ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு காணாமல் போனோர் தொடர்பாக ஆராய விசேட குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காணாமல் போனதாக கூறப்படும் நபர் எங்காவது ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கூறப்படுமாயின் அந்த இடத்தில் தேடுதல் நடத்த அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை சம்பூரில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்த சுதந்திரத்தையும் அமைதியின் பெறுமதியையும் புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும்.
மக்களை தவறாக வழி நடத்தி கிடைத்த சமாதானத்தை பழுதாக்க அடிப்படைவாதிகள் முன்னெடுத்து வரும் சூழ்ச்சிகளை தோற்கடிக்க சகல மக்களும் ஒன்றிணைய வேண்டும்.
மேலும் காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டதன் பின்னர், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.
தெற்கில் போன்று வடக்கிலும் அபிவிருத்தியை தாமதிக்கவில்லை. கிடைத்துள்ள சுதந்திரத்தை பாதுகாத்து கொண்டு, தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கத்தை யதார்த்தமாக மாற்ற சகல அரசியல் தலைவர்களும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.