சிறிலங்கா பௌத்த சிங்கள அரச படைகளும், சர்வதேச நாடுகளும் 2006-2009 காலப் பகுதிகளில் வன்னியில் இனப்படுகொலைப் போரை நடத்தினார்கள். தீவிரமான இனப்படுகொலைப் போரின் விளைவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த 330,000 க்கும் அதிகமான மக்கள் மிகவும் குறுகிய கடலோரப் பகுதியில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட பிரதேசம். மாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நீண்டு கொண்டிருக்கும் இந்த கடலோரப் பகுதி மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக இருக்கின்ற பகுதி .இதனை இலங்கை அரசு போர் தவிர்ப்பு ,பாதுகாப்பு வலயம் என அறிவித்திருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை என பாதுகாப்பு வலயப் பகுதிகளை குறிவைத்து சிறிலங்கா படையினர் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளையும், கிளஸ்டர் குண்டுகளையும் கனரகத் தாக்குதலை நடத்தியதோடு, நச்சு வாயுத் தாக்குதல் மற்றும் பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதல் போன்ற அகோர எறிகணைத் தாக்குதல்களை மருத்துவமனை, பாதுகாப்பு வலயப் பகுதிகளில் அதிகமாக நடாத்தியிருந்தார்கள்.
இடப்பெயர்வையும் படுகொலைகளையும் நித்தம் எதிர்கொண்டு வன்னியில் வாழும் மக்களின் உளவியல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கத்தை மதிப்பிடுவதும் போர்க்காலச் சூழலில் வெளிப்படுத்துவதும் மிகவும் சவாலான பணியாகும். பாரிய இராணுவ நடவடிக்கைகளும் தொடர்ச்சியான விமான, பல்குழல் கொத்துக் குண்டுகளின் தாக்குதல்களால் இறுதிப்பகுதியில் பல குடும்பங்கள் ஒன்று அல்லது ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்கமுடியாதவை.
மனித வாழ்வின் அன்புக்குரியவர்களின் இழப்பும் இறந்த தம் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை புதைக்கக்கூட முடியாத நிலையில் இறந்த உடலங்களை வீதியிலேயே விட்டுவிட்டு கனத்த மனதுடன் நகர்ந்து போன நிலையும்; நாங்கள் பட்ட துன்பங்களையும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களாய் எம்முள் பலருக்கு அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. வடக்கு கிழக்கு மக்களிடத்தில் அன்புக்குரிய ஒருவரை இழந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகின்றேன்.
யுத்தத்தில் ஒரு தாய் தன் மகனை மகளை இழப்பதாலும், ஒரு மனைவி கணவன் தம் துணையினைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது என்றால் மிகையில்லை. அந்தமரணம் நடந்த இடம் காலம் சூழல் ஒருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகவும் 1980ம் ஆண்டிற்கு பின்னர் திருமுறுகண்டி பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற 52 வயது நிறைந்த முத்துத்தம்பி நாகேஸ்வரன். கூறுகையில் 2009ம் ஆண்டு ஈழப்போர் நினைத்துப் பார்க்க முடியாத இடப்பெயர்வின் போது சொத்துக்களை உடைமைகளை விட்டு தப்பிப் பிழைத்து முறுகண்டியில் வட்டக்கச்சி, விசுவமடு, தருமபுரம் போன்ற பகுதிகளூடாக படிப்படியாக இடம்பெயர்ந்து கொத்துக் கொத்தாக ஒவ்வொரு எறிகணையிலும் சிதையுண்டு போன மரண அழுகுரல்கள் வீதியோரம் எறிகணைகள் விழுகின்ற சத்தங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரது அலறல்சத்தம் மக்களும் வாகனக் கூட்டங்கள் பிரதான வீதி எங்கும். நெரிசல் குறைவாக இருந்த குறுக்கு வீதியொன்றின் ஊடாக பயணிக்க தீர்மானித்தோம். அந்த குறுக்கு வீதியே மகனுக்கு ஜமனாக வந்தது ?
