இலங்கைத்தீவில் தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே காலங் காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் முப்படைகளும் இணைந்து பல்வேறு முனைகளிலும் இருந்தும் கண் மூடித்தனமான தாக்குதலை இலங்கை அரசுடன் சர்வதேச நாடுகளும் இணைந்து தமிழர்களை அகதிகளாக்கி வீதி வீதியாக அலையவிட்டு, பட்டினி போட்டு, படுகாயமடைந்தவர்களுக்கும் நோய்வாய்ப் பட்டவர்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைத்து விடாதபடி தடுத்து, கல்வியையும் முடக்கி, ஈழநாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரம், உடல் நிலை என்ற தளத்தில் வைத்து ஒடுக்கி, பூண்டோடு அழிக்கும் உச்சக் கட்ட சதித் திட்டத்தை இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் நடத்திய இன அழிப்பின் கறைபடிந்த ஒரு குறியீடாகவே மே 18 திகழ்கின்றது.
முள்ளிவாய்க்கால் யுத்தம் என்பது உள்நாட்டில் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட மிகமோசமான ஒரு யுத்தமாகும். 30 வருட ஆயுதப் போராட்டத்திலும், முப்பது வருட அஹிம்சை போராட்டத்திலும் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டிருந்த அரசியல் தீர்வுக்கான நியாயமான கோரிக்கைகள் நிராகரித்து இனப்படு கொலையினை ஆரம்பித்த சிங்களப் பேரினவாத அரசு . பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான இராணுவ சக்திகளை இணைத்துக் கொண்டு இந்த நோக்கத்தை நிறைவேற்றிய ஒரு களமாகவே முள்ளிவாய்க்காலைக் குறிப்பிட வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களப் படையினர் சர்வதேச மனிதாபிமான வழிகாட்டல்களையோ அல்லது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை மாத்திரமின்றி தடைசெய்யப்பட்ட வேதியல் ஆயுதங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தி இனப்படுகொலையினை நிகழ்த்தியது. இதில் கொத்துக் குண்டு விவகாரம் இப்போதுதான் பேசப்படுவதாக நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் இந்த விவகாரம் 2008 மற்றும் 2009 களில் ஏற்கனவே பேசப்ப ட்ட ஒன்று.
கார்த்திகை 29ஆம் திகதி 2008அன்று வன்னியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் பாவித்தமை உறுதிசெய்யப்பட்டது. கொத்துக் குண்டுகள் (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500- 600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டு மல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் தாக்குதலின் போது பாவித்தமை குறிப்பிடத்தக்கது.
நான்காம் ஈழப் போரின்போது 2008 இறுதி மற்றும் 2009 முற்பகுதிகளின் போது நடைபெற்ற இறுதி யுத்தத்தில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் ஆங்கிலத்தில் CLUSTER BOMBS என்றழைக்கப்படுகிற – க்ளாஸ்டர் குண்டுகள் இலங்கை அரசினால் மிக அதிகமாக தமிழ் இனப்படு கொலைகளை நடத்திட பயன்படுத்தப்பட்டது. ஒரு உலோக உறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற சிறுசிறு குண்டுகளைக் கொண்ட முறையில் வடிவமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் வெடித்துச்சிதறி மழைபோல பொழிந்து பல திசைகளிலும் தாக்கி துளைக்கும் தன்மையினைக் கொண்டது. கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டது.
29 ஜனவரி முதல் 4 பிப்ரவரி வரையான ஒரு வார காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை தினமும் எம்.பி.ஆர்.எல்கள் மற்றும் கொத்துக் குண்டு, பிற ஆர்டிலறிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே காயப் பட்டிருந்த பல நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் கொல்லப்பட்டனர். அறுவைச் சிகிச்சை அரங்கும் கூட தாக்கப்பட்டது. பிப்ரவரி 4 – 2009 அன்று மருத்துவமனை தாக்கப்பட்ட போது 2 செஞ்சிலுவை சங்க பன்னாட்டு ஊழியர்கள் இறந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு பகுதியில் 2009 சித்திரை இரண்டாவது வாரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவி தமிழர்கள் நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதுடன் இருநூறுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும் இருந்தனர். காயமடைந்தவர்கள் மாத்தளன் மருத்துமனைக்கு கொண்டு செல்ல முடியாதவாறு மருத்துவமனை வீதியில் தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. காயமடைந்தவர்களை கடும் சிரமத்தின் மத்தியில் முல்லைத்தீவு பொது மருத்துவமனை சிகிச்சை நிலையத்துக்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கும் அனுப்பிக் கொண்டிருந்த போது பலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் உயிரிழந்தார்கள். இதேவேளையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் கூடுதலாக நடாத்தினார்கள்.
