அலைதொடும் கரைகளில் பிணங்கள்
விளைந்தாடும் கதிர்போல அறுக்கப்பட்ட தலைகள்
கருமேக உருக்கொண்ட புகைகள்
சாம்பலாகி கிடந்த குடில்கள்
நடந்து நடந்து ஒய்வு தேடிய கால்களுக்கு
உடல்விட்டு அறுத்து
ஓய்வு கொடுத்தது குண்டு
சிந்திய குருதி பட்டு
ஈழ நிலம் சிவந்தது
கட்ட மருந்தில்லை கவணிக்க ஆளில்லை
மொய்க்கும் ஈக்கள் பரவ துர்வாடை
துடித்துப்போகும் உயிர்கள்
நேரில் கண்ட காட்சிகள்
இன்னும் கிடைக்கவில்லை நீதிகள்
உலகின் அரசியல் நாடகங்கள்
மூன்றடி பதுங்குகுழி முடிவில்லா சோகத்தை புதைத்தது
முள்ளிக் கடற்கரையில் இனத்தின் அவலம் ஒலித்தது
முழு உலகமும் சேர்ந்து ஒரு கூழி ஆடியது
தமிழினம் தனித்து எதிர்த்து நின்றது
வீரம் ஒன்றே மறையென போரே வழியென ஆனது
காலம் நீதி தருமே
கலங்காதே என் இனமே
வரலாறு எமக்கு உணர்த்தும் பாடமே
துரோகம் ஓர் நாள் விழுமே
தமிழ் உலகை ஆளுமே
வட்டக்கச்சி
வினோத்