பிரதான வீதியில் நேராக ஒரு 40 மீற்றர் வரை முன்னால் சென்ற என் மூத்த மகனை அழைத்து இந்த குறுக்கு வீதியூடாக செல்வோம் எனக் கூறினேன் நிமிடங்களில் ஏவப்பட்ட எறிகணைகளில் ஒன்று துவிச்சக்கர வண்டியோடு அப்படியே நின்று என் மகன் முன்னேயே விழுந்து அவன் உடல் சிதைந்து என் செல்ல மகனின் உடல் செயல் இழந்து போய் விட்டதே என்பதை ஏற்றுக் கொள்ளவும் மனம் மறுத்தது. முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் எங்கள் கண்முன் துடிதுடித்து உயிர் துறந்தான்.
எங்களால் அந்தக் காட்சியை ஜீரணிக்கவே முடியவில்லை பிரதான வீதியோரம் சென்றிருந்தால் அவனின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. ‘நான் அவனைப் மீளக் கூப்பிட்டிருக்க கூடாது என்று மனைவி புலம்பி ரோட்டில் விழுந்து கதறி அழுதார் என்னாலும் பிள்ளைகளாலும் தாங்க முடியவில்லை. என் அன்பு மகனை காப்பாற்ற முடியவில்லை என்னுயிரே போனது போல இருந்தது.மனைவியையும் மற்ற பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னுடையது எனவே என்னை சுதாகரித்துக் கொண்டேன்.
எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்தன. நீண்ட நேரத்துக்கு பிறகு மனைவியை ஆறுதல் கூறி துணியொன்றை போட்டு புதைத்து விட்டு அங்கிருந்து புறப்படலானோம். பத்து மாதம் சுமந்த பெற்ற அன்னையால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை. எல்லா உறவுகளுக்கும் இதே நிலை என்பதை தெளிவுபடுத்தி அழுகையோடு ஒரு மாதிரியாக இரவு மாத்தளனை சென்றடைந்தோம். ‘ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். மகன் இல்லை என்று உணரக் கொஞ்சநேரம் ஆகும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் ஏப்ரல் மாதம் மாத்தளனில் படையினரின சுற்றிவளைப்பு அகோரத் தாக்குதல்களினால் பதுங்குகுழிகளில் இருந்து வெளியேற முடியாது அவதிப்பட்டோம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை. உணவுப்பொருட்களும் இல்லாத நிலையில்மக்களாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பிரவேசித்தோம். தவிர்க்க முடியாத சூழல் வேறு வழியில்லை நரியோட்டக்கடல் வழியாக கழுத்தளவு தண்ணீரில் நடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டை அடைந்தோம். அவ்வாறு செல்கையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூடுகளில் ஏராளமான மக்கள் தண்ணீருக்குள் தாரைதாரையாக விழுந்து இறந்து கொண்டிருந்தார்கள். ஒருவிதமான பயம் என்றாலும் ஒன்றுமே செய்யமுடியாத நிலை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பிரவேசித்தோம்.
எறிகணையால் மூத்த மகனைப் பறித்து மீளாத எமக்கு அடுத்த இடியும் காத்திருந்தது. இராணுவத்தினர் விசாரனை என இளையமகனை ஆக்கிரோசமாக எங்கள் கண்முன்னேயே தாக்கினார்கள். எங்களது மகனைப் போன்ற தமிழ் இளைஞர்கள் ஒருதொகுதியினர் அந்த பகுதியில் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். எங்கள் இதயம் ஸ்தம்பித்து குருதியை கண்கள் கக்கிக் கொண்டிருந்தன. (ஜயோ என கதறி அழத் தொடங்கிவிட்டார்…) பின்னர் அங்கு அமர்த்தப்பட்டிருந்த மக்களுக்கு முன்னிலையில் அவர்களை சிறிய விசாரனையின் பின்னர் விடுவதாகக் கூறி ஒரு பெரிய இராணுவ வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். கதறி அழுத மக்களை துப்பாக்கியை காட்டி கத்தி கதறினால் சுடுவோம் என்ற தொனியில் சிங்களத்தில் சொல்லவும் நாம் அவர்களின் கால்களைப் பிடித்து கதறி அழுதோம்.
