மௌனன் யாத்ரிகா :- காலம் இதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாது. காலத்தின் சேமிப்பில் ஒரு பைசா கூட தேறாது. காலம் கழிவாக மாற்றி எங்கேனும் எச்சமிட்டு விடும்… இந்த சொற்றொடருக்கெல்லாம் சொந்தமான கவிதைகள் என்பவை எவை?
எஸ்.ஜெ.சிவசங்கர்:- சாஸ்வதமான கவிதைகள் ,காலம் தாண்டி நிற்கும் கவிதைகள் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கைகள் இல்லை.வாய்மொழிமரபில் காலங்கள் தாண்டி கவிதைகள் கடத்தப்பட்டது உண்மைதான். இசை வடிவம் பா வடிவம் எல்லாம் அதற்காக உருவானதே.மனனம் செய்ய ஏதுவாய் இசைவடிவம் இருப்பதை இன்னும் இலத்தீன் அமெரிக்க கேரளக் கவிதைகளில் காணமுடியும்.”நந்தவனத்தில் ஒரு ஆண்டி” இன்னும் காலத்தின் முன் புதிதாய் நிற்பது வாய்மொழிமரபின் வீரியமும் அந்த இசை வடிவமும் தந்த கொடை. எழுத்துமரபு வந்தபிறகு சிறந்த கவிதை எது காலத்தைத் தாண்டி நிற்க வேண்டியது எது என்பதை தீர்மானிப்பதில் அரசியல் சார்பு உள்ளிட்ட பல கூறுகள் உள்நுழைந்துவிட்டன.வெறும் பிரதியாய் இருப்பதை இலக்கியமாய் உயர்த்த உரை/மதிப்பீடு/விமர்சனம் என பலதும் தேவைப்பட்டது.இவையெல்லாம் யார் யாருக்காக செய்தார்கள் என்பதே அரசியல். ஆற்றுப்படையில் வலம் வந்த அத்தனை பாணர்களின் கவிதைகள் என்ன ஆனது எங்கே போனது என்பது இன்னும் விளங்காத புதிர்.பாட்டும் தொகையும் (சங்க இலக்கியம்) உண்மையில் திரட்டுதான் மொத்த தொகுப்பல்ல.அதில் மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட எத்தனை எத்தனை கவிஞர்கள்.ஏன் பாரதியின் காலத்தில் வாழ்ந்த வேறு கவிஞர்களின் பெயர் நமக்கு காலம் கடந்தும் கடத்தப் படவில்லை? யாருடைய கவிதைகள் காலத்தை தாண்டி நிற்க வேண்டும் என்பது எப்போதும் இப்போதும் அரசியல் சார்ந்ததுதான்.
உள்ளீடுகளை வைத்து சொல்வதென்றால் கவிதைகள் பயிலும் அரசியல்/நிலம்/அகம் எதுவாக இருந்தாலும் அதில் அடிப்படையான நேர்மை இருந்துவிட்டால் அது தன்னளவில் எல்லாக் காலத்துக்குமானது. “In eternity there is indeed something true and sublime. என ஹென்றி டேவிட் தோரா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. சுயமற்றவை (Fake) எப்போதும் காலத்தின் முன்னால் நிற்பதில்லை.
மௌனன் யாத்ரிகா :- வடிவத்தில், உள்ளடக்கத்தில், புதிய சொற்கட்டுமானத்தில், நுட்பங்களை உய்த்துணர்தலில் ஒரு கவிதை தனித்துவமானதாகி விடுமா?
