இன்றைய சிறுவர்கள் நாளைய நாட்டை வழி நடத்தி ஆட்சி செய்பவர்கள். அதனால் தான் ஒவ்வொரு குழந்தையையும் நல்ல நிலையில் வளர்த்தெடுத்து இனத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தவிர்க்க முடியாத பொறுப்பாகின்றது. ஆதி முதல் இன்று வரை மனித சமுதாயம் சிறுவர் நலனில் அக்கறை செலுத்தி பாதுகாப்பான ஒளிமயமான சிறுவர் உலகத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியது சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதரதும் கடமையாகும்.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வன்முறைகளுக்கு ஆளாவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக யுனிசெப் அறிவித்துள்ளது. இலங்கையில் ஒவ்வொரு நாளும் மூன்று தொடக்கம் ஐந்து சிறுவர்கள் வரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய அறிவு ஒவ்வொரு தனி நபருக்கும் அவசியமாகவுள்ளது. சிறுவர்கள் என்றால் யார்? அவர்களின் உரிமை என்ன? துஷ்பிரயோகம் என்றால் என்ன? இடம் பெறுவதற்கான காரணங்கள் எவை? எவ்வாறு சிறுவர்களைப் பாதுகாக்க முடியும்? போன்ற அறிவுடன் கூடியதான விழிப்புணர்வு இன்று ஒவ்வொரு தனி நபருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
நாட்டில் நடைபெற்று வரும் சமூக, உளவியல் பிரச்சனைகளுக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும், போதைப்பொருள் பாவனைகளுக்கும், சகலவித துஸ்பிரயோகங்களிற்கும் காரணம் இளம் சமுதாயத்திற்கு உரிய உரிமைகளை அநுபவிக்க வழி செய்யாது அவர்களது உரிமைகளை மதிக்காது புறந்தள்ளியமையே ஆகும்.
மனித உரிமைகள் அனைத்தும் சிறுவர்களுக்கும் உரித்தானதாகும். சிறுவர் உரிமைகளிலிருந்தே மனித உரிமைகள் தோற்றம் பெற்றள்ளன. சிறுவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமான நிபந்தனைகளே சிறுவர் உரிமைகளாகும். அதாவது சமூகத்தில் சிறுவர்களுக்கு உரித்தாக வேண்டிய வரப்பிரசாதங்கள் சிறுவர் உரிமைகளாகும். பிரத்தியேகமான முறையில் சிறுவர்களுக்கேயுரியவை என்று சர்வதேச ரீதியாக ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் சிறுவர் உரிமைகளாகும்.
இலங்கையில் சிறுவர் தினம், ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வினையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்கள் அரும்பாடுபட்டு வருகிறது. உதாரணமாக யுனிசெப், யுனெஸ்கோ, சிறுவர் பாதுகாப்பு நிதியம் ,போன்ற பல அமைப்புக்கள் பல்வேறு செயற்றிட்டங்களை சிறுவர் நலன்களினைக் கருத்திற்கொண்டு அவர்களை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.
சிறுவர்கள் என்போர் இலங்கை சாசனப்படி 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவராவர். 1939 இன் சிறுவர் இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14வயதிற்குக் கீழ்ப்பட்டவர் என்றும் இளைஞர் 14-16 என்றும் வரையறுத்துள்ளது. 1989இன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவராவர். பொதுவாக 14 வயது வரை என ஏற்றுக் கொள்ளப்படுகிறது
சர்வதேச மட்டத்தில் 1989 நவம்பர் 20 ஆம் திகதி ஜக்கிய நாடுகள் பொதுச்சபை, சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. 1991 யூலை 7 ஆம் திகதி இலங்கை இச்சமவாயத்துக்கு உடன்பாட்டைத் தெரிவித்தது. இன்று வரை 192 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, கைச்சாத்திடப்பட்ட இந்த ஆவணமானது, முன்னொரு போதுமில்லாதவாறு சர்வதேச வாரியாகப் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஆவணமாகும்.
உரிமைகள் பற்றிய சமவாயம்
உறுப்புரை 19 – பெற்றோர்களினால் அல்லது ஏனையவர்களினால் உருவாக்கப்படக் கூடிய சகல வடிவங்களிலான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு மற்றும் சுரண்டிப் பிழைத்தல் போன்றவற்றிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரச தரப்பினரை சார்ந்திருப்பதுடன், இது சம்பந்தமாக தடுப்பு மற்றும் சிகிச்சையளித்தல் திட்டங்களையும் அரச தரப்பினர் மேற்கொள்ளல் வேண்டும்.
உறுப்புரை 27- ஒவ்வொரு பிள்ளையும் அதன் உடல், உள, ஆன்மீக, ஒழுக்க, சமூக மேம்பாட்டுக்கு ஏற்றவாறான வாழ்க்கைத் தரத்தினை அனுபவிக்கும் உரிமையுடையதென்பதை அரச தரப்பினர் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்
உறுப்புரை 34- விபச்சாரம், ஆபாசப் படத் தயாரிப்பு என்பன உள்ளடங்கலாக, பாலியல் ரீதியாக சுரண்டப்படல் மற்றும் துஷ்பிரயோகம் என்பவற்றிலிருந்து அரச தரப்பினர் பிள்ளையைக் காப்பாற்றுதல் வேண்டும்
உறுப்புரை 36- பிள்ளையின் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய மற்றொரு வகையான சுரண்டிப் பிழைக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் அரசு பிள்ளைகளைப் பாதுகாத்தல் வேண்டும்.
உறுப்புரை 39- எந்த வகையான புறக்கணிப்பு, சுரண்டல் அல்லது துஷ்பிரயோகம், சித்திரவதை அல்லது குருரமான, மனிதத் தன்மையற்ற அல்லது அவமதிக்கின்ற கண்டிப்பு அல்லது தண்டனை அல்லது ஆயுதப் பிணக்குகள் எவற்றினாலும் பாதிக்கப்பட்ட பிள்ளை, உடலாலும் உள்ளத்தாலும் குணமடைந்து, சமுதாயத்தில் மீளவும் இணைந்து கொள்ளச் செய்வதற்கு பெறுவதற்கு பொருத்தமான சகல நடவடிக்கைகளையும் அரச தரப்பினர் மேற்கொள்ள வேண்டும்.
சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சட்டங்கள்பெற்றோரின் உரிமைகளும் பொறுப்புகளும் உறுப்புரை 19- பிள்ளையின் அதியுயர் நலனுக்கு அவசியமெனத் தீர்மானிக்கப் பட்டாலன்றி, பெற்றோர்களுடன் வாழும் உரிமையும், பெற்றோர் இருவருடனும் தொடர்பைப் பேணிக் கொள்ளும் உரிமையும் உறுதிப் படுத்தப்படல் வேண்டும்.
