ஈழத் திருநாட்டில் ஏடறிந்த வரலாற்று காலந்தொட்டே தொன்மை வாய்ந்த தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் பாரம்பரிய தமிழர்களின் வரலாறு தொன்மையானதே ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழர்கள் ஆளும் வர்க்கத்தின் இன ஒடுக்குமுறையை எதிர்கொண்டபோது சாட்சியமற்ற வன்முறை, சாட்சியமற்ற யுத்தம் என பேரினவாத அரசு கால காலமாய் செய்துவரும் அடக்கு முறைகள், பேச்சுரிமை, கருத்துரிமை முதற்கொண்டு வாழ்வுரிமை வரை திட்டமிட்டே கல்வி, கலை, பொருளாதாரம் பறிக்கப்பட்ட உலக அரங்கில் ஈழத்தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி பௌத்த பேரினவாதம் சிங்கள அரசு தடை விதித்தது .
சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் அனைத்திற்கும் பொருளாதாரத் தடை மூலம் முட்டுக்கட்டைகள் போட்டது. இலங்கை அரசின் தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்று ஒரு சுதந்திரமான தேசமாக வாழ்வதா? அல்லது பணிந்து அடிமைப்பட்டு அவதியுற்றுக் கிடப்பதா? தேசியப் பிரச்சினையைத் தீர்க்க எமது தாயக மண் முழுமையாக விடுதலைபெற வேண்டும். எமது மக்கள் பூரண சுதந்திரமாக வாழவேண்டும் என எமது மாவீரர்கள் மண்ணுக்காக மண்ணிலே புரிந்திருக்கின்ற தியாகங்களை சொற்களால் எழுத்துக்களில் அடக்கிட முடியாது.
மக்களின் நியாயமான உரிமைகள் மறுக்கப்படும் போதும் இனங்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல் ஒடுக்கும் போதும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. அமைதி வழியில் போராடும் மக்களை அரச தனது ஆயுத பலத்தால் அடக்க முயல்கிறது. அடக்குமுறைகள் எல்லை மீறும்போது அது அரச பயங்கரவாதமாக உருவெடுக்கிறது. இதில் விடுதலை புலிகளைத் தேடி அழிப்பது என்ற பெயரில் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இலங்கை அரசு பாரிய இனவெறி யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டது.
இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாதத்தின் பயங்கரவாத அரசு காலத்துக்கு காலம் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறி ஒரு நாடு அதன் தேசிய இன மக்கள்மீது, இனப் படுகொலையினை செய்வதும் பொருளாதாரத் தடையை விதிப்பதும். தமிழ் மக்களைப் பட்டினி போட்டு ஆட்சி நடத்த முற்படுவதும், ஆட்சியாளர்களும் அரச படையினரும் தாக்குதல்களை தமிழர்கள் மீது தரைவழி, கடல்வழி, வான்வழியாகத் பல முனைகளில் தொடுத்து, முன்னேறத் தொடங்கிய போது நடத்திய இன அழிப்பு சம்பவங்களில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஐ. நா. வில் உறுப்புரிமை பெற்ற இலங்கை அரசுக்கு உலகெங்கும் உள்ள நாடுகளின் ஆதரவுடன் சர்வதேச விதிகளையும் போர் ஒழுக்க நெறிகளையும் மீறிய இலங்கை அரச பயங்கரவாதம் தமிழர்களின் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தது. மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சு, கொத்துக்குண்டு, பொஸ்பரஸ் குண்டு, எறிகணை, உந்துகணைத் தாக்குதல்கள் மட்டுமல்லாது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான நேரடித் தாக்குதலையும், கிபிர், மிக் போன்ற போர் விமானங்கள், எம்.ஐ.24 உலங்குவானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள், கடற்படையினரின் பீரங்கி மற்றும் மோட்டார் உட்பட சிங்கள காலாட் படையினரின் நீண்ட தூரவீச்சுக்கொண்ட துப்பாக்கிகளாலும் சரமாரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதியவர், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என்று வேறுபாடுகள் பாராமல் ஏராளமான மக்கள் உள் நாட்டில் அகதியாய் இடப்பெயர்ந்தவர்கள் பாதுகாப்பு வலயங்களில் சிதறுண்டு போனார்கள். எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் இடைநிறுத்தி நெருப்பாற்றைக் கடப்பது போன்று போராளிகள் நேருக்கு நேர் நின்று களத்தில் வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்தார்கள்.
2006 ஆவணியில் யாழ் குடா நாட்டிலும், மாவிலாறு தொடர்பாகச் சம்பூரிலும், பின்னர் முள்ளிக்குளம் முதல் சிங்களப் படை தொடக்கிய சமர்களினால் தாக்குதல்கள் வீச்சுடன் கிளம்ப சிங்களப் படையினை எதிர்பாத்திருந்த தமிழர் தரப்பு பல முறியடிப்புச் சமர்களையும் நிகழ்த்தியது. பொருளாதாரத் தடை என்ற பெயரில் வடக்கில் எங்கள் உரிமைகளும் உணர்வுகளும் மறுக்கப்பட்டு, அடக்கப்பட்டு ஏதோ ஓர் இனம்புரியாத சூனியத்திற்குள் தள்ளப்பட்டார்கள். பொருளாதாரத் தடை கூட ஓர் கருவியாக, ஆயுதமாக தமிழ் மக்களின் உயிரை குடித்திட உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது.