எஸ்.ஜெ.சிவசங்கர்:-முதலில் கவிதை என்றால் என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே வகுத்துக்கொள்ள வேண்டும்.மூத்த கவிஞர்கள் பலரும் இந்த வரையறையை எப்போதும் அரூபமாகவே விளக்கி சென்றிருக்கிறார்கள்அல்லது கவிதையை விளக்க முடியாது என்று தப்பித்திருக்கிறார்கள் .என்னைப் பொறுத்த வரையில் ரொம்பவும் எளிமையாக கவிதை குறித்து நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன். தனிநபர் அனுபவங்கள் தனித்துவமானது பொதுவில் வைக்க முடியாதது (ஆன்மீக அனுபவம்) விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தனி அனுபவத்தை பொதுவில் வைப்பது ,எல்லோருக்குமானது (யார் ஸ்விட்சைத் போட்டாலும் விளக்கு எரியும் ).கவிதை அனுபவம் என்பது பொதுவில் இருக்கும் ஒன்றை சுயஅனுபவத்தோடு புதிய கோணத்தில் அணுகி பின் பொதுவில் வைப்பது இப்போது பொது அனுபவத்தில் இந்த சுய அனுபவமும் சேர்ந்து விடுகிறது. .(எல்லோரும் பார்க்கும் நிலவை கவிஞன் வேறொன்றாய் முன்வைக்கிறான் அதைப் படித்தபின் நமக்கு நிலவுக்கு பதில் ரொட்டி தெரிகிறது/முந்திரி பருப்பு தெரிகிறது /நறுக்கிப் போட்ட நகம் தெரிகிறது).இது அரசியல் கவிதைகளுக்கும் பொருந்தும்.எலோருடைய பார்வையிலிருந்து விலகி புதிய பார்வையை/ தலைகீழாக்கத்தை/ கலைப்பதை செய்வதுதான் கவிதையின் முதல் வேலை (கவிதைகளுக்கு கொஞ்சம் கூடுதல் வேலைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை).ஒவ்வொருவருக் கும் வேறுபடும் இந்த வரையறையே அவரை தனித்துவமானவராக மாற்றுகிறது. எல்லா தொழில்களையும் போலவே அதற்கான உழைப்பற்று வரும் கவிதைகள் என்ன தொழில்நுட்பங்களோடு வந்தாலும் பல்லிளித்துவிடுகிறது.மேலும் “கவிதையே என்னை மன்னித்துவிடு நீ சொற்களால் மட்டும் ஆனதல்ல என்பதை உனக்கு நினைவூட்டுவதற்கு” என்று ரோக் டால்டனின் வரிகளையும் பொருத்திப் பார்க்கலாம். சற்று நிதானமாக யோசித்தால், கவிதைகள் நம் கைரேகைகளைப் போல.ஒவ்வொன்றும் தனித்துவமானவை.இதில் படிநிலை தேவையற்றது என்பது என் அபிப்ராயம்.
மௌனன் யாத்ரிகா :- உலகளவில் பேசப்பட வேண்டிய தமிழ்க் கவிதைகள் சமகாலத்தில் எழுதப்படுகின்றன என்று நினைக்கிறேன். உங்கள் அவதானிப்பு என்னவாக இருக்கிறது?
எஸ்.ஜெ.சிவசங்கர்:-நிச்சயமாக, பெரிதும் கொண்டாடப்பட்ட சில மேற்குலக கவிதைகளை ஒப்பிடும்போது இது தெரிகிறது இந்திய அளவில் கூட சமகால தமிழ்க் கவிதைகளின் பரப்பு தனித்துவமானது ..உள்ளடக்க ரீதியாகவும் வடிவ ரீதியாகவும் தமிழ்க் கவிதைகள் பிரதேச எல்லைகளைத் தாண்டி பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது .பல்வேறு நிலப்பரப்பு /பல்வேறு இனக்குழுக்கள்/புது மொழி/வடிவம்/ பன்மையான வட்டார வழக்குகள்/ அரசியல்/மெய்யியல்/நாட்டார் வழக்காற்றியல்/விஞ்ஞானம் என பல்துறை ஊடாட்டம், தமிழ்க் கவிதைகள் ஆங்கிலம் /பிரெஞ்சு/ ஸ்பானிஷ்/ அராபிக் மொழிகளில் பெயர்க்கப்பட்டால் அதன் காத்திரத்தை உலகு அறியும்.
மௌனன் யாத்ரிகா :- நண்பா உங்கள் இந்த முயற்சிக்கு என் அன்பும் வாழ்த்தும். தொடர்ந்து செயல்படுங்கள்.இயன்றால் தொகுப்பாக்குவோம்.