கல்விசார் சமூகத்தை கையாள்வதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆசிரியர்கள் தொடக்கம் பேராசிரியர்கள் வரையான கல்விச் சமூகத்தை அவர்களது வாழ்வியலை நடைமுறை போராட்ட வாழ்வியலோடு ஒன்றிணைத்து பயணித்து அவர்களை அவர்கள் சார்ந்த பிரச்சினைகளை நிர்வகிப்பதென்பது இலகுவான காரியம் கிடையாது.
எதிரிகள், துரோகிகளின் சதிப்பின்னல்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் தாண்டி எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த ஒரு நிர்வாக அமைப்பை கொண்டுசெல்வது துணிச்சலான விடயமும் கூட….
இவ்வாறான பல சவால்களை சாதாரணமாக கடந்த ஆளுமை சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் பொறுப்பாளர் ந. கண்ணன் (இளந்திரையன்)
2002ல் ஆரம்பமான சமாதான நடவடிக்கையுடன் மாணவர் சார்ந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டன.
யாழ் பரமேஸ்வரா சந்தியில் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் அலுவலகம் திறக்கப்பட்டது. யாழ் பல்கலைகழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த கண்ணன் அண்ணா அப்பேரவையின் பொறுப்பாளராக இருந்தார்.
சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை ஊடாக கண்ணன் அண்ணா மாணவர் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவை.
*குடாநாட்டில் பல கணிணி மையங்களை நிறுவி இலவச கணிணி கற்கைநெறிகளை மேற்கொண்டமை மற்றும் ஆங்கில வகுப்புக்களை நடத்தியமை.
*வறிய மாணவர்களின் கல்விக்கான உதவித்திட்டங்கள் மற்றும் கல்விக்கான உதவித் தொகையை மாதாந்தம் வழங்கியமை.
*சில வறிய மாணவர்கள், தவறான வழிகளில் பயணித்த சில மாணவர்களை பெற்றோரின் வேண்டுகோளுக்கு அமைய தனது மேற்பார்வையின் கீழ் கல்விகற்க வழிசெய்தமை.
*முன்னால் இலங்கை பொலிஸ் இராணுவ (தமிழ்) உத்தியோகத்தர்களது பிள்ளைகளை அழைத்து “உங்களது பெற்றார்கள் செய்தது அரச உத்தியோகம் அது தவறு கிடையாது. யாரும் தவறாக சித்தரிக்க இடம் கொடாமல் நீங்களும் எல்லா மாணவர்கள் போலவே ஒன்றாக இணைந்து பயணியுங்கள்” என்று அவர்களுடைய மனவாட்டத்தை களைத்து ஊக்கப்படுத்தியமை போற்றத்தக்க செயற்பாடு.
*பேரவையின் ஒரு பகுதியில் மாணவர்கள் தங்கி இருந்து கல்விகற்பதற்காக ஒழுங்குபடுத்தியமை, வெளியிடங்களிலும் மாணவர்கள் தங்கி கல்வி கற்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை.
*கா போ த சாதாரண/உயர்தர பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்களை ஒழுங்கு செய்தமை.
*கருத்தரங்குகள் மற்றும் கல்விசார் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து கொடுத்தமை.
*கல்விக் கண்காட்சிகளை நடத்தியமை. நூல்வெளியீடுகள் மற்றும் படைப்புக்களுக்கான ஊக்கப்படுத்தல். போன்ற பலதரப்பட்ட விடயங்களை குறிப்பிடலாம்.
பல்கலைக்கழகம், தொழில்நுற்பக் கல்லூரி, கல்வியற்கல்லூரி மற்றும் பாடசாலைகளில் இருந்த பிரச்சனைகளை இனம் கண்டு அதை நிவர்த்தி செய்வதில் முன்னின்று செயற்பட்டவர் கண்ணன் அண்ணா.
*யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தியமை.
*பல்கலைக்கழக விருந்துபசார நிகழ்வுகளில் விரும்பத்தகாத கழியாட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தியமை.
*மாணவ மாணவிகளின் விடுதிகள் மற்றும் தங்ககங்களில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அவற்றின் முறைப்பாட்டுக்கமைய கையாண்டமை.
*முறைகேடுகளில் ஈடுபட்ட சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்று, விசாரித்து சிக்கல்களை சீர் செய்தமை.
*பேரிடர் காலங்களில் அல்லது வறுமைநிலையில் உள்ள மாணவர்களின் குடும்பங்களுக்கு அத்தியவசிய உதவிகளை வழங்கியமை.
