மௌனன் யாத்ரிகா- தமிழ்க் கவிதை, இயல்பில் இயற்கையை வசப்படுத்த உருவான ஒரு மந்திரத் தன்மையிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். யோசிக்கும்போது, அந்த மந்திரத் தன்மைதான் கவிதை மீது இத்தனை ஈர்ப்பை உண்டாக்குகிறதோ என்று தோன்றுகிறது. உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன்.
மௌனன் யாத்ரிகா – கேள்விகள்… ரமேஷ் பிரேதன்- பதில்கள்…
ரமேஷ் பிரேதன்- கோளகையில் உள்ள உயிரினங்களில் மொழிவழி தமது அறிவைத் தொகுத்துக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் ஓயாமல் புதுப்பித்துக் கொண்டும் இருப்பது மனிதவிலங்கு மட்டுமே. அம்மொழிவழி அது உருவாக்கிக்கொண்ட கலைப்படைப்புகளின் தொகுப்பை இலக்கியம் என்று பெயரிட்டுக்கொள்கிறோம். கலைவடிவங்களில் மொழியாலானதால் இலக்கியவடிவம் முழுமுற்றானப் பொருண்மையானது. எனவே, கவிதை உட்பட அனைத்தும் மாயம், மந்திரம் போன்ற அபெளதிகத்தன்மை அண்டாத பொருள்முதற்தன்மையது. சொற்களை உருக்கி வார்க்கும் தொழில்நுட்பம் ஒவ்வொருவரின் அறிதலுக்கேற்ப வளம்கூடும். தொழில்நுட்ப நேர்த்தியே உள்ள ஈர்ப்பை உண்டாக்குகிறது. இயற்கை, செயற்கை என்ற அறிவுத்தொகைமைப் பகுப்பை நாம் கடந்துவிட்டோம். உணவில் சைவம் என்பது தாவரவுண்ணிகளாகவும் அசைவம் என்பது புலாலுண்ணிகளாகவும் பிரிந்துநின்றாலும், எல்லா உணவும் இயற்கை விளைவேயாகும். அதுபோலவே எதிலும் இயற்கை, செயற்கை என்பது இல்லை. மனிதராலான எல்லாமே இயற்கைதான். பூமிக்கு வெளியிலிருந்து, ஐம்மூலகங்களுக்கு வெளியிலிருந்து மனிதரால் கவிதை உட்பட எந்தவொன்றையும் ஆக்கமுடியாது.
மௌனன் யாத்ரிகா- தமிழ்மொழி கவிதையால் வளர்ந்த மொழி. ஓசையும் பின்னணியும் ஆழமும் விரிவும் கொண்ட வடிவமாக கவிதை விளங்கிற்று. இன்று அந்த ஆஜானுபாகுவான தோற்றம் காணாமல் போய்க் கொண்டிருப்பதாகப் படுகிறது. நிச்சயம் மரபு கோளாறு இல்லை. வேறு எதனால் இந்த பாதிப்பு?
ரமேஷ் பிரேதன்- மெளனா, நீங்கள் எதைச் சொல்கிறீர் என்பதை உள்வாங்கிக்கொண்டேன். கவிதையால் மொழி வளர்வதில்லை; மொழியால்தான் கவிதை வளர்கிறது. மொழியின் ஒரு கூறு இலக்கியம், அவ்வளவே. மொழி என்பது பரந்துபட்ட அறிவுத்தொகைமைகளின் இயங்குத்தளம். மொழி, அனைவருக்குமானது; கவிதை உட்பட்ட கலை இலக்கியம் என்பவை பொதுவில் இருந்தாலும் அவற்றை அனைவரும் அறிவதில்லை. கவிதை உட்பட அனைத்து அறிவுத்துறைகளுக்கும் இது பொருந்தும். கடல்வாழ் உயிரினம்போல எண்ணிலடங்கா கவிகளைக் கொண்டது தமிழ்ச் செம்மொழி. பாரதிதாசனுக்கு மறுபிறவியில் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம்; ஆனால், எனது ஊரில் பாரதிதாசன்களின் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பவன் நான். தமிழ்மொழி கவிஞர்களின் பிராய்லர் கோழிப்பண்ணை. என்னையும் நான் கறிக்கோழியாகவே உணர்கிறேன். நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் ஏராளம்; இங்கு மயில் பண்ணைகள் இல்லை. இது மரபுக் கோளாறோ உயிர் மரபியல் கோளாறோ இல்லை; கருவில் குருதி ஊறுவதற்கு முன் மொழியூறியக் குடிவழி வந்தவர் நாம். ஒவ்வாதவையை உட்கொண்டால் உடம்பு தானே அதை வெளித்தள்ளிவிடும்; ஒரு மொழிக்கும் சமூகத்திற்கும் வரலாற்றிற்கும் இது பொருந்தும்.
மௌனன் யாத்ரிகா- பண்டைய மனிதனின் பாறை ஓவியத்தைப் பார்ப்பதைப்போல், காட்டின் மர்மத்துக்குள் நுழைவதைப்போல், கொலை விலங்கின் பால் சுரந்த மடிமீது வாய் வைத்து ஊட்டிக் கொள்வதைப்போல் கவிதையை அணுகும் ஒருவர் நீங்கள். இந்தக் குணாச்சாரம் இயல்பானதா? இல்லை, படிப்படியாக வளர்ந்த ஓர் அறிவு நிலையா?
ரமேஷ் பிரேதன்- உலக உயிரினத்தில் மனிதரைவிடப் பெரிய கொலை விலங்கு எது? அப்படியான ஒரு தாய் விலங்கின் காம்புகளைக் கவ்வி ஐந்து வயதுவரை, சுரப்படங்கிய பிறகும் பருகியவன் நான். அரசமரத்து அடிநிழலில் ஞானமுழுமையடைந்த சித்தர்களின் நிலத்தில் பிறந்த நான் பெண்களின் உடம்பாலும் உணர்வாலும் அறிவாலும் வளர்ந்து ஆளானவன். திருவள்ளுவரையும் திருமூலரையும் உள்வாங்கினால் தமிழ் அறிவு பொருண்மைப்படும். திருக்குறளின் கவிதையியல் ஒரு பெரும் புதிர்வட்டப்பாதை; இது லூயி போர்கஸ் அறியாதது.
நன்றி, முத்தம்.