முப்பதாண்டு கால மனித உரிமைச் சிக்கல் அரசியல் விளையாட்டில் சிக்கித் தவிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரின் விடுதலை குறித்து 2014 பிப்ரவரி 19-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த பிறகே இது அரசியல்மயப்பட்டது. மூவரின் தூக்குத் தண்டனை உத்தரவை மறுபரிசீலித்து, தண்டனையைக் குறைக்கக் கோரி, குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, எடுத்த முடிவை மூவர் மரண தண்டனைக் குறைப்பு கோரிய வழக்கில் மனுவாகவும் தாக்கல் செய்தார்.
2014 பிப்ரவரி 18-ல் மூவர் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுளாகக் குறைத்தபோது குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432-ன் அடிப்படையில், உரிய அரசு தண்டனைக் கழிவு குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தீர்ப்பு வந்தது. மறுநாள், மூவரோடு ஏற்கெனவே அதே வழக்கில் ஆயுள் சிறை அனுபவித்துவந்த நால்வரையும் சேர்த்து எழுவரையும் விடுவிப்பது என அமைச்சரவையில் முடிவெடுத்து அதைச் சட்டமன்றத்திலும் அறிவித்தார்.
முக்கியத் திருப்பம்
இதற்கு முன்னர் வழக்கில் வேறு ஒரு முக்கியத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. “நான் பேரறிவாளனின் தடா ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவுசெய்யத் தவறினேன். தனக்கு ராஜீவ் கொலை சதி குறித்து முன்கூட்டியே ஏதும் தெரியாது என்று அவர் சொன்ன உயிரான வரிகளை, வழக்கு விசாரணைப் போக்கைக் குலைத்துவிடும் எனக் கருதி பதிவுசெய்யாமல் விட்டுவிட்டேன்” என விசாரணை அதிகாரி தியாகராஜன் பொதுவெளியில் சொன்னார். அதுவரையில் ஒரு தாயின் கோரிக்கையாகவே கருதப்பட்ட அற்புதம்மாளின் குரல், மறுக்கப்பட்ட நீதிக்கானது என்று உணரப்பட்டது. திமுக தலைவர் மு.கருணாநிதி மறுவிசாரணை கோரி அறிக்கை வெளியிட்டார்’. இந்தத் திருப்பம்கூட ஜெயலலிதாவிடம் பெரிய தாக்கத்தைத் தந்திருக்கலாம். அதன் நீட்சியாகவே அற்புதம்மாளுடனான அவரது சந்திப்பு நடந்தது.
எழுவர் விடுதலை முடிவைக் குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் கீழ் இல்லாமல், மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்டக் கூறு 161-ன்படி ஏன் எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் உண்டு. இதை கருணாநிதியும் தனது அறிக்கைகளில் வெளிப்படுத்தினார். குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் கீழ் தண்டனைக் குறைப்பு குறித்து ‘உரிய அரசு’ பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றமே வழிகாட்டியதால் ஜெயலலிதா அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 435-ல் மத்திய அரசின் ‘கருத்து’ கேட்க வேண்டும் என்றே உள்ளது. எனவே, மத்திய அரசால் பெரிதாகத் தனது முடிவுக்கு இடையூறு ஏற்படுத்திவிட முடியாது என்ற சட்ட விளக்கம் அவருக்கு வழங்கப்பட்டதாலும் இருக்கலாம்.
ஜெயலலிதாவின் தனி அக்கறை
எதுவாயினும், மூன்று நாட்களில் தனது முடிவை மத்திய அரசு தெரிவிக்கவில்லை எனில், தானே விடுவிக்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்த பின்னர் அனைத்துமே மாறிப்போனது. மாநில அரசின் கடிதத்துக்குப் பதில் சொல்லாமல், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி விடுதலைக்கு இடைக்காலத் தடையைப் பெற்றது. தான் எடுத்த முடிவுக்காகவும், மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதியை அமர்த்தி இறுதிவரை போராடினார். அன்றைய காலகட்டத்தில் ஜெயலலிதாவின் நேரடிப் பார்வையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த நீட், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆறேழு முக்கிய வழக்குகளில் ஒன்றாக எழுவர் விடுதலை வழக்கும் இருந்தது.
இறுதியில், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 435(1)ல் கூறப்பட்டுள்ள ‘கலந்தாய்வு’ என்பதை ‘ஒப்புதல்’ என்றே கொள்ள வேண்டும் என அரசமைப்புச் சட்ட அமர்வு டிசம்பர் 2, 2015-ல் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டத்தின்படி, எழுவரையும் விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் முடியாது என்றானது. தமிழக அரசின் கடிதம் தொடர்பில் வேறு ஒரு மூவர் அமர்வு முடிவெடுக்கும் என நீதிமன்றம் அறிவித்தபோது, ஜெயலலிதாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை நீடித்தது.
தொடர் முயற்சி
இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் ஜெயலலிதா அமைதியாக இருக்கவில்லை. 2016 மார்ச் 2-ல் மீண்டும் ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதினார். 2016-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆர்வம் செலுத்தினார். மத்திய அரசுக்குத் தொடர் அழுத்தங்கள் தந்தார். எழுவர் விடுதலையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜெயலலிதாவுக்குப் பிறகு, முதல்வர் பொறுப்பில் இருக்கும் பழனிசாமி இவ்விஷயத்தில் தீவிரம் காட்டத் தவறிவிட்டார். அரசமைப்புச் சட்டக் கூறு 161-ன்படி 2015 டிசம்பர் 30-ல் பேரறிவாளன் அளித்த விடுதலை கோரும் கருணை மனுவை மாநில அரசு பரிசீலிக்கலாம் என 2018 செப்டம்பர் 6-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த இறுதி விசாரணையில், ஜெயலலிதா காலத்தைப் போல் இல்லாமல் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் எவருமே ஆஜராகவில்லை. அடுத்த மூன்று நாட்களில் முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூடி, எழுவரையும் விடுவிக்கப் பரிந்துரைத்து, கோப்புகளை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் எழுவர் விடுதலை குறித்துப் பேசியது அதிமுக. கூறியவாறு கடந்த ஓராண்டு ஆட்சியில் இது குறித்து மத்திய அரசிடமோ குடியரசுத் தலைவரிடமோ முதல்வர் அழுத்தம் தரவில்லை. இதற்கிடையே, அற்புதம்மாளின் காத்திருப்பு 30-ம் ஆண்டில் நுழைந்திருக்கிறது. எழுவர் விடுதலையில் இனியும் நாம் அரசியல் சாயம் பூச வேண்டாம். ஒரு தாயின் இடைவிடாத அலைக்கழிப்புக்கு இந்த ஆண்டிலாவது தீர்வு கிடைக்கட்டும்.
கு.நெடுஞ்செழியன்