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையினால் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. தென் பகுதியிலிருந்து ஏ 9 வீதியூடாக பொருட்கள் எடுத்து வரப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டது . அத்தியாவசியப் பொருட்கள் முக்கியமாக தடுப்பூசி மருந்துகள், (Antibiotics) போன்ற வலிநிவாரணிகள் மயக்க மருந்து (Anesthetic) அறுவை சிகிச்சைகளின் போது வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்துக்கள் எல்லாம் ஒரு மனிதனின் உயிரைக்காக்க அத்தியாவசியமானவை இவற்றையெல்லாம் இலங்கை அரசு பொருளாதாரத் தடை என்ற போர்வையில் வட கிழக்கு பகுதிக்கு வரவிடாமல் தடுத்தது. பொருளாதாரத்தடை மூலம் மறுக்கப்பட்ட உரிமைகள் பற்றியே பேச வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights-UDHR),பெண்கள் உரிமைகள் (Women’s Human Rights and Gender Equality )சிறுவர் உரிமைகள் (Convention on the Rights of the Child-CRC) வாழ்வுரிமை (Right to Life), பேச்சு மற்றும் கருத்துரிமை (Right to Freedom and Expression), பன்னாட்டு குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (International Covenant of Civil and Political Rights-ICCPR),பன்னாட்டு பொருளாதார, சமூக, மற்றும் பண்பாட்டு உரிமைகள் ஒப்பந்தம் ( International Covenant of Economic, Social, and Cultural Rights-ICESCR-1996), ஊடகவியலாளர் பத்திரிகைச் சுதந்திரம் UN (Plan of Action on the Safety of Journalists )மற்றும் அவ்வாறான அடிப்படை உரிமைகளில் சில முக்கியமானவை. சுகாதாரம், (public health) கல்வி, (Education) ஊட்டச்சத்து உணவு (Nutrition food) சர்வதேச சட்டங்கள் போன்ற ஆவணங்களின் படி பொதுவாக அடிப்படை மனித உரிமைகள் பொருளாதாரத் தடை மூலம் பாதிக்கப்பட்டிருந்தோம். United Nations (ஐக்கிய நாடுகள் அவை) ஐ.நா. பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாக்கிறார்களோ இல்லையோ எல்லாவற்றையும் நன்றாகவே வரையறுத்தும், பட்டியலிட்டும் வைத்திருக்கிறார்கள். ஐ.நா. மற்றும் சர்வதேச சட்டங்களின் படி பார்த்தால் அது வெறும் உணவுக்கும் மருந்துக்குமான தடையாக மேலோட்டமாக எண்ணத் தோன்றவில்லை.
தேசிய இனப் பிரச்சினை காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும் மனிதப் படுகொலைகளையும் உண்டாக்கி ரத்த ஆற்றை ஓடவிட்ட சிங்களப் பேரினவாதம் தமிழ்ச்சமூகத்தின் மீது தொடுக்கக்கூடிய ஒடுக்குமுறையில் ஒன்றே சிங்கள அரசின் பொருளாதாரத்தடை ஆகும். அரசாங்கத்தின் குறைவான மதிப்பீட்டின் விளைவாக, வன்னிக்கு உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் நிஜத் தேவையைவிட மிகக் குறைவாக இருந்தன. ஒரு தேசிய இனத்தின் அடிப்படை வாழ்வாதார உரிமையினை மறுத்து மீண்டும் நவீன சிறைக்குள் முடக்கி வைக்க எத்தனிக்கும் கபடத்தனமான இத்திட்டத்தை பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டு ரீதியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஓர் உளவியல் மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளைப் போல பொருளாதார அடக்குமுறையும் ஒருவகை சித்திரவதை ஆகும் .
ஈழம் ஒரு செழிப்பான பூமி, வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும் நில வளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையின் வடிவமாய் தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் பொருத்தமான துறை, திறன்சார் திட்டமிடுதலின் அடிப்படையில் உரிய இயற்கை வளங்களைக் கொண்டு உள் நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் வேளாண்மையும், மீன்பிடி, கைத்தொழில் பொருண்மிய கட்டுமானத்திற்கு அடித்தளமானது. என்பதால் இவற்றை வளர்த்தெடுக்க தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டு பொருளாதாரத்தில் தன்னிறைவானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற முனைப்புடனேயே இயங்கியது.
தமிழீழத் தனியரசுக்கு உட்பட்ட பிற நகரங்களிலும் அரசின் சார்பில் பல வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சேரன் வாணிகம், சோழன் வாணிகம், பாண்டியன் வாணிகம், இளந்தென்றல் வாணிகம் எனத் தூய தமிழ்ப்பெயர்களால் அழைக்கப்பட்ட அந்த வணிக நிறுவனங்களின் சார்பாக உணவகங்கள், மருந்துக் கடைகள், வேளாண் பொருள் விற்பனையகங்கள், உந்துருளி விற்பனைக் கூடங்கள், வண்ணப்படக் கலையகங்கள், பண்ணைகள், உள்ளூர் உற்பத்தி தொழிற் சாலைகள், சுழற்சி முறை மீள் உற்பத்திகள் மரங்களை நாட்டுதல், இயற்கை பாதுகாப்பு என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும். திறமை மிக்க போராளிகளின் பொறுப்பில் அவை சீராகவும் நேர்த்தியாகவும் இயங்கின.
நித்தியானந்தம் வயது-55, சொந்த இடம் முகமாலை , எங்கள் சொந்த பூமியில் வாழ்கின்ற சுகம் வேறெங்கும் கிடைக்காது என்பது பொதுவாகவே எல்லோரதும் கருத்து. அத்தகையை பொற்காலம் எங்களுக்கு அதிக காலம் நீடிக்கவில்லை. முகமாலை என்றதுமே பனைகளும் தென்னைகளும் தான் பொதுவாக எல்லோருக்கும் நினைவு வரும் என்று சொல்வார்கள். இங்குள்ள தென்னைகள் தான் எங்களின் செல்வமாக இருந்திருக்கின்றன. பிறந்து வளர்ந்த இந்தப் பூமி எங்களை எப்போதும் பட்டினி போட்டதே இல்லை. இங்குள்ள மண் அமைப்பு தென்னைகளின் பெருக்கத்திற்கு ஏதுவாக இருக்கிறது. அது போலவே பனைகளும் தங்களின் எல்லாப் பாகங்களையும் கொடையளிக்கின்றன.