பல்வேறு சோதனைகள் கெடுபிடிகளுக்குப் பிறகு அங்கிருந்து அருணாச்சலம் இடைத்தங்கல் முகாமிற்கு கொண்டுவரப்பட்டோம் முகாமில் இருக்கும் காலத்தில் நாங்கள் முறையிடாத இடங்களே இல்லை இரண்டு ஆண்பிள்ளைகளும் இல்லாத நிலையை எங்களால் தாங்க முடியவில்லை. அவர்களை வளர்ப்பதற்கு நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்போம் என்பதை அறியாதவர்கள் இலகுவாகப் பறித்துவிட்டார்கள். காணாமல் போன எங்கள் இளைய மகனின் தேசிய அடையாள அட்டை போன்ற அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருக்கின்றோம். சில வேளைகளில் தாயார் மகனின் படங்களைப் பார்த்து இன்றும் அழுது புலம்புவது தொடர்கிறது என்றார்.
யுத்தத்தின் பின் இடம்பெற்ற வாகன விபத்தில் தனது ஒரு கையையும் மனைவியின் ஒரு காலும் செயல் இழந்த நிலையில் இயலாமையால் தவிக்கும் இந்த தந்தை முறுகண்டி ஆலயம் அருகே சிறிய கச்சான் கடையொன்றை நடாத்துவதன் மூலம் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேற் கொள்கின்றார் பட்ட காலிலே படும் என்பது போல தனது மனைவிக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
சிறிலங்கா இராணுவத்தின் கொடுமைகளின் விளைவாக கடந்த பதினொரு ஆண்டுகளாக இரவில் படுக்கைக்காகச் செல்கின்ற போது அன்புக்குரியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை காணப்படுகிறது இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எங்களில் பலருக்கு ஆரம்பமாகிறது. தனது மூத்த மகன் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட இளைய மகன் இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அந்த வலிகளோடு வாழும் இந்த தந்தையின் ஒருவரின் மனக் குமுறல் இது.
இழப்பு என்பது நமது அன்பிற்குரிய ஓர் நபர் நம்மை இவ்வுலகில் உள்ள அனைத்து பந்தங்களில் இருந்தும் விட்டு பிரிந்து செல்லும் ஓர் நிகழ்வு இழப்பாகும். இழப்பினை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும் நிரந்தரம் (உயிரிழப்பு) தற்காலிகம் (அங்க இழப்பு) இவற்றில் ஒருவருடைய மரணத்தைப்பற்றிக் கேள்விப்பட்டால், இயல்பாகவே நாம் வருத்தமாக அல்லது சோகமாக உணர்வோம். மக்கள் பலவிதமான அடையாள இழப்புகளை எண்ணியும் துக்கப்படுகிறார்கள். கணவனை மனைவியை மகனை மகளை இழந்துள்ளனர். அவர்களின் நாளாந்த துயரங்களால் நடைபிணமாகக் காணப்படுகின்றனர்.
மரணத்தை அறிந்த பின் முதன்முதலில் ஏற்படுவது மனஅதிர்ச்சி. கூடவே மனம் மரத்துப் போகிறது (Shock and Numbness). மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை உள்ளம் நம்ப மறுக்கிறது. ‘இது உண்மை இல்லை’ என்றுதோன்றுகிறது. மரணமானது திடீரென்று நிகழ்ந்ததால் அதை எதிர்கொள்ள முடியாமல் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றார்கள். நெருங்கிய ஒருவரின் மரணத்துக்குப் பின் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்குகளைப் பட்டியலிடுவது கடினம்.
