மௌனன் யாத்ரிகா :-கவிதை குறித்த காத்திரமான ஓர் உரையாடலுக்கு ஆர்வமும் விருப்பமும் உடைய சில கவிஞர்களை ஒன்று சேருங்கள் என்று சொன்னால், முன் வரிசையில் நீங்கள் நிற்பீர்கள் என்ற ஒரு கணிப்பு எனக்குண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பூவிதழ் உமேஷ் :- உண்மைதான் , கவிதைகளைப் பற்றியும் கவிதை இயல்பற்றியும் யாராவது பேசினாலோ எழுதினாலோ என் காதும் கண்ணும் இயல்பாகவே அந்த திசை நோக்கித் திரும்பிக்கொள்ளும் . கவிதைகளைப் பற்றி பேசவேண்டியது மிக அவசியம் கவிதை இயல்பற்றி பேசவேண்டியதும் அவசியம் . தமிழ் இலக்கிய உலகத்தில் அவசியம் நிகழ வேண்டியது எது என்றால் கவிதை குறித்த உரையாடல் தான்.
மௌனன் யாத்ரிகா :-தமிழின் கவிதை வெளியைப் பேசும்போது மேலை நாட்டுக் கவிதைகளை முன்னுதாரணமாகக் காட்டும் போக்கு தமிழில் பரவலாகி வருகிறது. அதில் தவறொன்றும் இல்லை. அப்படி கையாள்வதால் அந்தத் துறையில் ஒருவர் லெஜண்ட் ஆக இருக்கிறார் என்று ஆகிவிடுமா?
பூவிதழ் உமேஷ் :-தமிழின் கவிதை வெளியைப் பேசும்போது மேலைநாட்டு கவிதைகளை முன்னுதாரணமாக காட்டும் போக்கு தமிழில் பரவலாகி வருகிறது என்பது தமிழ்கவிதைகள் பரப்பில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான மாற்றம் என்று நான் கருதுகிறேன் ஏனென்றால் தமிழ் கவிதைகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லாவற்றையும் கவிதைக்கு உள்ளேதான் எழுதி பார்த்தது இன்று அந்த வேலையை மேலை நாட்டுக் கவிதைகள் செய்து கொண்டிருக்கின்றன.
இன்டர்நேஷனல் பிசிக்ஸ் ஜர்னலில் குவாண்டம் பொயட்ரி என்று ஒரு கவிதை வெளிவருகிறது அதற்கு மதிப்புரையை மிக பிரபலமான இயற்பியல் பேராசிரியர்கள் எழுதுகிறார்கள் , மரபியல் கூறுகள் அறிவியல் கணிதம் என்று எல்லா பொருட்களையும் கவிதையில் எழுதிப் பார்க்கிறார்கள் உச்சபட்சமாக வரைபடங்களை கூட கவிதையாக மாற்ற முயற்சி செய்கிறார்கள் ஏற்கனவே எழுதப்பட்ட மிக முக்கியமான இலக்கியப் படைப்புகளில் இருந்து Resorted text poetry என்று கவிதையை படைக்கிறார்கள்
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் 2000 ஆண்டு பழமையான நமது மரபில் ஏதோ ஒரு விடுபடல் இருப்பதனாலேயே மேலைநாட்டு கவிதைகளை முன்னுதாரணமாக காட்டும் போக்கு இப்போது இருப்பதாக நான் நினைக்கிறேன்
அப்படி மேலைநாட்டு கவிதைகளை ஒருவர் கையாள்வதால் அந்தத் துறையில் லெஜெண்ட் ஆக இருப்பார் என்று முடிவு செய்ய முடியாது அவருடைய படைப்பின் வழியே மொழியாக்கத்தின் வழியே அது தொடர்பான கட்டுரைகளின் வழியே அவர் என்ன செய்கிறார் என்பதை பொருத்து அதை முடிவு செய்ய முடியும்.
