நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தீர் மானித்துள்ளனர்.
குறிப்பாக நிதி அமைச்சு, வெளி விவகார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்கள் பலவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்ட ஒழுங்குகள் அமைச்சின் பொறுப்புக்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கான எதிர்பார்ப்புகள் ஜனாதிபதியிடம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்து தீர்மானிக்கப்படும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது குறிப்பிட்ட சில முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கும் புதிய அமைச்சர்கள் சிலரை நியமிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இ.தொ.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புதிய அமைச்சு பதவிகளுக்காக உள்வாங்கப்படவுள்ளனர்.
எனினும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இரு முக்கிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் மேலோங்கியுள்ளன.
எவ்வாறாயினும் கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல்முறையாக மறுசீரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.