நாடுகளுக்கிடையில் நடைபெறும் போரில் கூட பயன்படுத்த தடைசெய்யப்பட்ட இந்த கொத்துக் குண்டுகளைத்தான் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் (NO FIRE ZONE) தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத் தக்கது அந்தவகையில் 21/04/2009 செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய படை நகர்வுக் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு மற்றும் உளநல மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
19-03-2009 அன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் சிறிலங்கா படையினர் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான வலைஞர்மடம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இரண்டு கைக்குழந்தைகளும் 12 சிறுவர்களும் உட்பட 38 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 90 பேர் காயமடைந்தனர். இதில் சோமசுந்தரம் றமணி, 16 ( தாக்குதல் நடைபெற்ற வேளை வயது 5) 19 மார்ச் 2009 இல் வலைஞர்மடத்தில் முதுகிலும் விலாவிற்கு அருகிலும் காயமடைந்தார். அமிர்தலிங்கம் சோமசுந்தரம், 49 ( றமணியின் தகப்பனார் ) வலைஞர்மடத்தில் வயிற்றிலும் கையிலும் காயமடைந்தார்.
மகாலிங்கம் அரச்சுனா 23 ( தாக்குதல் நடைபெற்ற வேளை அவருக்கு வயது 12 ) முள்ளிவாய்க்காலில் 12 மே 2009 இல் வலது பக்க விலா, வலது கன்னம் மற்றும் இடது கை ஆகியவற்றில் காயமடைந்தார். சத்திரசிகிச்சை மேற் கொள்ளப்பட்டு குண்டுச் சிதறல்கள் எடுக்கப்பட்டாலும் காயத்தின் பாதிப்புக்கள் தொடர்ந்தும் உள்ளன. போராளி சபாறட்ணம் ராஜேஸ்வரி வயது 39 முள்ளிவாய்க்காலில் 13 மே 2009 இல் கொத்துக்குண்டு தாக்குதலில் வலது பக்க மேல்தொடையில் காயமடைந்தார் பின்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அவரது வலது பக்க கால் அகற்றப் பட்டது. இன்று அவர் ஊன்றுகோலின் உதவியுடன் நடக்கின்றார்.
வைத்தியசேகரம் கோகிலா மே 10 2009 இல் அவர் முள்ளிவாய்க்காலில் ஒரு தாக்குதலில் காயமடைந்தார். இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக இடத்தில் வீதியோரமாக உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு இடத்திற்குச் செல்லும் போது நடைபெற்ற சம்பவத்தை நினைவுபடுத்துகின்றார். அவர் அந்த இடத்திற்கு அருகே இருந்த போது இடம்பெற்ற கொத்துக் குண்டு வெடிப்பில் அவர் காயமடைந்தார். 20 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள் மற்றும் 180 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு மேலாக கிபீர் போர் விமானம் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருந்ததை தான் கண்டதாகக் கோகிலா தெரிவித்தார்.
