ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள்இ ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் கட்டுரைகளின் வாயிலாக தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகின்ற இவர், நடனம், நாடகம், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் புகைப்படம், ஆவணப்படம் முதலிய துறைகளிலும் மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்டவர். சமகாலத்தின் மிகவலிமையுடைய குரலாக கருதப்படுபவர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் மக்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் நேர்காணல்களின் ஊடாகவும் ஈழத்து மக்களின் உளவியல் நோக்கில்தனது குரலினை பதிவு செய்திருக்கின்றார்.
ஈழத்தில் 2006ஆம் ஆண்டின் சிறந்த ஆடல் செல்வன் என்னும் விருது இவருக்கு தமிழீழத் தேசியத் தலைவரினால் வழங்கப்பட்டிருந்தது.பரிசுகள் விருதுகள்,,பாராட்டுக்கள், கௌரவங்கள் என்றெல்லாம்,வருக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரங்கள் பல. அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்டு அமைதியாக தன்னியல்வு மாறாத கலைஞராகவும் ஊடகவியலாளராகவும் உள்ள யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான நிஜத்தடன் நிலவனுடன் ஒரு நேர்காணல்
கேள்வி :- உங்கள் பல்துறைசார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள் இளமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?
பதில் :- எனது வாழ்வும் வளர்ப்பும் பற்றித் தாராளமாகவே சொல்லலாம். கலையும் எழுத்தும் சார்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தேன். நாட்டு யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா என இலக்கியமும் கலையும் சார்ந்த ஒரு சூழலில் தான் நான் சிறு வயதில் வளர்ந்தேன். தாயகம் சிறுவர் இல்லத்தில் வளரும்போது அங்கிருந்த சூழல் பல்துறை சார்ந்த வீரர்களின் அனுபவங்களும் பயிற்சிகளும் பல்துறை சார் விடயங்களில் என்னை வளர்த்துக் கொள்ள வழி செய்தன.
எனது அதிகாலைகள் புலிகளின் குரல் வானொலியில் தான் விடிந்தன. மாவீரர் பாடல் இசையால் கவரப்பட்டு, சிறுவயதில் நடனம் நாடகம் என எனக்கிருந்த ஆர்வத்தில் வீதி நாடக அணியுடன்இணைந்து பயின்றேன். இவ்வாறு எனது பல்துறைசார் திறமைகள் வெளிப்பட்டதற்கான ஆரம்பச் சூழல் விடுதலைப் போரட்டத்தின் வீதி நாடகங்களாகத்தான் அமைந்திருந்தது.
கேள்வி :- நாடகத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள் எவை ?
பதில் :- 1992களில் நான் நாடகத்துறையிலும் விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களிலும் என்னையும் இணைத்து வீதி நாடகங்களைத்தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கிராமம்கிரமமாக சைக்கிளில் சென்று நடித்தது தான் எனக்கு அதிக பாடங்களைத் தந்தது என்று சொல்லலாம் . என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது பல களச்சமர் கதைகளைசொல்லிக்கொண்டு மூத்த பேராளிகள் வருவார்கள். இவைகளே எனது சிறு வயதில் இருந்து இன்று வரை அரங்கத்தினூடக எமது போராட்டத்தின் பதிவுகளை வெளிப்படுத்த முடியும் என்றநம்பிக்கையைத் தந்திருக்கிறன.
கேள்வி :- வீதி நாடகம் பற்றி சொல்ல முடியுமா ?
பதில் :- நான் பல வீதி நாடகத்தில் நேரடியாக வீதியில் இறங்கி எங்கள் செய்திகளைச் சனங்களுக்குச் சொல்லுவோம். அதை, நவீன முறையாகவோ, இசை வடிவாகவோ, ஆடல் பாடல் மூலமாகவோ, சிலைபோல் நிற்றல் , காட்சிப்படுத்தல் மூலமாகவோ நாங்கள் பல வடிவங்களினாலும் சொல்லியிருக்கின்றோம். அடிப்படைச் செய்தி என்னவென்றால், சனங்களுக்கு ஒரு விழிப்புணர்வை அல்லதுஎச்சரிக்கையைக் கொடுப்பதாகும். இதை நாங்கள் சந்திகள்,விளையாட்டு மைதானங்கள் எனச் சனங்கள் கூடும் இடங்களில் உணர்வு, உடல், மொழி என இலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் உரியசெய்தியினை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதாக அமைத்திருந்தோம்..
கேள்வி :- நீங்கள் எழுதவந்த பின்புலத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?