மணல் தரைகளில் இருந்து அப்படி சந்தோசமாக பதனீர் அருந்திய எங்களில் எத்தனை உறவுகள் நண்பர்கள் எத்தனைபேர் இன்று எங்களோடு இருக்கிறார்கள். அவர்களும் இல்லை எங்களுக்கு பதனீர் தந்த அந்தப் பனைகளும் இல்லை. காயப்பட்டு தலையிழந்து சிதையுண்டு கருகிக் காட்சியளிக்கின்றன. யுத்தம் ஆரம்பத்தின் பின்னர் முகமாலையில் எறிகணைகள் விழுகிற சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு எறிகணைகளும் எங்கள் மீது விழுவது போன்ற உணர்வு உண்டாகும். அவ்வாறு விழுந்த ஒவ்வொரு எறிகணைகளும் முகமாலையை உழுது கிண்டி இருக்கின்றன. துப்பாக்கி ரவைகள் வளமான மரங்களை சல்லடையாய்த் துளைத்திருக்கின்றன.
1996 ஆம் ஆண்டு எங்கள் ஊரில் இருந்து இடம்பெயர்ந்து விசுவமடுப் பகுதிக்கு சென்றோம். 2002 இல் சமாதான ஒப்பந்த காலத்திலும் முகமாலை எல்லைப் பிரதேசமாக இருந்ததால் நாங்கள் விசுவமடுவிலேயே வாழ்ந்தோம். 1996 இற்குப் பின் எங்களுக்கு அடைக்கலம் தந்த விசுவமடுவும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பிரதேசம். நீண்டகாலமாக இடப்பெயர்வு இல்லாமல் அங்கு நிம்மதியாய் சந்தோசமாகக் குறுகிய வருமானத்தில் தன்னிறைவான வாழ்கையினை வாழ்ந்தோம்.
மிருக வளர்ப்பு , வீட்டுத் தோட்டம் முதல் எங்களுக்கு உரிய உணவுகளை இரசாயன பாவனை இல்லாது உற்பத்தி செய்தோம். உற்பத்தியும் சந்தைப்படுத்தலும் இலகுவாகவும் இருந்தது. வீட்டுத்தோட்டம் செய்வதில் மாணவரிடையே போட்டி நிலவியது. பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு பயறு, உழுந்து, கௌப்பி பனங்கிழங்கு, கச்சான் பயன்படுத்தப்பட்டன. கைச்செலவுக்கு கோழிமுட்டை, பால் விற்பதால் கிடைக்கும் பணமே இருந்தது. சாதாரண ஒருகுடும்பம் குறைந்தது 100 தொடக்கம் 200 ரூபா வரை இருந்தால் உணவுத் தேவைக்கு போதுமானதாக இருக்கும். யுத்தம் என்ற பெயரில் எங்கள் விவசாய நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள அரசு தனி மனிதனுக்கு பொருளாதாரத் தடை மூலம் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, பொருளாதாரத் தடையினைக் கூட ஓர் கருவியாக, ஆயுதமாக எங்களின் உயிரைக் குடித்தது. என் வாழ்நாளில் அவை மறக்கமுடியாத வலிகள், நிறைந்தவை என சிறிது நேர மௌனத்திற்குப் பின் கண்கள் கலங்கியபடி கூறினார் .
நாளுக்கு நாள் நூற்றுக்கணக்காக மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். நாலா புறங்களிலும் எறிகணைச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. மெல்ல மெல்ல விசுவமடுவையும் யுத்தம் அண்மித்தது. காயப்படுத்தப்பட்டார்கள் உடமைகளை இழந்து நிர்க்கதியாய் ஆக்கப்பட்டார்கள். ஒரு புறம் இராணுவம் மக்களைக் கொன்று குவிக்க மறுபுறம் உணவுப் பொருட்கள் இருந்தும் உணவு தயார் செய்ய முடியாத நிலை பசி வயிற்றுடன் மக்கள் நாளுக்கு நாள் குண்டுமழையில் இறந்து கொண்டே இருந்தார்கள். மீன்பிடித்தொழில் செய்து அன்றாடம் பிழைத்தவர்கள் வாழ்வும் கஷ்டங்கள் நிறைந்தது.
ஆழக்கடலில் சென்று மீன்பிடிக்க முடியாது, ‘தடை’. அதனால், கரையோரப்பகுதிகளில் மாலைவேளைகளில் போய் ஏதோ கிடைக்கும் சிறிய மீன்களை பிடித்து அன்றாடம் வயிற்றுப்பிழைப்பை பார்த்துக்கொண்டவர்களும் உண்டு. 2008 யுத்த ஆரம்ப காலங்களில் உள்ளூர் மரக்கறிகளின் விலையும் பல மடங்காக அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு கிலோ தக்காளி, கத்தரிக்காய், பயிற்றங்காய் என்பன 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. எரிபொருளுக்கு அங்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. ஒரு லீற்றர் பெற்றோல் 450 ரூபாவுக்கும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 150 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 120 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் இடப்பெயர்வுகளிளால் நிலப்பரப்பு குறுகிட உள்ளூர் உற்பத்தி தடைப் பட்டது. பொருட்கள் தட்டுப்பாட்டினால் உணவுப் பொருட்களின் விலை 1000 தொடக்கம் 5000 வரை அதிகரித்திட மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்தார்கள் எனக் கூறினார் .
