கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற உழவியந்திரத்தில் பயணித்தபோது படையினரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை மணல் ஏற்றச் சென்ற போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்திருந்த மிருசுவில் கெற்பெளி பகுதியைச் சேர்ந்த திரவியம்-இராமகிருஸ்ணன் (வயது-24) இறுதிச் சடங்கு இன்று மு.பகல் 10.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றிருந்தது.
அதைனத் தொடர்ந்து தென்மராட்சி கொடிகாமம் விடத்தற்பளை பகுதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக, குறித்த இளைஞரது சடலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக சாவகச்சேரி நீதிமன்றில் கொடிகாமம் பொலிஸார் முறையிட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்வதற்கான அனுமதியைப் பெற்றதன் அடிப்படையில் அவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.