கொல்லை தாண்டி
கடப்புக் கடந்து – தன்
பெருத்த வயிற்றின்
புளிச்சல் ஏவறையை -என்வீட்டு
தாயறை பார்த்து பரப்புகிறது
அந்த கள்ள உருவம்
இப்போது அதன் பெயரென்ன…
யோசித்துப் பார்க்கிறேன்
ம்கூம் .. தெரியவே இல்லை
ஒரு பெயரோடு மட்டும்
உலாவரும் எண்ணத்தில்
அதுவும் இல்லை
அடிக்கடி தன்பாட்டில் அது
பெயரை மாற்றிக்கொள்ளும்
முன்பு ‘தனிச் சிங்கள’ என்றது
பின்பு ‘ பௌத்த சிங்கள’ என்றது
கொஞ்ச நாட்கள் கடந்த பிறகு
‘ மத்திய மாநில’ என்றது
அதற்கும் பிறகு
“இல்லை இல்லை
‘ஒரே நாடு ஒரே தேசம்’ ”
என்றபடி வந்து நின்றது
இப்போது கொஞ்சம் முன்னம் தான்
‘ நல்லாட்சி ‘ என்று
முனகித்திரிந்தது
ஆனால் இன்று
கொடுப்புப் பல் தெரிய
சிரிக்க மட்டும் செய்கிறது
அந்த பெயரழிந்த உருவம்
என் வீட்டு வளையில்
‘சிங்க லே’யை கட்டியவன்..
நான் நட்ட கல்லை
காலால் உதைந்தவன்..
தன் துப்பாக்கிக்குண்டால்
தன்னையே சுட்டுவிட்டு
என்னை மாட்டிவிட ‘ஐடியா’ கொடுப்பவன்..
அத்தனை பேரும் – அதன்
பெருத்த வயிற்றின்
பின்வெளியில் தான்
ஒளிந்திருக்கிறான்
நாளை அது நிச்சயமென்
காலை வாரும்
இப்போதைய ஏவறை ஒன்றும்
அதன் நிறைவல்ல,
வெறும் தற்காலிகம் தான்.
என்ன செய்யலாம்
எல்லாவற்றையும் வென்றவன் யார்
தீவிர தேடுதலின்பின் விடை கிடைத்தது
கடவுள்
அவரே இப்போதுள்ள
ஒரே வழி
காப்பாற்றக்கோரி
கடவுளிடம் ஓடுகிறேன்
அந்தோ பரிதாபம் – அங்கே
‘காலில்’ உட்கார்ந்துகொண்டு-அதை
கெஞ்சிக்கொண்டிருக்கிறார் கடவுள்..!
கொஞ்சமும் கவலையே இல்லாமல்
அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறது
அந்த உருவம்..!!
-முகில்நிலா