சிங்களப் படையினர் வீசிய கொத்துக் குண்டுகள் தொடர்சியாக வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றிட பலர் உடல் கருகி கொல்லப்பட்டார்கள். மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன. சிங்களப் படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த மாத்தளன் தொடக்கம் அம்பலவன், பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பகுதிகளில் ஏராளமான மக்களின் உடலங்கள் சிதறிக் கிடந்தது எனவும் பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே கொல்லப்பட்டார்கள் இதில் காயமடைந்தவர்கள் ஏராளமானோர் அந்த நேரத்தில் அதிகளவில் இறந்து கொண்டிருந்தார்கள். கொல்லப்பட்டவர்களை அங்கு புதைத்துவிட்டு படுகாயமடைந்தவர்களை முள்ளிவாய்கால், வலைஞர்மடம் பகுதி தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கிருந்த மருத்துவமனை மரண ஓலம் நிறைந்திருந்ததாக – இளங்கீரன் தெரிவித்தார். இதே போன்று பல சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா அவர்கள் கூறுகையில் வடக்கு கிழக்கில் யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அங்கு ஒரு மருத்துவராக பணியாற்றினேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த யுத்தத்தில் பெரும் துன்பப்பட்டதை நான் நேரடியாக பார்த்துள்ளேன்.மறக்க முடியாத ஆயிரக்கணக்கான பல சம்பவங்களில், என்னால் என்றைக்குமே ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு சம்பவம் உண்டு- அது கிளஸ்ரர் குண்டுடன் தொடர்புபட்டது.
கிளஸ்ரர் குண்டுகள் பற்றி மட்டுமன்றி ‘ வெள்ளை பொசுபரசு’ குண்டுகள் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருந்தோம். அத்தகைய ஒரு குண்டுதாக்குதல் பற்றி கேள்விப்பட்டு அந்த இடத்துக்கு நான் சென்று பார்த்தபோது அங்கு எரிந்த ‘தீ’ வழமைக்குமாறானதாக காணப்பட்டது. கரும்புகைக்கு பதிலாக வெள்ளை நிற புகை வெளிவந்தது. பின்னர் நான் மருத்துவமனைக்கு சென்றபோது நிலைமை மோசமாக இருந்தது. ஏராளமான மக்கள் காயமடைந்து அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
2009 ஜனவரி மாதம் நான் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது தான் முதன் முதலாக கிளஸ்ரர் குண்டு பற்றி கேள்விப்பட்டிருந்ததுடன் அவை காரணமான காயங்களைக் கண்டேன். அப்போது சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு மற்றும் ஐ. நா பணியாளர்கள் மருத்துவமனையில் இருந்தனர்.
காலில் ஆழமான காயத்துடன் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு ஒரு பெண் கொண்டுவரப்பட்டார். அவருக்கு 50 வயது இருக்கும். முழங்காலுக்கு கீழ் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவரது காலை அகற்றாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று நினைத்தோம். காயத்தை சுத்தம் செய்தபோது அவரது காலுக்குள் கொள்கலன் ஒன்றுக்குள் வெடிக்காத குண்டு ஒன்று உட்செருகி இருந்ததைக் கண்டோம்.
இது ஒரு கானின் அளவில் இருந்தது. இது வழமைக்கு மாறாக இருந்ததுடன் இதனை ‘கிளஸ்ரர்’ குண்டு என்று அறிந்துகொண்டோம். இது எமக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. சத்திரசிகிச்சை அறைக்குள் இது வெடித்து மருத்துவர்களையும் பணியாளர்களையும் கொல்லுமோ என்று பயந்தோம். மருத்துவ பணியாளர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் எப்படி இந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று ஆராய்ந்தோம். இந்த குண்டு வெடிக்காமல் எப்படி அதை வெளியே எடுக்கலாம் என்று எம்முள் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இந்த செய்தியை அறிந்த சிலர் மருத்துவமனையில் இருந்து ஏற்கனவே வெளியேறி இருந்தனர். விரைவாக ஒரு முடிவு எடுக்கப்படவேண்டி இருந்தது. இந்தப் பெண்ணின் காலை குண்டுடன் சேர்த்து அகற்றி அதனை மருத்துவமனையில் இருந்து முடிந்தளவு தூர இடத்துக்கு கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி எமக்கு தெரியவில்லை. இதனைத்தான் நாம் செய்தோம். வெட்டப்பட்ட அவரது கால் வாகனம் ஒன்றில் தூர இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பின்னர் பொதுமக்கள் மீது கிளஸ்ரர் குண்டுகள் போடப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது நாம் இரவு பகல் என்று நித்திரை முழித்து பணியாற்றிக்கொண்டிருந்த காலம். எனத் தனது பதிவை பதிவுசெய்திருந்தார் . பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு, அவ்விடங்களில் மக்கள் செறிவாக இருந்தவேளை பல தாக்குதலையும் நடத்தினார்கள். இவை அனைத்துமே இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்கள் ஆகும். தொடர்ந்து பாதுகாப்பு வலய மருத்துவமனைகளைக் குறிவைத்து கொத்துக் குண்டுகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. கொடிய யுத்தத்தில் விட்டுச் சென்ற வடுக்களையும் அதன் அடையாளங்களையுமே எம்மால் காணமுடிகிறது.
கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டு, படுகாயமடைந்த மக்கள் ஏராளம் ஏராளம். இன்றும் கொத்துக் குண்டுகளால் படுகாயமடைந்த பலர் இரத்த சாட்சியங்களாய் உள்ளார்கள். கொத்துக் குண்டுகள் – கிளஸ்ரர் குண்டுகள் நச்சு வாயுக்கள் என பல தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. மருத்துவமனைகள், முகாம்கள், பாடசாலைகள், பாதுகாப்பு வலயம் என அறிவித்த பகுதிகள் அனைத்தையும் தேடி தேடி இக் குண்டுகள் போடப்பட்டது. சிங்களத்தின் நோக்கமே தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும் என்பதே ஆகும் . கொத்துக் குண்டுகளால் இறுதிநாட்களில், இறந்தவர்களை புதைப்பதற்கு இடங்கள் இல்லை. இது ஒரு இலகுவான காரியம் இல்லை. மருத்துவமனையில் வீழ்ந்த கொத்துக் குண்டு எறிகணைகளில் மக்கள் செத்துக் கொண்டிருந்தார்கள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியை முன்பு பல தொண்டர்கள் இப் பணியினை செய்திருந்தாலும் இறுதியில் அது முடியாதகாரியமே. ஆனால் இறந்தவர்களை அவ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் இருந்த தமிழீழக் காவல்துறை மற்றும் தன்னார்வுத் தொண்டர்களும் ஈடுபட்டார்கள் . என்பதை இங்கே சுட்டிக்காட்டிட விரும்புகின்றேன்.
பேரழிவு ஆயுதமாக கருதப்படுவதால், கொத்துக் குண்டு (கிளஸ்டர் )குண்டுகளை உலகில் இருந்தே நாடுகளுக்கிடையிலான போர்களின் போதும் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சர்வதேச உடன்பாடு ஒன்று 2010ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள 60 நாடுகள் இதில் ஒப்பமிட்டுள்ளன. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர்தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போதும், இலங்கை அதில் கையெழுத்திட வில்லை. கிளஸ்டர் குண்டுகளைத் தாம் பயன்படுத்த வில்லை என்று கூறும் அரசாங்கம், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது சந்தேகத்துக்குரியதே.
புதுக்குடியிருப்பில் 2012ம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு கொத்துக் குண்டு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலோகங்களாக விற்பதற்காக, வன்னியில் சிதறிக் கிடந்த குண்டுகளின் பாகங்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில்தான். அந்த வெடிவிபத்து ஏற்பட்டது. கிளஸ்டர் குண்டின் ஒரு பகுதியான சிறிய குண்டு ஒன்று வெடித்தே, சிறுவன் மரணமானதாக, ஐ.நா கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் தொழில் நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தான், முதல்முறையாக கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2011 – 2012 காலப் பகுதியில் ஆனையிறவிற்கு வடக்கே பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கிளஸ்டர் குண்டின் 42 பாகங்களைக் கண்டுபிடித்ததாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார். அரச பயங்கரவாதம் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தது. மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்திய விமானக் குண்டு வீச்சுகளையும், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், கொத்துக்குண்டு, பொஸ்பரஸ் குண்டு, எறிகணை, உந்துகணைத் தாக்குதல்கள் மட்டுமல்லாது கிபிர், மிக் போன்ற போர் விமானங்கள், எம்.ஐ.24 உலங்குவானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள்,கடற்படையினரின் பீரங்கி மற்றும் மோட்டார் உட்பட சிங்கள காலாட் படையினரின் நீண்ட தூரவீச்சுக்கொண்ட துப்பாக்கிகளாலும் சரமாரியான சிங்களப்படைகள் கண்மூடித்தனமான நேரடித் தாக்குதலையும் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் .
