கேணல் ரமணனின் சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக இணைக்க நான் விரும்பினேன். ஆனால் மாவட்ட தேவை கருதி அங்கொரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராகத் தனித்துவமாகச் செயற்பட்டு வந்தார் என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்கா படையினருடைய நகர்வு ஒன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு அம்பாறை காடு, மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்ட நாள்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகவும் அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.
அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும், மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார்.
அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார்.
குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற்திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின.
கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக் களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும்.
தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான்.