உடல் அறிகுறிகளாக தலையிடி, நெஞ்சுநோ, நெஞ்சுகுத்து, வயிற்றுவலி, வயிற்றுநோ, கை கால் உலைவு, நித்திரைக் குழப்பம், மாதவிடாய் சிக்கல், அதிக விந்து வெளியேற்றம், வியர்வை, பசி, வெள்ளைபடல், கருச்சிதைவு, கனவு, சக்தியற்ற நிலை, நாவரட்சி, வாய்புலம்பல் எனவும். உள நிலைப்பாட்டின் உணர்வாக தனிமை, கவலை, அச்சம், வெறுப்பு, கோபம், சோர்வு, பதட்டம், எரிச்சல், பழிவாங்கும் உணர்வு, விரக்தி, தற்கொலை எண்ணம், வெறுப்பு, ஏக்கம், ஏமாற்றம், இயலாமை, நம்பிக்கையின்மை, மனக்குழப்பம், மனச்சோர்வு. என்பனவும் காணப்படுகிறது.
இழப்பு கழிவிரக்கத்தின் விளைவுகளாக குழப்பநிலை ( confusion) இழவிரக்கம் (Grief) அறிமுகமற்ற நிலை (Disorientation) மறதி(Forgetfulness) நித்திரையின்மை Insomnia பசியின்மை ( Lose of Appetite) செவிப்புல, கற்புல மாயைகள் (Auditory, Visual, illumination) ஸ்தம்பித நிலை (Stunned ) மரத்துப்போதல் (Numbness) உணர்கின்ற துன்பம் கடுந்துயர் வலி அவர்களின் துயர்களை வார்த்தைகளினால் விளக்கிவிட முடியாது. ஆனாலும் இழப்புத் துயரத்தை (Grief) அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தவர்கள், அன்பார்ந்த ஒருவரை இழந்த பின்ஏற்படும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் விரிவாக உடல் உளம் சிந்தனை நடத்தை என விவரித்துள்ளார்கள்.
சிந்தனை எதிலும் அக்கறையற்ற நிலை, தற்கொலை எண்ணம், ஒரே விடயத்தை திரும்பத் திரும்ப சிந்தித்தல், சோகம் அல்லது மகிழ்ச்சியின்மை நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பது போலத் தோன்றும் வருத்தம், எதிர்கால நம்பிக்கை குறைவு, ஞாபகம் வைத்திருப்பதில் கஷ்டம், ஆழ்ந்த யோசனை, செவிமடுத்தல் மந்தம், நெஞ்சில் வேல்பாய்ந்ததுபோன்று உள்ளம் வலித்தல் இறந்தவரை ஏதாவது செய்து இதைத் தடுத்திருக்கலாம், ஏற்றுக்கொள்ளாமை, மாயப்புலனுணர்வு, ஈடுசெய்ய முடியாமை, அல்லது இந்த இறப்புக்கு நான் என்ற குற்றவுணர்ச்சி நிறுத்த முடியாத அழுகையை. இந்தக்கட்டத்தில் தன்னையே குறைகூறுவதும் (நான் மட்டும் அன்று அவர்கூடவே இருந்திருக்கலாம் கூடவே நானும் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கலாம், தன்நம்பிக்கையின்மை, அசட்டு நம்பிக்கை, படிப்பில்லாத நிலை, இறைநம்பிக்கை அதிகம்,- குறைவு, எதிர்கால சிந்தனை, மற்றவர்களைக் குற்றம்சாட்டும் கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது.