*சுனாமி அனர்த்தத்தின் போது மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழீழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மீட்பு பணிகளையும் உதவித்திட்டங்களையும் வழங்கியமை.
*வறிய மாணவர்களின் வேலை அற்ற பெற்றோருக்கு வேலைகளை ஒழுங்குபடுத்தி கொடுத்தமை.
*இலங்கை இராணுவத்தால் மாணவர்களிடையே விதைக்கப்பட்ட தவறான பழக்கவழக்கங்களை அடியோடு களைவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டமை.
*தமிழீழ அரசின் வரிவிதிப்பிலிருந்து மாணவர்களுக்கு வரிவிலக்கை பெற்றுக கொடுத்தமை.
*யாழ்மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சொல்வதற்கான அனுமதி (பாஸ்) நடைமுறையில் மாணவர்களுக்கான விசேட நடைமுறைகளை உருவாக்கியமை, இலகுபடுத்தியமை.
*உயர்கல்வி, வெளிநாட்டு கல்வியை தொடர்ந்தவர்களுகான உதவிகளை வழங்கியமை.
*போதைக்கு அடிமையான சில மாணவர்களின் பொற்றோரை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு வன்னியில் தங்கி வேலைசெய்வதற்கான ஒழுங்குகளையும் போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் பெற செய்தமை.
யாழ்மாவட்டத்தில் ஏதும் அசம்பாவிதங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்தால் உரிய இடங்களுக்கு சென்று நிலமைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
*மாணவிகள் மீதான வன்முறைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டை மேற்கொள்ளவும், உடனடியாக அப்பிரச்சினைகளை அம்மாணவிகளுக்கு பாதிப்பில்லாமல் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை.
*வெளிநாடுகளில் எமது மாணவர்கள் எதிர்நோக்கும் இடர்களை தீர்க்க ஆவன செய்தமை, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை.
*வெளிநாடுகளில் உள்ள கல்விசார்ந்த தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழீழ மாணவர்களுக்கும் புலம்பெயர் மாணவர்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டமை.
மாணவ மாணவிகள் தங்களுக்குள் ஏற்படும் எந்த பிரச்சனைகள் என்றாலும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையில் முறையிடலாம் என்ற வழக்கத்தை கொண்டு வந்ததுடன் முறையிட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி முறைப்பாட்டுக்கான தீர்வுகளை மிகச் சாதுரியமாக கையாண்டமை கண்ணன் அண்ணாவின் தனிச்சிறப்பு.
———
இது தவிர சமாதான காலத்தில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள், படுகொலைகள். துணை இராணுக்குழுக்களின் (EPDP) தமிழர் விரோத செயற்பாடுகள் போன்வற்றை சர்வதேச சமாதான முன்னெடுக்கும் தரப்புக்களிடம் (SLMM) ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியமை.
சமாதான முன்னெடுப்புக்களை குழப்பும் வகையான செயற்பாடுகளிலும் தமிழின படுகொலைகளிலும் இராணுவமும் துணைக்குழுக்களும் ஈடுபட்ட போது அவற்றிக்கு எதிராக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதிவழி போராட்டங்கள் பேரணிகளில் கலந்துகொண்டமை.
விடுதலையிலும் சமாதானத்திலும் மக்களிற்கு இருந்த ஆர்வத்தையும் விருப்பத்தையும், பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து இலட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி பொங்குதமிழ் நிகழ்வுகள் மூலம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியமை.
பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகளை தமிழீழத்தின் பல மாவட்டங்களில் ஒழுங்குசெய்தமை. புலம்பெயர் சமூகமும் பொங்குதமிழ் எழுச்சியை மேற்கொள்ள துணையாய் இருந்தமை.
——
இலங்கை அரசுடன் மூன்றாம் தரப்பு அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவிலும் கண்ணன் அண்ணா அங்கம் வகித்திருந்தார்.
2005ம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் யாழ் மாவட்டத்தில் சர்வதேச மாணவர் பேரவையின் செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இலங்கை இராணுவத்தாலும் ஈபிடிபி ஒட்டுக்குழுவாலும் பலமுறை தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டதுடன் மாணவர்களின் இலவச கற்கை நெறிக்கான கணிணிகள் உட்பட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன.
பேரவையில் இருந்து செயற்பட்டவர்கள், கல்விகற்றவர்கள் நேரடியாக உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படியான நிலையிலும் யாழ்மாவட்டத்தை விட்டு வெளியேறாது பேரவை சார்ந்த பணிகளை எந்த தொய்வும் இன்றி கண்ணன் அண்ணாவால் முன்னெடுக்கப்பட்டது.
