காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக அம்பாறை – பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொத்துவில் முஹுதுமகா விகாரையை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக நேற்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணி அளவீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் சார்பாக 5 பேரை பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு இன்று காலை 9.30 மணிக்கு வருமாறு பிரதேச செயலாளர் நேற்று முன்தினம் (18) அறிவித்திருந்தார்.
இதன்போது, பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக கலகத்தடுப்பு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, பொத்துவில் முஹுதுமகா விகாரையை அண்மித்த பகுதியில் நேற்று காணி அளவீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.
முன்னராக, தொல்பொருள் இடமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அம்பா றை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் கடற்கரையில் அமைந்துள்ள விகாரை வளாகத்தில் கடற்படைத் தளத்தை அமைக்குமாறு கடற்படைத் தளபதியிடம் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உத்தரவிட்டிருந்தார் .
இ ந்த அறிவிப்பை உடனடியாக நிறுத்துமாறும் வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரிப்பதற்கு எதிராக வெகுஜன அமைப்புகள் தலையிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக நில உரிமைகளுக்கான மக்கள் கூட்டணி (PARL) பலத்தைப் பயன்படுத்துவது மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைக்கு கவலை தெரிவித்திருந்தது.