தனது வாழ்வைத் தேச விடுதலைக்கான போராட்டத்தில் அர்ப்பணித்துப் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகி தனிமரமாய் தவிக்கும் எத்தனையோ போராளிகளில் இவரும் ஒருவர். இளம் வயதிலே தன்னையும் போராட்டத்திற்காக அர்ப்பணித்துச் செயற்பட்டு வந்தவர். 1996ம் ஆண்டு இடதுகாலில் காயமடைந்து தனிமையின் தாக்கத்தோடும், வலிகளோடும், வாழ்ந்து வருகின்றார். உயிலங்குளப் பிரதேசத்தைச் சொந்த முகவரியாகக் கொண்டமாலா 42 வயதுடைய போராளி சிறுவயதிலே பெற்றோரை இழந்த போராளி தனது வாழ் நாளில் அதிக காலம் போராளியாகவே வாழ்ந்திருக்கின்றார்.
இன்றைய சூழ்நிலையில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு மத்தியில் அன்றாட வாழ்விற்காய்க் கடுமையாகப் போராடும் போராளி மாலா கூறுகையில் தறப்பாளுகளுக் கிடையில் நூறாயிறமாய்க் காப்பகழிகள் நிலமெல்லாம் முளைத்தன. எல்லாக் குழிகளிலுமே தம் வாழ்வைத் தொலைத்த உறவுகளை இழந்த மனிதர்கள், பசித்த வயிறுகளோடும் புளுங்கிய மனங்களோடும் குந்திக் கொண்டிருந் தார்கள். பாலிலும் தயிரிலுமாக வாழ்ந்த எத்தனையோ பேர் கஞ்சிக்குக் கூட வழியற்றுக் கிடந்தார்கள். இயற்கை உணவுகள் இருந்தும் அரிசிகள் இருந்தும் உணவை ஆக்கமுடியாதபடி குண்டுமழை பொழிந்த வண்ணம் இருந்தது. குழந்தைகள் பசியால் மயங்கி விழுந்தனர்.
அதை ஓரளவாவது தாங்கும் திட்டமாகச் சந்திகளில் கஞ்சிக் கொட்டில்கள் முளைத்தன. போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம்,(TRO) பெண்கள் புனர்வாழ்வுக் கழகம், தன்னார்வுத் தொண்டர்களும் மக்களுக்கான உணவுத் தேவையை ஓரளவாவது பூர்த்தி செய்தார்கள். படையணிப் போராளிகள் கூட தத்தமது இருப்பிலிருந்த அரிசியில் கஞ்சி காய்ச்சியும் மற்றும் கோதுமை மாவைப் பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட வாய்ப்பனும் மூன்று வேளையும் வழங்கப்பட்டது. மாலை நேரங்களில் குழைத்த ‘மா உருண்டை’ ஒன்றும் ஒரு குவளை பாலும் சிறுவர்களுக்காக வழங்கப்பட்டது. அதை வாங்கிட குவிந்த சிறுவர்கள் அவர்களுக்குள் பேசியபடி பாத்திரங்களுடன் வரிசையில் நின்ற மக்களைப் பார்த்த போது எங்கள் மக்களுக்கா இந்த நிலை என்று கனத்த மனதுடன் கலங்கியபடி போராளி மாலா கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் என்ற பிரதேசத்தைச் சேர்ந்த குமரன் வயது -30 கூறுகையில் யாரையும் காப்பாற்றும் சூழ்நிலையோ நேரமோ சக்தியோ மனநிலையோ யாருக்கும் வராத துர்ப்பாக்கிய நிலை. எல்லோரும் காயங்களோடும் பட்டினியோடும் சுயபாதுகாப்பை மட்டுமே சிந்திக்க வேண்டிய அவல நிலையுடன் தொடர்ந்து. வீதியோரங்களில் குண்டுகள் துளைத்த பள்ளங்களில் மனித ரத்தம் தேங்கிக் கிடந்தன. சதைத் துண்டுகள், உடல் அவயங்கள் ஆங்காங்கே சிதைந்து கிடந்தது. இத்தகைய நிலமைகளை நேரில் காணாதவர்கள் என்று அச் சூழலில் வாழ்ந்த யாரும் இருக்கமுடியாது.
நாங்கள் நிவாரணம் பெறப் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிவாரணக் கிளை க்குப் போயிருந்தோம் அங்கு உணவிற்காக காத்திருந்த இடத்தில் அதிகளவில் உறவுகள் பலர் கொல்லப்பட்டுக் காயமடைந்தார்கள். சாப்பாடு சமைத்துக்கொண்டிருந்த பகுதிகள் எல்லாம் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின. மக்களின் வயிற்று பசியினை போக்கிட எங்கட பிள்ளைகள் நிறைய கஸ்ரப்பட்டார்கள். அவர்கள் சமைத்த இடங்களையும் குறிபார்த்து இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டார்கள். என் மறு பிறவியிலும் என்னால் இத் துயர்களை மறக்க முடியாது.
போரின் இறுதிக் காலகட்டத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது என்று தான் சொல்ல முடியும். கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு சில மக்கள் தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தார்கள். விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட கஞ்சி பல மக்களின் உணவுத் தேவையை சொற்ப அளவிலேயே பூர்த்திசெய்தது என்று தான் என்னால் கூற முடியும். குண்டுவீச்சில் இறந்தவர் போக மீதிப்பேரை தனித்து நின்று உயிர்காத்த கஞ்சி ஒரு நாள் அல்ல, ஒரு வாரமல்ல, பல வாரங்களாக உணவானது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, ஏன் இரவுபகலாக களமாடிய போராளிகளுக்கு கூட கஞ்சிதான் உணவு . கைவசம் இருந்த அரிசியினைக் கொண்டு மக்களுக்கு தம்மால் முடிந்தளவிலான உணவுத் தேவையைச் பூர்த்தி செய்திட கஞ்சி தயார் செய்த இடங்களையும், கஞ்சி நிலையங்களையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குமரன் தெரிவித்தார் .
பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்ற பொருட்களை மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் நடைபெற்ற போதும், அப்பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் பீரங்கிகளால் தாக்குவதால் தொடர்ந்து நடாத்தியிருந்தார்கள். 25 ஏப்ரல் 2009 அன்று வலைஞர்மடம் பகுதியில் கஞ்சி பெறுவதற்காகக் கடற்கரைப் பகுதியில் கூடாரத்தினுள் இருந்த காயப்பட்ட மக்கள் மீதும் இலங்கை விமானப்படை கோரமாகக் குண்டுகளை வீசியது. மிக், கிபிர் விமானங்களின் தாக்குதலில் 341 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 400 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இப் பகுதியில் காலை தொடக்கம் மாலை வரை முறையே காலை 10.15 மதியம் 2.15 , 2.30, பின்னேரம் 5.15 ஆகிய நேரங்களில் விமானத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 184 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பி.ப 2.15 மணி அளவில் முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் 126 பேர் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை சுமார் 15 நிமிடம் மேற்கொள்ளப்பட்டது. 16 இற்கு மேற்பட்ட 250 இறாத்தல் குண்டுகள் போடப்பட்டது. இதே வேளை மாலை 5.15 இற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர். அன்று மாலை புனர்வாழ்வுக்கழகத்தால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் கூடவே உலர் பருப்பும் குழந்தைகள் உள்ள குடும்பங்களிற்கு பால்மாவும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இன அழிப்புப் படையெடுப்பினால் – நேரடிப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்கள் ஒரு பக்கம் போக பட்டினியாலும் ஊட்டச்சத்து இன்மையால் தொற்று நோய்கள் தாக்கம் காணப்பட்டதுடன் அதிகமானவர்கள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிப்பதுடன், நிதானமாக நடக்க முடியாதவர்களாய் காணப்பட்டார்கள். பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. உணவுக்காக கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், கஞ்சி வழங்கும் இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி வீழ்கின்ற நிலையும் ஏற்பட்டது. உணவு விநியோகப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை. முப்படைகளின் தாக்குதல்களும் அகோரமாக இருந்தது. இந்நிலையில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த சூழலில் சிறிலங்கா படையினரின் கனரக துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தார்கள். ஆனால், தாம் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பதாகவும், இந்த பொருட்களை எடுக்காது சென்றால் தமது பிள்ளைகள் பட்டினியால் சாக நேரிடும் என்று மக்கள் அழுது கெஞ்சும் நிலை காணப்பட்டது.
சிறிலங்கா அரசின் போர் முனைப்பினால் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட மனிதப் படுகொலைகள் செய்யக்கூடிய அதே நேரத்தில் தொடர்ந்து மக்களைக் கொன்று குவிக்கிறது மக்களின் சமூக வாழ்வு சின்னாபின்னமாக்கப் பட உணவு, குடிநீருக்கான பற்றாக் குறைகள், மருத்துவ நெருக்கடிகள்,இருப்பிடம் இல்லாத வீதி வாழ்வு, பதுங்குகுழி வாழ்வு, என இன்னும் பலவற்றை பட்டியல் படுத்தி சொல்ல முடியும். நோய்களுக்கு மருந்து இல்லாமல் மருத்துவமனைகள் அவலப்பட, உண்ண உணவு இல்லாமல் மக்கள் கண்டதையும் உண்டு நோய் வாய்ப்படும் கோர நிலையும் ஏற்பட்டது.
துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறுத்து வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிறிய குழி ஒன்றுக்குள் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாகக் கூடாரத்துக்கு திரும்பி வந்தேன். பல்குழல் எறிகணை வீச்சில் சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள். காப்பாற்றுவதற்காக நிறையவே போராட வேண்டியிருந்தது. கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. ஒருவர் தூரத்தே நிற்பதைப் பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் மொய்த்துக் கொண்டிருக்க ஏக்கப் பார்வையோடு அவர் இருந்த கிடங்கின் அருகில் சென்று பார்த்த பொழுது அது ஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காகவே காட்சியளித்தது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் பசி மற்றும் ஊட்டச்சத்து, (Nutrition) வைட்டமின் (Vitamin) குறைபாட்டினால் சிறுவர்களும் முதியவர்களும் இறந்தார்கள். இதேவேளையில் பட்டினியாலும் அதிகளவில் காயமடைந்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். காயமடைந்த போராளிகளுக்கு எனது நாளாந்த தேவைகளை மருத்துவப்பிரிவுப் போராளிகள் மிகவும் கண்ணியத்துடன் கவனித்தார்கள். இராணுவத்தினரால் எங்களுடைய வளங்கள் முடக்கப்பட்ட போதும் அங்கு எம்மிடமிருந்த வளங்களைக் கொண்டு எமது தேவையை நிறைவு செய்தார்கள். மருத்துவப் போராளிகள் மற்றும் காயமுற்ற போராளிகள் காலை உணவை உண்ணாது மக்களுக்கு அந்த உணவை வழங்கியதாக 2009ம் ஆண்டு மாசி மாதம் 20ம் நாள் அன்று தேவிபுரத்தில் புதைக்கப்பட்டிருந்த இராணுவத்தின் கண்ணி வெடியில் சிக்குண்டு தனது வலது காலை இழந்த போராளி முகிலன் வயது (32) கூறினார்.