2005 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் யாழ்மாவட்ட அரசியல் பணிகளையும் தனிஒருவராக நின்று பேரவை உறுப்பினர்களின் துணையுடன் மேற்கொண்டார்.
2005ல் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டது. அதற்கு தன்னாலான உதவிகளை பேரவை ஊடாக செய்தார்.
இராணுவ வன்முறைகளும் படுகொலைகளும் மலிந்திருந்த 2005ம் ஆண்டில் யாழ் மாவட்டத்தின் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களுக்குமான மாவீரர்தின ஏற்பாடு கண்ணன் அண்ணா தலைமையிலான சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்டது. மேலும் அன்று தேசியத்தலைவரின் அனுமதியுடன் வன்னியில் இருந்து மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த யாழ்மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் இளம்பருதி அண்ணா மற்றும் லெப் கேணல் மகேந்தி அண்ணா உட்பட்டோருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரவையினரிடம் வழங்கப்பட்டதும் கண்ணன் அண்ணாவின் பொறுப்பான ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் புதிய ஒரு பரிநாம வளர்ச்சிக்குள் சென்றுகொண்டிருந்த காலம்.
எதிர்கால பேச்சுவார்ததைகள்,
அரசியல் பணிகள் மற்றும் இலங்கை அரசியலில் தமிழர்களின் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திய வகிபாகத்தை அதிகரிப்பதற்கும்,
இலங்கை அரச இயந்திரத்தினுள் தமிழர்களின் ஆளுமையை அதிகரிப்பதற்காகவும் மாணவர் பேரவை ஊடாக பல மாணவர்களை பல்துறைகளில் ஈடுபடுத்தியமையின் பெரும்பங்கு கண்ணன் அண்ணவையே சாரும்.
தேர்தல் காலங்களில் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தமது ஆதரவை தெரிவித்தமையும் அவர்களின் வெற்றிக்காக பங்காற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
போர் உக்கிரம் பெற்ற காலப்பகுதியில் வன்னிக்கு அழைக்கப்பட்ட கண்ணன் அண்ணா தமிழீழ மாணவர் அமைப்பின் பொறுப்பாளராக 2009ன் இறுதிவரை பணியாற்றினார்.
தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அண்ணாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கண்ணன் அண்ணவின் தலைமையில் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இயங்கியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கண்ணன் அண்ணா அவரது தனித்தன்மை காரணமாக தமிழீழ நிர்வாக பிரிவுகளிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக விளங்கினார்.
மாணவர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக உரிய பிரிவுகளுக்கு தெரியப்படுத்தி உடனடித் தீர்வுகாணும் நிர்வாக திறமை அவரிடம் இருந்தது. அவரின் திறமையால் அவரின் கீழ் பணியாற்றிய அனைவரும் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.
பேரவையின் செயற்பாடுகள் இலங்கை அரசியலில் சில நகர்வுகளை கல்வியியலினுடாக மேற்கொள்ள காலம் கனிந்திருந்த வேளை உலக நாடுகளின் நயவஞ்சகத்தினால் தமிழீழ தனியரசு சிதைத்தழிக்கப்பட்டது.
ஆனாலும் தமிழீழ விடுதலைபோராட்டம் விதைத்த மாணவர்களின் தமிழ் தேசியம் சார்ந்த சிந்தனை ஓர் நாள் மாபெரும் சக்தியாக மாறி தனது இலக்கினை அடைந்தே தீரும்!
#தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்!!!
வா.அரவிந்தன்
#குறிப்பு; கண்ணன் அண்ணாவின் பெயர் 2009ல் வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்தவர்களின் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை மற்றும் கண்ணன் அண்ணாவின் செயற்பாடுகளை தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது பேரவா. கண்ணன் அண்ணாவுடன் பணியாற்றிய அனுபவத்தில் நினைவில் உள்ளவற்றை இயன்றவரை சம்பவங்களை உறுதிப்படுத்தி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
இது முழுமையான குறிப்பு கிடையாது. இதில் ஏதாவது திருத்தங்கள்/இணைக்கவேண்டியது இருந்தால் தெரிவிக்கவும்.
தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு பேரவையின் தேவை அதிகமாகவே உள்ளது, அதை செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். இருப்பின் மேற்குறிப்பிட்ட விடயங்களை மனதில் இருத்தி எமது மாணவ சமூதாயம் முன்னேற்றபாதையில் பயணிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.