பதில் :- பாரம்பரியங்களும் பண்பாடுகளும் மாறாமல் இருந்த எனது போர் வாழ்வும் இடப்பெயர்வுகளும் உயிர்கள் மற்றும் உடமைகள் இழப்புக்கள், கல்வியின் இழப்பு என்பவற்றோடு என்னைச் சூழ்ந்த தனிமைஅச்சம்,கவலை, வீரம், கோபம் என என்னுள் எழுந்த உணர்வுகளில் இருந்தும் தப்பிப்பிழைத்த என் உள்ளக்கிடக்கைகளை பல புனைபெயர்களில் கவிதைஇ,கட்டுரை,நேர்காணல் என எழுத ஆரம்பித்தேன்.
ஒருவிதமான நெருக்கடி, வெறுமை போர் எம்மைச் சூழும் பொழுது எம்மவர்களின் தியாகங்களை வெளிப்படுத்திட கலை இலக்கியத்தின் மீதான தேடல் என் மனதில் உதித்தது. ஈழத்தின்போர்ச்சூழலில் வாழ்ந்து கொண்டு அந்த வாழ்வை அந்த மண்ணோடு மண்ணாக அனுபவித்து பதிவாக்கி எங்கள் தியாகங்களையும் போர் வாழ்வு விடுதலையினையும்ஆவணப்படுத்துவதற்காகவே எழுத்துத் துறையில் பிரவேசிக்க நேர்ந்தது.
கேள்வி :- உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்?
பதில் :- நான் முன்னர் கூறியதுபோல் தாயகம் சிறுவர் இல்லத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது கவிதை எனத் தெரியாது பல வசனங்கள் கொண்ட சிறிய பந்திகளை எனது பாடக் கொப்பியின் பின் பகுதியில் எழுதி மறைத்து வைத்திருக்கிற காலத்தில், நான் அன்பாக அண்ணா என்றழைக்கும் சாதா தாடி மதன் தர்மேந்திரா ஆகியோர் எனது கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்பியிருந்தார்கள் அந்தக்கவிதைகளும் பிரசுரமாயின.. பின்னர் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஊக்கம் தந்தார்கள்.
இரத்தமும் சதையுமாக எனது வாழ்வினைப் பதிவுசெய்த என் நாட்குறிப்பேடு காலப்போக்கில் பத்திரிகைசஞ்சிகை என கவிதைப் பயணம் ஆரம்பமாகியது. மக்களின் அடையாள அழிப்புகளும் , திறந்தவெளிச்சிறைச்சாலையில் வாழும் மக்களின் அச்சமும் காணா மல் ஆக்கப்பட்டு அறியப்படாதகொலைகளும் அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்து நின்று பின்னர் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும் புதையுண்டுபோன எம் சக தோழர் தோழியரின் வாழ்வும் விடுதலைப்பற்றுத்தியாகங்களும் போர் அவலம், மண்ணின் மகிமை ,சமூகப்பிரச்சனை மற்றும் பண்பாடு பற்றி எல்லாம் புதுக்கவிதைகளில் பல வருடங்களாக எழுதி வருகின்றேன். முதல் கவிதைதொகுதியானச(ன்)னத்தின் சுவடுகள் என்ற நூல் யுத்தம் பற்றியும் அதனால் அல்லல் படும் மக்கள் பற்றியுமே வெளிவந்திருக்கின்றது .
கேள்வி :-விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்த அளவில் இருந்துள்ளது?
பதில் :- எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்களுக்குள் வாழ்ந்தவன் என்ற வகையில் விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்கள் பங்காற்றி வந்தன என்பதை உறுதியாகச்சொல்வேன்! எல்லாக் கலைகளும் ஆக்கபூர்வமாக இன விடுதலை சமூகமாற்றம் விழிப்புணர்வு அரசியல் பிரச்சார என பல பரிமாணங்களைக் கொண்டு கலைப் படைப்புகள்மேலோங்கி இருந்திருக்கிறன. எல்லாக் கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கபட்டிருந்தன. இயல் இசை நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து பாட்டு என்று பார்த்தாலும்சரி, அரங்கு வலுவான கலையாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரியக்கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்துக்கையாளப்பட்டிருக்கின்றன. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், படங்கள் குறும்படங்கள் வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன. மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டு அதனூடாக மக்களை ஆற்றுப்படுத்துவதில் பெரும் பங்கினைக் கலைவடிவங்கள் கொண்டிருந்தன. இவைகள் அனைத்தும்பாரப்பரியம் கலாசாரம் என எமது பண்பாட்டு விழுமியங்களும் மக்களை நெறிப்படுத்தி இருக்கின்றன என்றே சொல்லமுடியும்
கேள்வி :- யுத்தத்தினால் மக்கள் எவ்வாறான அவலங்களை எதிர்கொள்கிறார்கள் ?
