இலங்கையின் 150 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றால், கைது செய்யப்படும் ஆபத்து இருப்பதாகச் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவம், கடற்படை, பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு, போன்றவற்றைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் 150 பாதுகாப்பு அதிகாரிகள் பற்றிய விவரங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியும், உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளருமான ஜஸ்மின் சூகா பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்ரியா, இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் போல்டிக் நாடுகளின் விமான நிலையங்களுக்கு இந்தப் பட்டியலை அவர் அனுப்பி வைத்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.
இந்தப் பட்டியலில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 61 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு சென்றால், கைது செய்யப்படும் ஆபத்து இருப்பதாகவும் சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச சட்டத்துக்கு அமைய இவர்களை கைது செய்யுமாறும் ஜஸ்மின் சூகா கோரியிருக்கிறார் என்றும், இந்த அதிகாரிகளுக்கு எதிராக ஜஸ்மின் சூகா, 76 விசாரணை அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜஸ்மின் சூகாவின் அறிக்கையில் தமக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகக் கூறி அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளரானமேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தனது சட்டத்தரணிகள் மூலம் அறிவித் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.