உறுப்புரை 14- பிள்ளை தனது பரிணாம வளர்ச்சியின் ஆற்றலுக்கு ஏற்றவாறாக தனது உரிமைகளை ஆண்டு அனுபவிப்பதில் வழி காட்டுவதற்கு பெற்றோருக்கும், பொருத்தமான சந்தர்ப்பத்தில், அதன் சட்டப்படியான பாதுகாவலருக்கும் உள்ள உரிமைகளையும் கடமைகளையும் அரச தரப்பினர் மதித்தல் வேண்டும்.
உறுப்புரை 18-பிள்ளையை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர் இருவருக்கும் பொதுவான பொறுப்புகள் உண்டென்னும் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப் படுவதை அரச தரப்பினர் உறுதிப் படுத்துவதுடன், இப்பொறுப்பு சம்பந்தமாக பெற்றோர்களுக்கு அல்லது பாதுகாவலர்களுக்கு அரச தரப்பினர் உதவுதலும் வேண்டும்
உறுப்புரை 27 – பிள்ளையின் விருத்திக்கு அவசியமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் பிரதான கடப்பாடு பெற்றோர் அல்லது பிள்ளைக்குப் பொறுப்பாயிருக்கும் ஏனையோரின் சக்திக்கும் பண பலத்துக்கும் ஏற்றவாறு நிறைவேற்றப் படல் வேண்டும்
துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு என்பன தொடர்பான உறுப்புரைகளுக்கு சார்பாகவுள்ள ஏனைய உறுப்புரைகள்.
உறுப்புரை 12- பிள்ளையின் கருத்துக்கள் சீர் தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய அதன் உரிமை
உறுப்புரை 21- பிள்ளையைத் தத்தெடுக்கும் பணி பற்றிய கட்டுப்பாடு
உறுப்புரை 24- நோய்த்தடுப்பு மற்றும் சுகாதாரப் புனர்வாழ்வு வசதிகளை அனுபவிக்கும் உரிமை
உறுப்புரை 25- அரச தரப்பினரின் பராமரிப்பிலுள்ள போது சிகிச்சை மற்றும் தாபரிப்பு ஆகியன பற்றி அவ்வப்போது ஆராயப்படல்
உறுப்பரை 28- பாடசாலையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு நடைமுறைகள்
உறுப்புரை 32- பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்துக்கொள்ளல்
உறுப்புரை 35- பிள்ளைகளைக் கடத்தல், விற்பனை செய்தல், கடத்தி விற்றல் என்பவற்றைத் தடுத்தல்
உறுப்புரை 37 ரூ 40 – சிறுவர் நீதி பரிபாலனம்
சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சட்டங்கள்
அரசியலமைப்பின் 12 ஆவது உறுப்புரையும் இலங்கையைச் சேர்ந்த சகல பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக விசேட ஏற்பாட்டை வழங்குகிறது. இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக, தீங்கிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ள ஏனைய பல சட்டங்களும் உள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சட்டங்கள் என நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்த எத்தனையோ சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதும் அச்சட்டங்கள் எத்தகைய கடுமையையும் கொண்டிராத காரணத்தால் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கான விலை கொடுத்து வாங்கும் சந்தை கடையாக சமூகத்தின் அனைத்து உயர் நிறுவனங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இலங்கை ஐ.நா வெளியிட்ட (1989) சிறுவர் உரிமை பற்றிய சமவாயத்தை 1991 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அதில் கூறப்பட்ட 54 உறுப்புரைகளும் ஒரு சட்ட ஏற்பாடாகவே காணப்படுகின்றது தவிர அவை நடைமுறை பிரயோகத்தில் இலங்கையில் வெற்றியளிக்கவில்லை எனலாம்.
சிறுவர் மீதான சரீரத் தண்டனைகளும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக அவதானிக்க முடிகிறது. 1995ம் ஆண்டிற்குரிய இலங்கைச் சட்டக் கோவைத் திருத்தமானது சிறுவர்களைத் தண்டிப்பது தண்டனைக்குரிய குற்றம் என வலியுறுத்துகின்றது.
சிறுவர்கள் கல்வி பெறுவதற்கான உரிமை பற்றிய சரத்து 28,29 களில் கூறப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் சரத்து 32 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தம் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி என்பனவற்றின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாய் அமையக் கூடிய வேலைகளில் இருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைக்குண்டு.
சர்வதேச மட்டத்தில் 1989 நவம்பர் 20 ஆம் திகதி ஜக்கிய நாடுகள் பொதுச்சபை சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. 1991 யூலை 7 ஆம் திகதி இலங்கை இச்சமவாயத்துக்கு உடன்பாட்டைத் தெரிவித்தது. இலங்கை அரசு 1990ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி இப்பட்டயத்தை ஏற்றுக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. (Unicef Report. – 2007) இன்று வரை 192 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட, கைச்சாத்திடப்பட்ட இந்த ஆவணமானது, முன்னொரு போதுமில்லாதவாறு சர்வதேசவாரியாகப் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஆவணமாகும்.
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் சமூகங்கள் சிறுவர்களுக்குப் பொறுப்பாக இருக்கும் பல வழிகளையும் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது. இதன் பிரதான கருப் பொருளாக அமைந்திருப்பது பிள்ளையினது அதியுயர் நலன் ஆகும்.
உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பகுதியினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர். உலகளாவிய ரீதியில் நோக்கின், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள், உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு பகுதிகளில் சிறுவர்களுக்கு எதிராக துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்புணர்ச்சி, சிறுவர் தொழிலும் வேலைப்பளுவும், சிறுவர்களை கடத்துதல் மோசடிகள், உள ரீதியான பாதிப்புக்குள்ளாகுதல் என பல்வேறு வடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. மிக ஆரம்பத்தில் சிறுவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குபவர்களின் நடவடிக்கைகள் அவர்களின் அசட்டையான செயற்பாடுகளினால் சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் விருத்தி போன்றவற்றினை நேரடியாக அல்லது மறைமுகமாக பாதித்தலும் சிறுவர்கள் தேவையற்ற துன்பங்களுக்கும் உள்ளாகுதல் சிறுவர் துஸ்பிரயோகம் எனப்பட்டது.
மேலும் பரந்தளவிலான வரைவிலக்கணம் பின்வருமாறு வரையறுக்கிறது: தனிநபர்கள் நிறுவனங்கள் அல்லது பணிபுரியும் உத்தியோகஸ்தர்கள் போன்ற ஏதாவது ஓர் விடயம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுவர்களுக்கு தீங்கினை ஏற்படுத்துமாயின் அல்லது சிறுவர்களின் பாதுகாப்பு ஆரோக்கிய அபிவிருத்தி என்பவற்றை பாதிப்படைய செய்யுமாயின் அது சிறுவர் துஸ்பிரயோகம் எனப்பட்டது.
