ஒரு இனத்தின் இருப்புக்காக,அவர்களின் உரிமைகளுக்காக போராடும் விடுதலை அமைப்புகள் சுடுகலனை மட்டுமே தமது ஆயுதமாக கொள்வதில்லை. பேனாக்களில் இருந்து பிறந்த வலிமைமிக்க எழுத்துக்கள் ஆயுதங்களாக,கேடயங்களாக,மக்கள் உணர்வுகளை தட்டியெடுப்பும் போர்ப்பறைகளாக, அநீதியைத் தட்டிக் கேட்கும் நீதியின் குரலாக பயனப்டுத்தப்படுகிறன.
இந்த வகையில் எமது தேசவிடுதலைப் போரிலும் இவ்வகையான தாக்கமான எழுத்தாயிதம் அன்று எழுந்துநின்றது. விடுதலைப்புலிகளின் மகளிர் அணியினரின் வீரம்செறிந்த போராட்ட வரலாற்றின் ஒரு தாக்கமான பகுதியாக அவர்களின் எழுத்துக்கள் அமைந்திருந்தன. அந்தவகையில் அன்றே ஐநா சபையை தோலுரித்த கவிஞர் மேஜர் பாரதியின் கவிதை ஒன்றினை அவரது நினைவுநாளை முன்னிட்டு இங்கு தருகின்றோம்.
ஐ.நா சபையே …
ஐ.நா சபையின்
அடுக்குமாடிஉறுதியாக உயர்ந்து
நிற்கிறதுமனித எலும்புகளின்
மகத்தான உறுதியினால்
வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறது
பட்டொளி வீசி பறக்கின்ற கொடியினை
எட்டிப் பாருங்கள் – தொகை வகையாய்
சேர்ந்த உயிர்கள் ஆடித்துடிக்கின்றன
மேடைமீது ஏறி இருந்து ஏற்றம்
பற்றி பேச்சு நடத்தும் தேசத் துரைமாரே
குனிந்து பாருங்கள் பூவாய் இருக்கும்
கம்பளம் கீழே புழுவாய் நெளியும்
மனித உடல்கள் அவை உங்கள்
குருட்டுக் கண்களைவெருட்டி திறக்கும்
கோழிச் செட்டைக்குள் குஞ்சுகள்
தான் பாதுகாக்கப்படும்
ஆனால் இங்கே பருந்துகள் தானே
பாதுகாக்கப்படுகின்றன.
ஐ.நா சபையே உன் ஏமாளித்தனத்தை
என்னென்று சொல்ல
கோடி கோடியாய் ஏழை உயிர்களை
ஏப்பம் விட்ட வல்லூறுகளின் வண்டி
ஊதிப் பெருத்து உள்ளுக்குள் அடங்காது
செட்டைக்குள்ளே சின்னதாய் தெரியுது
‘உலக சமாதானம்’
இந் உன்னத கோட்பாட்டிற்குள்
தலையைப் புதைக்கும் தீக்கோழி நீ
முகம் தெரியாவிட்டாலும்
சீ…முழு உடலும் அம்மணமாய் தெரிகிறது.
உரிமைப் போர் எல்லாம் உன்னால்
உறுதிப்படுத்தப்பட வேண்டுமாம்
உலகம் சொல்கிறது.
சுதந்திரத்தின் சுகம் பற்றி சொல்வதற்கு
சொந்தமாய் உனக்கேதும் அனுபவம் உண்டா?
இல்லையே எங்கள் தேசம் எங்கள் மக்கள்
எமதே உரிமை எனவே நாம்
சுதந்திரப் பிரகடனம்செய்து முடித்திடுவோம்
நாளை தியாகமும் திறமையும்திடமாய்
எமை வளர்க்கும் – அப்போதுசமநிலையை
சரிப்படுத்த எம்மை நீசந்திக்க வேண்டிவரும்
அக்கணத்தில் சுதந்திரம் பற்றியசொந்த
அனுபவத்தைநாங்கள் சொல்லித் தருவோம்
பாரதி (“காதோடு சொல்லிவிடு” வெளியீட்டுப்பிரிவு – விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு 1993)
விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றிய மேஜர் பாரதி 07.06.1992ம் ஆண்டு சிறு நாவல் குளத்தில் சிறிலங்கா படையுடன் நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார்.