சுகந்திரபுரம் சுடுகாடாய் எரிந்து கொண்டிருந்தது எறிகணைகள் கண் மூடித்தனமாக விழுந்து வெடித்தது.
எரிபொருள் களஞ்சியங்கள் தீப்பற்றி எரிந்தது.அங்கு இயங்கிய எமது தற்காலிக மருத்துவ மனையும் இடம்பெயர்ந்து போவதற்காகன ஆயத்தங்கள் நடந்தன.
எனது குழந்தைகள் எனது அப்பாவுடனும்
எனது மாமாவின் வீட்டாரின்(மேஜர் அரி மாறனின் தாய் தந்தையுடன்) பாதுகாப்பிலும் இருக்கின்றனர்
நானும் அங்கு செல்கின்றேன் சுகந்திர புரம் பிரதான வீதி. பகுதியில் இருந்து சற்று உள்நோக்கி இருந்த எமது இருப்பிடத்தில் பிரசன்னா அண்ணாவின் மனைவியும் பிள்ளைகளும்
இருக்கின்றார்கள்.
தொடர் இடப்பெயர்வுகளால் அந்த காணியில் தறப்பாள் கொட்டில்களைப் போட்டுக் கொண்டிருந்த 10 மேற்பட்ட குடும்பங்கள் அரையும் குறையுமா தறப்பாள் கொட்டில்களை பிடுங்கி இடம்மாறிவிட்டதால்
அரை நாள் பொழுதில் இடம் காலியாகியது.
மக்கள் வள்ளிபுனம் பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்
நாங்கள் குழந்தைகளை வங்கருக்குள் இருத்தி விட்டு வாசலில் இருக்கின்றோம்
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க்க தொடங்க இனி இருக்க முடியாது ஆமி கிட்ட வந்திட்டான்
என்று ஊகிக்க முடிந்தாலும் தொடர்ந்து விழுந்து கொண்டே யிருந்த எறிகைணகள்
வெளியில் குழந்தைகளை அழைக்க அச்சமூட்டியது.
ஆளையாள் தெரியாத மம்மல் இருட்டில் எங்கு பார்த்தாலும் தீ பற்றி எரிந்து கொண்டேயிருந்தது.
அப்போது தோளில் தொங்கும் துப்பாக்கியுடன் எங்கள் முன் பிரசன்னா அண்ணா வந்து நின்றார்
பிரசன்னா அண்ணா வின் குழந்தைகள்
அவரின் குரலைக்கேட்டு “அப்பா என்றார்கள் குதுகலமாய். வங்கருக்க இருங்க” வரவேண்டாம் என்றார் .
அவரது மனைவி எதுவும் பேசாது மெளனமாய் இருந்தார்.
நானும் அப்படியே அவரையே பார்த்தேன் எதையாவது களநிலை சொல்வார் என்று ..
ஆனால் அவரிடம் சொல்வதற்கு அன்று நல்ல செய்தியில்லை….
“நின்ற நிலையிலையே கண்கள் கொப்பளிக்க ஏன் இன்னும் இருக்கிறிங்கள் வெளிக்கிட்டு போங்கோ என்றார்.
“ஆமி கிட்ட நிக்கிறான்”
இன்னும் ஒன்றையும் எனக்கும் அவரது மனைவிக்கும் தெளிவாக சொன்னார்.
“ஆமியிட்ட மட்டும் பிடிபட்டிராதையுங்கோ ஆமி யை கண்டாலும் ஓடுங்கோ” என்று அவசரமாக சொல்லிவிட்டு தன் கடமைக்கு திரும்பிவிட்டார்
நாங்களும் உடனடியாக கால்கள் போன திசையில் குழந்தைகளுடன் அவ்விடத்தைவிட்டு நடந்தோம்.
இது தான் நான் அவரைப்பார்த்த இறுதி நாளும் குரலும் இன்னும் அப்படியே ஈரமாய் அப்பிக் கிடக்கிறது
பிரசன்னா அண்ணா ஒரு உறவினராக இருந்தாலும்
போராட்ட களங்களில் தான் நான் அதிகமாக அறிந்திருக்கின்றேன்
அடிக்கடி அவரை சந்தித்துக் கொள்வது
நான் வேலை செய்த மருத்துவமனையிலும் மாவீர்துயிலும் இல்லத்திலும் தான் அதை விட களமுனையிலும்
அவரது திறமைகளை பார்த்து வியந்திருக்கின்றேன்.
ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும் வன்னேரியில் இயங்கிய நீலன் மருத்துவமனைக்கு அவரினது துறை சேர்ந்த காயமடைந்திருந்த போராளி ஒருவரை சந்திக்கவந்திருந்தார்.
அப்போது இரவு காயமடைந்து வந்த போராளிக்கு 0_ மைனஸ் குருதிவகை தேவைப்பட்டது .
எங்களிடம்
வாகன வசதியும் இருக்கவில்லை எங்களிடம் இருந்த இரு குருதி பைகளும் ஏற்றி முடிவதற்குள் இன்னுமொன்று வேணும் என்ன செய்வது என்று ஒவ்வொருவராகா தேடிக்கொண்டிருந்தேன் கடவுளைப்போல் பிரசன்னா அண்ணா
வந்து இறங்கினார்
ஓடிப்போய் நிலமை சொல்லி உதவிகேட்டேன் .பதில் கூட சொல்லாமல நின்ற இடத்திலிருந்து அண்மையில் இருந்த அவரது முகாங்களிற்கு தொடர்பு கொண்டு 0 மைனஸ் குருதியிருக்கிறார்களா என்று கேட்டு ஒருவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியபின் என்னிடம் வந்து சொன்னார் .(போராளிகளிற்கு முன்னரே குருதிவகை தெரியும்)
“நான் ஒரு ஒருவரை கொண்டுவாறன்” என்று வந்த வேலையை விட்டு திரும்பி சென்று அந்த போராளியை அழைத்து வந்தார்
இது அவரது பணி இல்லாவிட்டாலும் ஒவ்வொரு போராளின் உயிரின் பெறுமதி அறிந்தவர்.இப்படி காலம் தேவை அறிந்து பணி செய்பவன் போராளியாக தனித்துவம் அடைகின்றான்.
பல தடவைகள் விழுப்புண்ணடைந்து மீளக் களம் சென்ற வீரன்.
நெடிய உயரிய தோற்றமும் எப்போதும் குறு குறு என விழித்திருக்கும் புலணாய்வு கண்களும் தனியாக கம்பீரம் கொடுக்கும் .
எப்போதும் மரணத்திற்குள் வாழ்ந்தவன்
மரணம் அவனைக் கண்டு அஞ்சிய நாட்கள் பல உண்டு .
எப்போதும் எதையோ சாதிக்க துடிப்பவன்
பல்துறை ஆளுமையாளன்
போர்கலையில் மட்டுமன்று விளையாட்டிலும் சிறந்த வீரன்.
இவனைப்பற்றி வெளியில் தெரியாத பக்கங்கள் பல உள்ளன.
இவனின் இலட்சிய உறுதியின் சாட்சியாய் எமது தேசத்தையும் மக்களையும் காக்க முள்ளிவாய்க்காலில் காவியமானான்
இன்னும் தொடரும் நினைவுகள் ….
மிதயா கானவி
17.05.20
6 am