கோபம் அல்லது விரக்தி சில வேளைகளில் இறந்தவர் மீதே கடும் கோபம் கொள்வதும் உண்டு (இந்த மனுஷன் என்னைத் தனியேவிட்டுவிட்டுத் தான் போய்ச் சேர்ந்துவிட்டான்). இம்மாதிரியான எண்ணங்களால் குற்ற உணர்வுபெரிதாகி, அதை வெளியே சொல்வதற்குத் தயக்கத்துடன் ‘என்னை ஏமாற்றிவிட்டு அவர் இறந்துவிட்டார்’ என்று நினைக்கக்கூடும், அல்லது, திடீரென்று தான் கைவிடப்பட்டுவிட்டதால் அவர்கள் விரக்தியடையக் கூட்டும் நிலை யில் நடத்தையில் சக்தி குறைதல் செயல்பாடுகள் குறைதல், ஒரு வேளையில் தொடர்ந்து ஈடுபடுதல் கஷ்டம், எதிலும் விருப்பமற்ற நிலை, சாதாரண நடத்தையில் மாற்றம், மனதை ஒரு நிலைப்படுத்துவதில் கஷ்டம், சில சந்தர்ப்பங்களையும் இடங்களையும் தவிர்த்தல், மது பழக்கத்தை ஏற்படுத்தல், பழிவாங்குதல், ஒதுங்குதல், தன்னைத்தானே தாக்குதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய்புலம்புதல், தவிர்த்தல், மறந்த நிலை, சுயகவனிப்பின்மை, பொறுப்புக்களை தவிர்த்தல் எனவும் காணப்படுகிறது.
அடுத்ததாக, மெல்லமெல்ல உண்மை விளங்க ஆரம்பிக்கும்போது, கடும் மனவேதனை ஒருவரை ஆட்கொள்கிறது. இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்கமுடியாத ஒன்று. அழுகுரல்கள், மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை, நினைவுக்கோளாறு, கலைந்த கனவுகள் என பல அனுபவங்கள், சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர்அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை.
பழைய நினைவுகள் திரும்பி வருவதும், மீண்டு விடுபடுவதும் யுத்தத்தில் அன்புக்குரிய ஒருவரை இழந்துவிட்டோம் என்று புரிந்துகொள்ளாதவர்களுக்கு ஏற்படுகின்ற வேதனையோ, அதைப் புரிந்துகொண்டவர்களின் வேதனையைவிடக் கொடுமையானது. இழந்தவரின் நினைவு மனதை விட்டு நீங்குவதே இல்லை. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் வருடங்களும் ஆகலாம்.
நன்கு பழகிய அல்லது நெருக்கமான ஒருவருடைய மரணத்தைச் சந்திக்கிறவர்கள் ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பலதரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இவை குறிப்பிட்ட எந்த ஒழுங்குமின்றி மனதைவியாபிப்பதுதான் இழப்புத் துயரத்தின் தன்மைதனை அனுபவிக்கிறார்கள். சில நேரங்களில், மரணமடைந்தவரைச் சார்ந்திருக்கக்கூடியவர்களும் இவ்வாறு உணர்வார்கள், தாங்கள் இனி யாரிடம் உதவிகேட்பது என்று திகைப்புடன் வாழ்கிறார்கள்.
இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஒருவரது மரணத்துக்குப் பின் நடத்தப்படும் இறப்புச் சடங்குகள்சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபட்டாலும், இவை இழப்புத் துயரத்தைக் குறைப்பதில் பெரும் பங்குவகிக்கின்றன. இழப்புத் துயரம் உடலையும் வெகுவாகப் பாதிக்கிறது. இவ்வாறாக ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பல தரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். மனைவியை இழந்த ஆண்களில் பலர் இதய நோய்களால்பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. சாதாரண இழப்புத் துயரத்தின்போது ஏற்படும் மனவேதனைக்கு மருந்துகள் தேவை இல்லை. காலம் தான் இவர்களுக்கு மருந்து. சிலர் தூக்க நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்துவதுண்டு சிலர் தமது உடல் நலத்தில் கேடுவிளைவிக்கும் மது மற்றும் போதைப் பொருட்களைப் பாவித்து மனதை மரத்துப்போகச் செய்வதுண்டு. இவை பயன் தருவதில்லை. சிகிச்சை ஏதும் இல்லாமலேயே ஓரிரு ஆண்டுகளில்சாதாரண இழப்புத் துயரம் தானாகக் குறையும். நெருக்கமானவர்களுடன், அல்லது மனநல ஆலோசகரை தங்களின் மனவேதனையைப் பகிர்ந்துகொள்வது இழப்புத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு உதவும். தொடர்ச்சியாக மீளமுடியாது துன்பத்தை எதிர்கொள்பவர்கள் மனநல மருத்துவரின் ஆலோசனைகளுடன் மருந்துகளை பயன்படுத்தல் வேண்டும்.
