மௌனன் யாத்ரிகா:- விமர்சனக் கூட்டங்களில் தொடர்ந்து உரையாடப்படும் கவிதைகளின் உண்மையான மதிப்பை (அதாவது ஒர்த்) எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அப்படியான உரையாடல் எதுவும் இல்லாமல் ஒரு தொகுப்பை( விருது போன்ற விசயங்களுக்காக) சிறந்தது என்று எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்?
அய்யப்ப மாதவன்:- தமிழில் கவிதை நூல்களுக்கு விமர்சனக்கூட்டம் நடத்துவது சீர் செய்வதுபோன்றுதான். கவிஞன் தன் கவிதை நூலுக்கு தானே கூட்டம் நடத்தும் அவலம் நம்ம ஊரில்தான் இருக்குமென்று நினைக்கிறேன். யாரிடமாவது கடன் வாங்கியாவது கூட்டம் நடத்தினால்தான் கவிஞனுக்கு ஜென்ம சாபல்யம் கிட்டும். சீர் செய்ய நான்கு பேர் பேச அழைக்க வேண்டும். பெரும்பாலும் கவிஞனின் நண்பர்களாய்த்தான் இருப்பார்கள். விமர்சகர்கள் என்று தமிழில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பவர்கள் அழைத்தால் கூட வரமாட்டார்கள். அவர்களை அழைக்க வேண்டுமெனில் நீங்கள் சமூகத்தில் வசதியுள்ள கவிஞராக இருக்க வேண்டும். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதை நிறைய முறை கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். இன்னொன்று நீங்கள் எழுதும் கவிதைகள் உலகத்தரத்திற்கு இல்லாதிருப்பதும் ஒரு குறை. அந்த விமர்சகர்கள் எல்லாம் உலகக் கவிதைகள் படித்து வளர்ந்தவர்கள். இங்கு எழுதுபவர்களைக் கண்டு அவர்கள் கேலியும் கிண்டலும் செய்வதைத் தவிர வேற எதையும் செய்வதில்லை. கூட்டம் நடத்தி கவிஞனின் ஏதோ இரு கவிதைகள் வாசித்து கவிஞனைத் திருப்திபடுத்திவிட்டதாய் நினைத்து கலைந்து போய்விடுவார்கள். இங்கு கவிதை எழுதுவது ஏனெனில் கவிஞனின் மனம் அமைதிகொள்ள மட்டும்தான். அவன் ஏனோ கவிதை எழுதுவதில் தன்னை பறிகொடுத்தவன் ஆகிறான். அதுவே அவன் வாழ்வாகிப் போகிறது. ஒரு கவிதை நூல் சிறந்த கவிதை நூல் என்று எப்படிச் சொல்கிறார்கள் என்பது புதிரப் போலத் தோன்றலாம். பொதுவாகவே நல்ல கவிஞர்களை இங்கு அடையாளப்படுத்துவது நடப்பதே இல்லை. நிறைய இருட்டடிப்பு வேலை செய்வார்கள். மூத்த கவிஞர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மூத்த எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் பெரும்பாலும் ஒரு நல்ல கவிதையை ஒரு சிறந்த கவிஞனைப் பற்றி எங்கும் குறிப்பிடுவதுமில்லை. பேசுவதுமில்லை. எஸ்.ரா. குறிப்பிடுவது இரண்டு பேரைத்தான் எப்போதும் எங்கும் சொல்லிக்கொண்டே இருப்பார். வேறு யாரையும் அவர் எங்கும் சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இன்னொன்று நீங்கள் விசுவாசிகளாய் இருந்தால் உங்கள் கவிதை நூல் வெளி உலகத்திற்கு எளிதில் தெரிய வரும். உங்கள் நூல் வெளியீட்டிற்கு பெரும் எழுத்தாளர்கள் வருவார்கள். அப்புறம் உங்கள் நூலுக்கு விருது தானாகவே வந்துவிடும். போன வருடம்கூட இது போன்ற ஒரு நிகழ்வை நாம் கண்கூட பார்த்தோம். தேர்வாளர்களுக்கு ஏதோ ஒரு வழியில் விருது பெரும் கவிஞர்கள் விசுவாசத்தோடு இருக்க வேண்டும். அதாவது ரகசிய அடிமையாய்க் கூட இருக்கலாம். அது தப்பில்லை. விருதும் புகழும் ரொம்ப முக்கியம். நல்ல கவிதைகள் கொண்ட நூலினை வைத்து ஒரு போதும் இங்கு விருதுகள் வழங்கப்படவில்லை. கவிஞனின் புற உலகமும் அவன் பின்புலமும் அவன் விசுவாசமுமே அவன் கவிதைகளின் தரத்தை நிர்ணயிக்கின்றன. இங்கு நல்ல கவிஞர்கள் சாகப் பிறந்தவர்கள்.
மௌனன் யாத்ரிகா:-அனுபவ வாழ்வோடு புனைவைக் கூட்டும்போது கவிதைக்கு தனித்துவம் உண்டாகுமா? இல்லை, புனைவும் அனுபவமும் ஒன்றிணைய முடியாமல் கவிதையின் தனித்துவம் கெடுமா?
அய்யப்ப மாதவன்:- கவிதைக்குள் புனைவு என்பது அவசியம் என்றே தோன்றுகிறது. படிமங்கள் தோன்றுகையில் அங்கு புனைவும் வந்துவிடும்தான். ஒரு கவிஞனின் தனித்துவுமென்பது அவனது தனிப்பட்ட விசாலமான கற்பனை மற்றும் கனவு. நான் எங்கு கவிதைகள் எழுதும்போது இயற்கைக்குள் மூழ்கிப்போகிறேன். இயற்கையின் காட்சிகள் என்னை மயக்கமுறச் செய்கின்றன. என் கவிதைகளில் காற்றும் மழையும் நிலவும் சூரியனும் இல்லாமலிருப்பதில்லை. இயற்கை தரும் காட்சி படிமங்களால் என் கவிதைகள் தனித்துவத்தை எய்துகின்றன.
மௌனன் யாத்ரிகா:-வாழ்வுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிற கவிதையுடனான உறவை கவிஞன் ஏன் மேலும் இறுக்கமாகக் கட்டிக் கொள்கிறான். கவிதைக்கென்று மந்திர சக்தி ஏதாவது இருக்கிறதா?
அய்யப்ப மாதவன்:- கவிதை ஒரு லாகிரி வஸ்து. கஞ்சாவைப் போன்று கவிஞனை கிறுகிறுக்கச் செய்வது. வசிய மருந்துபோன்றதும்தான். வேறெதுவும் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் இந்த கவிதைப் பித்து அவ்வளவு எளிதாய் நம்மைவிட்டு நீங்கிவிடாது. கவிதை என் காதலிபோலத்தான். அவள் நான் இறக்கும்வரை என்னோடு இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அவளே என் மிகப்பெரும் ஆறுதல். அடைக்கலம். எல்லோரும் என் கைவிடும்போது என்னை அவள்தான் இறுகப்பற்றிக்கொண்டு நீவி விடுகிறாள். அவளுக்குள் நுழைந்துவிடுகையில் என் துயர்கள் வேதனைகள் அழுகைகள் எல்லாம் மறைந்துவிடும். அது ஒரு மந்திர சக்தி. மொழியும் கவிஞனின் புனைவும் ஒன்றாகக் கலந்து தோன்றுகிற மாயசக்திதான் இந்தக் கவிதை