இணையத்தில் பதில்களைத் தேடுவதன் மூலம் நம்முள் ஒரு மாயை உருவாகிறது.இது வெளிப்புற அறிவுடன்(out source) நம் சுயசிந்தனையை இணைக்கிறது.
ஒரு எளிய இணையத் தேடுதலில் நமது கேள்விகளுக்கான பதில்களை மீட்டெடுக்கக் கூகிளைப் பயன்படுத்திய பிறகு ஏதோ நாமே சொந்த முயற்சியில் கேள்விக்கான பதிலைக் கூறினோம் அல்லது கண்டடைந்தோம் என்ற அதிக நம்பிக்கை எழுகிறது.ஒரு வகையில் இந்த போக்கு எளிமையாக தென்பட்டாலும் அவற்றுள் உள்ளார்ந்த ஆபத்து என்ன என்பதையும் நான் உணரவேண்டும்.இது நம்முடைய அறியாமையின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இத்தகைய இணைய மாயையை நாம் நிறையக் காண்பதுண்டு.அந்த மாயை மக்கள் மனதில் அதிகமாக பரவி இருக்கிறது.பல கேள்விகளுக்குப் பதிலை இணையத்தில் தேடும் போது ,பல தரப்பட்ட பதில்கள் வரும்.அதில் எது சிறந்தது என மக்கள் சிந்திப்பதில்லை.வருகின்ற பதிலில் எது ,அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதோ.அதை வைத்துக் கொண்டு,தங்களுக்குள் ஒரு வித மாயை ஏற்படுத்தி கொள்கிறார்கள்.தாங்கள் தான் அறிவாளி என்ற எண்ணத்தில் அதீத நம்பிக்கையில் பல பேர் இருக்கிறார்கள்.இது நம் சுயசிந்தனை ,சுய அறிவை அழித்துவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
இந்த மாயை நம்மை ஒத்த எண்ணக் கருத்துடையவர்களாக மாற்றக் கூடும்.அது நமக்கு ஒரு பெரிய நம்பிக்கை தரக் கூடிய விசயம் என்று கருதினாலும்.அது ஒரு வகையில் நம் அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.ஒரு அறிவாற்றலின் சார்பு ஆகும், இதன் மூலம் எதையாவது திறமையற்றவர்கள் தங்களின் திறமையற்ற தன்மையை அடையாளம் காண முடியாது. இதனை உளவியலில் “Dunning-Kruger Effect” என்று கூறுவார்கள்.Dunning-Kruger Effect என்றால் அவர்கள் திறமையின்மையை அங்கீகரிக்கத் தவறியது மட்டுமல்லாமல், அவர்கள் உண்மையில் திறமையானவர்கள் என்ற நம்பிக்கையையும் அவர்கள் உணரக்கூடும்.
இன்றைய தொழில்நுட்பம் தகவல்களை நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக மாற்றி இருக்கிறது. இது தேடலின் தீவிரத்தை நம்மிடம் அதிகப்படுத்தி நம்முடைய “சுய அறிவு” மிகவும் பாதிப்புக்குள்ளாக்கவும்செய்கிறது.அது ஒருவரைச் சார்ந்துள்ள போக்கை நம்முள் ஏற்படுத்தும்.இது தொடர்ந்தால் மனதில் பல சிக்கல்கள் உண்டாக்கும்.இதனால் மக்கள் தங்கள் திறனை அடையத் தவறிவிடுகிறார்கள், ஏனெனில் நமது ஆற்றலும் பெரிய அளவில் சுருங்கி விடுகிறது.அறிவின் இந்த மாயை இணையத்தைத் தவிர வேறு பல தரப்பைச் சார்ந்தும் காணப்படலாம்.
நமது மனம் இணையத்தை ஒரு கூட்டாளியாகக் கருதி,அதனைச் சார்ந்து தொடர்கிறது.அது நாம் எப்படி வெளிப்புற அறிவை நம்பி இருக்கிறோம் என்பதனை ஒரு மாயையாகக் காட்டுகிறது.
இதற்கு முந்தைய காலத்தில் மக்கள் பல கோணங்களில் தகவல்களை அறிந்தார்கள். புத்தகம்,அந்த துறை சார்ந்த வல்லுநர்களின் பேச்சு,நண்பர்களுடன் உரையாடுவதின் மூலம் அறிந்து தெளிவு அடைந்தார்கள்.இப்போது,இணையம் நம்மை வழிநடத்திச் செல்வதால்,இணையத்தில் வழியே வரும் வெளிப்புற அறிவை மட்டுமே நம்பி .தங்களின் அறியாமை காட்டுகிறார்கள். எனவே,
இணைய மாயத்திலிருந்து நாம் வெளியே வர,நல்ல விவாதங்களும்,அறிவார்ந்த தெளிந்த தேடலும் மிகவும் அவசியம்.
தொடரும்……
இர.நவின் குமார்
27/05/2020
நன்றி – பாதசரம்