தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்லியல் பொருட்களை பாதுகாப்பதற்கான பணியினை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா தனது முன்னாள் படைத்தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால் குணரட்னாவிடம் கையளித்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளரான குணரட்னா, ஒரு தமிழின விரோதியும், இனஅழிப்பு குற்றவாளியுமாவார். அதனை அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் உறுதிப்படுத்தியிருந்தன. நீதிக்குப் புறம்பாக பல ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்து ஒரு இனஅழிப்பை மேற்கொண்ட குற்றவாளி தற்போது தமிழ் இனத்தின் தொன்மை வாய்ந்த அடையாளங்களை அழிப்பதன் மூலம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் நோக்கத்தை முற்றாக நிறைவேற்ற முனைந்து நிற்கின்றார்.
முன்னர் இந்து காலாச்சார அமைப்பிடம் இருந்த தொல்லியல் பொருட்கள் மற்றும் வரலாற்று இடங்களின் பாதுகாப்பு பொறுப்பு பின்னர் சிறீலங்காவின் தெல்லியல் ஆய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் தமிழ் இனத்தின் வரலாற்று அடையாளங்கள் மறைக்கப்பட்டு பௌத்த சிங்கள வரலாற்று தொன்மைகள் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்டு அத்துமீறி உருவாக்கப்படும் பௌத்த ஆலயங்கள், சைவ மற்றும் கிறிஸ்த்தவ ஆலயங்களின் அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகள் என்பன ஒருபுறம் இடம்பெற்று வருவதுடன், சைவ ஆலயங்கள் மற்றும் தமிழ் மக்களின் தொன்மையான இடங்களை சிங்களவர்களின் அல்லது பௌத்தமதத்தின் அடையாளங்களாக மாற்றும் முயற்சிகள் என்பவற்றையும் சிறீலங்கா அரசு காலம் காலமாக முன்னெடுத்து வருகின்றது.
எனினும் 2009 ஆம் போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசின் இந்த செயற்பாடுகள் மேலும் விரைவாகவும், விரிவுபடுத்தப்பட்டும் வருகின்றது. அதாவது ஒரு இனத்தின் கலாச்சாரத்தையும், வரலாற்றையும் அழித்துவிட்டால் அந்த இனம் எதிர்காலத்தில் தானாக அழிந்துவிடும் என்ற வரலாற்றை சிறீலங்கா அரசு நன்கு உணர்ந்து செயற்பட்டு வருகின்றது.
கலாச்சாரமும், வரலாறும் தான் ஒரு இனத்தின் இருப்புக்கு முக்கியமானது. எனவே தான் சிங்கள மக்களும், உயர் பதவிகளில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளும் தங்களின் இல்லங்களில் தமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இனத்தின் வரலாற்று சின்னங்கள் என்பவற்றை பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
அதேசமயம், ஏனைய இனங்களின் வரலாற்று இடங்களை கைப்பற்றுவதனையும், அழிப்பதனையும் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். போரின் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் பல வரலாற்று இடங்களை சிங்கள அல்லது பௌத்தமதம் சார் இடங்களாக மாற்றியுள்ளது. அம்பாறையில் 246 இடங்களும், திருமலையில் 74 இடங்களும், மட்டக்களப்பில் 83 இடங்களும் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போதைய நியமனம் தமிழ் மக்களின் வரலாற்றுத் தொன்மையை முற்றாக அழிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது. எனவே இதனை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தென்மைவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் தமிழ் வாரலாற்றுத்துறை ஆய்வாளர்களும், தமிழ் பல்கலைக்கழகங்களும், தாயக மற்றும் புலம்பெயர் மக்களும் முன்வரவேண்டும்.
ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வரலாற்று சின்னங்கள், இடங்கள் தொடர்பான தரவுகளை திரட்டுதல், அவற்றை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்துதல், அதனை உறுதிப்படுத்துதல், தமிழ் இனத்தின் வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட நூல்களை பல மொழிகளில் மொழிபெயர்த்து உலக அரங்கில் அதனை வெளிக்கொண்டுவருதல், தாயகத்தில் உள்ள வரலாற்று சான்றுகளை பாதுகப்பதற்குரிய பொறிமுறைகளை உருவாக்குதல் போன்றவற்றை தமிழ் இனம் உடனடியாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டியது தற்போது அவசியமாகின்றது.