சிறுவர் துஸ்பிரயோகம் என்ற வார்த்தைக்குள் சிறுவர்களை கவனக்குறைவாக நடத்துதல், தேவையில்லாமல் கடிந்து கொள்ளுதல்.
சிறுவர் துஷ்பிரயோகம் உலகம் முழுவதிலுமே காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாக உள்ளது.சிறுவர்கள் மீதான வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும் இன்று, நேற்று தோன்றியவையல்ல, அவை நீண்ட காலமாகவும், சில திட்டமிட்ட வகையிலும் சிறுவர்கள் நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பானது சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது மோசமான நடத்தை ஆனது பௌதீக மற்றும் உணர்வுரீதியான நோய்களுக்கான மருத்துவம் பாலியல் துஷ்பிரயோகம் அலட்சியம் அல்லது அசட்டையான மருத்துவ முறை மற்றும் ஏனைய சுரண்டல்கள், சிறுவர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஏற்பட்ட பாதிப்பின் உண்மையான மறைமுகமான முடிவுகள் உயிர் வாழ்தல் பொறுப்பு வாய்ந்த உறவுமுறை என்ற விடயம் தொடர்பில் விருத்தி செய்தல் அல்லது கௌரவப்படுத்தல் போன்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2001 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சிறுவர்களைக் கடத்துதல், சிறுவர்களின் கல்வியைத் தடுத்தல் போன்றவற்றில் உலகம் முழுவதிலும் 40 மில்லியனுக்கும் கூடுதலான சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சித்திரவதை செய்தல், கொடூரமாக நடத்துதல், பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், ஆயுதங்களாலோ அல்லது உடற்பாகங்களினாலோ தாக்குதல், அவர்கள் சொல்வதை செவிமடுக்காமை, அத்தியாவசியமில்லாத உடற்தொடுகை, கல்விக்கு ஆதரவு வழங்காமை, பிச்சை எடுக்கும் படி பணித்தல்,ஆபாச படங்களை காட்டுதல், பார்க்கத்தூண்டுதல், அடிமையாக நடத்தல், கடத்திச் செல்லுதல், சிறுவர் தொழிலாளியாக்குதல், அவர்களின் உணர்வுகளை மதியாமை என அனைத்தும் உள்ளடங்குகின்றன
துஷ்பிரயோகமானது எவரையுமே பாதிக்காமல் விடுவதில்லை வன்செயல் மூலம் பிள்ளையொன்றுக்கு தீங்கிழைக்கப்படும் போது சிறுவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் அவர்களுடைய சமூகங்களைச் சேர்ந்த அனைவருமே பாதிக்கப்படுகின்றன.
இலங்கையில் சமீபகாலம் தொட்டு சிறுவர்கள் மீதான அளவு கடந்த துஷ்பிரயோகங்கள் அதிகமாக இடம் பெற்று வருவதனை அன்றாடம் ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் படுத்தல், பின்னர் கொலை செய்யப்படல். அச்சுறுத்தப்படல் மற்றும் சிறுவர் உரிமைகள் பல்வேறு வகைகளிலும் மீறப்படல் என்று கவலை தரும் விடயங்கள் தொடர்கதையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சிறுவர்கள் மீதான உடல், உள, பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், இன்று மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நாட்டின் நற்பெயருக்கும் பெரும் சவாலாக இருக்கின்றது. சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார சட்ட ரீதியான பல காரணங்களும் வேறுபல காரணங்களும் இருப்பதாக பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஒரு தடவை மட்டுமே இடம் பெறலாம் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தொடரலாம். உடல் ரீதியான துஷ்பிரயோகம் உள்ளடக்குவது உடல் ரீதியான துஷ்பிரயோகமென்பது, அதிகார பீடத்திலிருக்கும் அல்லது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும் நபரொருவர் வேண்டுமென்றே பிள்ளையொன்றுக்கு தீங்கிழைத்தல் அல்லது தீங்கிழைக்கப் போவதாக அச்சுறுத்துதல். வீட்டு முதலாளிகளின் தண்டனைகள், நெருப்பினால் சூடு, உணவின்றி பட்டினி போடல்,. பிள்ளையொன்றை அடித்தல், உலுக்குதல், எரிகாயத்தை ஏற்படுத்துதல், அறைதல் அல்லது உதைத்தலை உள்ளடக்க முடியும். உடல் ரீதியான துஷ்பிரயோகம் வழமையாக உடல் ரீதியான தண்டனையுடன் தொடர்புபட்டுள்ளது அல்லது நல்லொழுக் கத்தை நிலை நாட்டுவதிலிருந்தும் பிரித்தறியப்படாமலுள்ளது நல்லொழுக்கத்தை நிலை நாட்டுதலானது பிள்ளைக்கு தீங்கிழைக்கப் படுவதை உள்ளடக்கக் கூடாது.
உடல் சார்ந்த துஷ்பிரயோகத்தின் விளைவுகள் பல்வேறு வகையினவாகவும் சிக்கலானவையாகவும் இருக்க முடியும். துஷ்பிரயோகம் நடந்ததாக ஏற்றுக் கொள்வதற்கு உதவக்கூடிய முக்கிய காரணிகளாக வரலாறு கவனிப்பவர்களுக்கும் சிறுவர்களுக்குமிடையிலான இடைத்தொடர்பாடல் மற்றும் நடத்தைக் கோலங்கள் என்பன அமைகின்றன.
நாளாந்த செயற்பாடுகளின் போது விபத்துக்களைச் சந்திக்கும் பிள்ளைகளுக்கு நெற்றி, முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள (கெண்டைக் காலின்) முன்புறத்தில், முழங்கைகளில் கண்டல் காயங்கள், சிராய்த்த புண்கள் என்பன ஏற்படுவது வழக்கம். உடல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் பிள்ளைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக அல்லது எதிர் பார்க்கப்படாத பகுதிகளான முதுகுப்புறம், முகம், தலையின் பக்கங்களில், குண்டியில், மேல் தொடைகளில். கீழ்க் கால்களில். வயிற்றின் அடிப்பாகத்தில் கண்டல் காயங்களும், வெட்டுக் காயங்களும் பெரும்பாலும் காணப்படும்.
