விஞ்ஞானம், விவசாயம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சற்று அசாதாரணமாக ஒப்பீட்டு அளவில் பின்தங்கி இருந்தனர். அத்தோடு அடிப்படை பாடங்களான, தமிழ் மற்றும் சமயம் ஆகிய பாடங்களிலும் சித்தியடையத் தவறுபவர்கள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றனர். பொருத்தமான களவேலைத்திட்டங்கள் அவசியம்.
10) கிளிநொச்சியின் இந்ந இரு பாடசாலைகளில் இன்னுமொரு முக்கிய விடையமும் அவதானிக்கப்பட்டது.
சமயபாடத்தில், கிறிஸ்தவம் மற்றும் கத்தோலிக்கம் ஆகிய பாடங்களை தழுவியோர் விகிதயம் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 27% ஆகவும், கிளி/ இந்துக் கல்லூரியில் 15% ஆகவும் காணப்பட்டது. இந்த விகிதங்கள் ஏனைய கல்லூரிகளின் ஒப்பீட்டு அளவிலும், இலங்கையில் மத விகிதாசாரத்திலும் இருந்து அதிகமாக வேறுபட்டு இருக்கிறது. இது தற்செயலானதா? அல்லது போரின் வடுக்களை கருவிகளாக்கி, மதமாற்றம் அமைதியாக முன்னிலைப் படுத்தப்பட்டு செல்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட சமூக ஆர்வலர்களின் ஆராட்சிக்கு விட்டு விடுகிறேன்.
பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் தாய் மொழியான தமிழ், சமயம் சார்ந்த அடைவு மட்டங்கள் சற்று பின்தங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் என்பது நம் தாய்மொழி என்பதையும் தாண்டி மற்ற பாடங்களை கற்பதற்கான ஒரு கருவியும் கூட. ஆக தமிழ் மொழியின் சரிவு காலப்போக்கில் மற்ற பாடங்களின் சரிவுகளுக்கும் காரணமாவதோடு, சமூகத்தின் மொழிப்புலமையின் சரிவுக்கும் இட்டுச்செல்லக்கூடும்.
ஆக இணைப்பிலுள்ள அட்டவணைகள், மேற்குறித்த முடிவுகள் என்பவற்றிலிருந்து, சமூக பொருளாதார காரணிகள் தாண்டி, பாடசாலைகளின் தனிப்பட்ட கல்வித்துறை தாக்கம் செலுத்த முடியும் என்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேற்குறித்த சில பாடசாலைகளை உதாரணங்களுக்காக மட்டுமே தெரிவு செய்தேன். ஆனால் இவ்வாறான கணிப்பீடுகள் ஒவ்வொரு பாடசாலையிலும் நடைபெற வேண்டும்.
எதிர்காலத்தில் பாடசாலைகள் சார்ந்த இந்ந வகை குறைபாடுகளை தவிர்த்து மாணவர்ளின் மேம்பட்ட பெறுபேறுகளை எதிர்பார்க்க 3 முன்மொழிவுகளை முன் வைக்கிறேன்.
1) Top results எனப்படும் அதி உச்ச அடைவு மட்டங்கள் ஆராயப்பட்டு எத்தனை 9A, 8A என்பதோடு கடந்து விடாது, ஒவ்வொரு பாடசாலையின், Bottom lines எனப்படும் பாடரீதியான தேர்ச்சி விகிதங்கள் வருடா வருடம் ஆராயப்பட்டு சமூக வெளியில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அது கல்லூரியின் கல்விச் சமூகத்திற்கு ஒரு சமூக அழுத்தம் வழங்க உதவி சம்பந்தப்பட்டவர்கள் கவனத்துடன் உழைத்து நல்ல பெறுபேறுகளை உறுதி செய்ய உதவும்
2) பாடசாலை ரீதியில், அதிபர், 3-4 பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள், சில முன்னணி மாணவர்களை உள்ளடக்கிய கல்வி மேம்பாட்டு கண்காணிப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஆண்டு 9 முதல் ஒவ்வொரு தவணைப் பரீட்சை முடிவிலும் முடிவுகள் அலசப் பட்டு சம்பந்தப்ட்ட குறைபாடுகள்( உள்ளக/ சமூக பொருளாதார காரணிகள்) இனங்களாணப்பட்டு முடிந்த அளவு அவை சீர்ப்படுத்தப்பட்டு வந்தால் ஆண்டு 11 இல் 9 தவணைகள் கடந்து பரீட்சை எழுதும் போது தீர்க்கமான, சிறப்பான முடிவுகளை எதிர்பார்க்க முடியும். இந்த கலாச்சாரத்தின் மூலம் மாணவர்களுக்கு இடையேயான சேர்ந்து கற்றல் முறைமையையும் மெருகூட்டலாம்.
