சாவும் அவனும்
வரிகள் அமைக்க
வார்த்தை இல்லை
அவன் வீரம் உரைக்க
தமிழை விட வேறு
மொழியும் இல்லை
அவன் சாவுக்கே
சாவது எப்பிடி என்று
சொல்லி கொடுத்த
குருகுல ஆசான்
அதனால் தானோ
சாவும் அவனை காண
பயந்தொழிந்து கிடந்தது…
காவியம் எழுத விநாயகன்
தன் தந்தத்தை உடைத்தான்
இவன் போரோவியம் வரைய
சாவின் முள்ளந்தண்டை ஒடித்தான்
போராயுதம் தரித்து
காரிருள் சூழ்ந்த காட்டிடையே சாவின் வாசல் வரை
சாவினை தேடி அலைந்தான் அதனால் தான் என்னவோ
களத்திடை அவனை சந்திக்க முடியாது
சாவு பயந்தொழிந்தது கிடந்தது
சிகப்பு சேவலின் கூவலிலே
எங்கள் வைகறை விடியும் என்பான்
அந்த சேவல் உடலின் சிகப்பாய்
தன் குருதி கொடுத்து நின்றான்
குளிரந்த நிலவொளியிலே
தமிழீழம் பிறக்கும் என்பான்
அந்த நிலவொளிக்கு
சூரிய கதிராக ஒளி வெள்ளம் தந்தான் ஆனால்
சாவுக்கு மட்டும் அவன்
என்றும் சாவூட்டும்
சரித்திரமாகி நின்றான்.
அதனால் தானோ என்னவோ
சாவு ஓடி ஒழிந்து கொண்டது…
ஆனா இவன் குருதி குடிக்க
தருணம் வருமா என்று
ஏங்க தொடங்கி இருந்தது சாவு
பார்த்து பார்த்து அதன் விழிகள்
செத்து போய் கிடந்தன
சாவுக்கு உயிரூட்ட உலகமே
ஓரணியானது
கொத்து கொத்தாய் அவன் முள்ளந்தண்டிடை கத்தி குத்துக்கள்
வெட்டிட முடியா முதிரை
மரமான உணர்வுகள் மீது
மூட்டப்பட்ட கரும் புகைத்தீ
அவனை கொஞ்சம் கொஞ்சமாய் தின்ன தொடங்கி
இருந்தது… ஆனாலும் அவன்
சாவினை கண்டு பயந்து ஒழியவில்லை….
அப்போதும் அவன் உதடு
ஒலித்து ஓய்ந்தது
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்…
கவிமகன்.இ
19.05.2015