துணிவுள்ளவனுக்கு அச்சமில்லை என்பது கொன்பியூசியசின் போதனையாகும். சீனாவின் புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத் தக்கன. உலகிலேயே பெரிய மக்கள் தொகை, உலகிலேயே அதிக அளவு வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு, இரண்டாவது பெரிய பொருளாதாரம், மிகப் பெரிய படைத்துறை ஆளணி, இரண்டாவது பெரிய படைத்துறை, விண்வெளியில் பல சாதனைகள், அதிக நீர் மூழ்கிக்கப்பல்கள், மிகப் பெரிய அருங்காட்சியகம், மிகப் பெரிய நீன் மின் உற்பத்தி நிலையம், மிகச் சிறந்த தொடருந்துக் கட்டமைப்பு, உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் மிகப் பெரிய வர்த்தகம், உலக தொழில்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் செய்யப்படுகின்றது, இரண்டாவது பெரிய அந்நிய முதலீடு இவை யாவும் சீனா ஆட்சியாளர்களுக்கு பெருமையை மட்டுமல்ல துணிச்சலையும் கொடுக்கக் கூடியவை.
2020 மே மாதம் சீனா வியட்னாமின் படகை மூழ்கடித்தது, தைவான் வான்பரப்புக்குள் தன் போர் விமானங்களைத் தொடர்ச்சியாக அனுப்பியது, ஹொங் கொங் மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறி அங்கு தன் அதிகாரப் பிடியை இறுக்கும் சட்டத்தை நிறைவேற்றியது, இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களை அதிகரித்தது, அமெரிக்காவுடன் ஒரு வார்த்தைப் போரைச் செய்து வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்துகின்றது.
இரசியாவும் அதைத் தொடர்ந்து ஜப்பானும்
1914இல் இருந்து 1918வரை நடந்த உலகப் போரின் முன்னரும் பின்னரும் பிரித்தானிய உலகப் பெருவல்லரசாக இருந்தது. 1929இல் இருந்து 1933வரை நிலவிய பொருளாதாரப் பெருமந்த நிலைக்குப் பின்னர் அதன் நிலை தேயத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தது. அமெரிக்காவின் அந்த நிலைக்கான சவால் சோவியத் ஒன்றியத்திடமிருந்து இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா உலக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது போல் கொவிட்-19 தொற்று நோய்ப் பிரச்சனையின் பின்னர் சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தப் போகின்றதா? 1980களில் இனி ஜப்பான் உலகை ஆளப் போகிறது சொன்னவர்கள் பலர்.
பின்னர் முப்பது ஆண்டுகளாக அது பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்தது. ஜப்பானின் தனிநபர் வருமானம் அதிகரித்த போது ஜப்பானிய ஊழியர்களின் வேதனம் அதிகரித்தது, அதனால் ஜப்பானின் உற்பத்திச் செலவு அதிகரித்தது. அந்தத் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக ஜப்பானின் மக்கள் தொகையில் முதியோர் அதிகமாயினர். அதனால் உலகப் பொருளாதார அரங்கில் ஜப்பான் தனது போட்டி போடும் திறனை இழந்து. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் பனிப்போர் நடந்த போது சோவியத் ஒன்றியம் உலகை ஆளப்போகின்றது என்றனர்.
சோவியத் ஒன்றியம் அமெரிக்காவுடன் உலக ஆதிக்கத்திற்காக போட்டியிடும் போது அதன் மொத்த தேசிய உற்பத்தி அமெரிக்காவின் அமெரிக்காவினுடைய மொ.தே.உஇன் அரைப்பங்காக இருந்தது, தனிநபர் வருமானம் காற்பங்காக இருந்தது. ஆனால் படைத்திறையில் அமெரிக்காவிற்கு ஈடாக நின்றது. அதன் பொருளாதாரப் பின்னடைவால் அது பனிப்போரில் பின்னடைவைக் கண்டதுடன் சோவியத் ஒன்றியம் சிதைவடைந்தது.
