வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஒரு அடி நிலம் கூட தமிழ் மக்களுக்கு சொந்தமானது இல்லை என சிங்கள கடும்போக்குவாதி ஞானசார தேரரின் இனவாதக் கருத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தமது முகநூலில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு கிழக்கு ஓர் அடி நிலம் கூட தமிழர்களுக்குச் சொந்தமில்லை என்று தனது இனவாதத்தை மீண்டும் கக்கியுள்ளார் புத்த பெருமானின் போதனைகளை பின்பற்றுகின்றோம் என்று கூறுகின்ற ஞானசார தேரர்
இன்று வடமாகாணமும் தமிழர் தாயகம் அல்ல என்று சவால் விடப்படுகின்றது. இதேபோன்றே 50களிலும் 60களிலும் கிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் அல்ல என்று சவால் விடப்பட்டது. அப்போது தமிழ்த் தலைமைகளும் மௌனமாக இருந்தனர்.
இதன் விளைவாக கல்லோயா, கந்தளாய், அல்லை போன்ற சிங்களக் குடியேற்றத்திட்டங்களின் மூலம் கிழக்கு மாகாணத்தின் இனவிகிதாசாரம் பெரிதும் மாற்றியமைக்கப்பட்டது. இன்று கிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்ற கருத்து உடைத்தெறியப்பட்டுவிட்டது. இதனையடுத்து தற்போது சிங்களபேரினவாதிகளின் கவனம் வடமாகாணம் நோக்கித் திருப்பப்பட்டுள்ளது.
‘தமிழர் தாயகம் ஒரு மாயை’ (The Tamils Homeland is a Myth) என்ற ஒரு நூலினை சிங்கள வரலாற்று பேராசிரியர் K.M.De.சில்வா என்பவர் ஏறத்தாள 30 வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இதற்கான எதிர்வினை நூல் ஒன்று இன்றுவரை எந்தவொரு தமிழ் வரலாற்று பேராசிரியர்களாலும் வெளியிடப்படவில்லை.
1970 களில் இப் பேராசிரியர் தமிழர் தாயகம் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அன்றைய வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்திற்கு சவாலும் விட்டார். ஆனால் தமிழர் தரப்பு அன்றும் மௌனமாகவே இருந்துவிட்டது. அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனமாக இருக்கின்ற மனிதன் அனைத்து அம்சங்களிலும் இறந்து விடுகின்றான். இது ஒரு இனத்திற்கும் பொருந்தும்.
அன்று கிழக்கு மாகாணத்தின் இனவிகிதாசாரம் திட்டமிட்டு மாற்றியமைக்கப்படும் போதும் இவர்கள் மௌனமாக இருந்தார்கள். இவர்களின் மௌனத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த விலை, கிழக்கு மாகாணத்தில் இரண்டாந்தர குடிமக்களாக மாறியமையாகும்.
தற்போது மீண்டும் கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்தை திட்டமிட்டு மீண்டும் மாற்றியமைப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாதம் தனது இராணுவ மற்றும் அதிகாரவெறியுடன் கையில் எடுத்துள்ள ஆயுதம் கிழக்குக்கான செயலணி.
அன்று தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிழக்கு மாகாணம். இன்று தமிழ்பேசும்மக்கள் பெரும்பான்னையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணம், நாளை தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிழக்கு மாகாணம் என்று எதிர்காலத்தில் நாம் உரைக்க வேண்டிய நிலையினை இந்த கிழக்கிற்கான செயலணி செயற்படுத்தியே தீரும்.
இதே நிலைமைதான் எதிர்காலத்தில் வடமாகாணத்திற்கும் ஏற்படப்போகின்றது. இதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம். இது தொடர்பாக மக்கள் தெளிவூட்டப்படவேண்டும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுக்காவிட்டால் எமது எதிர்காலம் மேலும் இருண்டதாகிவிடும். – எனத் தெரிவித்துள்ளார்.