யாத்ரீகா :- தமிழின் தற்காலக் கவிதைகள் அதிகமும் கற்பனாவாதப் பண்பைக் கொண்டிருக்கின்றனவா? இல்லை தமிழின் பிரத்யேகமான பண்பான செவ்வியல் பண்பைக் கொண்டிருக்கின்றனவா?
மோகனரங்கன்:- மொழி என்பது அதைப் பேசும் ஒர் இனத்தின் கூட்டுநினைவு. அது மேற்புறத்தில் ஏராளமானஅலைகளையும் ஆழத்தில் ஏகாந்தமான அமைதியையும் ஒருங்கேக் கொண்டிருக்கும் எல்லையற்ற நீர்நிலையை ஒத்தது கற்பனாவாதப் பண்புடன் எழுதப்படும்கவிதைகளாகவே இருப்பினும், அவற்றின் ஒரு வரி தன் வீச்சால்மொழியின் நினைவிலி ஆழத்திற்கு நழுவுமானால், அக் கவிதை செவ்வியல் தன்மை கொண்டுவிடும். கற்பனாவாதமோ செவ்வியல்பாங்கோ இரண்டும் கவிதை எழுதுவதற்கான இருவகை உத்திகள் மாத்திரமே. அதைக் கொண்டு நாம் எழுதிச் சேர்ப்பது கவிதையாக எஞ்சி நிற்கிறதா என்பதே கவனிக்கப்பட வேண்டியது.
யாத்ரீகா :- அறம் சார்ந்த கவிதைகள் தொடக்கக் காலம் முதலே எழுதப்படுகின்றன. ஏன் அத்தகையகவிதைகளின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது?
மோகனரங்கன்:- ஒரு மொழி எவ்வாறு அதன் இலக்கணத்தை உதறிவிட்டு இயங்க முடியாதோ , அது போலவே அம்மொழியைப் பேசும் இனக்குழுவும் அதன் தொல்குடி நினைவுகளின்றும் உருவாகி வந்திருக்கும்விழுமியங்களை விலக்கிவைத்துவிட்டு வாழ இயலாது. சமூக அமைப்புகளின் நீதி வழங்கல் முறைகளில்குறைபாடுகளும் போதாமைகளும் இருக்கலாம். ஆனால் மொழிவழிப்பட்ட படைப்புகள் ஏதோவொருவகையில்நம்சமூகத்தின் தொகுப்புமனசாட்சியை முன்னிறுத்தியே எழுதப்படுவதால், எப்போதைக்குமான அறத்தை மறைத்துக்கொண்டு அவை அதிகமும் பேசவியலாது .
யாத்ரீகா :- நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்கள்? ( இது தடாலடியான கேள்வி இல்லை மற்றும் இதுஉங்களுக்கு கேட்கப்படுவதுபோல் நம் பலருக்கும் கேட்கப்படும் கேள்வி) கவிதை எழுதுவதால் உங்கள்வாழ்விலோ, சமூக அமைப்பிலோ மாற்றம் நிகழ்கிறதா? ‘மாற்றம் எதுவும் நிகழாவிட்டால் கவிதை எழுதக்கூடாதா’ என்று உங்களுக்கு பதில் கேள்வி எழலாம். இருந்தாலும் கேட்கிறேன். நீங்கள் ஏன் கவிதைஎழுதுகிறீர்கள்?
மோகனரங்கன்:- தொடர்ச்சியான வாசிப்பின் நீட்சியாகவே எழுதவும் தோன்றியது. எழுதுவதன் வழியாக என்குழப்பங்களையும் தத்தளிப்புகளையும் , ஒரளவிற்கு தடுமாறாமல் கடக்கமுடிகிறது. குறிப்பாக என்குற்றவுணர்வை சமாதானம் செய்ய அது பெரிதும் உதவுகிறது. எனக்காக எழுதியது பிறருக்கான ஒன்றாகவும் மாறும்போது கிடைக்கிற நிறைவு அலாதியானது . அதற்காகவும் எழுதுகிறேன்.
மெளனன் யாத்ரீகாவின் கேள்விகளுக்கான எனது பதில்கள்
சக கவிஞர்- 29.