இறுதி நேரத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் தமிழீழ நிர்வாக சேவை ஆகியன இணைந்து கஞ்சித்திட்டம் ஒன்றை செய்தார்கள். பல இடங்களில் எம் மக்களின் உயிரைப் பட்டினியில் இருந்து காத்தது. ஆனால் அந்தக் கஞ்சி குடிப்பதற்காக வரிசையில் நின்ற எம் உறவுகளைக் கூட எறிகணையால் கொன்று குவித்தது சிங்களம். சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நில ஆக்கிரமிப்புப் படையெடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பட்டினி அவலத்தினால் 2009 மாசி மாத இறுதி வாரத்தில் 10 சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.தொடர்ச்சியான உணவின்மை காரணமாகவும் நீரிழப்பு காரணமாகவும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் – நோய் எதிர்ப்புத் தன்மையை இழந்து விட்டதனாலும் – இவர்களின் சாவுக்கு போதிய உணவின்மை, ஊட்டமின்மை மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை இழப்பு ஆகியவையே காரணங்கள் என மருத்துவ வட்டார அறிக்கைகள் தெரிவித்தன. உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வெளியே செல்ல முடியாத நிலையில் கொட்டகைக்குள்ளும் பதுங்கு குழிகளிலும் இவர்களில் பலர் உயிரிழந்தனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் -கனகசபை பிரவீணன் (வயது 12),சிவராசா கண்ணன் (வயது 38), புதுக்குடியிருப்பு, இரணைப்பாலையில் -சிவநேசன் சுலக்சன் (வயது 12),மகேஸ்கரன் கர்ணன் (வயது 15),கருணாகரன் பிருந்தா (வயது 17),கந்தைஞானி மனோகரன் (வயது 32) , மாத்தளன் பகுதியில் -சபேசன் சிந்து (18 மாதங்கள்), பாலச்சந்திரன் சிவரூபன் (வயது 13), மகிந்தன் விநோதா (வயது 48),தேவராசா கஜேந்திரன் (வயது 36),திருச்செல்வம் சிவகணேசன் (வயது 42) அம்பலவன்பொக்கணை, இடைக்காடு பகுதியில் -சிவராசா சக்தி கணேசன் (வயது 03),மலர்வேந்தன் மகிழன் (வயது 12),யோகராசா ரவி (வயது 18), வலைஞர்மடம் பகுதியில் -அனித்கிப்சன் (வயது 14),பரமநாதன் புவியரசன் (வயது 17),சிவகடாட்சம் றமணன் (வயது 23),சிவகடாட்சம் கார்த்திகாயினி (வயது 14), ஆகியோரே உயிரிழந்தார்கள். இதே போன்று பல சம்பவங்கள் இடம்பெற்றது.
02-03-2009 அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முல்லைத்தீவு இருந்து NP/04/44/02/07/02 என இலக்கம் இடப்பட்ட கடிதத்தின் தலைப்பு ( பட்டினிச் சாவு தொடர்பாக) என தொடரும் கடிதத்தில் தற்போது ஏற்பட்டுவரும் யுத்தம் காரணமாக மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பது தாங்கள் அறிந்ததே , கடந்த சில நாட்களாக எமது வைத்தியசாலைக்குபட்டினிச் சாவினால் 13 பெயரது உடலங்கள் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டன அவர்களில் 05 பேரின் பெயர் விபரங்கள் அறியப்பட்டுள்ளது. அத்துடன் உணவுப்பொருட்களின் விலையேற்றமும் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஆகியவற்றால் பெரும்பாலான மக்கள் பழக்கப்படாத இலை குழைகளினையும், பழக்கப்படாத உணவுப் பொருட்களையும் உண்கின்றனர். இவ்வாறு பழக்கப்படாத இலைவகைகளை சமைத்து உண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 06பேர் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் விபரம் வருமாறு. இறந்தவர்கள் விபரம் – பொன்னையா தர்மலிங்கம் ஆண் வயது-65, பொன்னுச்சாமி இரட்னேஸ்வரி பெண் வயது-65,எஸ் ஜெயந்தி பெண் வயது- 17, சந்தனம் விசாலாட்சி பெண் வயது -72, ஆறுமுகம் இராமையா ஆண் வயது-66, ஆகியோரும்.