உள ரீதியான துஷ்பிரயோகம் சிறுவர்களும் இளவயதினரும் உள அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டும், உடல் வேதனையை அனுபவிப்பது மாத்திரமின்றி, தங்களைத் தாங்களே குறை கூறும் உளவியல் வடுக்களையும் சுமக்கின்றனர். அவர்கள் காட்டும் நடத்தை காட்டிகள் வேறுபடுகின்றது. துஷ்பிரயோகத்தின் தீவிரம், துஷ்பிரயோகம் மீண்டும் மீண்டும் நிகழும் நேர விகிதம், துஷ்பிரயோகம் ஆரம்பிக்கும் போது அப்பிள்ளையினது வயது, துஷ்பிரயோகத்துக்குட் படுத்தியவருடன் பிள்ளைக்குரிய உறவு முறையின் தன்மை, ஆதரவளிக்கும் நபர்கள், ஆதரவுக் கட்டமைப்புக்கள் என்பவற்றின் கிடைக்கக் கூடிய தன்மை, பிள்ளையின் அல்லது இளவயதினரின் துஷ்பிரயோகத்தைச் சமாளிப்பதற்கு வேண்டிய மரபு வழியான ஆற்றல்.
சிறுவர்களில் பலர் பல்வேறு உள நெருக்கீடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்த விடயமேயாகும். இவ் உள நெருக்கீடுகள் சிறுவர் பராயத்தின் எதிர்பார்ப்புக்களையும் மகிழ்ச்சியையும் சிதைவடையச் செய்வதோடு சிறுவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி விடுகின்றது. சமூக நெருக்கீடுகள், போர் வன்முறைகள், குடும்பம்சார் நெருக்கீடுகள், அமைதியற்ற சூழ்நிலைகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால் அன்றாடம் பல சிறுவர்கள் உளச் சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
சிறுவர்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்களால் மன அழுத்தத்திற்கு உட்பட்டு வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். உடலியல் ரீதியான பாதிப்புக்களாக உடல் நிறை குறைதல், தூக்கமின்மை, தூக்கத்தில் அடிக்கடி விழித்தல், அடிக்கடி தலைவலியும் சுவாசப்பிரச்சினையும், அதிகூடிய பதற்றமும், உடல் வலி உணர்வும் காணப்படுதல் போன்றவற்றைக் கூறலாம். அதே போல் உளவியல் ரீதியான விளைவுகளாக அடிக்கடி பயங்கரக் கனவு காணுதல், வழமைக்கு மாறான கோபமும் வன்முறை எண்ணமும் காணப்படல், வெட்கம், பயம், தலைவலி வயிற்றுவலி மனச்சோர்வு சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தல், பதற்றத்துடன் இருத்தல், அறிவு ரீதியான செயற்பாடு வழமையை விட வேறுபட்டுக் காணப்படுதல், முடிவெடுக்க இயலாமை, குழப்பம், பேசும்போது வார்த்தைகள் திக்குதல் போன்றவற்றைக் கூறலாம். நடத்தை ரீதியான விளைவுகளாக வகுப்பறையில் சக மாணவர்களுடன் இணக்கப்பாடற்ற நடத்தை, சிறுவயதில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் ஏற்படல், கண் கலங்கிக் காணப்படல், பயந்து நடுங்குதல், அழுகை காணப்பட்ட முகம், புதுநபரைக் கண்டால் அதி கூடிய இனம் புரியாத வெட்கம் போன்றவற்றைக் கூறலாம்.
மன அதிர்ச்சிக்கு உட்பட்டு அதிர்ச்சிக்கு பிறகான மனஅழுத்தம் ஏற்படுத்தும் சீர்கேடுகளால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வேதனை மிக்க அல்லது அச்சுறுத்தலான நிகழ்வு ஏற்பட்ட பிறகு சிறுவர்களுக்கிடையில் காணப்படும் அறிகுறிகள் வேறுபட்டதாக இருக்கும் என்றும் மூளையில் இன்சுலா என்று அழைக்கப்படும் உணர்ச்சிகள் மற்றும் பிறர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவைகளுடன் தொடர்புள்ள ஒரு பகுதி அளவில் வழக்கத்தை விடப் பெரியளவில் உருவாகும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சல் ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு சிறுவர்கள் மத்தியில் உடல் ரீதியாகவும், உணர்வுகள் ரீதியாகவும் ஏற்படும் வித்தியாசமான வெளிப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம் என முன்னணி ஆய்வு ஆசிரியர் மேகன் க்ளாபுண்டி கூறியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம்
பாலியல் காரணங்களுக்காக, வயது குறைந்த அல்லது வலிமை குறைந்த ஒருவர், வயது கூடிய அல்லது வலிமை கூடிய பிள்ளை, வளரிளம் பருவத்தினர் அல்லது வளர்ந்தோர் ஒருவரினால் பயன்படுத்தப்படும் போது பாலியல் செயலொன்றுக்காத் தமது விருப்பத்தை விழிப்புடன் தெரிவிக்க முடியாத ஒரு நிலையில், பாலியல் இச்சைக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவது மாத்திரமின்றி சிறுவர்களைத் தொடுதல், வருடுதல், பொருத்தமற்ற பாலியல் சொற்களைப் பயன் படுத்துதல், பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்தல், பாலியல் செயற்பாடுகளைப் பார்ப்பதில் ஈடுபடுத்தல், ஆபாசப் படங்கள், புத்தகங்களைப் பார்க்கச் செய்தல் போன்ற செயலில் ஈடுபடுத்தலையும் குடும்பச் செயற்பாடு தொடர்பான சமூகக் கட்டுப்பாடுகளை மீறும் நிலைமையொன்றில் ஈடுபடுத்தலையும் செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடச் செய்வதானது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பாலியல் துஷ்பிரயோகமென்பது ஒரு நம்பிக்கைத் துரோமகமான செயலாகும்.
உடலியல் மற்றும் உணர்வு ரீதியில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் நாளாந்தம் நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. அதாவது, குழந்தைகளின் அந்தரங்க இடத்தைத் தொடுதல். அல்லது தொட்டு விளையாடுதல் இப்படியானவர்கள் விளையாட்டாகச் செய்வதாக நாம் எண்ணிக் கொள்வோம். ஆனால் இவை குற்ற உணர்வுடன் பிள்ளைகளை அணுகும் பாலியல் ரீதியிலான தூண்டுதலின் காரணமாகவும் நடைபெறலாம். குழந்தைகளைக் குறித்து பெற்றோரின் அவதானமும் விழிப்புணர்வும் முக்கியமானதாகும்.
