யாழ்.மாவட்ட கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எமது சமுதாயத்தின் எதிர்காலம் சூன்யமயமாகிவிடக்கூடாது என்பதை மனதில் நிறுத்தி, அதிபர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் தலைமையில், யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட தீவகம், யாழ்ப்பாணம், தென்மராட்சி மற்றும் வடமராட்சி கல்வி வலயங்களுடனான கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்கள் 18-06-2020 அன்று வியாழக்கிழமை யாழ்.மாநகரசபை பொதுநூலக கேட்போர்கூடத்தில் காலை 9:15மணி தொடக்கம் மாலை 5மணி வரை ஒவ்வொரு வலயத்திற்கும் தனித்தனியாக இடம்பெற்றிருந்தன
வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் உதவிச்செயலாளர், மாகாணக் கல்வித் திணைக்கள மேலதிக பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
இதன்போது ஒவ்வொரு வலயங்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்பான நிகழ்த்துக் காட்சி அளிக்கைகளை பார்வையிட்டு கல்வி அபிவிருத்திக்கான அதிபர்களின் செயற்பாட்டு திட்டங்கள் மற்றும் கருத்துக்களை ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது ஆளுநர் தெரிவித்ததாவது,
நமது மாகாண கல்வி வீழ்ச்சிக்கு யுத்தம் நிமித்தமான இடப்பெயர்வுகள், சமூகப் பொருளாதார இடர்பாடுகள், போக்குவரத்துப் பிரச்சினைகள், முறையான வளப்பகிர்வின்மை போன்ற காரணங்கள் இருக்கின்றனவாக உணர்கின்றேன்
வியாபாரத்திலும் கல்வியிலும் முன்னோடிகளாக நின்றவர்கள் தீவக மக்கள். அந்நிலையை மீண்டும் நாம் கொண்டுவர வேண்டும். பிரச்சினைகளைத் தள்ளி வைத்து மீண்டும் உரமேற்றி அம்மக்களை முன்னேற்ற ஆசிரிய சமூகம் ஒத்துழைக்க வேண்டும். வறுமை நிலையிலுள்ள குடும்பங்களைக் கண்டறிந்து அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவ வேண்டும்.
மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துவதற்கான காரணங்களை இனங்கண்டு மீண்டும் அவர்களைப் பாடசாலைக்கு அழைத்து வந்து கல்வி பயில வைக்க வேண்டும். ஏனென்றால், இவர்கள்தான் ஏனைய மாணவர்களை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகக் குற்றங்களில் ஈடுபட்டு சமுதாயத்தையும் சீரழிக்கிறார்கள். பிள்ளைகளின் உளநிலையைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறியாமல் இருப்பதால்தான் அவர்கள் ஆர்வம் குறைந்து கல்வியை இடைநிறத்தம் செய்கின்றார்கள்
நமது சமுதாயத்தின் எதிர்காலம் சூனியமாக மாறிவிடக்கூடாதென்பதற்காக கல்விச் சமூகம் மிகவும் பொறுப்போடு செயல்பட வேண்டும். தனிப்பட்ட நலன்களை விடுத்து அர்ப்பணிப்புடன் பிரச்சினைகளைக் கழைந்து மாணவ சமூகத்திற்காக ஆசிரிய சமூகம் பாடுபட வேண்டும். அவ்வாறு செயற்படுகின்றபோது, நமது சமூகம் நிச்சயம் வளர்ச்சியடையுமென்பதை நான் நம்புகின்றேன்
ஒரு காலத்தில் கல்வியென்றால் நமது நாட்டில் மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கும் முதலில் நினைவிற்கு வருவது யாழ்ப்பாணம் தான். அப்பெருமையை இந்த மண் இழந்துகொண்டிருக்கிறது. முன்னிலையிலிருக்கிற யாழ்பாணக் கல்விவலயம் ஏனைய கல்வி வலயங்களையும் முன்னேற்றுவதற்கு உதவ வேண்டும். சமூக ஒழுக்கத்தை இளைய சமுதாயத்திடம் கட்டியெழுப்ப வேண்டும். பாடசாலைகளின் உட்கட்டமைப்புத் தேவைகளை இனங்கண்டு முழு அறிக்கையொன்றை கல்வி அமைச்சினூடாக சமர்பித்தால்; ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய உதவிகளைப் பெற்றுத்தர முயற்சிக்கின்றேன்
யுத்த காலகட்டத்தில் கூட நமது மாணவர்கள் நன்றாகப் படித்தார்கள். யாழ்பாணம் கல்வியின் தலையென்றும் வடமராட்சியும் தென்மராட்சியும் மூளையென்றும் ஓரு காலத்தில் சொல்வார்கள். ஆனால் அதன் இன்றைய நிலை கவலைக்கிடமாகவுள்ளது. அரச வேலைக்குத்தகுதியான பட்டதாரிகள் உருவாக்கப்படவில்லை. பட்டதாரிகள் படித்த துறையில் அரச வேலைகளில்லை. இதற்குக் காரணம் கல்வித்துறை தகுந்த பாடரீதியான வல்லுநர்களை உருவாக்கத்தவறியமையே ஆகும்
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். கல்வி இடைவிலகலை மட்டுப்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அவர்கள் விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பாடங்களைப் படிக்க வேண்டும். மாணவர்களுக்கேற்ப கற்பித்தல் இருக்க வேண்டும். மாணவர்களின் மனநிலையோடு இணைந்து சென்று கற்பிக்க வேண்டும். கல்வித்துறையில் மாற்றத்தினை ஏற்படுத்தினாலேயே ஏனைய எல்லாத்தையும் மாற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதனால் தான் கல்வித்துறையோடு கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றேன் என்றார்.