சில மரணங்கள் தீவிரமான இழப்புத் துயரத்தை உண்டாக்கலாம். தற்கொலைகள், அகால மரணங்கள்போன்றவை ஏற்படுத்தும் துயரம் கடுமையாகவும் நெடுங்காலம் நீடிப்பவையாகவும் அமையலாம். இது தீராத இழப்புத் துயரம் (Unresolved grief) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் தான் இழந்தவரைப் பற்றி பேசும்போது மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், அவர் இன்னும் அந்தத்துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம். பிள்ளையை இழந்த ஒருவருக்கு, அல்லது வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவருக்கு இழப்புத் துயரம் ஓரிரு ஆண்டுகள்வரை நீடிக்கும். பின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இறந்தவரின் நினைவு, நிழல்போல நெடுங்காலம் தொடரும். இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர் அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை. இறந்தவரின் சடலத்தைக் காணக் கிடைக்காதபோது ஏற்படும் துயரம் இவ்வகையைச் சேர்ந்தது. இறந்தவர் ஒருநாள் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், இவர்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். அவர் திரும்பி வருவதுசாத்தியமில்லை என்பது அடிமனதில் தெரிந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள். அன்புக்குரியவர் திரும்பிவரவே மாட்டார் என யுத்த முனையிலிருந்து கிடைக்கும் துயரமான செய்தியால் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து காலம் முழுவதும் விடுபடவே முடியாது. இவர்கள் யதார்த்தங்கள் மரணித்துவிட்ட இருள் சூழ்ந்த ஓர் உலகிலேயே வாழ்கின்றனர். இவர்களைப் பொறுத்தமட்டில் தினசரி ஒரு மனோ அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றார்கள்
அன்புக்குரியவரின் இறந்த உடல் காணக் கிடைக்காது பிற இடங்களிலும் மக்கள் கூட்டங்களிலும் இறந்தவரைத் தேடும் பலர் உளப் பாதிப்புகள் தொடர்பாகவும் விளக்குகின்றார். அத்துடன் இறந்தவர் உயிருடன் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டிருப்பதுடன், அவர்களது உருவங்கள் தெரிவது போலவும் அவர்களுடன் உரையாடுவதைப் போலவும் தோற்றப்பாடுகள் ஏற்படலாம். அவர்களுடைய நினைவுகளில் மனதைப் பறிகொடுத்த நிலையிலே காணப்படுவர். பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக எவரையும் தன் மகனின் அறைக்குள்போக அனுமதிக்காமல், அந்த அறையைப் பழசு போலவே வைத்திருந்தார் இழப்பினைத் தொடர்ந்து மனநெருக்கீடு ஏற்பட்டு அது கவலையாகவும் கண்ணீராகவும் வெளிப்படுகிறது. அனர்த்தங்களினால் வாழ்வின் நெருக்கீடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் நடைபெற்றஉள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேருக்கு மேல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான். வாழ்க்கையைத் தொடர்வதற்கு தமது அன்புக்குரியவர்கள் பற்றிய சிந்தனையில் அவர்கள் உணவு உண்டார்களா? அல்லது அவர்கள் சரியாக கவனிக்கப்படுகின்றார்களா? நாளாந்தம் எத்தனை கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ என கவலைப்படுகின்றனர். இம் மக்கள் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் காணப்படுகின்றனர்.