3) அதி உச்ச பெறுபேறுகளை பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மாணவர்களில் காட்டப்படும் அக்கறையை விட ஒரு படி மேலான அக்கறை அனைத்து மாணவர்ளும் குறைந்த பட்ச சித்தியை பொறச் செய்து உயர்தரத்துக்கு பெரும்பாலனவர்கள் அனுப்பப்படுவதை உறுதி செய்யும்.
முதலிடத்தில் உள்ள மாகாணங்களை விட எங்கள் மாகாணங்களின் அடைவு மட்டங்கள் கிட்டத்தட்ட 15% பின் தங்கி நிற்பதால் ஒவ்வொரு வருடமும் வடக்கு கிழக்கின் 7000 மாணவர்கள் உயர்தர வாய்ப்பை இழக்கின்றனர். புள்ளி விபரங்களை ஆராய்ந்து பாருங்கள்.இது மிகப் பெரிய சரிவு தான்.
ஆக, வடக்கு கிழக்கு பிரதேசத்தின் ஒவ்வொரு பாடசாலையும் தனித்தனியே வேலைத்திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். வெறுமனே சமூக பொருளாதார காரணிகளை மட்டும் சுட்டிக்காட்டிக் கொண்டிராமல் கல்வித்துறை சார்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்கின்றரா என உங்கள் மனசாட்சிகளை கேட்டுக் கொள்ளுங்கள். நான் மேலை ஒப்பிட்ட பாடசாலை மாணவர்கள் பலர் அந்த அந்த பிரதேசங்களை சேர்ந்த ஒரே கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள் தான். ஆனால் முடிவுகள் மாறுபட்டுள்ளதே. அதற்கு முக்கிய காரணம் பாடசாலையும், பாடசாலை ஆசிரியர்களின் கற்பித்தல் முறைமைகளும் தான்.
சில ஆசிரியர்கள் அறிவில் மேம்பட்டிருப்பர், ஆனால் கற்பித்தல் முறைமையில், மாணவர்களுக்கு கல்வியை ஊடுகடுத்துவதில் பின்தங்கி இருப்பர். உங்கள் குறைபாடுகள் பொதுவானவை தான். அதை தவறாக எடுக்காது, கற்றுக்கொள்ளுங்கள், உங்களை தினம் தினம் மேம்பட்டவர்களாக தயார்ப்படுத்துங்கள், பிள்ளைகளின் கற்றல் குறைபாடுகளை இனம் கண்டு அவரவருக்கு ஏற்ப கற்பித்தல் முறைகளை மாற்றி அமையுங்கள். மற்ற ஆசிரியர்களின் உதவிகளை வெட்கப்படாது நாடுங்கள். வெளியில் இருந்து வந்து உங்கள் பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க யாரும் தயாராக இருந்தால் இருகரம் கூப்பி வரவேற்று வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் சில மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதாக நினைக்காதீர்கள். ஒரு கல்விச்சமூகத்தை கட்டி எழுப்பும் உயரிய பணியை செய்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள். உங்களில் பலர் உன்னதமானவர்கள் தான். ஆனால் இன்றைய சமூகச் சிக்கல்கள், அரசியல் குளறுபடிகள், நீண்ட தூர பயண அலைச்சல்கள் உங்களை சோர்வடைய செய்திருக்கலாம். ஆனால் அதற்காக வடுக்களை சுமந்த எங்கள் சமூகம் வீழ்ந்துவிடக்கூடாது.
சரிந்து கொண்டிருக்கும் எங்கள் கல்விச் சரித்திரத்தை உங்கள் நெஞ்சில் சாய்த்து நிமிர்த்த ஒரு சமூகமாக வீறுகொண்டு எழுவோம்.
நன்றி
திருநாவுக்கரசுதயந்தன்