மௌனன் யாத்ரிகா :-சமகாலத்தில் உங்கள் எழுத்தையும் வாசிப்பையும் கூர்மையாக்கிய தமிழ்க் கவிஞர்கள் இருக்கிறார்களா? தாராளமாக பெயர்களைச் சொல்லலாம். இது உங்கள் வாசிப்பின் வழியே கண்டடைந்தது என்பதால்…
பூவிதழ் உமேஷ் :-சமகாலத்தில் உலகின் மிகச் சிறந்த கவிதைகள் தமிழில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன தமிழில் கவிதையில் என்ன நடக்கிறது எப்படி இருக்கிறது என்பதை பற்றி பல கவிஞர்கள் பேசுகிறார்கள் இவையெல்லாம் தனித்தனி உரையாடல் ஆகவே எங்கோ காற்றோடு கலந்து விடுகிறது உண்மையில் பலரிடம் பேசும்போது கிடைக்கும் செய்திகளை ஆவணப்படுத்தி இருந்தால் மிகச்சிறந்த கவிதையியல் சார்ந்த ஒரு நூல் கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஜனவரி முதல் தேதியில் ஏலகிரியில் நடந்த கவிதை சார்ந்த உரையாடல் என்னளவில் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன் அதில் எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன் எழுத்தாளர் பா. வெங்கடேசன் கவிஞர் அமிர்தம் சூர்யா கவிஞர் பெரியசாமி கவிஞர் ஸ்டாலின் சரவணன் கவிஞர் ராம் சந்தோஷ் ஆகியோருடன் நடத்திய உரையாடல் என் வாசிப்பையும் எழுத்தையும் கூர்மை ஆக்கியது அந்த உரையாடலின் வழியே நான் நிறைய தெரிந்து கொண்டேன்
கவிஞர் சித்துராஜ் பொன்ராஜ் அய்யப்பமாதவன் ஆகியோருடன் கவிதை சார்ந்து உரையாடும் போது நான் நிறைய தெரிந்து கொண்டேன் அதுமட்டுமின்றி சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் எனக்கு திசைகாட்டி போல பல விஷயங்களை பலமுறை சுட்டிக்காட்டுகிறார். கவிஞர் விமர்சகர் இந்திரன் அவர்களிடம் கவிதை சார்ந்து இன்னும் எவற்றையெல்லாம் வாசிக்கவேண்டும் என்று கேட்ட பொழுது மிகச் சிறந்த வழிகாட்டியாக உதவியிருக்கிறார் .
கவிஞர் பெருந்தேவி அவர்களிடம் அவருடைய கவிதை சார்ந்து உரையாடும் பொழுது பல தெளிவுகளை பெற்று இருக்கிறேன் .
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களிடம் பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறேன். நண்பர் பச்சோந்தியுடன் உரையாடும் போது அவருடைய கவிதைப் போக்கு மட்டுமல்லாமல் என்னுடைய கவிதைப் போக்கு சார்ந்தும் பல தகவல்களை வேறு ஒரு கோணத்தில் அறிந்து கொள்ள முடிந்தது.
கவிஞர் யாழன் ஆதி அவர்களுடன் கவிதை குறித்து பேசும்போது நல்ல உரையாடலுக்கான வெளி உருவாவதை நான் அறிந்து கொண்டேன் கவிஞர் துரை கவிஞர் முத்து இராசகுமார் கவிஞர் பாரதிமோகன் போன்றோருடன் உரையாடும்போது பல்வேறு வகையான கவிதை குறித்த செய்திகளை நான் தெரிந்து கொண்டது எனது வாசிப்பையும் எழுத்தையும் மிகவும் கூர்மைப்படுத்தி இருக்கிறது இதுபோல் இன்னும் பலரிடம் உரையாடுவதற்கான வாய்ப்பு அமைந்தால் கவிதை கவிதையியல் சார்ந்த எனது பார்வையும் வாசிப்பும் எழுத்தும் மேலும் மேலும் சிறப்படையும் என்று உறுதியாக நம்புகிறேன்
உண்மையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நான் பேசிய மேற்கண்ட எல்லா கவிஞர்களும் எழுத்தாளர்களும் என் வாசிப்பையும் எழுத்தையும் சிந்தனையையும் மிகவும் கூர்மையாக்கி இருக்கிறார்கள் அவர்களுக்கு என்றும் நான் மிகுந்த அன்பு உடையவனாக இருப்பேன்.