ஆசியா மற்றும் ஓசியானியாவின் பிராந்திய இயக்குனர் கார்டியன் நோதர், மேலதிக சான்றாக சுரங்க அமைப்புகளில் மற்றொரு முன்னாள் டி-சுரங்க அதிகாரி குழு Ex-workers at Mines Advisory Group (MAG), வன்னியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ ட்ரெஸ்ட் தொண்டு the Halo Trust and the Swiss Foundation for Mine Action (known by its French-language acronym FSD) நிறுவனத்தை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் நாளாந்த பத்திரிகையான த காடியன் தகவல் வெளியிட்டிருந்தது. மூன்று வேறுபட்ட டி-சுரங்க அணிகளின் முன்னாள் ஊழியர்களின் சாட்சியத்தின் போது கொத்துக் குண்டுகளை அடையாளம் காணப்பட்டதாகக் கூறியிருந்தார். .
2012 புதுக்குடியிருப்பு அருகில் உள்ள சுகந்திரபுரம் பாதுகாப்பு வலயம் என்ற பகுதியில் 2010 ல் கொத்துக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக வெடி குண்டுகள் அகற்றும் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி குண்டை தாங்கள் பகிரங்கப் படுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதை வெளியில் கூறினால் தமது உயிருக்கு ஆபத்து என்ற அச்சத்தில் இருந்ததாகக் அவர் கூறினார்.
ஐ. நா. வின் 2015 போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளித்திருந்த முன்னாள் சுரங்க அமைப்புகளில் அதிகாரி கார்டியன் நோதர், கார்டியன் (Guardian) பத்திரிகைக்கு கூறுகையில், கிளஸ்டர் குண்டுவீச்சு “பாதுகாப்பு வலயங்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்தவை. இது போர் நோக்கங்களை நிறைவேற்றக் கூடியது இல்லை. அது பொதுமக்களை குறிவைத்து அழிப்பதற்காகவே பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்றார்.
கார்டியன் உடனான தகவல் தொடர்புகளில், ஹலோ அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், , 2011- 2012 கொத்து வெடிகளை, ஆனையிறவிற்கு அருகில் உள்ள பச்சிளப்பள்ளிப் பகுதியைச் சுற்றியுள்ள பல தளங்களில், அதாவது, வன்னிப் பகுதியின் வடக்கே உள்ள இடங்களில் மொத்தமாக 42 கொத்துக் குண்டுகள் கண்டுபிடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதில் 2008 இறுதி மற்றும் 2009 முற்பகுதிகளின் போது நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பயன் படுத்தப்பட்ட இந்தக் குண்டுகளின் எச்சங்கள் பின்னர் அங்கு வெடியகற்றும் பணியில் ஈடுபட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்களும் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறியிருந்தனர். பலரின் காயங்களில் அதற்கான தடயங்கள் இருந்தன.விமானத்திலிருந்து வீசப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து பல சிறிய குண்டுகளாக வெடித்ததாகவும் தாமதித்து வெடித்ததாகவும் பலர் சாட்சியமளித்திருந்தனர்.சுண்டிக்குளம், சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கிளஸ்டர் குண்டுகளின் பாகங்கள் RBK500 AO25RT ரகத்தைச் சேர்ந்தவை என்று தெ கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது. இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது.
