மௌனன் யாத்ரிகா :- தமிழ் எழுத்துச் சூழலை நாலா பக்கமும் ஆண்கள் சூழ்ந்து கொண்டு நின்ற காலத்தில் அந்த வேலியில் மிகப்பெரும் உடைவை ஏற்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் நீங்கள். இப்போதும் அந்த வேலி சிதைப்பு தேவைப்படுகிறதா?
எப்பொழுதுமே அந்தச் சிதைப்பு தேவைப்படுகிறது, தேவைப்பட்டுக்கொண்டு தான் இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். மேலும், இன்று பெண் என்னும் அடையாளப் பாலியல் இருப்பினால் மட்டுமே நிகழ்வது அன்று; கருத்தியலாலும் நிகழ்வது என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பல பெண் எழுத்தாளர்கள், “நான் பெண் ஆனால், பெண்ணிய எழுத்தாளர் அல்ல”, என்று குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். சமூகவியலும் காலங்காலமான பெண்ணுரிமைக் கருத்தியலுக்கான பெண்களின் போராட்டங்களின் வரலாறும் அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். தனக்கானது என்று ஏதுமில்லை இங்கே.
மற்றெல்லா துறைகளிலும் ஒவ்வொரு பெண்ணும் நிகழ்த்தும் ஒவ்வோர் அடிச்சிதைப்பும் கூட, பெண் எழுத்த்திற்கு, இலக்கியத்திற்கு வெகுவான பலம் சேர்த்திருக்கிறது என்பதையும் பெண்கள் உணரவேண்டும்.
ஆண்களை எதிராளிகளாகப் பார்க்கும் மேலைத்தேயக் கருத்தியலில் இருந்து நாம் பெருமளவு முன்னகர்ந்திருக்கிறோம். இங்கிருக்கும் சாதிய அமைப்பை விடச் சிக்கலானது இல்லை பெண் – ஆண் பாலியல் பிளவு. இந்தச் சாதிய அமைப்பு, பெண் – பெண்ணுக்கிடையிலேயே சிண்டு முடிந்துவிடக்கூடியது; பெண்ணுக்கு பெண்ணை எதிராக்கக் கூடியது.
மௌனன் யாத்ரிகா :-நமது பண்டைய கவிதை மரபு வெறும் வாழ்க்கைப்பாடுகளையும், பண்பாட்டுக்கூறுகளையும் மட்டும் கொண்டதல்ல. மாறாக, இயற்கையியல்(திணை சார்ந்த கருப்பொருள்), அறிவியல், மருத்துவம், தத்துவவியல் அனைத்தும் உள்ளடக்கியது. உங்களுடைய அண்மைப் பிரதிகள் இயற்கை மற்றும் மருத்துவம் சார்ந்த சாரம்சத்தை கவனத்தில் கொண்டுள்ளன.அதுகுறித்து சிறு அறிமுகம் கொடுங்கள்.
‘அண்மைப் பிரதிகள்’, என்று இல்லை. தொடக்கத்திலிருந்தே, வெளியாகி இருக்கும் பதின்மூன்று தொகுப்புகளிலுமே அப்படியான கலவையாகத் தான் என் கவிதைகள் நிறைந்திருக்கின்றன. இப்பொழுது தான் கவனம் பெறுகின்றன, வாசிப்பிற்கு வருகின்றன, உரையாடலை ஏற்படுத்துகின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்.
‘நான்’, என்று இல்லை. எல்லா கவிஞர்களிடமுமே இதைக்காணமுடியும். தம் பின்னணியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஏதோ ஒரு துறை அல்லது கருத்தியல் சார்ந்த ஆழத்தில் அதிக விசையுடன் அவர்கள் நீச்சலுக்கு இறங்கியதில் தான் கவிஞர்களாகியிருப்பார்கள். கவிஞர்கள் என்றாலே அப்படித்தான். தனித்த இருப்பு கொண்டது அன்று, கவிஞராக இருப்பது. இந்தப் பூவுலகத்தினுடனான தன் இணைப்பை மொழிமயமாக்கிக் கொண்டே இருப்பது.
மௌனன் யாத்ரிகா :-கவிதையை எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்தச் சிந்தனை பாரதிக்குப் பிறகு தற்காலத்தில் அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்கள் பார்வை என்ன?
“கவிதையை எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்”, என்ற சிந்தனை இன்று அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ‘பாரதிக்குப் பிறகு தற்காலத்தில்’, என்பதில் வேறுபடுகிறேன். காலந்தோறுமான படைப்பிலக்கிய அலையைப் புதுப்பிப்பதில் கவிஞர்களின் பங்கு பெருமளவில் இருந்திருக்கிறது.
கவிதைத்தளத்தில் பாரதிக்குப் பிறகு எவ்வளவோ இங்கே நிகழ்ந்துவிட்டன. என்றாலும், கவிஞர்களுக்கான சமூக முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் தான் இது பாரதிக்குப் பிறகு என்று இன்னும் எங்கேயோ தூரத்திலேயே நிறுத்தப்பட்டுவிடுகிறது.
நாவல், சிறுகதைத் தளங்களில் நிகழாத, நிகழ்த்த முடியாத பெரிய எழுச்சிகளையும், புரட்சிகளையும், மறுமலர்ச்சிகளையும் நவீன தமிழ்க்கவிஞர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர்.
கவிஞர் என்றால் பிழைக்கத் தெரியாத அசடு என்பதன்று அர்த்தம். கவிஞர் என்றால் அவர் தான் ஆகச்சிறந்த அறிவுஜீவி; அச்சமூகத்தின் அறிவு மரபின் நீட்சியும் அடையாளமும் என்றே அர்த்தங்கள்.
கவிதைத் தளத்தில் கேள்விகளை இயக்கிக்கொண்டிருப்பதற்கு நன்றிகள்! மெளனன் யாத்ரீகா