சிறுவர்களும் இளவயதினரும் சம்மதத்தைத் தெரிவிக்க இயலாதவர்களாயுள்ளனர். சமகாலத்தில் பாலகர்களும் குழந்தைகளும் சிறுவர்களும் மிக மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். இது சிறுவர்களிடமிருந்து அவர்களின் பிள்ளைப் பருவத்தையே இல்லாதொழித்துவிடுகிறது Sadism Pedophilia, Fetishism, Masochism போன்ற பாலியல் விலகல் நடத்தை (Sexual deviations) உளக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலையை விட்டு இடைவிலகல்
இலங்கை கல்வி அமைச்சின் 2016ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாடு ஏறத்தாழ 9675 அரசுப் பாடசாலைகளும், 817 தனியார் பாடசாலைகளும், உள்ளன. இலங்கையில் மாணவர்களின் முழு எண்ணிக்கை 4298345 என்றும், இலங்கையில் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 250095 என்றும், இலங்கையில் பாடசாலைகளில் இருக்கும் எண்ணிக்கை 7012 என்றும் குறிப்பிட்ட அமைச்சர், மின்சாரம் இல்லாத பாடசாலைகள் 522 இருக்கின்றன என்றும், 6591 பாடசாலைகளில் தொலைபேசி வசதி இல்லை என்றும், 817 பாடசாலைகளில் நீர் வசதி இல்லை என்றும் அவர் கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாகம் செயலிழந்துள்ளதும் குறிப்பிடப்பட வேண்டிய குறைபாடாகும். இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக்கொண்ட பாடசாலையாகும். மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர். கல்வி கற்கும் மாணவனின் கல்வித் தரம் மிகவும் ஒரு கீழான நிலையில் காணப்படுகின்றது. பரீட்சைக்காக கற்கும் கல்வியே இந்த அவலம் என்றால் கல்வியின் வீழ்ச்சி பிரமாண்டமானது. தழிழ் பாடசாலைகள் நிர்வாக மட்டப் புறக்கணிப்புக்கு இலக்காகி வருவதும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவும் கூட இடைவிலகலுக்கு வழிவகுக்கின்றது. வடக்கில் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1098. இயங்குநிலையில் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1007, 91 பாடசாலைகள் அரசியல் , சமூக மற்றும் ஆக்கிரமிப்புக் காரணங்களினால் செயற்படாமல் உள்ளது. இதில் மாகாண பாடசாலைகள் 1070, தேசியப்பாடசாலைகள் 22, தனியார் பாடசாலைகள் 06ம் இயங்குகின்றன. தேசிய பாடசாலைகளில் 30665 மாணவர்களும், 1834 ஆசிரியர்களும் உள்ளனர். மாகாணப்பாடசாலைகளில் 208240 மாணவர்களும் 10,988 ஆசிரியர்களும் உள்ளனர்.
போர்சூழலினால் கடந்த மூன்று தசாப்த காலமாக பல இலட்சக்கணக்கான மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய கல்வியும் கூடப் பாதிப்படைகின்றது. இன்று பாடசாலைகளை விட்டு இடைவிலகுகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பாடசாலையில் சேரும் பிள்ளைகள் முழுமையான கல்வியைப் பெறாது பாடசாலையை விட்டு இடைவிலகும் போக்கு இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இடைவிலகலானது 5-14 வயது மாணவரிடையே 13 ஆகவும் 10-14 வயது மாணவரிடையே 4.2 ஆகவும் 15-19 வயது மாணவரிடையே 6.5 ஆகவும் காணப்படுகிறது.
இலவசக் கல்வி, பாட நூல், உணவுத் திட்டம், சீருடை, புலமைப்பரிசில் திட்டம் என்பவற்றை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தியிருந்த போதிலும் இடை விலகுவோர் தொகை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது
உடல், உளரீதியான நோய், பிறப்பில் உள்ள குறைபாடு, பெற்றோருக்கு பாடசாலை பரீட்சை முறைகள், மீது நம்பிக்கையின்மை ஒத்துணர்வின்மை, ஒழுக்கக் கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக பாடசாலைகளிலிருந்து வெளியேறல், வகுப்பாசிரியர் மீது வெறுப்பு, பாடத்தின் மீது வெறுப்பு அளவுக்கதிமாக தண்டனை வழங்குதல், தாழ்வுச் சிக்கல், பாரபட்சம் காட்டுதல்,, கற்பித்தல், வினைத்திறனற்ற முகாமைத்துவம், பாலியல் குற்றவாளியாக இனங்காணப்பட்டமை, சமவயதுப் பிரிவினரிடையே உள்ள செல்வாக்குக் காரணமாக கல்வி மீது வெறுப்படைதல், ஆசிரியரின் சிறப்புக் கவனம் தேவைப்படுபவர்களைக் கவனிக்காதுவிடல் வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் பாட விடயங்களுக்கு மாத்திரம் முக்கியமளித்தல், சில சிறுவர்கள் கட்டாய வேலைக்கு அமர்த்தப்படல் ஆகியன அவர்களுக்கு போதுமான கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம் இழக்க நேரிட்டுள்ளது.
மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகி அவர்களின் தேவைகளைச்சிறப்பாக நிறைவேற்றி இடைவிலகலை குறைப்பதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என்போர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இவற்றைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை பல்வேறுப்பட்ட அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கின்ற போதிலும் சில காரணங்களினால் மாணவர்கள் இடைவிலகும் வீதம் குறைந்ததாகத் தெரியவில்லை. ‘ஒரு பாடசாலையைத் திறப்பது ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுவதற்கு சமனாகும்.’
துஷ்பிரயோகம் எவ்வாறு, எதற்காக நிகழுகின்றது
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எளிதில் ஆளாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில், உடல், உள, உணர்ச்சி மற்றும் புறக்கணிப்பு ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு சமூகங்களின் பொறுபற்ற தன்மை, வீட்டுச்சூழல், புறச்சூழல், நெருக்கீடுகள், வீட்டில் போதியளவு மேற்பார்வையின்மை காரணமாக உள்ளன. கோபத்தை அடக்க முடியாமை, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் நடத்தைகளும் தங்களது எண்ணங்களையும் ஆசைகளையும் சிறுவர்கள் மீது திணிக்கின்றனர்.