இதில் RBK500 என்பது கிளஸ்டர் குண்டின் தொர் இலக்கம். அதுபொதுப்பெயர். AO25RT என்பது கிளஸ்டர் குண்டுத் தொகுதியில் இருக்கும் குண்டுகளின் பெயர்.ஒரு RBK500 AO25RT ரக கிளஸ்டர் குண்டுக்குள் 108 சிறிய AO25RT குண்டுகள் இருக்கும். இவற்றைச் சாதாரண விமானத்திலிருந்து வீச முடியாது. அதிவேகத்தில் பறக்கும் ஜெட் போர் விமானங்களிலிருந்தே வீச முடியும்.வீசப்பட்ட குண்டு வானத்தில் வெடித்து பிரிந்து 108 இடங்களில் விழுந்து வெடிக்கும். இந்த AO25RT குண்டுகள் ஒவ்வொன்றினதும் எடை 25 கிலோ ஆகும். இவை வெடிக்கும் போது 30 மீற்றர் சுற்றளவுள்ள பிரதேசத்தில் இருப்பவர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது காயமடைவார்கள்.விமானப்படையிடமுள்ள மிக் 27 அல்லது எவ் – 7 போர் விமானங்களிலிருந்தே இவற்றை வீசியிருக்க முடியும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் விமானப்படையிடம் உள்ள ஏனைய விமானங்களால் இவற்றை வீச முடியாது.
வெடியகற்றும் பணியில் ஈடுபட்டவர்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் .
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2016 ம் ஆண்டு – 32 ஆவது கூட்டத்தொடரின் போது கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து சுயாதீனமானதும் பாரபட்சம் அற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையின் கொத்துக்குண்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது இலங்கைக்கு உள்ளே செயற்பாட்டாளர்களால் நடாத்தப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசஉண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஆரம்பக்கட்ட அறிக்கையாகும். INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT வடக்கில் போரில் தப்பிப்பிழைத்த 18 தமிழர்கள் பெப்ரவரி மற்றும் மார்ச் 2009 இல் கொத்துக்குண்டுகளால் ஏற்பட்ட தமது காயங்களை விபரிக்கின்றார்கள். தப்பிப்பிழைத்தவர்களின் காயங்கள் கொத்துக்குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டன என மருத்துவப் பதிவுகளில் அதிகாரிகள் குறிப்பிடுவதற்கு மறுத்து விட்டார்கள் என கிட்டத்தட்ட செவ்விகாணப்பட்ட அனைவருமே தெரிவித்தார்கள். தமது காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்ற உண்மை பற்றி அமைதியாக இருக்குமாறு அச்சுறுத்தப் படுவதாகவும் அவர்கள் விபரித்தார்கள்.
இலங்கை அரசாங்கத்தால் பரப்பப்பட்ட அச்சத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது காயங்கள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை வெளிப்படுத்துவதை தடுப்பதுடன் இழப்பீடுகள் எதுவும் இன்றி உடல் மற்றும் உளவலியுடன் வாழ்வதற்கு நிர்ப்பந்தித்துள்ளது’ என அவர்களது சொந்தப் பாதுகாப்பிற்காக பெயர்குறிப்பிடப்படமுடியாத இந்த அறிக்கையை எழுதிய இலங்கையின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இலங்கையின் வெளிப்படையான ஆரம்ப 01 மார்ச் 2018 அமுலுக்கு வந்தது 01 செப்டெம்பர் 2018அறிக்கை கொத்துக் குண்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் எவருமில்லை எனத் தெரிவிக்கிறது.
இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் உட்பட போர்களில் தப்பிய பலரின் வாக்குமூலங்களுக்கு எதிரானதாக உள்ளது. குறிப்பாக போருக்குப் பின்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் கொத்தணிக்குண்டுகளின் எச்சங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களையும் அரசாங்கம் மறுக்கின்றது என சா்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டத்தின் பணிப்பாளா் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் யுத்தக் குற்றத் தீர்ப்பாயம் ஒன்றை நடத்துவதற்கு 2010 இல் ஐ.நா பொதுச் செயலாளரின் நிபுணர்கள் குழு அறிக்கை 3 வந்தது. அடுத்ததாக ஐ நாஅலுவலகத்தின் மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இலங்கை பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கை – 4 , 2015 இல் வெளிவந்தது. அவர் 2015 ல் வெளியிடப்பட்ட ஐ. நா. அறிக்கையின் பரிந்துரைபடி, இலங்கை மற்றும் சர்வதேச சட்ட வல்லுனர்களை உள்ளடக்கியிருக்கும் ‘கலப்பு நீதிமன்றத்தில்’ அத்தகைய விசாரணையை நடத்துவதற்கான அழைப்புக்களை இலங்கை இதுவரை எதிர்த்து வந்துள்ளது. அதேவேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்களும் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாகக் கூறியிருந்தனர். பல காயங்களில் அதற்கான தடயங்கள் இருந்தன. விமானத்தில் இருந்தும், ஆட்டிலறிகளினால் வீசப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து பல சிறிய குண்டுகளாக வெடித்ததாகவும், தாமதித்து வெடித்ததாகவும் பலர் சாட்சியமளித்திருந்தனர். ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வந்துள்ளது.
தற்போதுள்ள நிலை என்ன வென்றால் இவ்வாறு இழைக்கப்பட்ட கொடூரங்கள், குற்றங்களுக்கு நீதியை வழங்குவதற்கும் இவை மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கும் நம்பகத்தன்மையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கமும் எடுக்குமா என்பதே ஆகும். ஆயுதப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் பற்றி பாரபட்சமற்ற ஒரு விசாரணையை மேற்கொள்ள இதுவரை இலங்கை மறுத்து ஆயுதப் போர் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பின்னரும் எந்தவிதமான நம்பத்தகுந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை .
தற்போதய அரசுக்குள் அரசில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோரால் வழி நடத்தப்பட்ட இந்த 2006-2009 யுத்தத்தில் சர்வதேச விதிமுறைகளை மீறி இந்தக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமையானது,போர்க்குற்றம் தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வேளையில் அதற்கு வலுச்சேர்க்கக் கூடிய கொத்துக் குண்டுப் பாவனை மற்றும் இரசாயன ஆயுதப் பாவனை என்பன தொடர்பில் வலுவான குரல்கள் சர்வதேச அரங்கில் எழுப்பப் படவேண்டும். காட்சிப் படுத்தல் நிகழ்வுகளில் இவை தொடர்பான ஆதாரங்கள் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த இனவழிப்புக்கான நீதி தேடலானது தமிழரின் உணர்வு வெளிப்பாடு என்ற வரையறைக்குள் மட்டுமே மட்டுப்படுத்த பட்டுவிடாது அனைத்து வழிகளிலும் அதற்கான முனைப்பை முன்னெடுக்க வேண்டும்.
உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளையும், கிளஸ்டர் குண்டுகளையும் கனரகத் தாக்குதலை நடத்தியதோடு, நச்சு வாயுத் தாக்குதல் மற்றும் பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதல் போன்றவற்றையும் மருத்துவமனை, பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இன அழிப்பு வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுதல், தடயவியல் ஆதாரங்களை கடந்த 11 ஆண்டுகளில் அழித்தல் ஆகியவை, சர்வதேச ஆய்வாளர்களும் தடயவியல் வல்லுனர்களும் வருங்கால போர்க் குற்ற விசாரணைப் பொறிமுறையில் சேர்க்கப்பட வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான வழியேற்படுத் திக்கொடுப்பதற்கான எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப் படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி திரும்பத்திரும்ப விடுக்கப்பட்ட அழைப்புகளைத் தொடர்ந்து சர்வதேச சமூகமானது போரில் தொடர்புபட்ட அனைத்து தரப்பினராலும் மீறப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் பற்றிய குற்றச்சாட்டுக்களை பற்றி விசாரிக்கும் பணியை மேற்கொள்ள எம் உறவுகளின் தியாகங்களை நினைந்து செய்வோமானால் மட்டுமே எமது எதிர் கால சந்ததிக்கு சுதந்திர தமிழீழத்தைப் பரிசளிக்க முடியும்.
படங்கள் (NO FIRE ZONE)
த. வி. பு
ஊடகப் பிரிவு
- நிலவன்