சமய கலாசாரச் சடங்குகளைப் பின்பற்றுவதால் அவருக்கு ஆறுதல் உணர்வு கிடைக்கிறது, இது அவருடைய மனநலத்தில் ஒரு நேர்விதமான தாக்கத்தைக்கொண்டுள்ளது. இத்தகைய இழப்பின் ஆன்மீகப் பொருளைப்பற்றியும் ஒருவர் சிந்திக்கலாம். சில நேரங்களில், ஆன்மீகத்தின்மூலம் ஒருவரால் அந்த நிகழ்வை அல்லது இழப்பைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இந்துமத மரணச் சடங்குக் கிரியைகள் ஒழுங்கு முறையாக செய்பவர்கள் அதனை செய்யாதவர்களை விட விரைவாக மரணத்துயரிலிருந்து மீண்டெழுகின்றனர். சமூக கூட்டிணைவு, ஆதரவு என்பன மரணத் துயரினைக் குறைக்கின்றது. இறுதி மரணக் கிரியைகளில் மனம் விட்டு அழுது புலம்பல் அவர்களின் மனப்பாரத்தினைக் குறைக்கும் அத்துடன் உடல், உள தூய்மையை ஏற்படுத்துகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலையும் உயிர்கள் தமது வலிந்து காணாமல் உறவு உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதனை அறிய முடியாமையினால் ஈமச்சடங்குகள் மற்றும் கிரியைகள் மற்றும் இழவிரக்கத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு உறுதுணையாக உள்ளனவற்றை மேற்கொண்டு இழவிரக்கத்தைக் குறைக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இழப்பைப்பற்றியும் தான் அனுபவிக்கும் துக்கத்தைப்பற்றியும் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசுதல் . புகைப்படத் தொகுப்புகள் மற்றும் வீடியோக்களைக்கொண்டு, அவருடன் செலவிட்ட நல்ல நினைவுகளை எண்ணிப்பார்ப்பது: இதன்மூலம் அவருடைய நினைவுகள் மீண்டும் எழும்; அவரோடு தொடர்புடைய உணர்வுகளுக்குப் படிப்படியாக இவர் தன்னைத் தயார்செய்துகொள்ள உதவும். துக்கத்தை அனுபவிக்கிறவர்கள் தங்கள் எண்ணங்களை எழுதிவைப்பது உதவும். தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும்வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.
அன்புக்குரிய ஒருவருடைய மரணத்தைச் சமாளிப்பதற்குச் சில வழிகள் நாம் கையாள வேண்டும். உளப் பேரதிர்வு, சிக்கலான அவசர நிலை, மனநலமும் சமூக ஆதரவும், நெருக்கீட்டினை எதிர்கொள்ளல், தீவிர நெருக்கீட்டு எதிர்தாக்கம், நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய், இழவிரக்கம், மெய்ப்பாடு, பதகளிப்பு, மனச்சோர்வுடன் வாழும் மக்கள் நாளாந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எதிர்கொண்டு வாழ்கின்றார்கள். புலம்பெயர் சமூகமும் தாயக தலைமைகளும் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தவிர்த்து, ஒன்றுபட்ட மக்களின் உள ஆற்றப்படுத்தல் ஊடாக இலக்கு நோக்கி பயணிப்பதற்கான செயல்திட்டங்களை முன்னெடுத்தல் காலத்தின் கட்டாயமாகின்றது. இது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கும் ஆரோக்கிய வாழ்விற்கும் எமது சமூக இருப்பிற்கும் விடிவைத் தேடித் தரும்.
நிலவன் / நிக்சன் பாலா,
உளவளத்துணை,
மற்றும் உளச்சமூகப்பணியாளர்.