சிறுவர்களுக்கு ஆற்றல் நிலவிய போதிலும் சுகாதாரம், கல்வி, போசாக்கு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை நிலை தொடர்பாக பெற்றோர்கள், பாதுகாவலர் அல்லது குடும்ப அங்கத்தவர்கள் நீண்டகாலம் கவனியாமல் விடுவதால், தனிமைப்படுத்தப்படல், புறக்கணிக்கப்படல், போதைக்கு அடிமையாதல், தீய நண்பர்களின் சகவாசம், பெற்றோர் மத்தியில் பிள்ளைகள் தொடர்பான அன்பு, அக்கறையின்மை, பெற்றோரின் கவனயீனம், தனியான பெற்றோரின் பராமரிப்பு, திருமணப் பிரச்சினைகள், போசாக்கு வழங்காமை, உடல்ரீதியான சமூக விபத்துக்களிருந்து மீட்டெடுக்காமை, போன்ற செயல்கள் சிறுவர்களுக்கு துன்பங்களை ஏற்படுத்துவதால் பல்வேறுபட்ட உளரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
சிறுவர்களின் அப்பாவித்தனமும் அறியாமையும், பெற்றோரின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, குடும்ப கட்டமைப்பு சீர்குலைந்திருத்தல், பெற்றோரின் விவாகரத்து, பொருளாதாரப் பலவீனம், குடும்பத்தின் வறுமை, பொருளாதார நெருக்கடியினையும் கவனத்திற்கொண்டு பிள்ளைகள் பல்வேறு வேலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மேலும் சிறுவர் வேலைக்குச் செல்லல், பொழுதுபோக்குச் சாதனங்கள் குறிப்பாக கைத்தொலைபேசி இணையத்தை தவறாகப் பயன்படுத்தல், இணையத்தினூடாக தவறான நண்பர்களின் சகவாசம், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வின்மை ஆகியன சிறுவர் தொழிலை ஊக்குவிக்கும் காரணிகளாகும்.
பாட விதானத்தில் பாலியற்கல்விக்கு உரிய இடம் அளிக்காமை போன்றன. சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எளிதில் ஆளாவதற்கு பிரதான காரணங்களாக குறிப்பிட்டுக் காட்டலாம்.
இன்று போரினாலும் சுனாமியினாலும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர்கள் தங்களுக்கு அன்பு காட்டி ஆதரவு கொடுக்க எவரும் இல்லாத நிலையில் அங்கும் இங்கும் அடிபட்டு அவதிப்பட்டு அநாதரவாக அலைந்து திரிகின்றார்கள். அது நிகழும் பரந்த சமூக செயற்பாட்டுக்களத்தில் பகுத்தாராய்ப்படல் வேண்டும். எநதவொரு தனிக் காரணியும் உணர்ச்சி சார்ந்த துஷ்பிரயோகத்தை, உடல் சார்ந்த துஷ்பிரயோகத்தை, புறக்கணிப்பை அல்லது பாலியல் துஷ்பிரயோகத்தை முன் கூட்டியே தெரியப்படுத்துவதில்லை. இன்னும் சரியாக கூறுமிடத்து தனிநபர்கள், உறவுகள், சமூகங்கள், சமுதாயங்கள் என்பவற்றுக்கிடையில் வேறுபடுகின்ற காரணிகளின் சிக்கலான இடைத்தாக்கம் காரணமாகவே துஷ்பிரயோகம், புறக்கணிப்பு என்பன இடம் பெறுகின்றன. குற்றமிழைத்தல் அல்லது வஞ்சிக்கப்படுதலுக்கு இலகுவில் பாதிக்கப்படக்கூடிய தன்மையை கூட்டாக அதிகரிக்கவும் செய்கின்றன. சூழலியலுக்குரிய மாதிரியானது வன்செயல் தொடர்பான பல கொள்கைகளையும் தொகுதியொன்றினுள் ஒன்று சேர்ப்பதுடன், தனித்தனியான குடும்ப மற்றும் சமூகக் காரணிகளையும் நுணுக்கமாக ஆராயவும் செய்கிறது.
தனிநபர் மட்டம்:- இது பிள்ளையினது உயிரியல் ரீதியான தனிப்பட்ட மற்றும் குடும்ப வரலாற்றை உள்ளடக்குகிறது. பிள்ளை எதிர்நோக்கும் ஆபத்துக்கள் (உடல் அல்லது உள விருத்தி, குறைபாடு, ஆரோக்கியம் அல்லது இனம் போன்ற காரணங்களால் வேறுபடுவதுடன், அவர்களின் குடும்பங்களிலும் வன்செயல் பற்றிய வரலாறும் இருக்க முடியும்.
குடும்ப / உறவு முறை மட்டம்:- இது குடும்பத்திலுள்ளவர்களுடனும், ஏனைய பிள்ளைகள், உறவினர்கள் ஆகியயோருடனும் கொண்டுள்ள உறவுகளை உள்ளடக்குகிறது. குடும்பத்தில் நிகழ்ந்துள்ள துஷ்பிரயோக சம்பவம் பற்றிய வரலாறு, மதுப்பழக்கம் அல்லது அளவுக் கதிகமான உள நெருக்கீடு என்பன பிள்ளைகளுக்கு தீங்கு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்கின்றன. பெற்றோர்களுள் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதனால் பிள்ளை ஏனைய உறவினர்களில் தங்கியிருத்தலும் தீங்கு ஏற்படுதவதற்குரிய காரணியாக இருக்கலாம்.
சமூக மட்டம் :- இது முறைசார், முறைசாராத சமூக ஆதரவுக்கான கட்டமைப்புத் தொகுதிகளையும், சமூகத்தில் நிலவும் வறுமை அல்லது வன்செயல் மட்டத்தையும் உள்ளடக்குகிறது.
சமுதாய/ கலாசார மட்டம்:- இது ஏனையவற்றைப் பார்க்கிலும் சில அதிகாரங்களை வழங்குகின்றவையும், சிறுவர்களின் பால் நிலை வகிபாங்குகள் மற்றும் அந்தஸ்து என்பவற்றைத் தீர்மானிப்பவையுமான சமூக விழுமியங்களை உள்ளடக்குகிறது. இவை வன்செயலைத் தடுக்கக் கூடிய அல்லது வன்செயல் ஆபத்தை அதிகரிக்கச் செய்யக் கூடிய ஊடகச் செய்திகள், பால் நிலை பற்றிய மரபு வழியான கருத்துக்கள், நீதியான சட்டங்கள் என்பவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளன.
இலங்கையில் துஷ்பிரயோம்
உலகில் எல்லா பாகங்களிலும் இருபது கோடிக்கு அதிகமான சிறுவர்கள் வேலை செய்கின்றனர் . 2006 ஆம் ஆண்டின் ஐ.நா அறிக்கையில் 18 வயதிற்குட்பட்ட 15 கோடி சிறுமிகளும், 7 கோடியே 30 இலட்சம் சிறுவர்களும் பாலியல் வன்புணர்வுகளுக்கு உலகம் முழுவதிலும் உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு மற்றும், கொடூர சம்பவங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்பட்டுள்ளது
யுனிசெப்பின் ((UNISEF) 2004 இல் மேற்கொண்ட ஆய்வின் படி (பக்கம் 51-52), 10-13 வயதுப் பிரிவைச் சோர்ந்த வளரிளம் பருவத்தினர் மத்தியில் பாலியல் துஷ்பிரயோகம் 10 % ஆக இருப்பதாகக் கண்டறிந்தது; 14 %ஆண்பிள்ளைகளும் 8% பெண்பிள்ளைகளும். இதே ஆய்வின்படி 14-19 வயதுப் பிரிவினருள் 14% பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப் பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இங்கு ஆண், பெண் பிள்ளைகள் வேறுபாடு கணிசமான அளவுக்கு இல்லை.