அனுபவங்களைக் கருத்தில் கொண்ட சீனா
இரசியாவினதும் ஜப்பானினதும் அனுபவங்களை சீனா நன்கு புரிந்து வைத்துள்ளது. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் தனது பொருளாதாரத்தையும் படைத்துறையையும் தொழில்நுட்பத்தையும் அது உறுதியாக மேம்படுத்தி வருகின்றது. அதனால் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் சீனாவால் அமெரிக்காவிற்கு வரும் அச்சுறுத்தல் சோவியத் ஒன்றியத்திடமிருந்த வந்த அச்சுறுத்தலிலும் பார்க்க கையாள்வதற்கு சிக்கலானதாக இருக்கின்றது என்பதை உணர்ந்துள்ளனர். சீனர்களின் சராசரி சம்பளம்1990-ம் ஆண்டு $150, 2005-ம் ஆண்டு $2800, 2015-ம் ஆண்டு $8900, 2020-ம் ஆண்டு $13500. இந்த பன்மடங்கு அதிகரிப்புக்கு மத்தியிலும் சீனா உலகில் முதற்தர உற்பத்தி நாடு என்ற நிலையை இழக்கவில்லை. ஊழியர்களின் வருவாய் அதிகரிப்பை உற்பத்தித் திறன் அதிகரிப்பால் சீனா ஈடு செய்ய முயற்ச்சிக்கின்றது. இதனால் ஜப்பானைப் போல் சீனா தொடர்ச்சியாக பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கப் போவதில்லை.
அமெரிக்கா எதிர்பார்த்தது போல் சீனா நடக்கவில்லை
1979-ம் ஆண்டு நிக்சன் – கிஸ்ஸிங்கர் நிர்வாகம் சீனாவுடனான அமெரிக்க உறவை உயர்த்திய போது சீனா உள்நாட்டில் மக்களாட்சி நோக்கிய நகர்வுகளை உருவாக்கும் என்றும் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படமாட்டாது என்றும் அமெரிக்கா தரப்பில் நம்பப்பட்டது. 2011-ம் ஆண்டு சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் இணைய அமெரிக்கா அனுமதித்த போது சீனா மேற்கு நாடுகளில் உள்ளது போன்ற பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இவை ஏதும் இனி நடக்காது என்பதை சீன அதிபர் ஜீ ன்பிங்கின் தொடர்ச்சியான பல நடவடிக்கைகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அமெரிக்க வர்த்தக மற்றும் படைத்துறை இரகசியங்களை சீனா தொடர்ச்சியாக திருடிக் கொண்டிர்க்கின்றது என அமெரிக்கர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில்தான் அமெரிக்கா சீனாமீது வர்த்தகப் போரை 2018ஆரம்பித்ததுடன் 2019இல் தொழில்நுட்பப் போரை ஆரம்பித்தது.
கடைசியாக அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்ப்பு மருந்து ஆராய்ச்சிகளைக் கூட சீனா திருட முயற்ச்சிக்கின்றது என்றும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2020 பெப்ரவரியில் நடந்த மியூனிச் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்ப்பர் சீனாவை “அதிகரிக்கும் அச்சுறுத்தல்” என விபரித்ததோடு மற்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுடன் ஒரு மோதலுக்குத் தயாராக வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். 2020 மே மாதம் சீன அதிபர் சீனப்படைகளை ஒரு போருக்கு தயாராகும் படை அறைகூவல் விடுத்தார்.
இந்தியாவை மிரட்டும் சீனா?
2020 மே மாத நடுப்பகுதியில் சீன அரச ஊடகம் தற்போதைய சூழலில் சீனா மூன்று கேந்திரோபாயங்களை முன்னெடுக்கின்றது என்றது. 1. அமெரிக்காவைக் கையாளுதல், இந்தியா, ஜப்பான், இரசியா உள்ளிட்ட அயல்நாடுகளுடனான உறவிற்கு முன்னுரிமை கொடுத்தல், சீன நிகழ்ச்சி நிரலின் அடிப்படையாக வளர்முக நாடுகளை கருதுதல். ஆனால் சீனப் படைகள் இந்திய எல்லைகளில் அத்து மீறுவது சீனாவின் இரண்டாவது கொள்கைக்கு முரணாக இருக்கின்றது. அமெரிக்காவின் வெளியுறவுச் செயற்பாடுகளை “ஊரை அடித்து உலையில் போடுதல்” எனவும் சீனாவின் செயற்பாடுகள் “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என்வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?” எனவும் விபரிக்கலாம். சீனா தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இந்தியா வரவேண்டும் என எதிர்பார்க்கின்றது. கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் இந்தியா சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நிற்கின்றது. தைவானை உலக சுகாதார நிறுவனத்தில் இணைக்க வேண்டும் என இந்தியா கருதுகின்றது.
