மௌனன் யாத்ரீகா –தமிழ்க் கவிஞர்களிடத்தில் ‘லாபி’ செய்யும் கெட்டப் பழக்கம் அதிகம் இருப்பதாக உங்கள் நேர்காணல் ஒன்றின் வழி அறிய நேர்ந்தது. அதைக் குறித்து கொஞ்சம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
கடங்கநேரியான் பெருமாள்- கிசு கிசு மற்றும் சர்ச்சை களின் வழியாகவே இன்றைய நிலையை சேப்பியன்ஸ் இனம் அடைந்திருப்பதாக யுவால் நோவா ஹராரி சொல்கிறார்.குழுவாதத்திற்கும் சண்டை சர்ச்சரவுகளுக்கும் பேர் போனது தமிழ் இலக்கிய உலகம். ஒரு படைப்பு / படைப்பாளி பேசப்படுவதற்கு மத /சாதிய / இணங்கிப் போகும் தன்மை இங்கே பிரதானமாக இருக்கிறது. இது ஒரு படைப்பிற்கான விமர்சனக் கூட்டம் நடத்துவதிலிருந்து விருது வழங்கும் வரை வளர்ந்திருக்கிறது.
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன் மனுஷி பாரதிக்கு யுவபுரஷ்கார் விருதினை பிரபஞ்சன் பரிந்துரை செய்யாதிருந்தால் அவருக்கு அந்த விருது கிடைத்திருக்காது என்பதனை இலக்கியம் வாசிக்கும் / படைக்கும் அனைவரும் அறிவர். ( ஒருவேளை நீங்கள் முரண்பட்டால் அந்தப் படைப்பு எவ்விதத்தில் தகுதியானது எனச் சொன்னால் விவாதிக்க நானும் தயார் )
மௌனன் யாத்ரீகா – கவிதைத் திருட்டு, கதைத் திருட்டு போன்ற செய்திகள் தமிழ் கலை இலக்கியத்தில் தொடர்ந்து பெரிய பஞ்சாயத்தாகிக் கொண்டிருக்கின்றன. ஏன் இதெல்லாம் நடக்கிறது? சிந்தனை வற்றிப் போனவர்களின் கூட்டம் அதிகமாகி விட்டதா?
கடங்கநேரியான் பெருமாள்-நீங்கள் சொல்வது போல அப்படியான பெரிய பஞ்சாயத்து எதுவும் நிகழவில்லை. மனுஷ்யபுத்திரன் தன்னுடைய கவிதையினை திருடிவிட்டதாக தமிழ் மணவாளன் , பழனி பாரதி போன்றவர்கள் தனிப்பட்ட பேச்சில் சொல்லியிருக்கிறார்களே தவிர ஆவணப் படுத்தியது குறைவு.
என்னளவில் பிரபல தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் எனக்குமான வெகுஜன தொடர்பு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு. ஆகவே என்னுடைய கவிதையை மனுஷ்யபுத்திரன் திருடியதை எழுதித்தான் ஆக வேண்டும்.
மௌனன் யாத்ரீகா – எழுத்தைக் குறைத்துக் கொண்டீர்களோ அல்லது நிறுத்திக் கொண்டீர்களோ என்று நினைக்கும்படிக்கு புதிதாய் எதுவும் எழுதாமல் இருப்பதாகப் படுகிறது. அதே நேரத்தில் உங்கள் மூலம் விவாதத்திற்கான களம் அதிகரித்துக் கொண்டுமிருக்கிறது. இப்படி விவாதத்தைக் கிளப்பி விடுவதை ஒரு படைப்பாளனின் அடுத்தகட்ட பரிணாமமாக எடுத்துக் கொள்ளலாமா?
கடங்கநேரியான் பெருமாள்- எழுதுவதை நிறுத்தவில்லை . சூழ்நிலை சார்ந்து மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னதான் சமூகம் / இலக்கியம் சார்ந்து செயல்பட்டாலும் வீட்டிற்குள் நுழையும் போது அன்றைய நாளில் எவ்வளவு சம்பாதித்து வந்திருக்கிறேன் ‘ என்பதைத்தான் மனைவி பார்ப்பார். லட்சியவாதத்திற்கும் அதனையடைய போராடும் கலைஞனின் இயல்பு வாழ்விற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.
நான் என்னுடைய வேர்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எழுதுவதை விட செயல்பாடு மிக முக்கியம். நான் நேசித்த நிலத்தில் ஈனஸ்வரத்தில் அதனை ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறேன்.
விவாதத்தை துவக்க மீச்சிறு தீப்பொறி போதும் . அதற்கான தேவை இருக்கிறது தான். அதே நேரம் எல்லோரையும் பகைத்துக் கொண்டு உருவாக்கிய விவாதங்களில் கிடைத்தது என்ன ?..
நன்றி – முகநூல்
சக கவிஞர்- 24-கடங்கநேரியான்