பழக்கப்படாத இலைவகைகளை சமைத்து உண்டு பாதிக்கப்பட்டவர்கள் விபரம் சின்னத்தம்பி வசந்தபாலன் ஆண் வயது- 46, வசந்தபாலன் பதிமாதேவி பெண் வயது-38 , வசந்தபாலன் பவித்திரன் ஆண் வயது 14, வசந்தபாலன் சத்தியா பெண் வயது -13, வசந்தபாலன் சமர்வேந்தன் ஆண் வயது –08, வசந்தபாலன் கீர்திகா பெண் வயது 06 என விபரங்கள் அடங்கிய கடிதத்தினை முதன்மைப் படுத்தி அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் முல்லைத்தீவு , அவர்களுக்கும் செயலாளர் சுகாதார அமைச்சு கொழும்பு,மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வட மாகாணம் திருகோணமலை, இணைப்பாளர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முல்லைத்தீவுக் கிளை , Dr. ஜெகநாதன் சுகாதார இணைப்பாளர் வடக்கு கிழக்கு மாகாணம் , மேன்மை தாங்கிய அமைச்சர் சார்த் பதியுதீன், இணைப்பாளர் உலக உணவுத் திட்டம் வவுனியா, இணைப்பாளர் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனம் வவுனியா, ஆகியோருக்கு அதன் பிரதிகளையும் பி.சு.சே. பணிப்பாளர் வைத்திய கலாநிதி து.வரதராஜா அனுப்பிவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
வன்னிப் பிரதேசத்துக்கு அனுமதிக்கப்பட்ட மருந்து வகைகள் ஷெல் வீச்சுக் காரணமாக ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு கொஞ்சம் கூடப் போதியதாக இருக்கவில்லை. காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்த போது, தேவைப்படும் மருந்து வகைகள் இல்லாதது பாரிய நெருக்கடிகளையும் தேவையற்ற உயிழப்புக்களுக்கும் வழிகோலியது. முதியவர்களும் பட்டினியால் வாடி வதங்கி உயிரை விட்டனர். பசிக் கொடுமை தாங்காமல் விஷச் செடியை, சாப்பிடும் கீரை என நினைத்து எடுத்துச்சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மயக்கமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் சிறார்கள் ஆவர். இதுதவிர இடம் பெயர்ந்து வந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்குமட்டும் கடந்த ஒரு வாரத்தில் 13 தமிழர்கள் உயிரிழந்தபோது .ஆர்.டி.எச்.எஸ் ( Regional Directorate of Health Services (RDHS Office) வைத்தியர்கள் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை பற்றி கடிதங்கள் மற்றும் தொலைக்காட்சியினூடாகவும் தெரிவித்த போது, ஊடகங்களுடன் பேசுவதை புகார் செய்வதை நிறுத்துமாறும் அல்லது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்களை சுகாதார அமைச்சு எச்சரிக்கை செய்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
உறவுகளின் வாழ்வுரிமை வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு உரிமைகளும் உணர்வுகளும் மறுக்கப்பட்டது மண்ணெண்ணையில் ஓர் சிறிய விளக்கொளியில் படித்த காலம்போய் விளக்கொளியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கும் நிலைக்கு இறுதிநாட்கள் நகர்ந்தது. காயம் பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல போக்குவரத்து வசதியின்றி உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்தவர்கள் பலர் போர்ச் சூழலில் மக்கள் பட்ட அவலங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்த ஊடக நிறுவனங்கள் மீது இலக்குவைத்து தாக்குதல்களை நடாத்தியிருந்தார்கள். நாங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைகளின் படியோ அல்லது சர்வதேச தராதரங்களின் அளவிலோ எந்தவொரு உணவினையும் மருத்துவச் சிகிச்சைகளையும் எதிர்பார்க்க வில்லை. ஆனால், அடிப்படையான, குறைந்தபட்ச மனித உரிமையும், சுகாதார உரிமையும், சிறுவர் உரிமையும் பெண்கள் உரிமையும் போர்ச்சூழலில் ஏன் எங்களுக்கு மறுக்கப்பட்டது? நாங்கள் தமிழ் இனம் என்பதால் மரணத்தின் வாயில் பாதிக்கப்பட்ட நாங்கள் எந்த வழியில் மனதை ஆற்றுவது?
சிறிலங்காவினாலும் மற்றும் 40ற்கும் மேற்ப்பட்ட சர்வதேசக் கூட்டினூடாகத் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இழப்புகளால் துவண்டு போயிருந்த காலமது. எப்படியாவது ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுகூட்டி பட்டினியுடன் மொத்தமாக அழித்துவிட பொருளாதாரத்தடை காரணமாக உள்கட்டுமானப்பணிகள் போக்குவரத்து (எரிபொருள்) தொழில்வாய்ப்புகள், போன்ற முக்கியமான விடயங்களும் முற்றுமுழுதாக தடைப்பட்டு இருந்தது. வாழ்வாதாரங்கள் மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை போன்ற தொழில்வாய்ப்புகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டால் மனிதன் எப்படி உயிர்வாழ முடியும்? வாழ்வாதாரங்களை இழந்ததால் வந்த மன உளைச்சலால் விவசாயத்தை நம்பிய தமிழர்களுக்கு உணவுப்பஞ்சம் என்பது என்ன என்றே தெரியாத நிலையில் இந்தப் போரானது மக்களுக்கு வறுமையில் அதிகொடூரப் பக்கங்களைச் சிறப்பாகவே எடுத்துக் காட்டியது என்றுதான் என்னால் கூற முடியும்.