கொவிட்-19 தொற்று நோய்க்கு சீனாதான் காரணம் என இந்தியாவும் கருதுகின்றது. இவற்றால் சினமடைந்த சீனா மோடி அரசுக்கு இந்திய மக்களிடையே அவமதிப்பை ஏற்படுத்த எல்லைப் படை நகர்வுகளை மேற்கொள்கின்றது. சீனாவின் நிபந்தனைகளுக்கு மோடி அரசு பணியாவிடில் ஒரு சிறிய போரை சீனா இந்திய எல்லையில் செய்யத் துணிந்து நிற்கின்றது. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் (சிறப்பு அடையலாம் என்றாலும் சிறப்பற்றதை செய்யமாட்டார் சிறப்புடன் திடமான மனிதனாய் வாழ வேண்டுபவர்.)
பொருளாதார பேரரசு
சீனா தனது பட்டி+பாதை முன்னெடுப்பில் (BELT & ROAD INITIATIVE)138 நாடுகளையும் முப்பது பன்னாட்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்தியுள்ளது. 2027-ம் ஆண்டளவில் இந்தத் திட்டத்திற்கு சீனா செய்யும் மொத்தச் செலவு 1.2ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது சீனாவை ஒரு பொருளாதார ஏகாதிபத்திய நாடாக்கும் முயற்ச்சி எனவும் சீனாவை ஒரு பொருளாதாரப் பேரரசாக்கும் திட்டம் எனவும் விமர்சிக்கப்படுகின்றது. இன்னொரு புறம் சீனா இந்த நாடுகளுக்கு உயர்வட்டிக் கடன்களை வழங்கும் பொறிக்குள் சிக்க வைத்து அந்த நாட்டின் வளங்களைத் தனதாக்கும் முயற்ச்சி எனவும் விமர்சிக்கப்படுகின்றது. சீனாவின் எதிரிகள் இந்தத் திட்டத்தை முறியடித்து சீனாவிற்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்த முயற்ச்சிக்கலாம். இந்த நாடுகளை சீனா பொருளாதார அடிப்படையில் சுரண்டுகின்றது என்ற பரப்புரையை சீனாவின் எதிரிகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர்.
அந்த நாடுகளில் ஒரு புரட்சிகர அரசு பொறுப்பேற்று பன்னாட்டு நியமங்களை மீறி அங்குள்ள சீனச் சொத்துக்களை அரசுடமையாக்கலாம். உதாரணத்திற்கு இலங்கையில் ஒரு அரசு பதவியேற்று தற்போது சீனாவிற்குச் சொந்தமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசுடமையாக்கி அதில் சீனாவிற்கு எதிரான நாடுகளை தளம் அமைக்க வழங்கலாம். இது போன்ற நடவடிக்கைகளால் சீனா தனது முதலீடுகளை முற்றாக இழக்கலாம் என்பதையிட்டு சீனா அஞ்சாமல் இருக்கின்றது.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை
கொவிட்-19 தொற்று நோய்த்தாக்கம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்பிலும் பார்க்க குறைந்த அளவு பாதிப்பையே சீனாவிற்கு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி உலகின் மொத்த உற்பத்தியின் மூன்றி இரண்டு பங்கு என்ற உயர்ந்த நிலையில் இருந்த நிலையில் இருந்தது. அதை அடிப்படையாக வைத்து அமெரிக்கா தனது உலக ஆதிக்கத்தைக் கட்டி எழுப்பியது.
அப்போது மற்ற முன்னணி நாடுகள் ஒரு போர் செய்து சலித்துப் போயிருந்தன. இப்போது அந்த மாதிரியான நிலையில் சீனா இல்லை. படை, குடி, கூழ், ஆகியவை சீனாவிடம் சிறப்பாக இருந்தாலும் நட்பும் அரணும் அமெரிக்காவிற்கு இருப்பது போல் சீனாவிற்கு இல்லை.