யுனிசெப்பின் தரவுகளின்படி உலகில் ஒன்பது மில்லியன்களுக்கும் அதிகமான சிறுவர்கள் குறைந்த வயதிலேயே மரண அபாயத்துக்குள் தள்ளப்படுகின்றனர். 182 மில்லியன் சிறுவர்கள் இரண்டாம் நிலைக் கல்வியினை தொடரமுடியாதுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வன்முறையினால் 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 85 வீதமான சிறுவர்கள் உளரீதியான தண்டனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர். 150 மில்லியன் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், ஒரு பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பயங்கரவாதத்தினாலும் ஆயுத மோதலினாலும் பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகமானது நாடு முழுவதிலுமுள்ள சகல வயதுப் பிள்ளைகளுக்கும் சகல பின்னணியைச் சோந்த பிள்ளைகளுக்கும் ஒரு பிரச்சினையாக இருப்பதை சில தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது (www.childprotection.gov.lk) இலங்கையில் 20வீதம் ஆண்பிள்ளைகளும் 10வீதம் பெண்பிள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாவதாகக் கூறுகின்றது.
இலங்கையில் வேலைக்கமர்த்தப்படும் சிறுவர்களைவிட பாலியல் மற்றும் கொலை, சித்திரவதை செய்தல் என்பன அதிகரித்துள்ளது. 2009 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதியில் 18,777 சிறுவர்கள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது.
2013ஆம் ஆண்டில் 691 சிறுவர்களை பலவந்தமாக கொண்டுசென்று, பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. மேலும் 681 முறைப்பாடுகள் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
2014 ஆம் ஆண்டில் ஜனவரி- ஜூன் மாதம் வரையில் 228 சிறுவர்கள் பலவந்தமாக பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட துஷபிரயோக சம்பவங்களும், 259 சிறுவர்கள் துஷ்பிரயோக சம்பவங்களும் எமது அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்தவண்னம் உள்ளன. அத்துடன் கடந்த இதே ஆண்டில் மாத்திரம் 27 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சிறுவர்கள் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 197 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதே ஆண்டில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் தொடர்பில் 1680 சம்பவங்களும் பதிவாகியிருந்தமையை சுட்டி காட்டலாம்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையான காலத்தில் 149 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இதேவேளை, 18 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 69 சிறுவர்கள் உடல் பாதிப்புகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் யூலை காலப் பகுதி வரையில் 3 ஆயிரத்து 785 சிறுவர் துஷ்பிரயோக குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் சிறுவர்கள் மீதான வன்மையான தாக்குதல்களாகவும் 956 முறைப்பாடுகள், குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கப்பட்ட 602 முறைப்பாடுகள், சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் 426 முறைப்பாடுகள், மிகவும் மோசமான வகையில் பாலியல் வன்கொடுமைகள் 117 முறைப்பாடுகள், , சிறுவர்களை வேலைக்கு அமர்த்தயமை குறித்து 102 முறைப்பாடுகள். அதே போல் 2017 ஜனவரி மாதம் முதல் மே காலப் பகுதி வரையில் 47 சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
யுத்தத்தின்பின் சிறுவர் துஷ்பிரயோகங்கள் திடீரென வடக்கு கிழக்கில் அதிகரித்துச் செல்லும் அதிர்ச்சியான தகவல்களை சிறுவர் தொடர்பான திணைக்கள புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. 2017ம் ஆண்டு 2324 முறைப்பாடுகளும் 2018ம் ஆண்டில் இதுவரையில் 1048 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இது அதிகமான எண்ணிக்கையாகும். இதன் அடிப்படையில் பார்த்தால் மிகக் கூடுதலாக வன்முறைகள் பதிவாகியிருப்பதனைக் காணமுடிகிறது.
2005 ஆம் ஆண்டில் தர்சினி என்ற பெண் கடற்படையால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமும், 2012ஆம் ஆண்டில் நெடுந்தீவில் சிறுமி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் , வன்னியில் மாங்குளம் மன்னகுளத்தை சேர்ந்த 16 வயதுடைய சரண்யா எனும் பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையால் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இதே போல், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா (வயது18) என்ற உயர்தர வகுப்பு மாணவி 2015ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 2015, கிளிநொச்சி பரந்தனின் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
வவுனியா கூபாங்குளம் பகுதியைச் சேர்ந்த கெங்காதரன் ஹரிஸ்ணவி என்ற 14 வயது , பாடசாலை மாணவி 2016ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 16ம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யபட்ட சம்பவமும் , காரைநகரில் 11 வயதான பாடசாலைச் சிறுமியும் 9 வயதுச் சிறுமியும் கடற்படைச் சிப்பாயால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
2018ஆம்ஆண்டு யூன் மாதம் 25தம் திகதி, நெடுங்கேணி சேனைப்புலவில் இராணுவ சிப்பாய் ஒருவர், சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி பாழடைந்த கிணற்றுப் பற்றை ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட சம்பவமும், யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற பாடசாலை மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சம்பவங்களில் சிலவற்றைய்யே அறிய முடிகின்றது. இத்தகைய புள்ளி விபரங்களின் அடிப்படையில் இதில் மிகவும் கண்டனத்திற்கும் , அனைத்து சமூகத்தினரினதும் கொந்தளிப்புக்கும் உட்பட்ட விடயமாக யாழ் மாணவி வித்தியாவின் கொலையினை சுட்டிக் காட்ட முடியும்.