பதில் :- போர்க்கால வாழ்வில் அமிழ்ந்திருக்கும் அவலமும் அழிவும் நிறைந்த வாழ்வைப் பல ஆண்டு காலம் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், 2008 , 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் திட்டமிடப்பட்டுபோர் தவிர்ப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களில் தமிழினப்படுகொலைகளை முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி இருந்தார்கள். .
சிங்கள அரசு இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கான மக்களை ஈழ நிலத்தில் விதைத்தது . ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்திட்ட அந்த மகத்தான மனிதர்களின் உயிர் உறையும் கதைகள் ஏராளம் ஏராளம்.
இன்று எத்தனையோ பேர் எங்கள் தேசத்தின் இருட்டு மூலைகளுக்குள் முடமாகிப் போயிருக்கின்றார்கள். அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்தவர்கள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும்புதையுண்டுபோனார்கள். கைதானோர், சரணடைந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர், தடுப்பு சிறைவாழ்வு என உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடந்தேறி இருந்தது தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களைச் சுமந்தார்கள் – இன்னமும் சுமக்கிறார்கள்.
கேள்வி :- இவை பற்றி உங்கள் உணர்வுகள் எவ்வாறானவை?
பதில் :- எமது உரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணய உரிமைப்போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் எமது உரிமைப்போராட்டத்தில் நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றஒரு சிந்தனையை மட்டும் மனதில் சுமந்தவர்களாய் எதையும் எதிர்பார்க்காத மனிதர்களாய் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்தார்கள். போராளிகளின் தாக்குதல்களின்பின்னால் நிம்மதியை தேடுகிற வாழ்வுக்காக ஏங்குகிற உணர்வு இருக்கிறது.
சனங்களின் ஏக்கம் இருக்கிறது. வாழ்வுக்கான பெரும் கனவு இருக்கிறது. எங்களை அடிமையாக்கி எங்கள் வாழ்வை அழித்து வாழ்விடத்தை அழித்து மண்ணை அள்ளுகிற கனவுடன் இலங்கை அரசு இருக்கிறதால் இப்படியான பல உணர்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
கேள்வி :- போர்த்தவிர்ப்பு வலய மனிதநேயப் பணி பற்றிக் கூற முடியுமா ?
பதில் :- நிச்சயமாகக் கூற முடியும் ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயப் பகுதியில் நான் ஒரு மனிதநேயப் பணியாளர் பணியில் இருந்தேன். உண்மையில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயங்களிலேயே அரச படையினரின் அதிகளவிலான எறிகணை வீச்சுக்களும் விமானத் தாக்குதல்களும் இடம்பெற்றன.பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறியதும் இங்குதான்.
சிறிலங்கா அரசினால் முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயமாக உடையார்கட்டு சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பிரதேசங்கள் அடங்குகின . இந்தப் பிரதேசங்களில்படையினர் அகோரமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டனர். இவ்வாறு பல சம்பவங்களில் ஒரு விடயத்தினை பதிவு செய்கின்றேன்
சுதந்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் அரசசார்பற்ற நிறுவனத்தினர் வழங்கிக்கொண்டிருந்த உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கூடி நின்ற பல நூற்றுக்கணக்கான மக்களை இலக்குவைத்துப் படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் அவ்விடத்திலேயே கோரமாகப் பலியாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேபோல இரண்டாவது தடவையாக அரசு அறிவித்த போர்த்தவிர்ப்பு வலயமான மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கக்கூடிய தமிழினப் படுகொலையை அரச படையினர் மேற்கொண்டனர்.
பதுங்குழிகள் சவக்கிடங்குகளாகிட, பாதி முடியும் சிதறுண்ட உடலங்களை அள்ளிக்குவித்தும் அரை உயிருடன் அந்தரிக்கவிட்ட நிலைமையும் தண்ணீர் உணவு மருந்து என அடிப்படை வசதிகள் கூடஇல்லாது துடிதுடித்து வீழ்ந்தவர்களுடன் பயணித்த சாட்சிகளில் நானும் ஒருவன்
வாழ்நிலம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி ஒரு வாழ்க்கை. குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் எல்லோரதும் கனவையும் விடுதலை உணர்வையும் அழிக்கிறதிட்டத்துடன் போர் தந்த அவலங்களுக்குடன் இராணுவத்திடம் சரணடைந்தேன்.