யுத்தம் மற்றும் இடப்பெயர்வும், யுத்தத்தின் பின்னர், மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு, பதகளிப்பு நோய்,மனச்சோர்வு , என பல பாரிய உளநோய்களுக்கு ஆளாகி உள்ளார்கள். இவர்கள் நாளாந்தம் இறப்பின் உச்சம்வரை அல்லது இறப்பின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பி பிழைத்த மக்கள் மன நெருக்கீட்டுச் சம்பவத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெருக்கீட்டுச் சம்பவங்களுக்கு இடப்பெயர்வின்போது ஆளாகி உள்ளார்கள். அவர்களுக்கு மனக்காயம் ஏற்பட்டு படிப்படியாக நாளாந்த செயற்பாட்டை பாதிப்படைய செய்கின்றது. கொடூரமான நிகழ்வுகள் பீதியுடனும் உதவியற்ற நிலையிலும் உணரப்பட்ட போர்ச் சூழல், இனப் படுகொலைச் சம்பவங்கள், கண்ணிவெடி, தடுப்புக்காவல், சிறை சித்திரவதை, அடி மனதில் ஆழமாக பதிந்த இப் பதிவுகள் மாறாத வடுவாகி மனதைத் திரும்பத் திரும்ப அந்த நடந்த நிகழ்வை மீளஅனுபவிக்க வைக்கிறது . இது தீவீர நெருக்கீடாக ஒருவரது மனதைப் பாதிக்கும் பொழுது அவரது நினைவுகள் எண்ணங்கள் என்பனவற்றிலும் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நாம் நாளாந்தம் காண்கின்றோம். ஆனால் இது ஒருவகை உளவியல் ரீதியான சித்திரவதை என்பதை நாம் பேச மறுக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் தமிழர் தேசத்தின் உரிமைக்குரலை நசுக்கி விடலாம் என்ற சிங்களத்தின் சிந்தனையினைச் சிதறடிக்க வேண்டும் அதற்கு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி போதியளவு பொருளாதார, சமூக மற்றும் நிதி உட்கட்டமைப்பு இல்லாமையே உள்ளடங்கலான வளர்ச்சியை அடைவதற்குக் கூடிய அழுத்தம் கொண்ட தடையாகவுள்ளது. பொருளாதாரத்தின் வினைத்திறனை அதிகரித்து உற்பத்தி இயலளவை விரிவடையச் செய்வதுடன் உற்பத்தித் திறன் மேம்படுத்தல் மற்றும் பிராந்தியளவிலான ஏற்றத்தாழ்வை குறைப்பதற்கு உட்கட்டு மானங்களின் மீள் நிர்மாணம் மற்றும் நாட்டின் மோதல்களுக்குப் பிந்திய விடயங்களில் முன்னேற்றங்கள் தொடர்ந்த போதிலும், ஒரு முழுமையான போக்கு பல அம்சங்களில் எதிர்மறையானதாகவே இருந்து வருகிறது.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் முன்னெடுத்த தன்னிறைவுப் பொருளாதாரம் தொடர்பான பிரச்சாரங்களை இன்று நாம் மேற்கொள்ள வேண்டும். விதை தானியங்களை மக்களுக்கு வழங்கி சிறு பயிர்ச்செய்கைகளை ஊக்குவித்தல். கோழி, ஆடு, மாடு, வளர்ப்பதற்கான ஊக்குவிப்புக்களும் உதவிகளும் வழங்குதல். தென்னை மா பலா போன்ற மரக் கன்றுகள் இலவசமாக மக்களுக்கு வழங்குதல். நிலப் பரப்பில் காணிகள் வெறுமையாக யாரும் வைத்திராமல் பயன் தரும் வகையில் பயன்படுத்தல். கூட்டெருப் பசளைகளும் இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்தல். பாடசாலை மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டம் தொடர்பாக பயிற்றுவித்தல். பாடசாலையிலும் மாணவர்கள், ஆசிரியர்களால் சிறுபயிர்ச்செய்கை மேற்கொள்ள ஊக்குவித்தல். கயிறு திரித்தல், தேங்காய் எண்ணை காய்ச்சுதல், எள்ளெண்ணை செக்கு , பாய் இளைத்தல், ஓலை பின்னுதல், மீன் பிடி, நன்நீர் மீன் வளர்ப்பு, பனை வளங்களை பயன்படுத்தும் தொழில்ளை ஊக்குவித்தல் வேண்டும்
பரந்தளவிலான வளர்ச்சி என்பதனை பரந்த அடிப்படையினைக் கொண்ட அனைத்து துறைகளினதும் வலுவான வளர்ச்சி விரைந்த வேகத்துடன் இலக்கினை அடைய வேண்டும். இப்போது போர் இல்லை. வெள்ளமோ வரட்சியோ தொற்றுநோயோ எமது மக்களை, அவர்களின் வாழ்வியலை முடக்கிவிடும் அளவிற்கு தற்போதைய வாழ்க்கை முறை அமைந்துள்ளது. இதில் இருந்து மீள வேண்டும். மக்களின் பொருளாதாரத்தை அவர்களே கட்டியெழுப்ப வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அனர்த்த இடர் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனத்திடத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். புலத்தில் இருப்பவர்களின் பங்களிப்பு என்பது வெறுமனே நிதியைக் கொடுப்பது மட்டுமே, என்ற சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். நிதியைக் கொண்டு மக்கள் வாழ்வை எழுச்சி உள்ளதாக மாற்ற முடியாது. மக்களின் மனங்களில் மாற்றத்தையும் உள ஆரோக்கியத்தினையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு புலத்திலும் நிலத்திலும் இருப்பவர்களுடையதாகும்.
புலிகள் பலமாக இருந்த காலம் முழுவதும் அவர்களும் அவ்வாறானதொரு சிந்தனையைத்தான் புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கு ஊட்டியும் வந்தனர். இன்று தமிழ்ச் சமூகம் என்பது ஒரு பின்போர் சமூகம் (Post- war society) என்பதை எந்தளவிற்கு எமது ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் விளங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். நாங்கள் சுதந்திரம் பெற்றவர்கள் அல்ல அடக்குமுறைக்குள் இருப்பவர்கள் என்ற எண்ணம் மக்களை புதிய பாதை நோக்கி கொண்டு செல்லும். நாளைய பொழுதை நாங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும். அதற்கான ஆயத்தங்களை செய்யவேண்டும். என்ற நியதியை அவர்கள் உணர வேண்டும். இயற்கை இடர்கள் வரும் போதெல்லாம் உதவி செய்ய யாராவது வருவார்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து பணம் வரும் என்ற மாயையை உடைத்தெறிய வேண்டும். 30வருட போர்ச் சூழல் நமக்கு கற்றுதந்தவை ஏராளம். உணவுப்பொதிகள் தருபவர்கள் எத்தனை நாளுக்கு தருவார்கள்? புதிதாக இன்னுமொரு அனுபவத்தை நாங்கள் பெறத் தேவையில்லை. தமிழர் தேசம் தன்னிறைவுப் பொருளாதாரம் நோக்கியதான செயல்த் திட்டங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்க வேண்டும்.
நிலவன் / நிக்சன் பாலா, உளவளத்துணை மற்றும் உளச்சமூகப்பணியாளர்.
ஒளிப்படம் – ஊடகப் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள்.