மறைமுகமாக வெளிவராத சம்பவங்கள் அதிகம் இன்றைய சூழலில் சிறு குழந்தை முதல் பாடசாலை மாணவர்கள் வரை பலர் நாளாந்தம் பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் இதில் இன்னும் என்ன கொடுமையான விடயம் என்றால் பாதுகாப்பு வழங்க வேண்டிய, குடும்பத்தினரும், அயலவர்களும் , ஆசிரியர்களும் , சிங்கள இராணுவம், கடற்படை , பொலிசாரும் , ஈடுபட்டு வருவது மிக வேதனையினைத் தருகின்றது. இன்றுவரை பலருக்கு நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராடிக்கொண்டிருக்கும் குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது. படுகொலைகளை கண்டித்து அவ்வப்போது சம்பவங்களை ஒட்டி மாணவர்களும் மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் அபிவிருத்தி இடம்பெற்று வந்தாலும், கலாசார சிதைப்புகள் மிகவும் சூட்சுமமான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே சிறுவர்கள் போதைப்பொருள் பாவனை, பெண்கள் சிறுவர்கள் மீதான வன்புனர்வுச் சம்பவங்கள் இல்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றது. இதன் உச்சமாகவே வித்தியா , சரண்யா ஹரிஸ்ணவி என்ற மாணவிகளை ஈழமண்ணில் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. தங்களை தட்டிக் கேட்டு திருத்த யாரும் இல்லாத நிலையில் இந்த சிறுவர்கள் இழிவான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.
எதிர்காலத்தில் பல்வேறு உள, சமூக பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு சிறுவர்கள் பாதுகாப்புக்கு வழி ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
சிறுவர் துஸ்பிரயோகத்தை மேற்கொள்ளும் குறிப்பாக சிறுவர், பாலியல் வன்புணர்வு, கொலை, கடத்தல், என்பவற்றுக்கு அதிகபட்ச கடுமையான தண்டனைகளை பிறப்பிக்க வேண்டும். இத்தண்டனைகள் எதிர்காலத்தில் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் மற்றும் கொடூர சம்பவங்களுக்கு தகுந்த பாடமாக அமைய வேண்டும்.
தற்போது நடந்தேறியுள்ள சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு நீதியானதும் நியாயமானதும் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகள் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டு அவர்கள் தமது எதிர்காலங்களை சிதைத்துக் கொள்ள முன்னர் அவர்களை பாதுகாப்பது அவசியமாகும். இது சமூகத்தின் கடப்பாடுமாகும்.
சிறுவர்கள் அதிகளவில் உடல்ரீதியான உளரீதியான பாலியல்ரீதியான துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகிறார்கள் என்ற அடிப்படையில் இவ்விடயத்தில் சிறுவர்களை மையப்படுத்தியும் வளர்ந்தோரை மையப்படுத்தியும் நிகழ்ச்சித் திட்டங்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. சிறுவர்கள் தம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் என்பது தொடர்பிலும் வளந்தோர் சிறுவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பிலும் சட்டங்கள் கடமைகள் பொறுப்புகள் தொடர்பிலும் விழிப்புணர்வை அதிகரிக்கலாம்.
சிறுவர்கள் மத்தியில் நீண்டநாள் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையில் HOLISTIC அணுகுமுறையை உடைய திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை சகல மட்டங்களிலும் உண்டு. சிறுவர்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உரிய இடங்களில் முதலீடு செய்வது என்பது குறைவாக உள்ளது என்ற அடிப்படையில் இதற்குரிய காரணங்களை அறிவுசார்ந்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் திட்டங்கள் வகுத்து செயற்பட வேண்டும்.
சிறுவர் தொழிலாளர் பிரச்சினைகளுக்கும், அதனோடு தொடர்பு பட்ட வறுமைப் பிரச்சினைக்கும் மிக முக்கியமானதொரு காரணியாக அண்மைக் காலத்தில் தாழ்மட்டக் கல்வித் தரத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்நிலைமைகள் மாற வேண்டிய அவசரமும் அவசியமும் உடனடித் தேவையாக உள்ளது. அத்தோடு பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கல்வியின் பக்கம் திசைதிருப்புவதோடு கல்வித் தாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிறுவரின் சாதாரண உள விருத்திக்கான தேவைகளாக உணவு, இருப்பிடம், அன்பு, ஆதரவு,உணர்வைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய உறவுகள், கவனிப்பு, கற்றலுக்கான வாய்ப்புக்கள் என்பன அமைத்துக் கொடுக்க வேண்டும் . உணர்வுத் தாக்கங்களிலிருந்து பிள்ளைகளும், பெற்றோரும் தாமாகவே விடுபடுவதற்குரிய உதவி வழங்கப்படல் போன்றவற்றை கூறிக் கொள்ளலாம்.
சிறுவர்கள், பாட சாலை மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளும் விழிப்புணர்வும் பாடசாலைகளில் முறையாகவும் தொடராகவும் வழங்கப்படுவது காலத்தின் கட்டாயச் செயற்பாடாகும்.
சிறுவர்களின் உரிமைகள் பற்றி பேசும் நாம் அவற்றை பாதுகாக்கவும் அது தொடர்பான விழிப்புணர்ச்சியூட்டும் நிகழ்வுகளையும், மீறப்படும் போது அதற்கு குரல் கொடுக்கவும் முன்வர வேண்டும்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வயதுப் பிரிவுக்கேற்ற வகையில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
ஒட்டு மொத்தத்தில் சிறுவர்கள் எதிர் கொள்கின்ற உள, சமூக பிரச்சினைகளை குறைப்பதற்கு அவர்களை குடும்பச் சூழலிலும், சமுதாயத்திலும் வைத்துப் பராமரிக்கப்படுவது மிகப் பிரதானமானது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உரிய புனர்வாழ்வு திட்டங்களையும் வழங்க வேண்டும்.
அதிகளவில் சிறுவர் தொழிலாளர்களை உண்டுபண்ணியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பரவலான கரிசனை உள்ளபோதும் ஒன்றிணைக்கப்பட்ட ( Integrated ) அணுகுமுறையின்மை என்பது பரவலாக உணரப்பட்டுள்ளது. எனவே சிறுவர் தொழிலாளர்களை குறைக்கவென அமுல்படுத்தப்படும் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்ட (Interpreted Intervention) தலையீட்டை உடையதாக வடிவமைத்து அமுல்படுத்துவது சிறந்தது ஆகும்.
சிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்கள் வேலைக்கு அனுப்பப்படுவதை இல்லாதொழிக்க முடியும். சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் அவர்களை பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகளை சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரும் சமூகப் பணியாக உணர்ந்து செயலாற்றும்போது அப்பாவிச் சிறுவர்களை பாதுகாக்க முடியும்.
சிறுவர்களுடன் பணியாற்றுபவர்கள் சுகாதார, சமய, கல்வி சார் அமைப்புக்கள், பராமரிப்பு நிலையங்கள், மற்றும் அரச , அரச சார்பற்ற நிறுவனங்க களும் இணைந்து சட்ட ரீதியாக செயற்படுகின்ற வேளையில் சிறுவர்களை பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை
– நிலவன் / நிக்சன் பாலா,
உளவளத்துணை,
மற்றும் உளச்சமூகப்பணியாளர்.