கேள்வி :- போரின் பின்னர் சமூக பண்பாட்டு பொருளாதாரம் பற்றி உங்கள் கருத்து ?
பதில் :- நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்களைச் சிங்கள அரசு அழித்துவரும் சூழல் காணப்படுகின்றது. இன்றைய இன அழிப்பின் யுத்தமும், அதனால் ஏற்பட்டிருக்கின்ற இடம்பெயர்வுகளும் மக்களை பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அன்னியப் படுத்தியிருக்கின்றன அப்புறப்படுத்தியிருக்கின்றன. உள்ளூர் அறிவுத்திறனை கொண்ட ஒரு சமூக பொருளாதார கட்டமைப்புநோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாக பார்க்கிறோம். சமூக பண்பாட்டு பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம்இ எல்லாசமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.
எம் இனத்தின் கலை கலாசாரம் பண்பாட்டு பொருளாதாரம் என 2008/2009இல் ஏற்பட்ட பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் உளவியல் ரீதியாக மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு தனிநபர் சாதாரணமாகவே உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றமை நாம் அறிந்த உண்மை. அந்தவகையில் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட பல உடல் உளவியல் ரீதியானபின்னடைவுகள் எற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது சமூக பண்பாட்டு பொருளாதாரம் பற்றி பார்க்கும் போது பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது என்றுதான் கூறமுடியும்
தமது சொந்த இடங்களில் தத்தமது மத அனுஷ்டானங்களையும் அது சார்ந்த நிகழ்வுகளையும் முறையாகப் பின்பற்றி வந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் மத நெறிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாகக்காணப்படுகின்றனர். அது அவர்களுக்கு ஒரு வெறுமை உணர்வைக் கொடுப்பதும் உண்மையே.
நெறி பிறழ்வான பாலியல் நடத்தை, இளவயதுத் திருமணம்,ஆழமான காதல் உறவுகள், குடும்ப வன்முறைகள், வீட்டு வன்முறை, ஒருவர் பல திருமணங்களைச் செய்தல், பலருடன் இணைந்துவாழுதல், போதைப்பொருள், பாவனை பெற்றோர்களின் செயற்பாடுகளினால் சிறுவர்கள் பாதிப்படைதல், புதிய புதிய நோய்கள் உருவாகுதல், நபர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடு ஏற்படுதல், தீயபழக்க வழக்கங்கள் ஏற்படுதல் (களவு), பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை, சிறியவர்கள் பெரியோர்களை மதிக்காமை, நாளாந்த செயற்பாடுகளை ஒழுங்காக மேற்கொள்ளமுடியாமை, புதிய கலாசார முறைகள் உருவாகுதல், குடும்பம் சார் விடங்களில் இராணுவத்தின் தலையீடு,என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை வாழ்வாதரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஒரு அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுஎங்களை மிக ஆபத்தான ஒரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத்தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுவதற்கு, உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்தபோரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கிவாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத்தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழுகின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
கேள்வி :- இன்றைய நிலையில் பெண்கள் எத்தைகய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?
பதில் :- போரில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கிறார்கள். மிக்க உக்கிரமமான பாதிப்புக்களில் யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில் அவர்கள் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்புள்ளாகியும் கணவனை இராணுவத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டுத் தனித்து நின்று குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையைப் புரிந்துகொள்ளப் பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடததுவது என்பது பெண்களுக்கு எத்தைகயதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்க தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதைக் காணமுடிகிறது. இதுமட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.
போர்சார்ந்த நடவடிக்கையால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துள் வன்முறைக்குஉட்படுத்தப்படுவது என்கிற விஷயம் பேசாப்பொருளாக அல்லது மறந்து போகிற விடயமாக ஆகியிருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும், அது குறித்து ஒரு உரையாடல்முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும்.
ஒரு சமூக விடுதலை என்பது அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்கப்படவேண்டும்.ஒவ்வொன்றாக தனித்தனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில், இத்தகைய நிலைகள் என்பது சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும்,சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில், சமூகங்களால் புறத்திருந்தும்அகத்திருந்தும் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியது என்பதுதான் யதார்த்தமானதும் இயல்பானதும் பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்துச் செயற்படவேண்டியுள்ளது.
இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொண்டும், குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும், சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும்தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.
கேள்வி :- அரங்க செயற்பாட்டுகளின் முக்கியத்துவம் பற்றி உங்கள் கருத்து ?
பதில் :- எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச்சந்திப்ப, வீட்டு முற்றம், மரநிழல்களில் கூடிக்கதைக்கும் மரபு இருந்தது. இந்தச்சமயங்களில்பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும் இதலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி ஆராயும் நிலை இருந்தது. ஆனால் இன்று இனப்பிரச்சனையும் இராணுவ நடவடிக்கைகளும்கூர்மையடைந்துள்ள நிலையில் பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் போனது.
மக்களை ஒன்று சேர்க்கவும் தங்களுக்குள் உரையாடிகொள்ளவும் தங்களது தேவைகளை தாங்களே அறிந்துகொள்ளவும் அவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளைதீர்மானித்துக்கொள்ளவும்தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிபடுத்திக் கொண்டாடவும் தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும் படைப்பாற்றல்கள் வெளிபடவும்கூடியகல்வியை, சமூகத்தை, பண்பாட்டை அறிவுத்தளத்தை உருவாக்குவதனுடாக யதார்த்தின் குரூரத்தை விளங்கி கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியினைஅமைத்து இத்தகைய மாய வாழ்கையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, எங்களை நாங்கள் புரிந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தூண்டவல்ல அரங்குகளின் தேவைஅவசியமாகிறது. அப்பொழுதுதான் எமக்குப் பொருத்தமான மக்கள் மையப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும்பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும்அறிவுத்தளத்தில்நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்று அவசியத் தேவையான நிலை உள்ளது என்பது எனது கருத்து
கேள்வி :- இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றீர்களா ?
பதில் :- தமிழர்களுக்கு ஓர் நிரந்தரமான தீர்வு இப்போதுள்ள அரசியல் சூழலில் கிடைக்கும் என்று நான் நிச்சயமாக நம்பவில்லை. வெளிப்படையாகச் சொன்னால் நம்பிக்கை இல்லாத அரசியல்கள் தான்இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரசியலை முன்னெடுப்பவர்களால் தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் ஓர் தீர்வை ஏற்படுத்தித் தரமுடியாது. அப்படி ஓர் தீர்வைஏற்படுத்திக்கொடுத்தால் அது அவர்களுக்கான அரசியல் இருப்புகளை இருட்டடிப்பு செய்துவிடும் என்பதே உண்மையானது. இதனால் பாதிக்கப்படுவது அடக்கப்படும் அல்லது நசுக்கப்படும் எமது தேசிய இனம் தான். இத்தகைய நிலையில் இருப்பினைஉறிதிசெய்வதற்கு போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என் நாம் அனைவரும் ஒன்றினைந்து மேலும் வலியுறுத்த வேண்டும் .
கேள்வி :- அடுத்த கட்டமாக ஏதேனும் எழுத முயற்ச்சியில் ஈடுபடவுள்ளீர்களா?
பதில் :- மக்களின் அபிவிருத்தித்தேவையை பூர்த்திசெய்ய பற்றியும் போர் கால இலக்கியங்களையும் யுத்தத்தின் விழுமியங்களையும், அதனால் வருகின்ற சோகங்களையும், அது கூறும் இலட்சியத்தையும் எழுதுகிற சூழல் நேரம் இடம் என் உளநிலை என்பவைதான் அவற்றை தீர்மானக்கிறது. மனம் குழம்பாத சூழலில் ஒன்றிவிடத் துடிக்கிறது. நாங்கள் இயற்கையின் அசைவுகளைக் கண்டு எழுதுகிற சூழல் எங்கே இருக்கிறது நாம் இழந்து விட்ட தேசம் பற்றியும் மனிதப் பேரவலத்தின் போது அணுபவித்தவைகளையும் என் முன் நடந்தேறிய இணப்படுகொவையின் சாட்சியாக அதனுடன் வாழுகிறபோதுஅவற்றினையும் அதன் உளவியல் நிலைப்பாட்டினையும் பதிவு செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
வாழ்த்துகள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மாவீரர்கள் என்றும் துணையிருப்பார்கள் . இந்த நேர்காணலில் என்னுடன் இணைந்திருந்தமைக்கு மீண்டும் எனது நன்றிகள்
உங்களுக்கும் எனது நன்றிகள்
பதில் :- நிஜத்தடன் நிலவன்