மௌனன் யாத்ரிகா :- சங்கக் கவிதைகளைப் பயிற்றுவிக்கும்போது மனித வாழ்வை, அவர்தம் உணர்வுகளை, சமூகக் காட்சிகளை, பல்வேறு தளத்தில் இயங்கும் அதன் செவ்வியல் குணத்தைக் குறித்தெல்லாம் விரிந்துபட்ட நிலையில் மாணர்களோடு உரையாட முடிகிறது. ஆனால், சமகாலக் கவிதைகளைப் பயிற்றுவிக்கும்போது சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த மௌனம்தான் வகுப்பில் நிலவுகிறது. இப்படி நிகழ்வது ஏன்? (கவிஞராக மட்டுமின்றி ஓர் ஆசிரியராக இருப்பதாலும் இந்தக் கேள்வி உங்களுக்கு வருகிறது.)
தி.பரமேசுவரி :- சங்கக் கவிதைகள் திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அதில் நிலமும் பொழுதும் பறவைகளும் பூக்களும் விலங்குகளுமான இயற்கையின் பங்கு இருக்கிறது. அதன் ஊடாக மனிதர்களின் நுண்ணுணர்வுகள் பேசப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இழைகளில் ஊடாடி மனித வாழ்வைப் பேசுகின்றன. எனவே அவற்றை பேசப் புகும்போது அக்காலச் சூழல், அதன் பின்னணி, அதில் தொழிற்படும் வாழ்வு என இக்காலத்தில் நின்று அதன் செவ்வியல் தன்மையை விரிவாகப் பேச முடிகிறது. சமகாலக் கவிதைகள் நிலங்களில் இருந்து வெளியேறி மனவெளியில் உலவுகின்றன. புறச் சூழலின் இறுக்கம் அகத்தை மேலும் இறுக்கமாக்குகிறது. ஒருவகையில் அப்போதை விடவும் பன்மைக்குரல்கள் எழுந்த காலம் என்று இக்காலத்தைச் சொல்ல முடியும். எழுத வந்திருப்பவர்களில் பல்வேறு தரப்பினர் இருக்கின்றனர். பெண்ணியம், தலித்தியல், சூழலியம் என ஒடுக்கப்பட்ட குரல்கள் மேலெழுந்திருக்கின்றன. சமகாலக் கவிதைகளைப் பயிற்றுவிப்பதற்கு அதற்குள் வாசிப்பு தேவை. இன்றைய கல்விச் சூழலில் அதற்கு இடமில்லை. இன்றைய சூழல் குறித்தும் கவிதையில் அதன் பங்கு பற்றியும் அதன் நோக்கம் குறித்தும் மாணவர்களுக்கு கற்பிப்பதில் வேறு வேறு முறைகளை முயல வேண்டும். முக்கியமாக மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதே அதைச் சாத்தியப்படுத்தும்.
மௌனன் யாத்ரிகா :- கவிதை எழுதுவது ஓர் உள்ளக் கிடக்கை, ஓர் ஆறுதல், ஒரு வடிகால் என்றெல்லாம் கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? குறிப்பாக தமிழ்க் கவிதை மரபில் இந்த மாதிரியான போக்கு புதுக்கவிதைக் காலத்துக்குப் பின்புதான் தொடங்குகிறதென்று நினைக்கிறேன். அதுவும் நிகழ் காலத்தில் அச்சிந்தனை கொடிகட்டிப் பறக்கிறது. உங்கள் கருத்து என்ன?
தி.பரமேசுவரி :-எனக்குக் கவிதை எழுதுவது ஓர் உள்ளக்கிடக்கை ஆகவும் ஆறுதலாகவும் வடிகாலாகவும் இருந்திருக்கிறது. வெளிப்படுத்த முடியாத ஒடுக்கப்பட்ட உணர்வுகளை, வெளிப்படுத்த முடியாத சூழலில், கட்டுப்படுத்த முடியாத உணர்வுச் சிதறல்களிலிருந்து பொங்கும் சொற்களை நான் காகிதத்தில் எழுதிப் பூட்டியிருந்தேன். அவற்றுள் சில கவிதைகள் ஆகி இருக்கலாம். ஆனால் இப்படியான மனக்குமுறல்கள் எல்லாமும் கவிதைகள் அல்ல என்று பிற்பாடு உணர்ந்தேன். அதுமட்டுமல்ல கவிதை எழுதுவது; என் வலி என்பது என்னுடையது மட்டும் அல்ல என்பதும் புரிந்தது. இன்னும் விரிவான பார்வையில் உலகில் உள்ள அத்தனையையும் கவிதைக்குள் கவனிக்க முடியும். நம்முடைய அகமும் புறமும் அகப்புறச் சூழலுடன் முரண்பட்டும் பிணைந்தும் எழும் தீவிரமே கவிதை என்பேன். கவிதை எனக்குத் தரும் அனுபவத்தை எழுத்தாக்கத் தொடர்ந்து முயல்கிறேன்.
மௌனன் யாத்ரிகா :- ஒரு கலைப்படைப்பு ரசிகரையோ, பார்வையாளரையோ, வாசகரையோ பொருட்படுத்த தேவையில்லை. அது தன்னளவில் ஒரு கலையாக நின்றால் போதும் என்கிற கருத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள்?
தி.பரமேசுவரி :-கலைப்படைப்பு ரசிகரையோ பார்வையாளரையோ வாசகரையோ பொருட்படுத்த தேவையில்லை. அது தன்னளவில் ஒரு கலையாக நின்றால் போதும் என்பதை கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்னும் பழைய விவாதம் என்றே புரிந்து கொள்கிறேன். கலைப்படைப்பு என்பதை எழுத்தாக எடுத்துக் கொண்டு என்னளவில் விடை தேடுகிறேன். இந்தக் கேள்வி பாரதிக்கோ ஜெயகாந்தனுக்கோ புதுமைப்பித்தனுக்கோ இல்லை. அவர்களிடமிருந்து படைப்பு எப்படிப் போய்ச் சேர சேர வேண்டுமோ அப்படிச் சென்று சேர்ந்தது. உடனடிப் பயன் மதிப்பீடுகளைக் கருதாது காலம் கடந்தும் நம்மை வழிநடத்தும், மேன்மை செய்யும் இலக்கியங்கள் நம்மை நாடி வரும்; நாம் அதை நாடிச் செல்வோம். இலக்கியத்தில் ஆர்வம் இருக்கக்கூடிய அரசியலாளர்களுக்கே இத்தகைய சந்தேகங்கள் எழுகின்றன. அது தன்னளவில் கலையாக நின்றாலே போதும் என்று சொன்னால் அவர்கள், பிறரை மதிக்க மாட்டார்கள் என்று பொருளில்லை.
சக கவிஞர் – 21.